காங்கிரஸ்  நிலை

 

அகில  இந்திய  தேசிய  காங்கிரஸ்  என்பது  தோழர்  காந்தியார்  அவர்கள்  கைப்பிள்ளையான  பிறகு,  தக்கதொரு  விளம்பரமும்,  மதிப்பும்  பெற்றது  என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.  ஆனால்,  அதனால்  ஏற்பட்ட  நன்மையென்ன  என்று  பார்ப்போமானால்  ஒன்றுமில்லை  என்று  சொல்லுவதோடு  மாத்திரம்  நின்று  விடுவதற்கில்லாமல்,  இந்திய  மனித  சமூகத்தின்  பத்து  வருஷத்திய  முன்னேற்றத்தைத்  தடுத்து  விட்டதோடு,  இந்தியா  தேசத்தை  இருபது  வருஷ  கால  தூரம்  பின்னால்  போகும்படியும்  திருப்பிவிட்ட  தென்பது  நமது  அபிப்பிராயம்.  இது  பொது  விஷயங்களைப்  பற்றியதாகும்.

இந்திய  அரசியல்  விஷயத்தைப்  பற்றி  கவனிப்போமானால்,  காங்கிரசின்  இன்றைய  நிலையானது  192324ம்  வருஷத்தின்  நிலையே  யாகும்.  எப்படி  என்றால்  “”ஒத்துழையாமை  தற்காலீகமாக  ஒத்திவைக்கப்பட்டது”  என்ற  தீர்மானம்  அப்போது  செய்தவுடன்  அது  எந்த  நிலை  அடைந்ததோ  அதே  நிலையை  அதாவது  “”சட்ட  மறுப்பை  தற்காலீகமாக  நிறுத்தி  வைக்கப்பட்டிருக்கிறது”  என்கின்ற  நிலைக்கு  வந்திருக்கின்றது.  இதைத்  தெளிவான  வார்த்தையில்  சொல்ல  வேண்டுமானால்,  காங்கிரஸ்  10  வருஷத்திற்கு  முன்  எந்த  இடத்திலிருந்து  தவறிவிட்டதோ,  அந்த  இடத்திற்கே  இப்பொழுது  (பத்து  வருஷகாலம்  வழி  தெரியாமல்  திண்டாடி  விட்டு,  பழையபடி  தான்  முதலில்  தவறு  செய்த  இடத்திற்கே)  திரும்பி  வந்து  சேர்ந்திருக்கிறது  என்று  சொல்லலாம்.  இன்னும்  விளக்கமாக  சொல்ல  வேண்டுமானால்  காங்கிரஸ்  சரியான  வழி  கண்டுபிடிக்க  முடியாமல்  திண்டாடுகிற  தென்பது  ஒரு  பக்கமிருந்தாலும்,  தப்பான  வழியில்  போய்க்  கொண்டிருப்பதை  நிறுத்தி  சரியான  வழியைக்  கண்டுபிடிப்பதற்காக  தியங்கிக்  கொண்டிருக்கிறதென்பதாகும்.

