இரணியன்  நாடகத்தில்  தோழர்  ஈ.வெ.ரா.

 

தோழர்களே!

சென்னை  சீர்திருத்த  நாடக  சங்கத்தாரால்  நடிக்கப்பட்ட  இந்த  முதல்  நாடகத்துக்குத்  தலைமை  வகிக்கும்  பெருமை  எனக்களித்ததற்கு  நன்றி  செலுத்துகிறேன்.

நாடகம்  என்பது  ஒரு  விஷயத்தை  தத்ரூபமாய்  நடித்துக் காட்டுவது  என்பதோடு,  அதைப்  பெரிதும்  மக்களின்  நடத்தைக்கு  வழி  காட்டியாகவும்,  ஒழுக்கங்கள்  கற்பிக்கப்படுவதற்கும்  பயன் படுத்தப்படுகின்றது  என்றும்  சொல்லப்படுகின்றது.

ஆனால்  அது  அந்தப்படி  தத்ரூபமாய்  நடத்திக்  காட்டப்படுவதும்  இல்லை.  மக்கள்  ஒழுக்கத்துக்கும்,  நடப்புக்கும்  வழிகாட்டியாய்  நடப்பிப்பதும்  இல்லை  என்று  சொல்லுவதற்கு  நாடக  அபிமானிகள்  மன்னிக்க  வேண்டுகிறேன்.

தத்ரூபம்  என்பதில்  விஷயங்களின்  ரசபாவங்களும்,  உண்மை யாய்  நடந்திருக்கும்  என்று  நினைக்கும்படியான  எண்ணமும்  ஜனங்களுக்கு  விளங்க  வேண்டும்.

அந்தப்படி  இல்லாமல்  நமது  நாடகங்கள்  பெரிதும்  சங்கீதக்  கச்சேரி  போலவும்,  கால÷க்ஷப  சபை  போலவும்,  விகட  சபை  போலவும்,  நகைகள்  உடுப்புகள்  காக்ஷி  சாலைகள்  போலவும்,  விஷயங்களுக்குப்  பொருத்தமில்லாத  பேச்சுக்களை  அடுக்கி  பேசும்  பேச்சுவாத  சபை  போலவும்  விளங்குகின்றது  என்று  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது.  நாடகங்களுக்கு  நடிப்புகளில்  மிக  விஷேச  சமயங்களில்  அல்லது  அசல்  விஷயத்திலேயே  பாட்டு  வரும்  சந்தர்ப்பங்களில்  தவிர  மற்ற  சமயங்களில்  பாட்டுகள்  பொருத்தமற்றது  என்பது  நமது  அபிப்பிராயம்.

உதாரணமாக  நெருப்பு  பிடித்துவிட்ட  சமயத்தைக்  காட்ட  நடிக்க  வேண்டியவர்  தடபுடலாய்  ஆத்திரப்பட்டு  குளருபடியாய்  இருப்பது  போல்  நடிக்க  வேண்டுமா?  அல்லது  தாளம்,  சுதி,  ராகம்  முதலியவை களைக்  கவனித்து  சங்கீத  லட்சியத்தில்  திரும்பி  ஜனங்களுடைய  கவனத்தையும்  சங்கீதத்தில்  திரும்ப  விட்டு  விட்டால்  நடிப்பு  சரியானதாக  இருக்க  முடியுமா  என்று  கேட்கின்றேன்.  அதுபோலவே  நடிப்புக்குப்  பொருத்தமற்ற  உடை,  நடை,  நகை  முதலியவைகளுடன்  விளங்கினால்  விஷயம்  நடந்ததாகத்  தத்ரூபமாய்  கருதப்பட  முடியுமா?

மேல்நாடுகளில்  ரசபாவங்களுக்காகவும்  தத்ரூபமாய்  நடந்ததாகக்  காட்டப்படும்  நடப்புக்காகவும்  நடத்தப்படும்  ட்றாமாக்களில்  பாட்டு  என்பதே  மிக  மிக  அருமையாய்த்தான்  இருக்கும்.  சங்கீதத்துக்காக  நடக்கும்  விஷயத்தை  அங்கு  ஆப்ரா  என்று  சொல்லப்படுமே  தவிர,  ட்றாமா  என்று  சொல்லமாட்டார்கள்.  இங்கு  சங்கீத  வித்வான்களே  நாடக  மேடையைக்  கைப்பற்றிக்  கொண்டதானது  நாடகக்  கலையைச்  சங்கீதம்  அழித்துவிட்டது  என்றும்,  மக்களது  நாடகாபிமானமும்  சங்கீதத்தில்  திருப்பப்பட்டு  விட்டது  என்றும்  தான்  கருத  வேண்டும்.

