ஜன  நாயகமா?  பண  நாயகமா?

 

உலகில்   ஜனநாயகம்  என்னும்  வார்த்தை  மிகவும்  செல்வாக்குப்  பெற்றது  என்பதில்  யாருக்கும்  ஆட்சேபனை  இருக்காது.

செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  எல்லாம்  உண்மையானதும்,  நேர்மையானதும்  என்று  சொல்லிவிட  முடியாது.

செல்வாக்குப்  பெற்ற  வார்த்தைகள்  பெரும்பான்மையும்  சில  சுயநலங்கொண்ட  மக்களால்  உள்  எண்ணத்தோடு  கற்பிக்கப்பட்டு  பாமர  மக்களுக்குள்  பிரசாரம்  செய்யப்பட்டதின்  பயனாகவே  செல்வாக்கடைய  முடிந்ததாக  இருக்குமே  தவிர  உண்மையில்  அதன்  யோக்கியதையால்    ஏற்படும்  பயன்களால்  செல்வாக்கு  ஏற்பட்டதென்று  சொல்லிவிடவும்  முடியாது.

புண்ணியம்,  சத்தியம்,  அஹிம்சை,  ஜீவகாருண்யம்,  ஒழுக்கம்,  கற்பு  என்பன  போன்ற  வார்த்தைகளுக்கு  நாட்டில்  மதிப்பும்  செல்வாக்கும்  இருந்து  வருகின்றது  என்றாலும்  அவைகள்  உபயோகப்படும்  மாதிரியும்  காரியத்தில்  அனுஷ்டிக்கப்படும்  தன்மையும்  எப்படி  இருந்து  வருகின்றது  என்பதை  நாம்  எடுத்துக் காட்ட  வேண்டியதில்லை.  இவை  பெரும்பாலும்  வலுத்தவன்  இளைத்தவனை  அடக்கியாளும்  காரியத்திற்கும்  தன்  தன்  சுயநலத்துக்குமே  பெரிதும்  பயன்படுத்தப்படுகின்றன  என்பது  கண்கூடு.

இம்மாதிரியிலேயே  தான்  ஜனநாயகம்  என்கின்ற  வார்த்தையும்,  பணநாயகத்துக்கு  அடிமை  அதாவது  பாமர  மக்களையும்,  ஏழை  மக்களையும்  அடக்கியாள,  படித்த    பணக்கார  மக்களால்  கற்பிக்கப்பட்டதும்,  பயன்படுத்தத்  தக்கதுமான  வார்த்தை  என்றுதான்  சொல்ல  வேண்டியிருக்கின்றது.

உலகிலே  எந்தெந்த  நாட்டில்  ஏழை  மக்கள்  கண்  விழித்தார்களோ  அங்கெல்லாம்  ஜனநாயகத்தின்  புரட்டு  வெளியாகிக்  கொண்டுதான்  வருகின்றது.  ஜனநாயக  அரசாங்கம்    ஜனநாயக  ஸ்தாபனங்கள்    ஜனநாயக  முயற்சிகள்  என்பவைகளைப்  பற்றிய  அனுபவம்  இந்திய  மக்களுக்குச்  சுமார்  50,  60  வருஷ காலமாக  இருந்து  வருகின்றது  என்று  எண்ணுகின்றோம்.  இந்த  ஐம்பது,  அறுபது  வருஷகால  அனுபவத்தில்  ஜனநாயகத்தின்  பலன்  என்ன  என்பதைப்  பார்த்தால்  பிறகு ஜனநாயகம்  என்பதில்  அதன்  வார்த்தைக்கேற்ற  தத்துவம்  இருக்கின்றதா?  அல்லது  ஜனநாயகம்  என்பது  பணநாயகத்தின்  அடிமையா  என்பது  விளக்கும்.

இந்தியாவில்  ஜனநாயக  ஸ்தாபனம்  என்னும்  காங்கிரசு  ஏற்பட்டு  சுமார்  50  வருஷங்களுக்கு  மேலாகின்றது.  ஜனநாயக  தத்துவம்  என்னும்  முனிசிபாலிட்டிகள்,  ஜில்லா  தாலூகா  போர்டுகள்  முதலியவை  ஏற்பட்டும்  50,  60  வருஷங்களாகின்றன.