ஆனால்  1924ல்  காங்கிரசிற்கு  கிடைத்த  தப்பான  வழிகாட்டிகளையே  தான்  1934லிலும்  அடைந்துவிட்ட  தென்று  சொல்லாமல்  இருக்க  முடியவில்லை,  1924ல்  காங்கிரசின்  போக்கை  கெடுத்து  அது  செய்த  “”தியாகத்தை”  பயன்படுத்திக்  கொண்டு பொது  வாழ்க்கையை  நாணையக்  குறைவாக்கி  இழிவு  படுத்தின  மக்களாகிய  சுயராஜ்யக்  கட்சியார்  என்பவர்களே  இப்பொழுதும்  அதன்  “”தியாகத்தை”  பயன்படுத்திக்  கொண்டு  அதை  இழிவு  படுத்தி  பயன்  பெற  அதற்கு  வழிகாட்டிகளாவதற்கு  (காங்கிரசை)  சூழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப்  பொருத்த  வரையில்  நாம்  சுயராஜ்யக்  கட்சிக்  கொள்கையைப்  பற்றியும்  அதன்  தலைவர்களைப்  பற்றியும்,  கொள்கையினுடையவும்  தலைவர்களுடையவும்  நாணயங்களைப்  பற்றியும்  முன்  கொண்டுள்ள  அபிப்பிராயங்களை  மாற்றிக்  கொள்ள  யாதொரு  காரணமும்  ஏற்பட்டுவிடவில்லை.  ஆதலால்  பழைய  அபிப்பிராயத்தையே  கொண்டு  இருக்கிறோம்.  சுயராஜ்யக்  கட்சியின்  கொள்கையும்  நாணையமும்  எவ்வளவோ  மோசமாய்  இருந்தும்  அதற்கு  1924ல்  சிறிது  பலம்  இருந்ததற்கு  காரணம்  தேசபந்து  தாஸ்  அதில்  இருந்ததே  யாகும்.  இப்பொழுது  அப்படிப்பட்டவர்கள்  யாரும்  அதில்  இல்லை.  ஆதலால்  அக்கட்சிக்கு  சிறிதாவது  யோக்கியதை  ஏற்பட்டு  விடுமோ  என்று  எவரும்  பயப்பட  வேண்டியதில்லை.  சுயராஜ்யக்  கட்சியில்  தேச  பந்து  தாசின்  ஸ்தானத்தை  இப்போது  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்கள்  பூர்த்தி  செய்திருப்பதால்  அக்கட்சியைக்  கண்டு  யாரும்  கவலைப்பட  வேண்டியதுமில்லை.  ஏனெனில்  தோழர்  சத்தியமூர்த்தி  சுயராஜ்யக்  கட்சிப்  பிரமுகராய்  இருப்பதாலேயே  அக்கட்சியானது  கெடுப்பாறின்றி  கெடும்  பேற்றை  அடைந்து  விடும்  என்பது  உறுதி.

சுயராஜ்யக்  கட்சியை  வளர்த்து  வாலிபம்  செய்தவர்கள்  தாஸ்,  நேரு  போன்ற  பெரியார்கள்  என்று  சொல்லப்  பட்டாலும்,  அதைப்  பெற்ற  தாய்  தகப்பன்மார்கள்  தென்னிந்திய  அய்யர்,  அய்யங்கார்  பார்ப்பனர்களாகிய  தோழர்கள்  சத்தியமூர்த்தி  அய்யர், ரெங்கசாமி  அய்யங்கார்  போன்றவர்களேயாகும்.  ஆனால்  அந்தப்படி  அவர்களை  செய்து  தீரும்படி  செய்தது  ஜஸ்டிஸ்  கட்சியாகிய  பார்ப்பனரல்லாதார்  கட்சியேயாகும்,  ஆதலால்  இன்றைய  தினமும்  தென்  இந்தியாவில்  ஜஸ்டிஸ்  கட்சி  இருப்பதால்  அதுவும்  அதிகாரத்தில்  இருப்பதால்  இன்றைய  தினமும்  சுயராஜ்யக்  கட்சி  ஏற்படுத்த  வேண்டியது  அய்யர்,  அய்யங்கார்களுக்கு  அவசியமேயாகும்.

சுயராஜ்யக்  கட்சியின்  தலைவர்களுக்கு  விவரம்  சொன்னது  போலவே  அதன்  கொள்கைக்கும்  ஒரு  உதாரணம்  சொல்ல  வேண்டி  இருக்கிறது.  என்ன  வென்றால்  காங்கிரஸ்  தீர்மானத்திற்கு  விரோதமாய்  அதன்  கட்டளைகளுக்கு  மாறாக  சுயராஜ்யக்  கட்சியார்  சென்னை  சட்ட சபையில்  அங்கம்  பெற்று  முட்டுக்கட்டை  போடுவதற்கு  பதிலாக,  மந்திரிகளை  அழைத்து  சட்டசபை  நடைபெற  உதவி  செய்து  வந்த  குற்றத்தைப்பற்றி  காங்கிரஸ்காரர்கள்  கேள்வி  கேட்ட  காலத்தில்  சுயராஜ்யக்  கட்சியார்  சொன்ன  சமாதானம்  என்ன  வென்றால்:

