தேர்தல்  ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா?  பித்தலாட்ட  வியாபாரத்திற்கா?

 

நாட்டில்  எங்கு  பார்த்தாலும்  இப்போது  இந்திய  சட்டசபை  ஸ்தானங்களுக்குத்  தேர்தல்  பிரசாரம்  தொடங்கி  விட்டது.  சட்டசபைகள்  மாய்கையென்றும்,  அங்கு  சென்று  மக்களுக்கு  எவ்வித  நன்மையும்  செய்ய  முடியாதென்றும்  சட்டசபைகள்  அரசாங்கம்  தங்களுடைய  பாதுகாப்புக்காக  ஏற்படுத்திக்  கொண்டிருக்கிற  அரண்களென்றும்,  சட்டசபையில்  சர்க்காருடைய  வலுவு  பிரதிநிதிகள்  வலுவைவிட  எவ்வளவோ  மடங்கு  மேல்பட்டதென்றும்  அரசாங்கத்தின்  வலுவைச்  சட்டசபை  மூலம்  சிறிதாவது  அசைக்கக்  கூட  முடியாதென்றும்  தோழர்கள்  காந்தியார்,  தாஸ்,  நேரு,  ராஜகோபாலாச்சாரியார்  ஆகியவர்கள்  மாத்திர மில்லாமல்  இன்று  சட்டசபைக்குக்  காங்கிரஸ் மாறலாய்  நிற்கும்  அபேட்சர்களுள்பட  எல்லோரும்  சொல்லியிருக்கிறார்கள்.

இந்த  அபிப்பிராயமானது  சட்டசபைக்கு  வெளியிலிருந்து  கொண்டு  சொன்னதென்று  எண்ணிவிட  முடியாதபடி காங்கிரஸ்  தலைவர்கள்,  தியாகிகள்,  மேதாவிகள்  பலர்  சட்டசபைக்குள்  தக்க  பலத்துடன்  சென்று,  ஒரு  கை  பார்த்துவிட்டு  வெளியில்  வரும்போதும்,  வந்த  பின்பும்  சொன்னது  என்பதை  நாம்  வாசகர்களுக்கு  நினைப்பூட்ட  வேண்டியதில்லை.

அன்றியும்  சட்டசபைகளும்,  அதற்குள்  சென்று  நாம்  செய்யக்கூடிய  காரியங்களும்  அரசாங்கத்தாரால்  ஏற்படுத்தப்பட்டு  அனுமதிக்கப்பட்ட  தென்பதும்,  அங்கு  செல்பவர்கள்  அதற்குள்ள  அதிகார  வரம்புக்கும்,  சட்டதிட்டங்களுக்கும்  கட்டுப்பட்டு  நடந்து தீர  வேண்டுமென்பதும்,  அப்படிக்  கட்டுப்பட்டு  அடங்கி  நடப்பதின்  மூலம்  கூட  அதனால்  அடையக்  கூடிய  அளவு  அதாவது  அதிகாரம்  இருக்கும்  அளவு  முழுவதையும்  கூட  அடைய  முடியாதென்பதும்,  அவற்றிற்கு  மேற்பட்டு  ஒரு காரியம்  கூடச்  செய்யச்  சட்டப்படி  இடமில்லாமல்  தடுக்கப் பட்டிருக்கிறதென்பதும்  பகுத்தறிவுள்ள  வாசகர்களுக்கு  நாம்  எடுத்துக்காட்ட  வேண்டியதில்லை.

இவையெல்லாம்  பளிங்கு  போல்  ஏற்கனவே  தெரிந்துதான்  அதன்  பலாபலன்களைப்  பற்றி  அனுபோகஸ்தர்கள்  அப்போதே  சொல்லி   அதையணுகாமலிருந்தார்களென்று  சொல்லலாம்.

