காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம்
வழ வழா அறிக்கை
தோழர் காந்தி அவர்கள் “”காங்கிரசை விட்டு நான் விலகப் போவதாக ஏற்பட்ட செய்தி உண்மைதான்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட அறிக்கை விடுத்திருக்கிறார்.
அதில் அவர் “”என் இஷ்டப்படி காங்கிரசுக்காரர்கள் நடக்க வில்லை.
காங்கிரஸ்காரர்கள் பலரிடத்தில் நாணையமில்லை.
என் கொள்கையில் நம்பிக்கை யில்லாமலே பல முக்கிய காங்கிரஸ்வாதிகள் என்னைப் பின்பற்றுவதாய் நடித்திருக்கிறார்கள்.
மற்றும் பலர் அஹிம்சையிலும் சத்தியத்திலும் நம்பிக்கை இல்லாமல் அது இருப்பது போல வேஷம் போடுகிறார்கள்.
அஹிம்சையையும், சத்தியத்தையும் தற்சமயத்துக்கு ஒரு வேலைத் திட்டமாய்க் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு அவை ஒரு வாழ்க்கைச் சாதனமாக இல்லை.
கதரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதரைக் கட்டிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். சிலர் சமயத்துக்குக் கட்டிக் கொள்ளுகிறார்களே தவிர உண்மையில் கட்டுவதில்லை.
என்னை உபயோகித்துக் கொள்ளுகிறதற்காகவே என்னிடம் பக்தி விசுவாம் காட்டுகிறார்கள்.”
என்றெல்லாம் குறிப்புக் காட்டிவிட்டு “”நான் சில தீர்மானங்களை வரப்போகும் காங்கிரசில் பிரேரேபித்துவிட்டு அவை ஒப்புக் கொள்ளப்படவில்லையானால் காட்டுக்குப் போய்விடுவேன்” என்று சொல்லி அவ்வறிக்கையை முடித்திருக்கிறார்.
அத்தீர்மானங்களோ பழைய தீர்மானங்களே அல்லாமல் புதியது ஒன்றும் இல்லை.
அதாவது:
- “”சுயராஜ்யம்” பெற சட்டரீதியானதும் சமாதானமானதுமான வழியில் உழைக்க வேண்டும்” என்கின்ற வார்த்தைகளை மாற்றி “”சத்தியமும், அஹிம்சையுமான” வழியில் உழைக்க வேண்டும்” என்கின்ற வார்த்தையைப் புகுத்த வேண்டும்.
- காங்கிரசுக்குச் சந்தாவாக ஒவ்வொருவரும் 4 அணாவுக்குப் பதிலாக தாமே நூற்ற 8,000 அடி நூல் செலுத்த வேண்டும்.
- 6 மாத காலம் காங்கிரஸ் அங்கத்தினராய் இருந்தவருக்கே ஓட்டுரிமை உண்டு.
- “”காங்கிரசுக்கு பிரதிநிதிகள் 1000 பேர்கள் தான் இருக்க வேண்டும்” என்பவைகளாகும்.
இவைகளில் புதிய கொள்கைகளோ, புதிய நோக்கமோ ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அஹிம்சை, சத்தியம் என்பது மோக்ஷ நரகம் என்பது போன்ற ஒரு கற்பனைச் சொல்லே தவிர விளக்கமான அர்த்தம் உள்ள மூலச்சொல் அல்லவென்பதே நமது அபிப்பிராயம்.
உலகில் மனிதன் நிலைமைக்குத் தக்கபடி தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதுதான் இயற்கையே தவிர, இஷ்டத்துக்கும், சௌகரியத்துக்கும் விரோதமாக நிர்ப்பந்தத்தில் வாழ்வது இயற்கையல்ல.
இவ்வார்த்தைகள் கற்பு, ஒழுக்கம் என்னும் வார்த்தைகளால், வலுத்தவன், இளைத்தவனை ஏமாற்றி அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதுபோல் அஹிம்சை, சத்தியம் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி, பாமர மக்களை ஏமாற்றி அடக்கி ஆளும் சூட்சியேயாகும்.
சத்தியத்தைப் பேசவேண்டுமானால் அஹிம்சையோடு வாழ வேண்டுமானால் மார்க்ஸால், லெனினால் சிருஷ்டிக்கப்பட்ட உலக மக்களுக்கு ஒரு சமயம் சாத்தியமாய் இருக்கலாம். மற்றபடி “”கடவுளாலோ” காந்தீயத்தாலோ உண்டாக்கப்பட்ட உலகுக்கு சத்தியம், அஹிம்சை என்பது ஹம்பக்கே தவிர அந்த வார்த்தைகளிலும் பிரயோகத்திலும் கூட சத்தியம், அஹிம்சை என்பனவற்றின் வாடையே இல்லையென்று தூக்குமேடையில் இருந்து கூடச் சொல்ல முடியும்.