சட்டசபைகள்,  நிர்வாக  சபைகளில்  பெரும்பாகம்  முதலியவைகளும்  ஜனநாயகத்துக்கு  வந்து  20  வருஷங்கள்  முதல்  40  வருஷங்கள்வரை  ஆகின்றன.  இவைகளால்  பொது  மக்களுக்கு  ஜனநாயக  தத்துவ நன்மை  என்ன  ஏற்பட்டது?  அல்லது  ஜனநாயக  உரிமை  என்ன  ஒழுங்காய்  பயன்படுத்தப்பட்டது?  என்பதை  யோசித்துப்  பார்க்க  வேண்டுகிறோம்.  ஜனநாயக  சட்டசபையையும்,  நிர்வாக  சபையையும்  எடுத்துக்  கொள்ளுவோம்.  ஜனநாயக  ஸ்தாபனங்களின்  பேரால்  நடக்கும்  புரட்டுகள்  எவ்வளவு?  என்பதில்  காங்கிரசைப்  பற்றி  நாம்  அதிகம்  சொல்ல  வேண்டியதில்லை  என்றே  எண்ணுகின்றோம்.  பொதுவாகப்  பேசுவோமானால்  இன்று  ஜனநாயகம்  பணநாயகத்தின்  அடிமையா  அல்லவா  என்பதை  முதலில்  யோசிப்போம்.  நமது  சென்னை  மாகாணத்தை  எடுத்துக்  கொண்டால்  ஒரு  இரண்டு  மூன்று  ஜமீன்தார்களோ,  பணக்கார லேவாதேவிக்காரரோ  முதலாளிகளோ  ஒன்று  சேர்ந்து  3  அல்லது  4  லக்ஷ  ரூபாய்  முதல்  வைத்து  ஜனநாயகத்தை  விலைக்கு  வாங்கும்  கூட்டாளிகளாகி  ஒரு  கூட்டு  வியாபாரம்  ஆரம்பித்தால்  26  ஜில்லாக்களிலும்  குறைந்த  அளவாக  மெஜாரிட்டி  சட்டசபை    மெம்பர்களையாவது  தங்கள்  இஷ்டப்படி  ஆடக்  கூடியவர்களாக  சம்பாதித்து  விட  முடியுமா  முடியாதா  என்று  யோசித்துப்  பாருங்கள்.  இன்னமும்  கொஞ்சம்  பணம்  செலவு  செய்தால்  அரசாங்க  நியமன  மெம்பர்களையும்  சுவாதீனம்  செய்து  கொள்ள  முடியுமா  இல்லையா  என்பதை  யோசித்துப்  பாருங்கள்.  அன்றியும்  எந்த  தேர்தலை  எடுத்தாலும்  ஸ்தல  ஸ்தாபன  தேர்தலுக்கு  2000ரூ  செலவு,  5000ரூ  செலவு,  10000ரூ  செலவு  என்று  சொல்லப்படுவதும்  சட்டசபை  முதலிய  தேர்தல்களுக்கு  பத்து  ஆயிர  ரூபாய்  செலவு,  இருபது  ஆயிர  ரூபாய்  செலவு,  ஐம்பது  ஆயிர  ரூபாய்  செலவு  என்று  சொல்லப்படுகின்றதும்  உண்மையா  அல்லவா என்று  கேட்கின்றோம்.

100க்கு  90  மக்களை  ஏழை  விவசாயிகளாகவும்,  ஏழைத்  தொழிலாளிகளாகவும்  எழுத்து  வாசனை  அற்ற  பாமர  மக்களாகவும்  சராசரி  வாழ்க்கைக்கு  போதுமான  சௌகரியமில்லாத  மக்களாகவும்  கொண்ட  இந்த  நாட்டில்  மேல்  கண்டபடி  ஆயிரம்,  பதினாயிரம்  லக்ஷம்  கணக்காக  ரூபாய்களைச்  செலவு  செய்தால்  தான்  ஜனநாயகப்  பிரதிநிதித்  தத்துவத்தை  அடையலாம்  என்கின்றதான  ஜனநாயகம் அல்லது கலப்பற்ற  உண்மையான  ஜனநாயகமா?  பணநாயகமா?  என்று  கேட்பதல்லாமல்  இத்தேர்தல்களின்  பயனாய்  ஏற்படும்  கலகம்,  காலித்தனம்,  மனஸ்தாபம்,  கக்ஷி,  பிரதிக்கக்ஷி  மனப்பான்மை  ஆகியவைகள்  ஒரு  கூட்ட  மக்களை  முடிநாயகத்துக்கு  நிபந்தனை  அற்ற  அடிமைகளாகச்  செய்து  வருகின்றதா  இல்லையா  என்றும்  கேட்கின்றோம்.