“”நாங்கள்  அந்தப்படி  செய்யாதிருந்தால்  ஜஸ்டிஸ்  கட்சியார்  அந்த  ஸ்தானத்தைப்  பெற்று  தேசத்தைக் கெடுத்து  விடுவார்கள்.  ஆதலால்  அப்படிச்  செய்ய  (மந்திரி  சபையை  அமைத்து  உதவி  செய்ய)  நேரிட்டது”

என்று  சொன்னார்கள்.  இதை  யாரும்  இதற்குள்  மறந்திருக்க  மாட்டார்கள்.  இன்றைய  தினமும்  ஜஸ்டிஸ்  கட்சி  உயிருடன்  (அதிகாரத்தில்)  இருப்பதால்  அதை  ஒழிக்க  காங்கிரஸ்  கட்டளையையோ  கொள்கைகளையோ  சுயராஜ்யக்  கட்சி  மீறி  தான்  ஆகவேண்டி  இருக்கும்  என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.  ஆதலால்  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  எதிர்ப்பாகத்தான்  சுயராஜ்யக்  கட்சி  உண்டாக்கப்படுவதும்  அதை  காங்கிரசு  அனுமதிப்பதுமான  காரியங்கள்  செய்யப்  போகிறதே  தவிர  வேறில்லை.

இது  ஒருபுறமிருக்க  இதிலிருந்து  வாசகர்கள்  நாம்  ஜஸ்டிஸ்  கட்சியை  முழுதும்  ஆதரிப்பதாக  கருதிவிட  மாட்டார்கள்  என்றே  கருதுகிறோம்.  சுயராஜ்யக்  கட்சி  என்பது  எப்படி  அய்யர்  அய்யங்கார்களைக்  கொண்ட  பார்ப்பனக்  கட்சி  என்றோமோ  அது  போலவே  ஜஸ்டிஸ்  கட்சியும்,  ஜமீன்தாரர்களையும்,  முதலாளிமார்களையும்  கொண்ட  செல்வவான்கள்  கட்சி  ஆய்விட்டது  என்று  தைரியமாய்ச்  சொல்லுவோம்.  ஜாதி  ஆதிக்கத்தையும்  ஆணவத்தையும்  இல்லாமல்  செய்ய  வேண்டும்  என்று  நினைக்கின்ற  ஒரு  உண்மையான  மனிதன்  செல்வ  ஆதிக்கத்தையும்,  ஆணவத்தையும்,  இல்லாமல்  செய்ய  வேண்டுமென்று    நினைக்காமல்  இருக்கவேமாட்டான்.  மனித  சமூகத்துக்கு  ஜாதி  ஆதிக்கத்தால்,  ஆணவத்தால்  என்ன  என்ன  குறையும்,  கொடுமையும்,  மானக்கேடும்  இருக்கிறதோ  அவ்வளவும்  சில  சமயங்களில்  அதற்கு  மேலாகவும்  செல்வ  ஆதிக்கத்தாலும்,  செருக்காலும்  மக்களுக்குக்  குறையும்,  கொடுமையும்,  மானக்கேடும்  இருந்தே  வருகிறது.  ஆதலால்  இவையிரண்டும்  ஒழிக்கப்பட  இந்த  இரண்டு  கட்சிகளும்  அழிக்கப்பட  வேண்டியதுதான்.  இதை  எந்த  ஆதாரத்தின்  மீது  சொல்லுகிறோம்  என்றால், அவைகளின்  கொள்கைகளையும்  அவைகளால்  மக்களுக்கு  ஏற்பட்ட  பிரத்தியட்சப்  பலன்களையும்  அவற்றின்  தலைவர்களின்  யோக்கியதைகளையும்,  நாணயங்களையும்  ஒருவாறு  திருப்திகரமாய்  அறிந்த  பிறகே  சொல்லுகின்றோமே  ஒழிய  வேறில்லை.