கோவில் பிரவேசம் என்று கூப்பாடு போடுவது ஒரு எட்டில், மறு எட்டில் இப்போது தேசம் தயாராயில்லை, பெரும்பான்மை ஜனங்கள் அதற்கு அனுகூலமாயில்லை, ஆதலால் அதை நழுவ விட்டுவிட வேண்டுமென்பது, மறு எட்டில் என்றால் சத்தியம் எங்கே இருக்கிறது? மகாராஜாக்கள் அப்படியே இருக்க வேண்டும், ஏழைகள் செருப்புத் தைக்க வேண்டும், மாடு மேய்க்க வேண்டும், கல்லுடைக்க வேண்டும், கதர் நூற்க வேண்டும் என்றால் சத்தியம் அஹிம்சை எங்கே இருக்கிறது? எப்படி இருந்தாலும் இந்த பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறித்தான் தீரும். ஏனென்றால் எவ்வளவு அயோக்கியனும் “”சத்தியம் கூடாது அஹிம்சை கூடாது” என்று சொல்ல ஒருபோதும் முன்வரமாட்டான்.
இத்தீர்மானம் நிறைவேறிவிட்டால் சட்ட ரீதியும், அமைதியும் என்கின்ற வார்த்தைகள் என்ன கதியாவது என்பது நமக்கு விளங்கவில்லை.
சட்டரீதி அல்லாத அமைதி அல்லாத காரியங்கள் சத்தியமான தாகவும் அஹிம்சையானதாகவும் இருந்தால் எதையும் செய்யலாமா என்று கேட்கின்றோம்.
இத்தீர்மானம் நிறைவேறி விட்டதாகவே வைத்துக் கொள்ளு வோம். அப்போது அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்தவர்கள் எல்லாம் தோழர் சத்தியமூர்த்தி உட்பட சத்தியமாகவும், அஹிம்சை யாகவும் நடப்பார்கள் என்று தோழர் காந்தியார் நம்பிக் கொண்டு தான் மறுபடியும் காங்கிரசில் இருக்கப் போகிறாரா? என்று கேட்கின்றோம்.
இதுவரை நிறைவேறின அனேக தீர்மானங்கள் விஷயத்தில் முக்கிய காங்கிரஸ்வாதிகளும், மேன்மையான காங்கிரஸ்வாதிகளுமே கட்டுப்பட்டு உண்மையாய், நாணையமாய் நடக்கவில்லை என்று காந்தியாரே ஒப்புக்கொள்ளும்போது, இந்த தீர்மானங்கள் விஷயத்தில் மாத்திரம் இனிமேல் அவரது சிஷ்யர்களும், ஆதரவாளர்களும் மற்றும் “10 லக்ஷம்’ காங்கிரஸ் மெம்பர்களும் உண்மையாய் நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறோம்.
இனிமேல் பொய்ச் சத்தியம் செய்வதில்லை என்று ஒருவன் புதுச் சத்தியம் செய்தால், அது பழய சத்தியத்தில் சேர்ந்தது அல்ல என்பதற்கு என்ன பரீøக்ஷ என்றும் கேட்கின்றோம்.
நாட்டில் காங்கிரசுக்கு மரியாதை போய், காங்கிரசின் நாணையத்தில் ஜனங்களுக்கு சிறிதும் நம்பிக்கையற்று, காங்கிரசுக் காரர்களுக்கு மதிப்பே இல்லாமல் அதன் கொள்கைகளும், போக்கும் சிரிப்பாய்ச் சிரிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்து ஒரு புதிய கரணம் போட்டு அவற்றை மறுபடியும் நிலைநிறுத்தச் செய்யப்படும் தந்திரமே ஒழிய இதில் புதிய தத்துவமோ, அனுகூலமோ ஏதும் இருப்பதாகவோ, ஏற்படப்போவதாகவோ நம்மால் நம்ப முடியவில்லை.
கதர் தீர்மானத்தை எடுத்துக் கொண்ட போதிலும் இதுவும் பழைய கருப்பனே அல்லாமல் புதுச் சங்கதி என்ன இருக்கிறது என்று கேட்கின்றோம்.
