சென்னை  பெண்கள்  சங்கத்தின்  அறியாமை

 

சென்னையில்  இந்திய  பெண்கள்  சங்கம்  என்பதாக  ஒரு  சங்கம்  இருக்கின்றது.  அது  சென்னை  செல்வவான்கள்  பெண்களும்,  அதிகாரிகள்  மனைவிகளும்,  வக்கீல்  மனைவிகளும்  பெரும்பான்மையாகக்  கொண்டதாக  ஒரு  சில  ஸ்திரீகளைக்  கொண்டதாக  இருந்து  வருகின்றது.

இந்த  நாட்டுப்  பணக்காரர்கள்  ஜமீன்தார்கள்  ஆகியவர்களுக்கு  எப்படி  உண்மையான  விடுதலை  தேவை  இல்லையோ  அதேபோல்  இந்த  பெண்களுக்கும்  உண்மையான  விடுதலை  தேவை  இல்லை  என்பதோடு  தெரிவதற்குக்  கூட  முடியாத  நிலைமையில்  இருந்து  வருகிறார்கள்.

இந்த  லக்ஷணத்தில்  இவர்கள்  அரசியல்  துறையில்  பிரவேசித்து  தோழர்  சத்தியமூர்த்தியை  ஆதரிக்க  வேண்டுமென்று  ஆசைப்பட்டார்கள்  என்றால்  பெண்கள்  சமூகத்துக்கு  அதைவிட  வெட்கக்  கேடு  வேறு  இல்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும்.

தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  ஆண்களும்  பெண்களும்  சரிசமானமான  சுதந்திரத்துக்கு  அருகதையுடையவர்கள்  என்பதையே  ஒப்புக்கொள்ளுவதில்லை  என்பதோடு  சாஸ்திரங்களிலும்,  புராணங்களிலும் பெண்களுக்குள்ள  இழிவையும்,  தாழ்வையும்  அப்படியே  நிலைநிறுத்தப்  பாடுபடுகின்றவர்  என்பது  யாவரும்  அறிந்ததேயாகும்.

உதாரணமாக  தேவதாசித்  தொழிலை  ஒழிக்கக்  கொண்டு  வந்த  சட்டத்தை  எதிர்த்து  தேவதாசித்  தொழிலை  ஆதரித்தார்.  தேவதாசிகள்  இல்லாவிட்டால்  தெய்வங்களுக்கு  சக்தி  குறைந்துவிடும்  என்றும்,  ஆகமங்கள்  கெட்டு  விடும்  என்றும்  பேசினார்.

இரண்டாவதாக: குழந்தைகளுக்குக்  கல்யாணம்  செய்யக்கூடாது  என்றும்,  குழந்தைப்  பருவத்திலேயே  பிள்ளை  பெற  விடக்கூடாது  என்றும்  கொள்கையுள்ள  சாரதா  சட்டத்தை  அ. ராமசாமி  முதலியார்  ஆதரித்து  இந்தியா  முழுவதும்  சுற்றி  அபிப்பிராயம்  தெரிந்து  வரும்  காலத்தில்  தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  “”குழந்தைக்  கலியாணம்  கூடாது”  என்று  சட்டம்  செய்தால்  நான்  அந்த  சட்டத்தை  மீறி  என்  மகனுக்கு  கல்யாணம்  செய்து  சிறைசெல்லுவேன்  என்று  தைரியம்  சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத்  தூண்டினார்.

இப்படிப்பட்டவருக்குப்  பெண்கள்  சங்கம்  ஆதரவு  கொடுப்பதென்றால்  அச்சங்கம்  பெண்கள்  சமூகத்தின்  உண்மையான  பிரதிநிதித்துவம்  பொருந்தியதா  என்பதை  கவனிக்கும்படி  வாசகர்களை  வேண்டிக்  கொள்ளுகிறோம்.

பகுத்தறிவு  கட்டுரை  04.11.1934

You may also like...