ஆனால்  ஜஸ்டிஸ்  கட்சியென்பது  மனித  சமூகத்தில்  சகல  மக்களுக்கும்  அரசியலைப்  பொருத்தவரையிலாவது  சம  சுதந்திரமும்,  சம  சந்தர்ப்பமும்,  சம  பிரதிநிதித்துவமும்  கிடைக்க  முயற்சி  செய்கிறோம்  என்ற  கொள்கையை  ஒப்புக்கொண்டதால்  சுயராஜ்யக்  கட்சியை  ஒழிக்கவேண்டிய  அவசரத்தைப்  போல்  அவ்வளவு  அவசரத்தில்  அதை  (ஜஸ்டிஸ்  கட்சியை)  ஒழிக்க  முற்படாமல்  இருந்ததோடு  சில  சமயங்களில்  ஆதரவு  அளித்து  அதைப்  பயன்படுத்திக்கொள்ளவும்  முற்பட்டோமென்பதையும்  ஒப்புக்கொள்கிறோம்.

இன்று  உலகில்  இனி  இரண்டு  கட்சிகள்தான்  (முடிவு  காணும்  வரை)  ஒன்றோடொன்று  போர்  புரிந்துகொண்டு  இருக்க  இடமுண்டு.  அதாவது  ஒன்று  சோம்பேறி  வாழ்க்கைப்  பிரியர்களாகிய  மேல்  ஜாதிக்காரர்கள்,  செல்வவான்கள்,  படித்தவர்கள்  என்கிறவர்களைக்  கொண்டதாகும்.  மற்றொன்று  பாடுபட்டு  உழைப்பவர்களாகிய  தொழிலாளிகள்,  ஏழைமக்கள்  ஆகியவர்களைக்  கொண்டதாகும்.  இவற்றைத்  தவிர  மற்ற  கட்சிகள்  எல்லாம்  சைவ  சமாஜம்,  அன்னதான  சமாஜம்  போன்றதான  “”மோட்ச”லோகம்  போக  வேண்டிய  பூமி  பாரக்  கட்சிகளேயாகும்.

காங்கிரசானது  எவ்வளவுதான்  தெய்வீகத்  தன்மை,  மதத்  தன்மை  ஆத்மார்த்தீகம்  சத்தியம்  அகிம்சை  என்பன  போன்ற  வார்த்தைகளின்  மறைவில்  இதுவரை  வாழ்ந்து  வந்ததென்றாலும்  இப்பொழுது  அவ்வளவு  காவல்களுமொழிந்து  நிராயுதபாணியாய்  நின்று  கவலைப்பட  வேண்டிய  நிலைக்கு  வந்துவிட்டது.

இதைப்  பற்றி  அதாவது  காங்கிரசின்  யோக்கியதை  குறைந்து  போனதைப்  பற்றி  நாம்  ஏதும்  மகிழ்ச்சியடையவில்லையென்றாலும்  தெய்வீகம்,  ஆத்மார்த்தீகம்,  மதம்,  சத்தியம்,  அகிம்சை  என்பவைகளைத்  திருகாணி  பீரங்கி  போன்று  மனித  சமூகத்திற்குக்  கேட்டை  விளைவிக்கும்  வார்த்தைகளுக்கு  யோக்கியதை  போய்  அவைகளை  நிர்வாணமாய்ப்  பார்க்கக்  கூடிய  நிலைமை  மக்களுக்கு  ஏற்பட்டதைக்  குறித்து  மகிழ்ச்சியடையாமலிருக்க  முடியவில்லை.

இனி  காங்கிரசோ  வேறு  ஏதாவது  ஒரு  ஸ்தாபனமோ  எல்லா  மனித  சமூகத்தின்  பேரால்  இருந்து  நாட்டில்  வேலை  செய்ய  வேண்டுமானால்,  அது  சமூகத்தில்  உள்ள  எல்லா  மக்களையும்  ஒன்று  போல்  காண்பதாயும்  எல்லா  மக்களுக்கும்  ஒன்று  போல்  போக  போக்கியம்  அளிப்பதாயும்  இருக்கத்தக்க  கொள்கையை  லட்சியமாய்க்  கொண்டதாய்  இருந்தால்தான்  வேலை  செய்ய  அருகதை  உடையதாகும்.  அப்படிக்கில்லாமல்  இருப்பது  பயனற்றதும்  இருக்க  வேண்டிய  அவசியமில்லாததுவுமேயாகும்.  காங்கிரசில்  இப்படிப்பட்ட  யோக்கியதையாவது  இந்த  வாசனையாவது  இருக்கிறதா  என்று  பார்ப்பதற்குக்  காங்கிரசுக்குக்  குடும்பத்துடன்  ஈடுபட்டு  சகல  வித்தியாசங்களையும்  கஷ்டங்களையும்  அனுபவித்துக்  காங்கிரஸ்காரர்களால்  சிறிதும்  சந்தேகப்பட  இடமில்லாமல்  இருந்து  வந்தவரும்  காங்கிரஸ்  காரியதரிசியுமான தோழர்  ஜவஹர்லால்  அவர்கள்  அபிப்பிராயம்  காங்கிரஸ்காரர்களால்  ஆட்சேபிக்க  முடியாததாகும்.  ஆகவே  அப்படிப்பட்டவர்  காங்கிரசைப்  பற்றி  சொன்னதென்னவென்றால்  “”காங்கிரசானது  இதுவரை  செல்வவான்களுக்காகவே  உழைத்து  வந்தது.  ஏழைகளுக்காக  உழைக்கவே  இல்லை.  காங்கிரசினால்  ஏழைகளுக்கு  யாதொரு  பயனுமேற்படவில்லை”  என்று  சொல்லியிருக்கிறார்.