இந்த  நிலையில்  அதாவது  காங்கிரஸ்காரர்கள்  பஹிஷ்கரித்த  பிறகு,  அதை  விட்டு  வந்த  பிறகு,  வெளியேறின  பிறகு  அந்தச்  சட்டசபைகள்  இப்போது  ஏதாவது  மாறுதலடைந்து  விட்டதா?  அல்லது  ஏதாவது  அங்கு  போய்ச்  சாதிப்பதற்குத்  தகுந்த  மாதிரி  திருத்தியமைக்கப்பட்டுவிட்டதா  என்பவைகளைக்  கவனித்தாலும்  அந்தப்படி  ஒன்றும்  நடந்து  விடவில்லையென்பதும்  நன்றாய்  விளங்கும்.

அப்படியிருக்க  இப்பொழுது  திடீரென்று  சட்டசபைகளுக்கு  அந்தப்படியெல்லாம்  பேசிய  காங்கிரஸ்காரர்கள்  செல்ல  வேண்டு மென்று  சொல்வதற்கும்  அபேக்ஷகர்களாய்  நிற்பதற்கும்  என்ன  காரணமென்பதைப்  பொது  ஜனங்களுக்கு  விளக்கிக்  காட்டக்  கடமைப்பட்டவர்களாவார்கள்.

ஆகவே  நாளது  வரையும்  காங்கிரஸ்காரர்கள்  இந்தப்  பிரச்சினைக்கு  எந்தக்  காரணங்களையும்  சொன்னதாகத்  தெரியவில்லை.  ஆனால்  தோழர்  காந்தியவர்கள்  இம்மாதம்  15ந்  தேதி  தான்  காங்கிரசை  விட்டு  விலகி  விடத்  தீர்மானித்திருப்பது  சம்மந்தமாய்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்  சட்ட  சபைக்குக்  காங்கிரஸ்காரர்கள்  போக  வேண்டிய  அவசியத்தைப்  பற்றிக்  குறிப்பிட்டுள்ள  வாக்கியத்தில்  “”சட்டசபைப்  பிரவேச  விஷயமாக  நான்  இதற்கு முன் என்ன  சொல்லியிருந்த  போதிலும்  சரி,  காங்கிரஸ்காரர்கள்  சட்டசபைக்குப்  போக  வேண்டியது  அவசியமென்று  இப்போது  கருதுகிறேன்”  என்று  எழுதியிருக்கிறார்.

இதனால்  நாம்  தெரிந்து  கொள்ளக்  கூடியதென்னவென்று  பார்ப்போமானால்  “”அப்பொழுது  எனக்கு  இஷ்டமில்லை.  இப்போது  எனக்கு  இஷ்டம்”  என்று  சொல்லுகிறாரென்பதைத்  தவிர  வேறொன்றும்  காணப்படவில்லை.  ஆகவே  தோழர்  காந்தி  அவர்கள்  ஊரார்  செலவில்  ஊரார்  கஷ்டத்தில்  அரசியல்  அஆஇஈ  படித்து  அனுபவம்  பெற்று  வருகிறாரென்றுதான்  இதிலிருந்து  கருத  வேண்டியிருக்கிறது.  இந்தப்படி  காங்கிரஸ்காரர்கள்  சட்ட சபைக்குப்  போக   வேண்டுமென்பதிலும்  அங்கு  போய்ச்  செய்யக்  கூடிய  வேலைத்திட்டங்களை  நிர்ணயிக்காமலும்,  சமூக  சீர்திருத்தமான  விஷயங்களில்  பிரவேசிப்பதுமில்லை  அவைகளுக்கு  இடம்  கொடுப்பதுமில்லை  என்று  முடிவு  செய்து  கொண்டும்  போகும்படி  செய்வதும்  அந்தப்படி  காங்கிரஸ்காரர்கள்  சட்டசபைக்குப்  போன  பின்பும்  அவர்கள்  சட்டசபையில்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்.  எப்படி  நடந்துகொள்ளுகிறார்கள்  என்பதைக்  கூடத்  தான்  இருந்து  நடத்தாமலும்,  கவனிக்காமலும்,  இப்போதே  காங்கிரஸிலிருந்து  காந்தியார்  விலகிக்  கொள்ளப் போவதுமாய்ச்  சொல்லுவதுமாகிய  காரியங்களில்  ஏதாவது  புத்திசாலித்தனமோ,  பொறுப்போ  இருக்கின்றதா  என்பதையும்,  இப்படிப்பட்ட  கூட்டத்தாரைச்  சட்டசபைக்குப்  போக  விடுவது  பொறுப்பான  காரியமோ  புத்திசாலித்தனமோ  ஆகுமா  வென்பதையும்  யோசித்துப்  பார்க்கும்படி  பொறுப்புள்ள  ஓட்டர்களை  வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இந்த  லக்ஷணத்தில்  மற்றொரு  விஷயம்  மிகவும்  முக்கியமாய்க்  கவனிக்க  வேண்டியதாகுமென்பது  நமது  அபிப்பிராயம்.  அதாவது:

“”சட்டசபைத்  தேர்தல்களில்  அபேக்ஷகர்களாய்  நிற்கும்  ஆசாமிகளைப்  பற்றி  யாரும்  கவனிக்காதீர்கள்.  அவர்கள்  நிற்கும்  கக்ஷிகளைப்  பற்றிக்  கவனியுங்கள்”  என்கின்ற  பல்லவியின்  மீது  எலக்ஷன்  பிரசாரம்  நடத்துவதும்,  கக்ஷி  சம்மந்தமான  விஷயங்களில்  விவகாரம்  வரும்  பொழுது  “”கக்ஷிகளைக்  கவனிக்காதீர்கள்  மகாத்மா  காந்தியைக்  கவனியுங்கள்.  கக்ஷியைப்  பற்றியோ,  நபரைப் பற்றியோ  கவனிக்காதீர்கள்”  என்பதும்,  காந்தியார்  இன்ன  இன்னபடி  நடந்து  கொண்டு  இன்ன  இன்னபடி  சொன்னவராயிற்றே.  ஆதலால்  அவரைக்  கவனித்து  ஓட்டுக்  கொடுக்க  முடியுமா?  என்ற  பிரச்சினை  வரும்போது  சட்டசபைக்கு  நாங்கள்  போனால்  இன்ன  இன்ன  விஷயங்கள்  செய்ய  மாட்டோமென்று  தனிப்பட்ட  முறையில்  காந்தியார்  கொள்கை  என்பவைகளுக்கு  விரோதமாக  வாக்குக்  கொடுப்பதுமாகிய காரியங்கள்  இன்று  காங்கிரஸ்  எலக்ஷன்  பிரசாரமாய்ச் செய்யப்பட்டு  வருகின்றன.  இவை  தக்க  பொறுப்புள்ள  ஆட்களாலேயே  நடைபெற்று  வருகின்றன.

ஆகவே  இந்த  நிலையில்  காங்கிரஸுக்கு  எந்த  ஆதாரத்தின்  மீது  எந்தக்  கொள்கைகளை  வைத்து  எந்த  வேலைத்  திட்டத்தை  எதிர்பார்த்து  யாரிடம்  நம்பிக்கை  கொண்டு  ஓட்டர்கள்  ஓட்டுச் செய்வது  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

இவை  ஒருபுறமிருக்க  மற்றும்  ஒரு சில பிரசாரக்காரர்  “”காங்கிரஸ்காரர் களாகிய   நாங்கள்  சட்டசபைக்குப்  போய்  வெள்ளையறிக்கையை  நிராகரித்து  விடுவோம்.  அடக்குமுறைச்  சட்டங்களை  ரத்து  செய்துவிடுவோம்”  என்று  சொல்லுவதாகத்  தெரிகிறது.  இதையாவது  உண்மையா?  சரியா?  என்று யோசிப்போமேயானால்  இதுவும்  அர்த்தமற்ற  பேச்சு  என்றுதான்  சொல்ல  வேண்டியிருக்கிறது.