அரசாங்கம்  தன்னை  ஜனங்களுக்காக  ஜனங்கள்  அபிப்பிராயப்படி  நடக்கும்  ஜனநாயக  அரசாங்கம்  என்று  சொல்லிக்  கொள்ளுவதை  நாம்  புரட்டு  என்று  சொல்லுவதை  விட  அவர்களால்  கொடுக்கப்பட்ட  ஜனநாயகத்  தத்துவத்தை  கையாளும்  ஜனங்கள்  உண்மையாய்  யோக்கியமாய்  அனுபவிக்கத்  தகுதி  உடையவர்களாய்  இருக்கிறார்கள்  என்று  சொல்லப்படுவதானது  இன்னும்  ஆயிரம்  பங்கு  முழுப்  புறட்டு  என்றுதான்  சொல்லப்பட  வேண்டியதாகும்.

ஜனநாயகம்  கொடுக்கப்பட்ட  எல்லாத்  துறைகளிலும்  பணம்  உள்ளவன்,  பூமி  உள்ளவன்,  வீடு  வாசல்  உள்ளவன்,  இந்திய  மக்களின்  சராசரி  வரும்படிக்கு  மேல்  10  பங்கு  100  பங்கு  அதிக  வரும்படி  உள்ளவன்  ஆகியவர்களுக்குத்தான்  ஓட்டுரிமை  இருகின்றதே  தவிர,  கைகால்  உறமாய்  இருந்து  அவனவன்  கைப்பட  உழைத்து  உண்ணும்  பாட்டாளி  மக்களுக்கு  ஓட்டுச்  சுதந்திரம்  கிடையவே  கிடையாது.  மற்றும்  தன்  உழைப்பின்  பயனாய்  வருஷம்  ஒன்றுக்கு  350  ரூபாய்  வரையில்  கூலியோ,  சம்பளமோ,  பெறுகின்றவனாய்  இருந்தாலும்  அவனுக்கும்  ஓட்டுரிமை  கிடையாது என்கின்ற  முறையில்தான்  ஜனநாயக  ஓட்டுரிமை  இருக்கின்றது என்றால்  இப்படிப்பட்ட  ஏழைப்பாட்டாளி  மக்களுக்கு  ஜனநாயகப்  பிரதிநிதித்துவம்  எப்படி  கிடைக்குமென்று  கேட்கின்றோம்.  ஓட்டு  அருகதை,  பிரதிநிதி  அருகதை  இப்படியாக  இருந்தாலும்  பிரதிநிதித்துவத்தைப்  பெறும்  முறை  முன்  குறிப்பிட்டபடி  ஆயிரம்  பதினாயிரம்  லக்ஷம் ரூபாய் செலவிட  வேண்டியதாய்  இருக்கின்ற தென்றால்  ஏதோ  ஒரு  சில  பணக்காரர்கள்  மாத்திரம்  அல்லாமல்  பொதுமக்கள்  இதை  நினைக்கத்தான்  யோக்கியதை யுடையவர்களாவார்களா  என்றும்  தேர்தல்  கூச்சல்  போடுகிறவர்களைக்  கேட்கின்றோம்.  இந்த  மாதம்  பூராவும்  ஜனநாயகத்  தேர்தல்  கூச்சலாகவே  இருக்கிறது.  இந்திய  சட்டசபைத்  தேர்தல்,  டவுன்  முனிசிபல்  கவுன்சிலர்கள்  தேர்தல்கள்  ஆகியவைகளின்  பேச்சுக்களாகவே  இருக்கின்றன.  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  சம்மந்தமாய்  லக்ஷக்கணக்கான  செல்வம்  உள்ளவர்களும்,  லக்ஷக்கணக்கான  செல்வந்தர்களை  தங்கள்  கைக்குள்  அடக்கிக்  கொண்டிருக்கின்றவர்களும்  தவிர,  மற்றவர்களுக்கு  அங்கு  வேலை  இல்லை  என்பது  வெளிப்படை.  பணச்செலவு  இல்லாமல்  ஏமாற்றலாம்  என்று  கருதுகின்றவர்கள்  ஜனநாயக  ஸ்தாபனங்களின்  புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும்  ஆதாரமாய்க்  கொள்ள  வேண்டியவர்களாய்  இருக்கிறார்கள்.  இந்தக்  காரணத்தாலேயே  இரண்டுக்கும்  யோக்கியதையற்ற  வெகுபேர்  “”சீ  அந்தப்  பழம்  புளிக்கும்”  என்று  சொல்லிக்  கொண்டு  இருக்கிறார்கள்.