தோழர்  சுபாஷ்  சந்திர  போஸ்  அவர்களும்  இதுபோலவே  ஏன்  இதைவிட  ஒரு  அடி  அதிகமாகவே  முன்னால்  வந்து  “”காங்கிரசானது  தொழிலாளிகளையும்  ஏழை  விவசாயிகளையும்  வஞ்சித்துப்  பொதுஜனங்களை  ஏமாற்றி  வந்திருக்கிறது.  அதிலுள்ள  தலைவர்கள்  தங்கள்  நன்மையையும்  கௌரவத்தையும்  பிரதானமாய்க்  கருதினார்களேயொழியப்  பொதுஜன  நன்மையை  லட்சியம்  செய்யவில்லை”யென்று  பேசியிருக்கிறார்.

மற்றபடி,  மற்ற  பொது  ஜனங்களில்  பல  அறிவாளிகளின்  அபிப்பிராயத்தைப்  பற்றி  நாம்  விவரிக்க  வேண்டியதில்லை.  இப்படிப்பட்ட  நிலையிலுள்ள  காங்கிரசானது  இப்போது  “”பைத்தியம்  தெளிந்து  போய்  விட்டது.  உலக்கை  எடுத்துக்கொண்டு  வா,  கோமணம்  கட்டிக்  கொள்ளலாம்”  என்று  சொல்வது  போல்  காங்கிரஸ்  மேன்மையடைந்துவிட்டது  அதாவது  “”சட்டமறுப்பு  இயக்கத்தை  நிறுத்துவிட்டேன்,  சுயராஜ்யக்  கட்சியை  சட்டசபைக்கு  அனுப்புகிறேன்”  என்று  சொல்லுகிறது.  இந்த  நிலையிலுள்ள  காங்கிரசுடன்  மனித  சமூக  நன்மையைக்  கருதுகின்றவர்கள்  எப்படி  ஒத்துழைக்க  முடியும்  என்பது  ஒவ்வொருவரும்  யோசிக்கத்  தகுந்ததாகும்.

சமீபத்தில்  பாட்னாவில்  கூடிய  காங்கிரஸ்காரர்கள்  கூட்டத்தில்  சமதர்மக்  கொள்கையை  சுயராஜ்யக்  கட்சிக்காரர்  ஒப்புக்  கொள்ள  முடியாதென்று  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  சொன்னதாகத் தெரிகிறது.  அவர்  வார்த்தைக்கு  மதிப்பேது  என்று  சொல்லப்பட்டதும்  தோழர்  காந்தியாரும்  சமதர்மக்  கொள்கையை  ஆட்சேபிக்கப்  போகிறார்  என்ற  வதந்தி  பலமாய்  இருக்கிறதென்று  சுதேசமித்திரன்  பத்திரிகையில்  சூசனை  சாட்டப்படுகிறது.  எனவே  சமதர்மக்  கொள்கையைக்  காங்கிரஸ்  ஒப்புக்  கொள்ளவில்லையானால்  மேல்  ஜாதிக்காரர்களையும்  செல்வவான்களையும்  மதக்  குருக்கள்களையும்  மனுதர்ம  சாஸ்திரங்களையும்  காப்பாற்ற  இனியும்  எல்லோரும்  சேர்ந்து  காங்கிரசில்  உழைக்க  வேண்டுமா  என்று  கேட்கிறோம்.  இதற்காக  இனியும்  ஒரு  ஐம்பது  வருஷத்தைப்  பாழாக்க  வேண்டுமா  என்றும்  கேட்கிறோம்.