வெள்ளையறிக்கைக்கு  இன்னமும்  முழு  ரூபமும்  ஏற்பட்டு  விடவில்லை.  அது  அமுலுக்கு  வர  அதற்கு  இன்னமும்  எத்தனையோ  சடங்குகள்  நடைபெற  வேண்டியிருக்கின்றன.  அப்படியிருந்தாலும்  அதை  நிராகரிக்கத்  தகுந்த  மெஜாரிட்டியைச்  சட்டசபையில்  பெற்று  விட  முடியுமா?  முஸ்லீம்களின்  30  ஸ்தானங்களில்  பத்திலொரு  பாகமாவது  காங்கிரஸ்காரர்களுக்கு  அனுகூலமாக  விருக்கும்படி  காங்கிரஸ்  நடந்துகொண்டிருக்கின்றதா?  வகுப்புத்  தீர்ப்பைப்  பற்றிச்  சுவர்மேல்  பூனையாய்  இந்துக்களுக்குத்  தலையையும்,  முஸ்லீம்களுக்கு  வாலையும்  காட்டி  வரும்வரையிலும்  பண்டித  மாளவியா  போன்றவர்கள்  அதைக்  கூட  எதிர்க்கக்  கக்ஷி  சேர்த்துக்  கொண்டிருக்கும்  வரையிலும்  முஸ்லீம்கள்  எல்லோரும்  காங்கிரஸுக்கு  சரணாகதி அடையக்  கூடியவர்களென்று,  நாம்  அவர்களை  அவ்வளவு  பைத்தியக்காரர்களாக  எண்ணி  விட  முடியுமா?  ஒவ்வொரு  முஸ்லீமும்,  “”நான்  முதலில்  முஸ்லீம்  அப்புறம்தான்  இந்தியன்”  என்று  செய்த  கர்ச்சனைகளை  மறந்துவிட்டு  அவர்கள்  சமூகத்துக்கு  துரோகமாகக்  காங்கிஸுக்கு  வந்து  அடிமையாவார்களென்று  நினைப்பது  முட்டாள்தனமாகாதா?  என்றும்  கேட்கிறோம்.

இந்திய  சட்டசபையில்  நாமினேஷன்காரர்கள்  40  பேர்,  முஸ்லீம்கள்  30  பேர்,  வெள்ளைக்காரர்கள்  8  பேர்,  வியாபாரிகள்  4  பேர்,  மிராஸ்தாரர்கள்  7 பேர்,  வகுப்புத்  தீர்ப்பை  யொழிக்காதவரையில்  பிரிட்டிஷ்  அரசாங்கமே  மேலென்று  சொல்லுகின்ற  சீக்கியர்கள்  2  பேர்,  ஆக  91  ஒதுக்கப்பட்ட  ஸ்தானங்கள்  போய்விட்டால்  மீதி  53  ஸ்தானங்களும்  காங்கிரஸுக்கே  கிடைக்குமா?  இந்த  53ல்  குறைவுபடும்  ஸ்தானங்களாவது  மேல்கண்ட  ஒதுக்கப்பட்ட  ஸ்தானங்களில்  கிடைக்குமா  என்பனவாகியவைகளைக்  கவனித்தால்,  இந்திய  சட்டசபையில்  மெஜாரிட்டி  கிடைக்குமென்று  எண்ண  இடமிருக்கிறதா  என்று  ஓட்டர்கள்  கவனிக்க  மாட்டார்களா  என்று  கேட்கின்றோம்.

