நமது  மாகாணத்தில்  பெண்  வக்கீல்கள்

 

நமது  நாட்டில்  பெண்கள்  சமயலுக்கும்,  படுக்கைக்கும்  மாத்திரம்  பயன்படக்கூடியவர்கள்  என்கின்ற  எண்ணம்  வைதீகர்களுக்குள்ளும்,  வயோதிகர்களுக்குள்ளும்  இருந்து  வருவதோடு  பல  பெண்களும்  அப்படியே  நினைத்துக்கொண்டுமிருக்கிறார்கள்.

சில  பெண்கள்  இந்த  இரண்டு  வேலைகளுக்கும்  இடையூறு  இல்லாமல்  ஏதாவது  வேலை  கிடைத்தால்  மாத்திரம்  செய்யலாமே  தவிர  மற்றபடி  பெண்கள்  ஆண்களைப்  போல்  வேலை  பார்ப்பது  பாவமென்றும்  கருதி  இருக்கிறார்கள்.  சில  பெண்கள்  சட்டசபையில்  இருந்தவர்களும்,  இருக்க  பாக்கியம்  பெற்றவர்களும்  கூட  பெண்களுக்கு  கும்மி,  கோலாட்டம்,  கோலம்,  தையலில்  பூப்போடுதல்  ஆகிய  வேலைகள்  சம்மந்தமான  கல்வி  கற்றால்  போதும்  என்றும்  சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள்.

நம்முடைய  தேசத்து  தேசியத்தலைவர்களும்,  மகாத்மாக்கள்  என்போர்களுக்கும்  பெண்கள்  சந்திரமதி  போலும்,  சீதை  போலும்,  நளாயினிபோலும்  இருக்க  வேண்டும்  என்று  சொல்லி  அதற்குத்  தகுந்த  பிரசாரமும்  செய்து  வருகின்றார்கள்.  இப்படிப்பட்ட  கஷ்டமான  நிலையில்  நம்  தென்  இந்தியாவில்  சென்னையில்  பெண்கள்  பி.ஏ.,  பி.எல்.,  படித்து  வக்கீல்களாகி,  அட்வகேட்டுகளும்  ஆகி  இருக்கின்றார்கள்  என்றால்  பெண்களை  எல்லாத்  துறையிலும்  ஆண்களைப்  போலவே  பார்க்கவேண்டும்  என்கிற  ஆசை  உள்ளவர்களுக்கு  எவ்வளவு  மகிழ்ச்சி  இருக்கும்  என்பதை  நாம்  எழுதிக்  காட்டவேண்டியதில்லை. அப்பெண்  வக்கீல்களில்  இருவர்கள்  தோழர்  எம்.எ. கிருஷ்ணம்மாள்,  எம்.எ. ஏதுகிரியம்மாள்  ஆகியவர்களாவார்கள்.  இவர்களது  மூத்த  சகோதரியாரும்  கொஞ்சகாலத்துக்கு  முன்தான்  பரிøக்ஷயில்  தேரி  அட்வகேட்டாகி  இருக்கிறார்கள்.  சில  வருஷங்களுக்கு  முன்  மதராஸ்  ஹைகோர்ட்  ஜட்ஜி  தோழர்  தேவதாஸ்  அவர்கள்  குமார்த்தியும்  வக்கீல்  பரிøக்ஷயில்  தேறி  அட்வகேட்டாகி  கோயமுத்தூரில்  தொழில்  நடத்தி  வருகிறார்கள்.

தங்களைப்  பெண்கள்  பிரதிநிதிகள்  என்று  சொல்லிக்கொண்டு  வெட்கமில்லாமல்  கும்மியும்,  கோலாட்டமும்,  கோலமும்,  தையலும்  தான்   பெண்கள்  கற்க  வேண்டுமென்று  சொல்லுகின்றார்களே  அப்படிப்பட்ட  பெண்களுக்கு  இனியாவது  புத்தி  வருமா?  என்று  நினைக்கின்றோம்.

பகுத்தறிவு  செய்தி விளக்கம்  02.09.1934

You may also like...