விஷமத்துக்கு  விஷமமா? 

 

அல்லது  உண்மையா?

திருச்சி  “”நகர  தூதன்”  பத்திரிக்கையில்  தோழர்  அவனாசிலிங்கம்  நிற்கவில்லை  என்கின்ற  தலைப்பின்  கீழ்  “”கோயமுத்தூர்,  சேலம்,  வடாற்காடு  ஜில்லாக்களின்  இந்திய  சட்டசபைத்  தொகுதிக்கு  காங்கிரஸ்  சார்பாக  அபேட்சகராய்  நிறுத்தப்பட்டதாகச்  சொல்லப்படும்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியார்  கடைசிவரை  அபேக்ஷகராய்  நிற்க  மாட்டாராம்.  காங்கிரசின்  பெயரால்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியாரை  முன்  நிறுத்தி  அத்தொகுதியைப்  பண்படுத்தி  முடிந்ததும்  கடைசியில்  இருக்கக்  கூடிய  நிலைமையை  அனுசரித்து  இறுதியாகத்  தோழர்  இராஜகோபாலாச்சாரியாரே  அதில்  அபேட்சகராக  நின்றுவிட  ஏற்கனவே  முடிவு  செய்யப்பட்டு  விட்டதாக  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து  தெரியவருகிறது”  என்று  ஒரு  சிறு  குறிப்புக்  காணப்படுகிறது.

“”பொய்க்கு  பொய்,  கோளுக்குக்  கோள்,  விஷமத்துக்கு  விஷமம்  செய்யத்  தகுதி  உள்ளவனுக்குத்தான்  உலகில்  இடமுண்டு”  என்கின்ற  ஒரு  ஆப்த  வாக்கியம்  உண்டு.

நகர  தூதனில்  காணப்படும்  இந்தக்  குறிப்பானது  நகர  தூதனுக்கு  நம்பத்  தகுந்த  இடத்திலிருந்து  வந்திருந்தாலும்  இருக்கலாம்  என்றாலும்  அந்த  நம்பத்  தகுந்த  இடத்துக்கு,  நம்பத்தகுந்த  இடத்திலிருந்து  வந்தது  உண்மையாயிருக்குமா  அல்லது  மேல்கண்ட  ஆப்த  வாக்கியத்தை  ஒட்டியதாக  இருக்குமா  என்பதை  உறுதி  கூற  நம்மால்  முடியவில்லை.

ஆகவே  தோழர்  அவனாசிலிங்கம்  அவர்கள்  நிற்கப்  போவதில்லை  என்பது  உண்மையாயிருந்தாலும்  இருக்கலாம்.  அல்லது  “”பொய்க்குப்  பொய்,  கோளுக்குக்  கோள்,  விஷமத்துக்கு  விஷமம்”  என்கின்ற  மனுதர்ம  சாஸ்திரத்தை  அனுசரித்து  இருந்தாலும்  இருக்கலாம்  என்று  எண்ணுகிறோம்.

பகுத்தறிவு  செய்தி விளக்கக் குறிப்பு  23.09.1934

 

சென்னை  (கு.ஐ.ஃ.ஊ)  பார்ப்பனரல்லாதார்  மகாநாட்டுக்கு  தோழர்  ஈ.வெ.  ராமசாமி  அவர்கள்  அனுப்பியிருக்கும்  தீர்மானங்கள்

இம்மாதக்  கடைசியில்  சென்னையில்  நடக்கும்  தென்னிந்திய  நலவுரிமைச்சங்க  மகாநாட்டிற்கு  தோழர்  ஈ.வெ.  ராமாசாமி  அவர்கள்  குறைந்தபட்ச  வேலைத்திட்டம்  எனக்  கருதிக்  கொண்டு  ஒரு  வேலைத்திட்டத்தை  அம்மகாநாட்டு  வரவேற்புக்  கமிட்டிக்கு  ரிஜிஸ்டர்  தபாலில்  அனுப்பியிருக்கிறார்.

அது முதலாவது  விஷயாலோசனைக்  கமிட்டிக்கு  வைக்கப்படுமா  என்னும்  விஷயத்திலேயே  தைரியம்  கொள்ளுவதற்கில்லை  என்றால்,  இந்நிலையில்  அது  அக்கூட்டத்தாரால்  ஒப்புக் கொள்ளப்படுமா  என்னும்  விஷயத்தில்  என்ன  அபிப்பிராயம்  கொள்ள  வேண்டியிருக்கும்  என்பதைப்  பற்றி  நாம்  சொல்ல  வேண்டியதில்லை.