இரண்டாவதாக,  அடக்குமுறைச்  சட்டங்களை  யொழித்து  விடுகின்றோமென்று  சொல்வதும்  அர்த்தமற்ற  வார்த்தையென்று  எப்படிச்  சொல்லுகின்றோமென்றால்,  இன்று  அடக்குமுறைச்  சட்டங்களுக்கு  நாட்டு  மக்களிடத்தில்  அதாவது  காங்கிரஸ்காரர்களிடத்தில்  வேலையேயில்லை.  சிறப்பாக  காங்கிரஸ்காரர்கள்  பெரிதும்  சத்தியாக்கிரகம்  பயனளிக்க வில்லை.  சட்ட  மறுப்புத்  தோற்றுவிட்டது  என்கின்ற  முடிவுக்கு  வந்த  பின்னும்  காங்கிரஸும்  காந்தியாரும்  தேசம்  இது  சமயம்  இந்த  இரண்டுக்கும்  தயாராயில்லை,  ஆதலால்  அவை  ஒதுக்கி  வைக்கப்பட்டு  விட்டதென்று  சொல்லிவிட்டதற்குப்  பிறகும்,  இனி  எதற்காகச்  சர்க்கார்  அடக்கு  முறைகளை  தேச  மக்கள்  மீது  பிரயோகிக்கப்  போகிறார்களென்று  இந்தக்  காங்கிரஸ்காரர்கள்  சொல்லுகிறார்களென்பது  நமக்கு  விளங்கவில்லை.  சத்தியாக்கிரகமும்,  சட்டமறுப்பும்  செத்தவுடன்  (தற்காலீகமாகச்  செத்திருந்தாலும் சரி)  அடக்கு  முறையும்  செத்துவிட்டது  என்பதில்  சந்தேகம்  ஏன்?  அன்றியும்  சர்க்கார்,  அதுவும்  காங்கிரஸ்காரர்  சட்டமறுப்பைச்  சத்தியாக்கிரகத்தை  விட்டு  விட்டுச்  சர்க்காருக்கு  நல்ல  பிள்ளையாக  நடக்க  ஆசைப்பட்டு  முன்பு  உதரித்  தள்ளிவிட்ட  சட்டசபைக்கு  மீண்டும்  போய்  ராஜபக்தி  ராஜவிசுவாசம்   சட்டத்துக்குக்  கட்டுப்பட்டு  ஒழுங்காய்  நடந்து  கொள்ளுகின்ற  ஒழுக்க  விசுவாசம்  ஆகிய  சத்தியங்கள்  செய்து  கொடுத்துவிட்டு  சர்க்கார்  கட்டிடத்தைச்  சுற்றிச்  சுற்றி  வணங்கி  வரும்  மக்கள்  மீது  அடக்குமுறைச்  சட்டம்  எதற்காகப்  பிரயோகிக்கப்  போகிறார்களென்பது  நமக்கு  விளங்கவில்லை.

ஆகையால்  அடக்குமுறைச்  சட்டங்களை  ஒழிக்கப்  போகின்றோ மென்பது  செத்த  பாம்பை  அடிக்கப்  போகின்றோ மென்று  சொல்வது  போலாகுமேயொழிய  வேறில்லை.

ஒரு  சமயம்  காங்கிரஸ்காரர்களல்லாத  மற்றவர்கள்  மீது  அடக்கு  முறைகளை  உபயோகிக்கிறார்களே,  அதைக்  காங்கிரஸ்காரர்கள்  நிறுத்தக்  கூடுமென்று  சிலர்  நினைக்கக்  கூடாதாவென்று  கேட்கக்  கூடும்.

அதுவும்  அர்த்தமற்ற  வார்த்தையேயாகும்.  ஏனெனில் காங்கிரஸ்காரர்கள்  தவிர  மற்றவர்களின்  மீது  பிரயோகிக்கப்படும்  அடக்கு  முறைகளுக்கும்,  கொடிய சட்டப்  பிரயோகங்களுக்கும்,  சட்டங்களின்  துஷ்பிரயோகங்களுக்கும்  காங்கிரஸ்காரர்கள்  அனுகூலிகளாகவே  இதுவரை  இருந்து  வருகிறார்கள்.  உதாரணமாகத்  தோழர்  காந்தியார்  அவர்கள்  தான்  சொல்லும்  காரியங்கள்  தவிர  வேறு  எந்தக்  காரியத்தை  யார்  செய்தாலும்,  வேறு  எந்தக்  காரியத்துக்கு  சத்தியாக்கிரகம்  செய்தாலும்,  சட்டமறுப்பு  செய்தாலும்  அவற்றையெல்லாம்  பெரும் பாலும்,  ஒரே  அடியாக  பலாத்காரம்  என்று  சொல்லி  வந்திருக்கிறார்.  இந்த  மாதிரி  செய்கைகளின்  மீது  அடக்குமுறைகளை  உபயோகிப்பதில்  காந்தியாரின்  ஆதரவையும்,  ஆமோதிப்பையும்  வைத்துக் கொண்டே  சர்க்காரார்  உபயோகித்து  வருகிறார்களென்பது  தொக்கி  இருக்க வில்லையா?

