மதத்தைத் தூஷிக்கும் மாபெருங் குற்றத்திற்கேற்பட்டுள்ள 295 ஏ பிரிவுக்குள்ள வியாக்கியானத்தின்
விமர்சனமும் புத்தி நுட்பமும்
“”ரீசன்” என்னும் ஆங்கிலப் பத்திரிகையானது ரோமன் கத்தோலிக்கர்களையும் முஸ்லீம்களையும் தாக்கி அன்னோர் மதங்களைப் புண்படுத்தக் கூடியதான கட்டுரைகளை எழுதி பிரசுரித்ததாக டாக்டர் ஸி.எல். டிவாய்ன் மீது கொண்டு வரப்பட்ட வழக்கைப் பொம்பாயில் மாகாணப் பிரதம நீதிவான் ஸர். ஹோர் முஸ்டியர் தாஸ்துர் அவர்கள் விசாரித்துத் தமது சட்ட ஆராய்ச்சியின் நிபுணத்துவமான அறிவு நுட்பத்தால் பாரபக்ஷமற்ற நடுநிலைமையான தீர்ப்பளித்திருக்கிறார்.
தீர்ப்பின் விபரமாவது:
டாக்டர் சட்டத்தில் சொன்ன செய்கைகள் எண்ணங்கள் என்கிற பாகுபாடுகளின் தன்மைகளை அனுசரித்துத்தான் எந்தச் சட்டங்களும், பிரிவுகளும் அவைகளுக்குப் பலன்களும் அமைக்கப்பட்டிருப்பதை இது விவகாரத்தை விசாரித்த நீதிவான் உணர்ந்தவராதலால் இவரின் தீர்ப்பில் செய்கையைவிட எண்ணத்துக்கே மதிப்பளித்துத் தீர்ப்புக் கூறியிருக்கிறார்.
இத்தகைய நீதிவான்களின் பாரபக்ஷமற்ற நடுநிலைமையாலும், சட்ட நிபுணத்வத்தாலும், விசாரித்தறியும் புத்தி நுட்பத்தாலுமே தான் “”அரசாக்ஷி” என்னும் பதத்தின் உண்மையான பொருள்களால் மக்களுக்குள்ள இன்னல்களாகிற “”சிறியதைப் பெரியது நலிதல்” முதலியன விலகி சமாதான முறையில் வாழ்விக்க முடியுமேயல்லாது நோக்கம்போலும் ஆளைப்போலும் தீர்ப்பளித்தால் அவர்களால் மக்கள் என்ன பலனை அடையமுடியும்? ஆகையால் இவ்விதத் தீர்ப்பை நாம் மனமார வாழ்த்துகிறோம்.
அதாவது டாக்டர் டிவாய்னி “”மூடநம்பிக்கையின்றிப் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்டு விஷயங்களைத் தீர்மானம் செய்யும் ஆற்றலுடையவர் என்கிற ஹோதாவில் அவர் மத சமுதாய சம்பந்தமான சில நம்பிக்கைகளைக் கண்டித்து கட்டுரைகளை எழுதி இருக்கிறாரே ஒழிய மற்றவர்களுடைய மத உணர்ச்சியைப் புண்படுத்த வேண்டுமென்கிற உத்தேசத்தோடு எழுதவில்லை” என கூறியிருப்பதே மேற்படி வியாக்கியானத்தின் விமர்சனமாகும். மற்றும் “”பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டுள்ள ஒரு ஸ்தாபனமானது சிற்சில மதங்களின் சிற்சில நம்பிக்கைகளைக் கண்டித்துத்தான் தீரும். அவ்விதம் கண்டிப்பது அத்தகைய நம்பிக்கையுள்ள சிலருக்கு மனோ வேதனையைக் கொடுக்காமலிருக்காது என்பதே அந்த நியாயாதிபதியின் புத்தி நுட்பமாகும்.
புரட்சி தலையங்கம் 11.02.1934