அக்கட்சிக்குத்  தலைவரான  பொப்பிலி  ராஜா  அவர்கள்  ஒரு  பெரிய  ஜமீன்தார்,  ராஜகுமாரர்,  மிக்க  செல்வவந்தர்  என்றாலும்  கூட,  அவரைப்  பொருத்தவரையில்  அவ்வேலைத்திட்ட  விஷயத்தில்  பெருத்த  ஆ÷க்ஷபனை  இருப்பதாகச்  சொல்ல  முடியாது.  அவரது  மனப்பான்மை  சமதர்மத்தைத்  தழுவினதேயாகும்.  ஆனால்  அவரது  பழக்க  வழக்கம்,  பிரபுத்  தன்மையில்  ஈடுபட்டு  வந்திருப்பதால்  திடீரென்று  பெருத்த  மாறுதலை  எதிர்பார்க்க  முடியாது  என்றாலும்,  அவரது  வாழ்வு  சமதர்மத்தை  நோக்கிச்  சென்று  கொண்டிருக்கிறது.  அவர்  இக்கட்சியால்  எவ்வித  லாபமும்  அடைய  ஆசைப்படவில்லை.  கட்சிக்காக  இதுவரையில்  பெருத்த  நஷ்டத்தையும்  பல  அசௌகரியங்களையும்  அடைந்திருக்கிறார்.

ஆற்றில்  அடித்துக்  கொண்டு  போகிறவனுக்கு  மரக்கிளை  அகப்பட்டது  போல்  அக்கட்சி  ஒழிந்து  போகும்  சமயத்தில்  பொப்பிலி  ராஜா  அவர்கள்  அக்கட்சிக்குக்  கிடைத்தார்  என்று  தான்  சொல்ல  வேண்டும்.  அக்கட்சியின்  மற்ற  பிரமுகர்கள்  இத்  தீர்மானங்களைக்  கேட்டதும்,  பார்த்ததும்  காதையும்,  கண்ணையும்  பொத்திக்  கொள்ளுவார்களோ  என்று  பயப்படுகின்றோம்.  ஆனாலும்  நமது  கடமையைச்  செய்து  பார்த்துவிட  வேண்டும்  என்கின்ற  தன்மையில்  அனுப்பியிருக்கிறோம்.

ஆனால்  மற்றபடி  பார்ப்பனரல்லாதாருக்காக  என்று  உழைத்து  வந்து  பல  கஷ்டங்களையும்,  நஷ்டங்களையும்  அடைந்து  வந்திருக்கும்  அக்கட்சியில்  உள்ள  தியாகிகள்  பலர்  இத்  தீர்மானத்துக்கு  ஆதரவளிப்பார்கள்  என்பதில்  சந்தேகமில்லை.  பொது  மக்களில்  பெரும்பான்மையோர்  இத்  தீர்மானத்துக்கு  ஆதரவாயிருந்தாலும்  கட்சிப்  பிரமுகர்களின்  “”ஆத்ம”  பலத்தின்  முன்  இந்த  ஆதரவு  எந்நிலை  அடையுமோ  தெரியாது.  ஆகையால்  பொறுத்திருந்து  பார்ப்போம்.