சமதர்ம  இயக்கங்கள்  சட்ட  விரோதமான  இயக்கங்களாகப்  பாவிக்கப்படுமென்று  ஒரு  அடக்குமுறை  உத்திரவைச்  சமீபத்தில்தான்  சர்க்கார்  பிறப்பித்தார்கள்.  இதற்கு  எந்த  மகாத்மாவாவது,  காங்கிரஸ்  வாதியாவது  தேசீய  பத்திரிகையாவது  மூச்சு  கூடக்  காட்டவில்லை.

சுயமரியாதை  இயக்க  ஸ்தாபனங்கள்  சட்ட  விரோதமான  இயக்கமென்று  சர்க்கார்  தீர்மானிக்கப்  போகிறார்களென்பது  வெளிப்படையான  ரகசியம்.  அதன்  பிரமுகர்களை  ஒடுக்கி  வைக்க  முயற்சிகள்  நடந்து  கொண்டிருக்கின்றனவென்பதும்  யாவரும்  அறிந்த  விஷயம்,  இவைகளைப்  பற்றியெல்லாம்  காங்கிரஸுக்கு  எவ்வளவு ஆசை.  (அதாவது  சீக்கிரம்,  சீக்கிரம் நடக்க  வேண்டு மென்கின்ற  ஆசை)  இருக்கின்றதென்பதும்  யாவரும்  அறிந்ததேயாகும்.

காங்கிரஸுக்குள்ளிருக்கும்  சமதர்மக்  கொள்கையே  பலாத்காரம்  கொண்டதென்று  சொல்லிவிட்ட  பிறகு  இனி  அடக்குமுறையைக்  காங்கிரஸ்  எந்த  முகத்தைக்  கொண்டு  ஆ÷க்ஷபிக்க  முடியுமென்பது  நமக்கு  விளங்கவில்லை.

இவை  ஒருபுறமிருக்க,  இப்படிப்பட்ட  யோக்கியதையில்  சட்ட  சபைக்குப்  போகப்  பிரயத்தனப்படும்  காங்கிரஸ்காரர்கள்  எதிர்  அபேக்ஷகர்கள் மீது கற்பனையானதும்,  பொய்யானதும்  திருத்தலானதுமான  பழிகளைச்  சுமத்திப்  பிரசாரம் செய்வது தங்களை  சத்தியாக்கிரகிகளென்றும்,  சத்தியசீலர்களென்றும்  சொல்லிக்  கொள்ளும்  யோக்கியர்களுக்குத்  தகுதியானதா என்பதையும் இந்தத்  தந்திரத்தின்  பலனாகவே  ஒரு  சமயம்  இவர்கள்  ஜெயித்துவிட்டாலும்  இவர்கள்  சரியான  ஜனப்பிரதிநிதிகள்  ஆகிவிடுவார்களாவென்றும்  கேட்கின்றோம்.

வில்லிங்டன்  துரை  மகனார்  “”காங்கிரசில்  யோக்கியர்களும்,  நாணையவாதிகளும்  பொறுப்புள்ளவர்களும்  மலிந்தில்லை.  காலிகளும்,  கூலிகளும்,  நாணையமும்  மானமரியாதையும்  இல்லாத  ஆட்களும்தான் மிகுந்திருக்கிறார்கள்.  ஆனதால்  அந்த  ஸ்தாபனங்களையோ,  அந்த  நபர்களையோ  அவர்கள்  வார்த்தைகளையோ  மதிக்கக்  கூடாது  என்றும்  இந்த  ஆட்களை  ஜனப்பிரதிநிதிகளென்றோ,  நாணையமாய்  நடந்து  சட்ட  சபைக்கு  வந்தவர்களென்றோ  கருதக்  கூடாது”  என்றும்  சொன்னார்  என்றால்  சொல்லப்போகிறார்  என்றால்  சொல்லுவதானால்  அதில்  கடுகளவாவது  தப்பு  இருக்கக்  கூடுமா  என்று  கேட்கின்றோம்.