நாடகம்  நடிக்கப்படும்  கதைகள்  விஷயமும்  தற்கால  உணர்ச்சிக்கும்,  தேவைக்கும், சீர்திருத்த  முறைக்கும்  ஏற்றதாயில்லாமல்  பழமையைப்  பிரசாரம்  செய்யவும்,  மூடநம்பிக்கை,  வர்ணாச்சிரமம்,  ஜாதி  வித்தியாச  உயர்வு  தாழ்வு,  பெண் அடிமை,  பணக்காரத்  தன்மை  முதலிய  விஷயங்களைப்  பலப்படுத்தவும்,  அவைகளைப்  பாதுகாக்கவும்  தான்  நடிக்கப்படுகின்றதே  ஒழிய  வேறில்லை.  அரிச்சந்திரன்  கதை,  நந்தனார்  கதை  முதலாகியவற்றை  எடுத்துக்  கொள்ளுங்கள்.  அரிச்சந்திரன்  கதையில்  சத்தியம்  பிரதானம்  என்று  சொல்லப்பட்டாலும்  சத்திய  அசத்திய  விஷயம்  நடக்காமல்  கதையில்  அலட்சியமாய்  இருக்கிறது.  ஜாதி  வித்தியாசம்,  தீண்டாமை,  பெண்  அடிமை,  பார்ப்பன  ஆதிக்கம்,  பணக்காரத்  தன்மை,  எஜமானத்  தன்மை  ஆகியவைகள்  தான்  தலைதூக்கி இருக்கிறது.  அது  போலவே  நந்தன்  கதையிலும்,  ஆள்  நெருப்பில்  விழுந்து  வெந்து  போனதுதான்  மிளிர்கின்றதே  தவிர,  உயிருடன்  தீண்டாமை  ஒழிக்கப்பட்டதாக  இல்லவே  இல்லை.  ராமாயணமும்  சீதையை  படுத்தின  பாடு  பெண்  ஒரு  சொத்து  போல்  பாவிக்கப்படுகிறதும்  விளங்கும்.

இப்படிப்பட்ட  கதைகள்  ஒழிக்கப்பட  வேண்டும்.  சுயமரியா தையும்,  சீர்திருத்த  வேட்கையுமுள்ளவர்கள்  அதை  நடிக்கக்  கூடாது.

இரணியன்  கதையில்  வீர  ரசம்,  சூட்சித்திரம்,  சுயமரியாதை  ஆகியவைகள்  விளங்கினதோடு  பகுத்தறிவுக்கு  நல்ல  உணவாகவும்  இருந்தது.  ஆனால்  சில  விஷயங்களில்  தலைகீழ்  மாறுதலாகவும்,  கடின  வார்த்தையாகவும்  காணலாம்.  சீர்திருத்த  நாடகம்  என்றாலே  மாறுதல்  இருந்துதான்  தீரும்.  மாறுதலுக்கு  அவசியமானதும்  பதிலுக்கு  பதிலானதுமான  வார்த்தைகள்  இருந்தால்தான்  பழமை  மாற  சந்தர்ப்பம்  ஏற்படும்.  அப்படிக்கில்லாமல்  இருந்தால்  தகுந்த  மாறுதல்  ஏற்பட  இடமிருக்காது.  ஆரியப்  புராணங்களில்  ஆரியர்களல்லாதவர்களை,  குரங்கு,  அசுரன்,  ராக்ஷதன்,  சண்டாளன்,  பறையன்  என்பன  போன்ற  வார்த்தைகளையும்  அது  உபயோகிக்கும்  முறையையும்  பழக்கத்தில்  இருந்து  வரும்  மாதிரியையும்  பார்த்தால்  இந்த  சரித்திரம்  படிப்பதில்  அவசியமான  மாறுதல்  ஏற்பட  உதவி  செய்யுமா  என்பது  சந்தேகம்  தான்.

நிற்க  இச்சரித்திரம்  உண்டாக்கிய  தோழர்  புதுவை  பாரதிதாசனை  நாம்  போற்றிப்  பாராட்ட  வேண்டும்.  அவர்  உணர்ச்சியுடன்  உண்டாக்கி  இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்.  பாத்திரர்களுக்கு  கற்பித்த  தஞ்சை  தோழர்  டி.என்.  நடறாஜன்  அவர்களின்  ஆசிரியத்  தன்மை  மிகவும்  போற்றத்தக்கது.  அவர்  20  வருஷமாய்  பொதுநலச்  சேவையில்  இருந்து  வருகிறவர்.  ஜெயிலுக்கும்  சென்றவர்.  அவர்கள்  இருவருக்கும்  இந்த  இரண்டு  பதக்கங்களைச்  சீர்திருத்த  நாடக  சங்கத்தார்  சார்பாய்  சூட்டுகிறேன்.

நாடகத்துக்கு  உதவி  செய்த  தோழர்கள்  சி.டி.நாயகம்,  எஸ்.எஸ்.ஆனந்தம்,  அழகப்பா  முதலியவர்களுக்கும்  நன்றி  கூறுகிறேன்.  சிறப்பாக  தோழர்  மாசிலாமணி  முதலியவர்கள்  இந்நாடகத்துக்கு  விளம்பரம், அச்சுவேலை,  காகிதம்  முதலிய  விஷயங்களில்  திரேகப்  பிரயாசை,  பொருள்  செலவு  முதலியவைகள்  செய்ததுடன்  இவ்வளவு  சிறப்புக்குக்  காரணமாய்  இருந்ததாகவும்  கேட்டு  மிகவும்  மகிழ்வதோடும்  அவரையும்  பாராட்டி  நன்றி  செலுத்துகிறேன்.

இந்த  புதிய  நாடகத்துக்கு  இவ்வளவு  தோழர்கள்  விஜயம்  செய்து  கௌரவித்ததற்கும்,  நாடக  பாத்திரர்களுக்கும்  சபையாருக்கும்  ஊக்கமளித்ததற்கும்  நான்  நன்றி  செலுத்துகிறேன்.

குறிப்பு:            சென்னை  சீர்திருத்த  நாடக  சபையார்  09.09.1934  மாலை  விக்டோரியா  பப்ளிக்  ஹாலில்  நடித்துக்  காட்டிய  நாடகத்தின்  இடையில்  சீர்திருத்த  நாடகத்தின்  தேவை  குறித்து  பேசியது.

பகுத்தறிவு  சொற்பொழிவு  16.09.1934

You may also like...