ரஷ்யாவின்  மேம்பாடு

 

சமீப  காலமாக  முதலாளித்துவ  நாட்டில்  ஏற்பட்டிருக்கும்  அளவு  கடந்த  பொருளாதார  நெருக்கடியை  வாசகர்கள்  நன்கு  அறிவார்கள்.  ஆனால்  சோவியத்  ருஷ்ய  நாடோ  சமதர்மத்  திட்டத்தால்  பொருளாதார  முற்போக்குடன்  தலைநிமிர்ந்து  பிறநாடுகள்  வெட்கித்  தலைகுனியும்படி,  முன்னேறிச்  செல்லுகின்றன.  ஒவ்வொரு  முதலாளித்துவ  ராஜ்யத்திலும்  3  கோடி,  4  கோடி  பேர்கள்  வேலையில்லாமல்  திண்டாடி  அவதியுறும்  போது,  ரஷ்யாவோ  தங்கள்  நாட்டில்  “”வேலையில்லாது  ஏங்குவோரோ  அல்லது  நாளைக்கென்  செய்வோம்  என்று  கவலையுறுவோறோ”  இல்லாமல்  செய்து  விட்டது.

ரஷ்யாவைப்  பற்றி  முதலாளித்துவ  நாடுகளும்  அரசுகளும்  செய்யும்  விஷமப்  பிரசாரமானது  191618  வருஷங்களின்  மகாயுத்தப்  புளுகுகளுக்குச்  சமானமாகும்.

சோவியத்  ரஷ்யர்களின்  முதல்  5  வருஷ  திட்டத்தின்  முக்கிய  நோக்கமானது: பொருள்கள்  உற்பத்தி  விஷயத்திலும்,  அதன்  அபிவிருத்தி  விஷயத்திலும்  பழைய  ரஷ்யர்கள்  கொண்டிருந்த  முறையை  அடியோடு  மாற்றி  நவீன  முறையால்  அதிக  மேம்பாட்டிற்கு  உழைத்து  வெற்றி  பெருதல்  என்பதாகும்.  விவசாய  விஷயத்தில்  கூட்டுப்  பண்ணைத்  தொழில்  முறையையும்,  இயந்திர  நாகரீக  முறையையும்  கைக்கொள்ளுதல்  என்றும்  நிர்மாணித்ததுமாகும்.

உரிமை  பாதுகாப்பு  என்பதே  5  வருஷ  திட்டத்தின்  முக்கிய  இரகசியமாகும்.  இதன்படி  எல்லாச்  சந்தர்ப்பங்களிலும்  ரஷ்யத்  திட்டம்  வெற்றி  ஏற்பட  வேண்டுமென்பதாகும்.

ரஷ்யர்களின்  5  வருஷய  திட்ட  வெற்றியானது  அவர்களுடைய  பூர்வாங்க  திட்டத்திற்கு  மேல்  ஒரு  மடங்கு  அதிகப்பட்டிருக்கிறது.  ரஷ்யர்களின்  உற்பத்திப்  பொருள்கள்,  கைத்தொழில்  வளர்ச்சிகள்  முதலியன  அளவுக்கு  மீறி  ஏற்பட்டிருக்கின்றன.

தனித்தனி  முதலாளிகளாக  நாட்டை  வசப்படுத்தியிருந்ததை  ஐக்கிய  அபேதவாத  சமதர்மக்  குடியரசு  நாடானது  உலகத்திலேயே  ஒன்றுபட்ட  ஒரே  நிலமாக  செய்து  அனைவருக்கும்  சரிநிகர்  பயனையளித்துவிட்டது  என  ஸ்டாலின்  கூறுகிறார்.

ரஷ்யாவில்  10  லக்ஷம்  பேர்  வேலையில்லாமல்  திண்டாடியதை  40 ஆயிரம்  பேராகக்  குறைக்க  வேண்டுமென்ற  ஒரு  நோக்கமும்  முதலாவது  ஐந்து  வருடத்  திட்டத்தில்  இருந்தது.  ஆனால்  1930 வருடத்திற்குள்  சமதர்ம  நாடான  ரஷ்யா  அடியோடு  வேலையில்லாத்  திண்டாட்டத்தை  அகற்றி  விட்டது.

தொழிலாளர்களுடைய  வாழ்க்கையின்  உயர்வும்  5  வருஷ  திட்டத்தால்  மேம்படுத்தப்பட்டிருக்கிறது.  சம்பளங்கள்  தாராளமாக  உயர்த்தப்பட்டிருக்கின்றன.  வாழ்க்கையில்  சதா  சந்துஷ்டியாக யிருக்கத்  தக்க  எல்லா  சாதனங்களும்  அங்கு  சமதர்மிகளால்  நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

புரட்சி  கட்டுரை  22.04.1934

You may also like...