உலகமெங்கும்  நமது  காங்கிரஸ்  போன்ற  பணக்கார  ஸ்தாபனங்கள்  பாழ்பட்டு  ஏழைகள்  விடுதலை  ஸ்தாபனங்கள்  பலப்பட்டு  வருகிற  காலத்தில்  நம்  நாட்டில்  மாத்திரம்  அவற்றிற்கு  முட்டுக்  கட்டை  போடுவது  போல்  காங்கிரசின்  பேரால்  சமதர்மத்தை  வழி  மறிப்பதானது  வஞ்சகமும்  துரோகமுமான  காரியமாகும்.  இந்த  விஷயங்களைப்  பாமர  மக்கள்  அறிய  முடியாமலிருக்கும்படி  அவர்களை  ஏமாற்ற  “”சட்டசபைக்குப்  போய்  வெள்ளைக்காகித  அறிக்கையை  துவம்சம்படுத்தி  விடுகிறோம்”  என்று  வீரம்  பேசி  சட்டசபைப்  பக்கம்  மக்கள்  கவனத்தைத்  திருப்பப்  படுகிறது.  இதுவும்  வழக்கம்  போல்  காங்கிரசினுடைய  ஒரு  சரியான  தந்திரமே  ஆனாலும் இதனாலெல்லாம்  பாமர  மக்கள்  என்றைக்குமே  ஏமாந்திருப்பார்களென்று  நினைத்திருப்பதானது  நினைக்கிறவர்களுக்கே  ஏமாற்றத்தைக்  கொடுக்குமே  யொழிய  வேறில்லை  யென்பதோடு  இந்தக்  கருமத்தின்  பலனை  அடைந்தே  தீரவேண்டி  வருமென்பதை  எச்சரிக்கை  செய்கிறோம்.

ஜஸ்டிஸ்  கக்ஷியும்  மற்றும்  சில  ஜாதி  வகுப்பு  சங்கங்களும்  எலக்ஷன்  வரும்போது  தங்கள்  மகாநாடுகளைக்  கூட்டி  தாங்கள்  சட்ட  சபைக்குப்  போகவும்,  எல்லோரும்  தங்களுக்கே  ஓட்டு  செய்யும்  தீர்மானங்கள்  செய்து  கொள்ளுவது  போல்,  சுயராஜ்ய  கக்ஷியும்  தேர்தல்கள்  வரும்போது  மகாநாடுகள்  கூட்டி,  தாங்களே  சட்டசபைக்குப்  போக  வேண்டும்  என்றும்,  தங்களுக்கே  ஓட்டு  செய்ய  வேண்டும்  என்றும்  தீர்மானங்கள்  செய்வது  வழக்கமாகிவிட்டது.  இப்படிப்பட்ட  தீர்மானங்களைக்  கொண்டு  எலக்ஷனில்  வேலை  செய்யும்  வாலிபவீரர்கள்  அநேகர்  நாக்கில்  ஜலம்  சொட்ட  வாயைத்  திறந்து  கொண்டிருக்கிறார்கள்  என்பதில்  சந்தேகமே  இல்லை.  ஆனால்  இதனால்  எல்லாம்  மனித  சமூகத்துக்கு  தீமையே  ஒழிய  நன்மையேதும்  உண்டாகப்  போவதில்லை  என்பது  உறுதி.

இப்போது  நடைபெற்றுக்  கொண்டிருக்கும்   பாட்னா  மகாநாட்டின்  மற்ற  முடிவுகளை  தெரிந்த  பின்பு,  மற்ற  விவரங்களைப்  பற்றி நாம்  இப்போது  என்ன  செய்ய  வேண்டியது  என்பதைப்  பற்றியும்  பின்னால்  எழுதுவோம்.

புரட்சி  தலையங்கம்  20.05.1984

You may also like...