இது  நிற்க,  முனிசிபல்  டவுன்  தேர்தல்களை  எடுத்துக்  கொள்ளுவோம்.  ஒரு  ஓட்டுக்கு  10  ரூபாயில்  இருந்து  15   ஆகி  20  ஆகி,  25  ஆகி,  35  ஆகி,  50  ரூபாய் ஆகி  விட்டதுடன்  சில  ஓட்டுகளுக்கு  அதாவது  சிறிது  சாமார்த்தியவாளியாய்  இருந்து  வாங்கின  பணத்தைத்  திரும்பக்  கொடுப்பதாய்  பாசாங்கு  செய்தவர்களுடைய  ஓட்டுகளுக்கு  100  ரூபாய்  விலையும்  ஆகிவிட்டது.  இதில்  எதுவும்  இரகசியமிருப்பதாய்  சொல்ல  முடியாது.  சர்க்கார்  சேவகர்கள்,  குமாஸ்தாக்கள்  ஓட்டுகளும் கூட இந்த  விலைக்குத்தான்  வாங்கப்பட்டிருக்கின்றன  என்று  நினைக்க  வேண்டியிருக் கின்றது.  சிலர்  பணம்  வாங்காமல்  ஓட்டுப்  போட்டிருக்கலாம்  என்றாலும்,  அதற்குத்  தகுந்த  பிரதிப்  பிரயோஜனமாவது  அடையக்  கருதியே  ஓட்டுச்  செய்கிறார்கள்  என்று  தான்  சொல்ல  வேண்டும்.

இவற்றோடு  மாத்திரமல்லாமல்  ஜனநாயகத்தைப்  பணநாயகம்  என்று  மாத்திரம்  சொல்வதோடல்லாமல்  காலித்தன  நாயகம்  என்று  கூட  சொல்ல  வேண்டிய  நிலைமையில்  சில  ஊர்களில்  தேர்தல்கள்  நடைபெற்றதாகச்  செய்திகள்  எட்டுகின்றன.

இன்றைய  தினம்  இருக்கும்  பண  நெருக்கடியில்  20ரூ,  30ரூ,  100ரூ.  போல ஒரு காக்காப்புள்ளி  து  போடுவதற்குப்  பணம்  கிடைப்ப தாயிருந்தால்  அதை  வேண்டாமென்று  சொன்னவர்களை  முட்டாள்  என்றுதான்  சொல்ல  வேண்டும்.  ஏனெனில்  “”பொது  ஜனங்கள்”  கேட்ட  ஜனநாயகத்  தத்துவத்தில்  புரட்டு  இல்லை  என்று  சொல்ல  எவராலும்  முடியாது.  அரசாங்கத்தார்  வழங்கிய  ஜனநாயகத்  தத்துவத்தில்  ஏமாற்றமும்,  புரட்டும்  இல்லையென்று  யாராலும்  சொல்ல  முடியாது.  இதை  ஏற்றுக்கொண்டு  ஜனநாயகப்  பிரதிநிதிகளாய்  நிற்கும்  அபேட்சகர்களிடத்தில்  புரட்டும்,  ஏமாற்றமும், பித்தலாட்டமும்  மாத்திரம்  அல்லாமல்  நாணையக்  குறைவும், யோக்கியப்  பொறுப்பற்ற  தன்மையும்  அடியோடு  இல்லை  என்று  சிறிது  கூட  சொல்லிவிட  முடியாது.  இப்படிப்பட்ட  நிலையில்  ஒரு  ஓட்டர்  இப்படிப்பட்ட  காரியத்திற்கு    இப்படிப்பட்ட  ஆட்களிடம்  பத்தோ,  இருபதோ,  ஐம்பதோ,  நூறோ  வாங்கிக்கொண்டு  ஓட்டுச்  செய்தால்  அது  எப்படி  குற்றமாகும்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