இந்த யோக்கியதையில் இருக்கும் காங்கிரஸ்காரர் “”வில்லிங்டன் பிரபு காங்கிரஸ்காரர்களை மதிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள்  ராஜிக்கு இரண்டு கையையும் நீட்டிக் கொண்டு போயும் கூட அவர்களை  லட்சியம் செய்யவில்லை. ஆகவே வில்லிங்டன் பிரபுவின் அகம்பாவம் எவ்வளவு”  என்று சொல்லி தேசீயப் பத்திரிகைகளெல்லாம் இந்தப்படி கூப்பாடு போட்டால்  இதில் உண்மையோ நியாயமோ  ஏதாவது  இருக்கின்றதா  இருக்க முடியுமா?  என்று கேட்கின்றோம்.

சென்னையில்   ஒரு  காங்கிரஸ்காரர்  காந்தி  பெயரைச் சொல்லிக்  கொண்டு  திரிபவர்,  மேலே  துணிக்  கூட  போடாமல்  காந்தி  போலவே  வேஷம்  போட்டுக்  கொண்டு  நடப்பவர்,  பொது மக்கள்  பணத்தைக்  காங்கிரசின்  பேரால்  மாதம் நூற்றுக்  கணக்காய்ப்  பெற்று  வாழ்பவர்,  தோழர்  சத்தியமூர்த்திக்காக  தேர்தல்  பிரசாரம் செய்யும்  போது  “”கோவில்களை  இடிக்க  வேண்டுமென்று  சொல்லுகின்ற  ஜஸ்டிஸ்  கட்சியாருக்கு  ஓட்டுப் போடுகிறீர்களா?”  என்று  கேட்டாராம்.  இதிலிருக்கும்  அயோக்கியத்தனத்துக்கு  அளவு எவ்வளவு  என்று  கேட்பதோடு  இந்த  ஆட்கள்  யோக்கியதையே  இப்படி  இருந்தால்  மற்றபடி  எவ்வளவு  சிறிய  வுதவிக்கும்  எந்தக்  காரியத்தையும்  செய்யத்  தயாராய் இருக்கும்  சாதாரண  ஆட்களிடம்  எந்தக்  காரியத்தைத்தான்  எதிர்பார்க்கக்  கூடாது  என்று  கேட்கின்றோம்.

கோயில்களின்  பேரால்  பொறுக்கித்  தின்று  வயிறு  வளர்க்கும்  கூட்டங்கள்  தங்களுடைய  ஆதாரத்தைக்  காப்பாற்றிக்  கொள்ள,  மூட  ஜனங்களை ஆயுதமாகக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எப்படிப்பட்ட  முக்கியமான  விஷயத்தில்  கேவலமான  காரியங்களைச்  செய்யத்  துணிகின்றார்கள்  என்பதைக்  காண  இந்த  ஒரு  உதாரணம்  போதாதாவென்று  கேட்கின்றோம்.

தோழர்  ஏ. ராமசாமி  முதலியார்  அவர்கள்  பெரிய  அழுக்கு மூட்டை  (வைதீகர்)  என்று  சொல்லலாம்.  அவர்  காலம், நேரம்,  சகுணம்,  சாமி  யுத்திரவு,  சாஸ்திரம்  ஆகியவை  பார்க்காமல்  ஒரு  வேலையும்  செய்வதில்லை.  ஒரு  நொடிக்கு  100 தரம்  கடவுளைக்  கூப்பிடுகிறார்.  அப்படிப்பட்டவர்  விஷயத்தில்  “”கோவிலை  இடிக்கும்  நபர்களுக்கு  ஓட்டுப்  போடுகின்றீர்களா?”  என்று  கேட்ட  ஆசாமிகள்,  வேறு  எந்தவிதமான  கொலை  பாதகச்  செயலைச்  செய்ய  அஞ்சுவார்கள்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