15ம் நெம்பர் நூல் 8000 அடி நீளம் தன் கையால் நூற்று மாதந்தோறும் கதர் டிப்போவுக்கு அனுப்ப வேண்டும் என்று 1924ம் வருஷத்திலேயே தீர்மானித்து இருக்கிறது. ஆதலால் இப்போதும் பம்பாய் காங்கிரசில் அது நிறைவேறி விடுவதில் அதிசயமில்லை. ஆனால் கைதூக்கினவர்கள் நூற்பார்களா? இது சாத்தியமா? இதனால் நாட்டுக்கு ஏதாவது பயன் உண்டா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். கோடிக்கணக்கான ரூபாய்கள் நூல் நூற்பதற்கும், கதருக்கும் பிரசாரத்தில் மாத்திரம் செலவாகிவிட்டது. அப்படி இருந்தும் ராட்டினம் கண்காட்சி சாலையில் மாத்திரம் பார்க்கலாம். அல்லது காட்டுமிராண்டிப் பருவமுள்ள மக்களிடத்தில் மாத்திரம் பார்க்கலாம். என்கின்ற நிலை வந்து கொண்டிருக்கின்றது. மாதம் 100, 150 ரூபாய் வீதம் கதர் இலாக்காவில் பணம் அடைகிறவர்கள் “”பண்டாரச் சந்நிதியும், சங்கராச்சாரியும், விபூதி உருத்திராக்ஷம் தரித்திருப்பது போல்தான் ராட்டினம் சுற்ற வேண்டியதாய் இருக்கிறது” என்று சொல்லக்கூடிய நிலைக்கு நூல் நூற்கும் தன்மை வந்துவிட்டதென்றால், இந்தத் தீர்மானம் பாசாகித்தான் என்ன காரியம் சாதித்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அப்படியே எல்லோரும் நூற்பதாய் இருந்தாலும் 34 கோடி பேருக்கும் கதர் துணி வேண்டுமானால் வேலைக்கு லாயக்குள்ள இந்திய மக்கள் எல்லோரும் எப்போதுமே நூற்றாலும் முடியாது என்றுதான் சொல்லுவோம்.
மற்றும் காங்கிரசில் உள்ள ஊழல்கள், காங்கிரஸ்காரர்களிடத்தில் உள்ள நாணையக் குறைவுகள், அவர்களது சுயநலங்கள், சூழ்ச்சிகள், வஞ்சகங்கள் ஆகிய காரியங்களைக் காந்தியும் இன்றுதான் அறிந்தவர் போல் குறிப்பிடுவது நமக்கு எல்லாவற்றையும் விட ஆச்சரியமாய் இருக்கிறது. இதைப்பற்றி விவரிக்காமல் விட்டுவிடுவதே நலம் என்று கருதுகிறோம். கடைசியாக ஒன்று கேட்கின்றோம்.
அதாவது சத்தியம், அஹிம்சை, நூல்சந்தா, கதர், பிரதிநிதிகள் குறைப்பு ஆகியவைகள் பாசாகி அந்தப்படியே ஜனங்கள் நடக்கின்றார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு மேல் செய்கின்ற வேலை என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை.
தனது சுயராஜ்யத்துக்கு தனக்கே அர்த்தம் தெரியவில்லை என்று காந்தியார் சொல்லியாகிவிட்டது. மேலும் சத்தியாக்கிரகத்துக்காகவே உயிர் வாழ்வதாகவும், சத்திய சோதனைக்காகவே அரசியலில் நுழைந்ததாகவும் சொல்கிறார். இந்து மதமே உருவாரமாக வந்ததாகவும் அதற்காகவே மூச்சு விடுவதாகவும் சொல்லுகிறார். ஆனால் சத்தியம் எது? அசத்தியம் எது? சத்திய சோதனை என்றால் என்ன? என்பனவற்றை எங்கும் விளக்கி இருப்பதாகத் தெரியவில்லை.
சுயராஜ்யத்துக்கு எப்படி விளக்கம் கூற முடியவில்லையோ, அதுபோல்தான் இவைகளுக்கும் விளக்கம் கூறமுடியாதவைகளாய் போய்விட்டன. இதற்காக மக்கள் தியாகம் செய்யவேண்டும்; அடிபட வேண்டும், சிறை செல்ல வேண்டும், சட்டமறுப்பு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசினால், இவை மக்களுக்கு புரிகின்றதா என்று கேட்கின்றோம். ஆகையால் காந்தியாரின் அறிக்கையானது வழ வழா கொழ கொழா என்று யாருக்கும் அருத்தமாகாத முறையில் எவ்வித பிடியும் இல்லாத மாதிரியில் இருக்கின்றது என்பதோடு, காங்கிரசில் இருக்கும் பழைய ஆசாமிகளுக்கும் படித்த கூட்டத்தாருக்கும், பார்ப்பனர்களுக்கும் மாத்திரம் பயனளிக்கக் கூடியதாக இருக்கின்றதே ஒழிய வேறில்லை என்பதே நமது முடிவு.
பகுத்தறிவு தலையங்கம் 23.09.1934