ஈரோடு முனிசிபல் எலக்ஷன்
ஈரோடு முனிசிபாலிட்டிக்கு எலக்ஷன்கள் நடக்க தேதிகள் குறிப்பிட்டாய் விட்டன. செப்டம்பர் மாதம் 15ந் தேதி நியமனச் சீட்டுகள் (நாமினேஷன் ஸ்லிப்பு) தாக்கல் செய்ய வேண்டுமென்றும், 17ந் தேதி அவை பரிசீலனை செய்யப்படும் என்றும், 27ந் தேதி எலக்ஷன் நடைபெறுமென்றும், 28ந் தேதி முடிவு தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டு வெளிப்படுத்தியாய் விட்டது. இதன் பிறகு ஈரோட்டில் தேர்தல் பேச்சுகளும் பிரசாரங்களும் வெகு தடபுடலாய் நடக்கின்றன.
யார் வருவதைப் பற்றியும், யார் போவதைப் பற்றியும் நாம் கவலைப்படவோ யாருக்கும் யோசனை சொல்லவோ வரவில்லை. ஆனால் கக்ஷிகள் இயக்கங்கள், பெயர்களைச் சொல்லிக் கொண்டு, தனிப்பட்ட மக்களின் யோக்கியதாம்சங்களைப் பற்றி கவனிக்காமல் நடத்தும் சூழ்ச்சிப் பிரசாரம் மாத்திரம் வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். எல்லா வகுப்பாருக்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதும், கை பலமும் பண பலமுமே ஒரு மனிதனுடைய தேர்தலுக்கு யோக்கியதாபக்ஷமாய் இருந்து வரக்கூடாது என்பதும் நமது விருப்பமாகும். எப்படி இருந்தாலும் இதுவரை கிடைத்த செய்திகளில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வார்டுகளில் பணம் புளியங் கொட்டைகள் போல் நடமாடக் கூடும் என்பதாகத் தெரிகின்றது. இருவர் போட்டி போட்டு எவ்வளவு பணம் செலவழித்தாலும் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கக் கூடுமே ஒழிய, ஒரு ஸ்தானத்துக்கு இருவர் தேர்ந்தெடுக்க முடியாது. ஆகையால் பணச்செருக்கு கொண்டவர்கள் பணச் செலவில் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டி சூதாடுவது போல் “”வந்தால் வரட்டும், போனால் போகட்டும்” என்று கருதி வீணாக்காமல் 4 “”பெரிய மனிதர்கள்” என்பவர்களை வைத்துக் கொண்டு கவுன்சில் ஸ்தானத்தை ஏலம் போட்டு அதிக தொகை செலவில் யார் எந்த பொதுக் காரியத்தைச் செய்து முடிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்கு விட்டு விடுவதாய் ஏற்பாடு செய்தால் அதனால் பொது நன்மை உண்டு. அப்படிக்கில்லாமல் வீணாக வாரி இறைப்பதில் பயனில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். முனிசிபாலிடிகளுக்குக் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு விட்டபடியாலும், ஈரோட்டிற்கும் சீக்கிரம் ஒரு மாதத்திற்குள் வந்துவிடக் கூடுமாதலாலும் வரும்படியையும், அதிகாரத்தையும் உத்தேசித்து கவுன்சிலர்களாக நிற்கின்றவர்கள் ஏமாற்றமடைய நேரிடும் என்பதையும், சுதந்திர எண்ணமும், சொந்த செல்வாக்கும் இல்லாதவர்கள் கவுன்சிலர்களாக நினைத்து வீண் செலவிடுவதும் பயனற்றதுடன் கவுன்சிலர்களாக ஆனாலும் அவர்கள் கவுன்சில் கூட்டங்களில் ஒதுக்கித்தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சிலர் முன் ஜாக்கிரதையுடன் ஓட்டுகள் சேர்த்து வைத்திருப்பதால் எப்படியும் தங்களுக்கு ஆகிவிடுமென்று தைரியம் பேசலாம். ஆனால் அடுத்த தேர்தல் வருவதற்குள் அந்த அக்கிரமங்களும் ஒழிந்து போகும் என்று நினைக்கின்றோம். எப்படியெனில் அடுத்த தேர்தலுக்குள் 21 வயது வந்த ஆண் பெண் அத்தனை பேர்களுக்கும், ஓட்டு இருக்கும்படி செய்வதன் மூலம் இந்த காரியங்களை ஒழிக்கக் கூடும். அப்பொழுதுதான் ஏழைகள் பிரதிநிதி வரக்கூடும். இப்போது பெரிதும் வீடுவாசல், சொத்து, குறிப்பிட்ட வரும்படி உள்ளவர்களுக்கே இன்றைய தினம் அருகதையும் ஓட்டு உரிமையும் இருந்து வருகின்றது. ஆதலால் சொத்தில்லாதவர்களும் குறைந்த, அதாவது தினம் ஒரு ரூபாய் வரும்படிக்கு குறைந்த வரும்படி உள்ளவர்களும் இன்று மனிதர்களாய் பாவிக்கப்படுவதில்லை என்று சொல்வதோடு, பணக்காரர்கள் முனிசிபாலிட்டி, பணக்காரர்கள் ஜில்லா போர்டு, பணக்காரர்கள் சட்டசபை, பணக்கார மந்திரி, பணக்கார சர்க்கார் என்று சொல்லும் நிலையை மாற்றி ஏழைகள் முனிசிபாலிட்டி, ஏழைகள் சர்க்கார் என்பதாகச் சொல்லக் கூடிய நிலைமை ஏற்படத்தக்க மாதிரியில் அதற்குத் தக்க அபேக்ஷகர்களுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்றும் பணம் வாங்கக் கூடாது என்றும் ஓட்டர்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு கட்டுரை 09.09.1934