கோவிலை  இடித்தால்  இவர்கள்  அப்பன்  தேடிக்  கட்டி  வைத்த  முதல்  என்ன  போய்விடுமென்பதும்  நமக்கு  விளங்கவில்லை.  கோவில்களை  இடித்த  ரஷியா  தேசம்  இந்த  மாதிரிக்  கோவில்களின்  பேரால்  வயிறு  வளர்த்த  கூட்டங்களின் கையில்  மண்  வெட்டியையும்,  கோடாலியையும்  கொடுத்த  ரஷியா  தேசம்  இன்று  “”குபேர” செல்வம்  படைத்த  நாடாக  விளங்குகின்றதே  யொழிய  பூகம்பத்தால்  அழிந்துபோய்  பூகம்ப  கஷ்ட நிவாரண  வேலை  செய்ய  இந்த  சோம்பேரிக்  கூட்டங்களைக்  கூப்பிட்டு  அதன்  பேரால்  வயிறு  வளர்க்க  விடவில்லையென்று  இடித்துக்  காட்டுகிறோம்.  மற்றபடி  இப்படிப்பட்ட  கூட்டத்தின்  பேரால்  அதாவது  காங்கிரசின்  பேரால்  தேர்தலுக்கு  நிற்கும்  ஆட்களின்  யோக்கியதையை  யாராவது  அறிய  வேண்டுமானால்  அதற்கு  ஒரே  ஒரு உதாரணம்  காட்டுவோம்.

என்னவென்றால்,  இன்றைய  தேர்தல்  பிரசாரத்தில்  ஒருவராவது  ஒரு  அபேட்சகரைப்  பற்றியாவது  வெளியில்  எடுத்துச்  சொல்லி  ஓட்டுக்  கேட்காமல்  “”ஆசாமி  எப்படியிருந்தாலும்  அவர்களைப்  பற்றிக்  கவனிக்காமல்  காந்தியாருக்காக  ஓட்டுப்  போடுங்கள்.  காங்கிரஸுக்காக  ஓட்டுப்  போடுங்கள்”  என்று  கேட்பதே  போதுமானதாகும்.  சோம்பேறிகள்,  கயாவளிகள்,  உடம்பில்  பட்டை  பட்டையாக  நாமம்  போட்டுக்  கொண்டு  கையில்  மஞ்சள்  துணி  சுற்றின  செம்பை  வைத்துக்கொண்டு  “”திருப்பதி  வெங்கிடாசலபதிக்குத்  தர்மம் செய்யுங்கள்,  ஏழுமலையானுக்குத்  தர்மம்  செய்யுங்கள்”  என்று  கேட்பதற்கும்,  “”ஆட்களைக் கவனிக்காதீர்கள்.  காங்கிரஸுக்கு ஓட்டுச்  செய்யுங்கள்,  காந்திக்கு  ஓட்டுச்  செய்யுங்கள்”  என்பதற்கும்  என்ன  வித்தியாசமென்று  கேட்கின்றோம்.

ஆகவே  ஓட்டர்களாகிய  தோழர்களே!  தேர்தல்  புரட்டுகளையும்  வெட்கமற்ற  மானமற்ற  யோக்கியமற்ற  நாணையமற்ற  பிரசாரங்களையும்  கண்டும்  கேட்டும்  ஏமாற்றமடைந்து  விடாமல்,  மனிதர்கள்,  அவர்கள்  முன்பின்  நடவடிக்கைகள்,  அவர்கள் நடந்து  கொள்ளப் போகும்  முறைகள்,  அவர்களது  கொள்கைகள்,  வேலைத் திட்டங்கள்  ஆகியவைகளைக்  கவனித்து  ஓட்டுச்  செய்யுங்கள்  என்று  வேண்டிக்  கொள்ளுகிறோம்.

பகுத்தறிவு  தலையங்கம்  21.10.1934

You may also like...