எப்படி  ஒரு  பெண்  கற்பு  இழந்தால்  அந்த  பெண்ணுக்கும்,  அதற்குச்  சரிபங்கு  பொறுப்பாளியாய்  இருந்த  ஆணுக்கும்  சரிசமமான  பாவம்  என்று  சொல்லுகின்றோமோ,  அது  போலவேதான்  ஒரு  ஓட்டர்  பணம்  வாங்கினால்  அந்த  ஓட்டருக்கும்,  அவருக்குப்  பணம்  கொடுத்த  அபேட்சகருக்கும்  அதற்கு  இவ்வளவு  தாராளமாய்  இடமளித்த  அரசாங்கத்துக்கும்  சமமான  பாவம்,  குற்றப்  பொருப்பு  இருக்கின்றது  என்று  தான்  சொல்லுவோம்.  இன்றைய  சட்டத்தில்  இதற்கு  வேறு  மாதிரியான  அபிப்பிராயம்  இருக்கலாம்.  ஆனால்  தீர்ப்பு  நாள்  சட்டமிருக்கின்றதாகச்  சொல்லுகின்றார்களே,  அந்தச்  சட்டத்தில்  அதாவது  ஒவ்வொருவருடைய  பகுத்தறிவையும்  உபயோகித்து  நடுநிலையில்  இருந்து  பார்க்கும்  தன்மையில்  மூன்று  பேரும்  அதாவது  ஓட்டரும்,  அபேட்சகரும்,  தேர்தல்  முறைகளும்  மூன்றும்  குற்றவாளிகள்  என்றுதான்  சொல்ல  வேண்டும்.  அரசாங்கத்  தத்துவம்  பணக்காரத்  தன்மையது  என்பது  யாரும்    மறுக்கக்  கூடியதல்ல.  ஏனெனில்  பணக்காரனுக்குத்தான்  ஓட்டு  என்பதோடு  அதிகப்  பணம்  செலவு  செய்யத்  தகுந்தவன்  தான்  வெற்றி  பெறக்கூடிய  நிலையில்  இன்று  பெரும்பான்மையான  எல்லா  தேர்தலும்  இருந்து  வருவதையும்  அந்தப்படியே  நடந்து  வருவதையும்  அரசாங்கம்  தனக்குத்  தெரியாது  என்று  சொல்லிவிட  முடியாது.

போட்டி  போடும்  இரண்டு  அபேட்சகர்களும்  இந்த  மாதிரி  நடந்து  கொள்வதால்  அரசாங்கத்தாரிடம்  பிராது  கொடுக்க  எவனும்  வருவதில்லையே  ஒழிய  அதாவது  சூதாடிகள்  சூதுக்  குற்றத்துக்காக  எப்படி  அவர்களே  பிராதுக்கு  வராமல்  இருக்கிறார்களோ  அதுபோல்  இருவரும்  வருவதில்லை.

ஆனால்  அரசாங்கம்  இந்தக்  குற்றத்துக்கு  ஜவாப்தாரியல்ல  என்று  சொல்லிக்  கொள்ள  வேண்டுமானால்  மற்றக்  காரியங்களுக்கு  எப்படிப்  புலன்  விசாரித்து  நடவடிக்கை  நடத்துகிறார்களோ  அதுபோல்  நடத்தி  இக்காரியங்களை  ஒழித்து  இருக்கலாம்.  ஆதலால்  அரசாங்கம்  இதில்  பங்கு  பெறாமல்  தப்பித்துக்  கொள்ள  முடியாது.

இந்தக்  காரணங்களால்  தான்  ஜனநாயகம்  என்று  சொல்லப்படுவது  ஏமாற்றம்  என்றும்,  அது  பணநாயகத்தின்  லைசென்ஸ் பெற்ற  கூலி  என்றும்,  அதைப்  பொது  மக்கள்  இந்த  மாதிரி  பணம்  வாங்கிக்  கொண்டு  ஓட்டுச்  செய்யலாம்  என்கின்ற  காரியத்திற்கு  அல்லாமல்  வேறு  காரியத்திற்கு  உதவும்  என்று  எண்ண  இடமில்லை  என்றும்  சொல்லுகிறோம்.

பகுத்தறிவு  தலையங்கம்  30.09.1934

You may also like...