வேலைத்  திட்டமாவது

  1. அரசாங்க உத்தியோக  சம்பளங்கள்  மக்களின்  பரிசுத்த  தன்மையைக்  கெடுக்கக்  கூடியதாகவும்,  பேராசையை  உண்டாக்கக்  கூடியதாகவும்,  இந்தியப்  பொருளாதார  நிலைமைக்கு  மிகமிக  தாங்க  முடியாததாகவும்  இருப்பதால்  அவைகளைக்  குறைத்து  உத்தியோகஸ்தர்களுடைய  வாழ்க்கையின்  அவசிய  அளவுக்கு  ஏற்றதாகவும்,  மீத்துப்  பெருக்கி  வைப்பதற்கு  லாயக்கில்லாததாகவும்  இருக்கும்படி  செய்ய  வேண்டும்.
  2. பொதுஜன தேவைக்கும்  சௌகரியத்துக்கும்  நன்மைக்கும்  அவசிய மென்று  உற்பத்தி  செய்யப்படும்  சாமான்களின்  தொழிற் சாலைகள்,  இயந்திர  சாலைகள்,  போக்குவரவு  சாதனங்கள்  முதலியவை  அரசாங்கத்தாராலேயே  நடைபெறும்படி  செய்ய  வேண்டும்.
  3. ஆகார சாமான்கள்  உற்பத்தி  செய்யும்  விவசாயிகளுக்கும்,  அவற்றை  வாங்கி  உபயோகிக்கும்  பொது  ஜனங்களுக்கும்  மத்தியில்  தரகர்கள்,  லேவாதேவிக்காரர்கள்  இல்லாதபடி  கூட்டுறவு  ஸ்தாபனங்கள்  ஏற்படுத்தி  அதன்  மூலம்  விவசாயிகளின்  கஷ்டத்தையும்,  சாமான்  வாங்குபவர்களின்  நஷ்டத்தையும்  ஒழிக்க  ஏற்பாடு  செய்ய  வேண்டும்.
  4. விவசாயிகளுக்கு இன்று  உள்ள  கடன்களை  ஏதாவது  ஒரு  வழியில்  தீர்ப்பதுடன்  இனிமேல்  அவர்களுக்குக்  கடன்  தொல்லைகள்  ஏற்படாமல்  இருக்கும்படியும்  ஏற்பாடுகள்  செய்ய  வேண்டும்.
  5. குறிப்பிட்ட ஒரு  காலத்திற்குள்  குறிப்பிட்ட  ஒரு  அளவு  கல்வியாவது  எல்லா  மக்களுக்கும்  ஏற்படும்படியாகவும்,  ஒரு  அளவுக்காவது  மதுபானத்தின்  கெடுதி  ஒழியும்படியாகவும்,  ஒரு  அளவுக்கு  உத்தியோகங்கள்  எல்லா  ஜாதி  மதக்காரர்களுக்கும்  சரிசமமாய்  இருக்கும்படிக்கும்  உடனே  ஏற்பாடுகள்  செய்வதுடன்  இவை  நடந்து  வருகின்றதா  என்பதையும்  அடிக்கடி  கவனித்து,  தக்கது  செய்ய  ஏற்பாடு  செய்ய  வேண்டும்.
  6. மதங்கள் என்பவைகள்  எல்லாம்  அவரவர்களுடைய  தனி  எண்ணமாகவும்,  தனி  ஸ்தாபனங்களாகவுமே  இருக்கும்படி  செய்வதுடன்,  அரசியலில்    அரசியல்  நிர்வாகத்தில்  அவை  எவ்வித  சம்மந்தமும்,  குறிப்பும்  பெறாமல்  இருக்க  வேண்டும்.  ஜாதிக்கென்றோ  மதத்திற்கென்றோ  எவ்வித  சலுகையோ  உயர்வு  தாழ்வு  அந்தஸ்தோ  அவற்றிற்காக  அரசாங்கத்திலிருந்து  தனிப்பட்ட  முறைகளைக்  கையாடுவதோ  ஏதாவது  பொருள்  செலவிடுவதோ  ஆகியவை  கண்டிப்பாய்  இருக்கக்  கூடாது.
  7. கூடியவரை ஒரு  குறிப்பிட்ட  ரொக்க  வரும்படிக்காரருக்கோ,  அல்லது  தானே  விவசாயம்  செய்யும்  விவசாயிக்கோ,  வரிப்பளுவே  இல்லாமலும்  மனித  வாழ்க்கைக்கு  சராசரி  தேவையான  அளவுக்கு  மேல்  வரும்படி  உள்ளவர்களுக்கும்,  அன்னியரால்  விவசாயம்  செய்யப்படுவதன்  மூலம்  பயனடைபவர்களுக்கும்  வருமானவரி  முறைபோல்  நிலவரி  விகிதங்கள்  ஏற்படுத்தப்படவேண்டும்.
  8. லோக்கல் போர்டு,  முனிசிபாலிட்டி,  கோவாபிரேட்டிவ்  இலாகா  ஆகியவைகளுக்கு  இன்னமும்  அதிகமான  அதிகாரங்கள்  கொடுக்கப்பட்டு  இவற்றின்  மூலம்  மேலே  குறிப்பிட்ட  பல காரியங்கள்  நிர்வாகம்  செய்ய  வசதிகள்  செய்து  தக்க  பொருப்பும்,  நாணையமும்  உள்ள  சம்பள  அதிகாரிகளைக்  கொண்டு  அவைகளை  நிர்வாகம்  செய்யச் செய்ய  வேண்டும்.
  9. விவகாரங்களையும் சட்ட  சிக்கல்களையும்  குறைப்பதுடன்  சாவு  வரி  விதிக்கப்படவேண்டும்.
  10. மேலே கண்ட  இந்தக்  காரியங்கள்  நடைபெறச்  செய்வதில்  நாமே  சட்டங்கள்  செய்து  அச்சட்டங்களினால்  அமுலில்  கொண்டு  வரக்கூடியவைகளை  சட்ட  சபைகள்  மூலமும்,  அந்தப்படி  சட்டங்கள்  செய்து  கொள்ள  அதிகாரங்கள்  இல்லாதவைகளை  கிளர்ச்சி  செய்து  அதிகாரங்கள்  பெறவும்  ஏற்பாடுகள்  செய்யவேண்டும்.

பகுத்தறிவு  அறிக்கை  23.09.1934

You may also like...