சென்னை  கடற்கரையில்  5000  பேர்  கூட்டம்

 

வரப்போகும்  தேர்தல்

தோழர்களே!  இன்று இங்கு எலக்ஷன்  சம்மந்தமாகப்  பேசுவதற் கென்றே  இந்தக்  கூட்டம்  கூட்டப்பட்டதாக  எனக்குத்  தெரிகின்றது.

கட்சி  கிடையாது

எனக்கு  எலக்ஷனில்  கக்ஷிப்  பிரச்சனை   கிடையாது.  கட்சிகள்  என்பது  கொள்கைகளைப்  பொருத்ததாக  இருப்பது  இயல்பு.  ஆனால்  நம்  நாட்டில்  எந்தக்  கட்சியையும்  கொள்கையை  ஆதாரமாய்க்  கொண்டதாக  ஒப்புக்கொள்ள  முடியவில்லை.

நமது  மாகாணத்தில்  வெகுகாலமாகவே  கட்சிகள்  உத்தியோக  ஆசைக்கும்,  வகுப்பு  ஆதிக்கத்துக்குமாகவே  இருந்து  வருகின்றனவே  ஒழிய,  பொது  ஜன  நலக்  கொள்கைக்காக  இருந்து  வரவில்லை.

முதலில்  உத்தியோக  ஆசையை  முன்னிட்டு  ஏற்பட்ட  கட்சியின்  பயனாய்  பல  கொழுத்த  சம்பளமுள்ள  உத்தியோகங்களும்,  அதிகாரங்களும்  நமது  மக்களுக்குக்  கிடைக்க  சௌகரியமானவுடன்  இப்போது  இந்து,  முஸ்லீம்,  கிறிஸ்தவர்,  தீண்டாதவர்,  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  வகுப்பு  நலத்தைப்  பிரதானமாய்க்  கொண்ட  கக்ஷிகள்  தலை  விரித்தாடுகின்றன.  ஒவ்வொரு  வகுப்புக்  கக்ஷியும்  மற்ற  வகுப்பை  ஏமாற்றுவதற்கு  அனுகூலமான  விஷயங்களைத்  தான்  கக்ஷிக்  கொள்கைகளாய்க்  கொண்டிருக்கின்றனவே  ஒழிய  வேறில்லை.

வகுப்பு  வாதம்  தான்  கட்சி

இன்றைய  அகில  இந்திய  கக்ஷியை  எடுத்துக்கொள்ளுங்கள். முஸ்லீம்கள்  காங்கிரசை  ஒப்புக்கொள்ளாமல்  தனியாக  தங்கள்  வகுப்புக்கு  ஒரு  கக்ஷி  ஏற்படுத்திக்  கொண்டிருக்கிறார்கள்.  அவ்வளவோடு  மாத்திரமல்லாமல்  இந்திய  தேசிய  காங்கிரஸ்  என்பதை வகுப்பு (இந்துக்கள்)  கக்ஷி  என்றும்  சொல்லுகிறார்கள்.  அது  போலவே  கிறிஸ்தவரும்  மற்றவர்களும்  சொல்லுகிறார்கள்.

ஆனால்  இந்துக்களோ,  காங்கிரஸ்தான்  பொதுக்கக்ஷி  என்றும்,  மற்றவைகள்  எல்லாம்  வகுப்புக்  கக்ஷிகள்  என்றும்  சொல்லுகிறார்கள்.

இந்தத்  தத்துவமே  தான்  இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சி  ஏற்பட்டிருப்பதும்,  பார்ப்பனர்  ஜஸ்டிஸ்  கட்சியை  வகுப்பு  வாதக்  கட்சி என்பதும்,  பார்ப்பனரல்லாதார்  காங்கிரசை  வகுப்பு வாதக்  கட்சி என்று  சொல்லுவதும்  ஆகியவற்றிற்குக்  காரணமாய்  இருக்கின்றது.  கட்சிகளின்  போக்கும்  இந்த  உள்கருத்தை  ஆதாரமாகக்  கொண்டதாகவே  இருந்து  வருகின்றன.

இதுவரை  இந்தப்  பேராட்டம்  அதாவது  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார்  போராட்டம்  நமது  மாகாணத்துக்குள்பட்ட  விஷயங்களைப்  பொருத்தவரையில்  இருந்து  வந்தது.

பொறாமையால்  வந்த  வினை

பல  காரணங்களால்  தோழர்கள்  ஆர்.கே.  ஷண்முகம்,  ஏ.  ராமசாமி  முதலியார்  ஆகியவர்கள்  எப்படியோ  இந்திய  சட்டசபைக்குப்  போக  ஆரம்பித்ததிலிருந்து  இப்போது  இந்தியா  பூராவுக்கும்  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார்  என்கிற  வகுப்பு  உணர்ச்சி  பரவ  வேண்டியதாய்  விட்டது.  அவர்கள்   இந்திய  சட்டசபைக்குப்  போனதின்  பயனாய்  அங்கிருந்து  வந்த  பார்ப்பன  ஆதிக்கத்தக்குச்  சாவு  மணி  அடித்து  விட்டது.  ஆர்.கே.எஸ்.,  எ.ஆர்.  ஆகிய  இவர்களின் மேன்மையும்,  திறமையும்  அங்கு  தாண்டவமாடத்  தலைப்பட்டுவிட்டது.  இதிலிருந்து  பார்ப்பனர்கள்  தோழர்கள்  ஷண்முகம்,  அ. ராமசாமி  ஆகியவர்கள்  விஷயத்தில்  அதிக  கவலை  எடுத்து  அவர்களை  அங்கு  செல்லவொட்டாமல்  தடுக்க  வேண்டியவர்களாய்  விட்டார்கள்.

அதோடு  தோழர்  ஷண்முகத்திற்கு  இந்திய  சட்டசபைத்  தலைவர்  பதவி  கிடைத்தவுடன்  சில  பார்ப்பனர்களின்  பொறாமையும்,  சதியும்  ஒன்றுக்குப்  பத்து,  நூறு,  ஆயிரமாய்  வளர்ந்து  விட்டது.  எப்படியானாலும்  கூடிய  சீக்கிரத்தில்  இவர்கள்  இருவரும்  இன்னும்  பெரும்  பதவிகளுக்கு  வரப்  போகின்றார்கள்  என்பது  பார்ப்பனருக்குத்  தெரியும்.  ஆதலால்  பார்ப்பனர்  இதுவே  கடைசி  முயற்சி என்கின்ற  வேகத்தில்  எவ்வளவோ  தடைகள்  செய்து  வருகிறார்கள்.

தலைவராகவில்லை  என்றால்  போட்டியில்லை

உதாரணமாக  தோழர்  ஷண்முகம்  அவர்கள்,  தான்  மறுபடியும்  தலைவர்  பதவிக்கு  நிற்பதில்லை என்று  சொல்லிவிட்டால்,  தென்  இந்தியாவில்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்களில்  எதற்கும்  காங்கிரசு  போட்டி  போடாது  என்பது  உறுதி  என்று  நீங்கள்  நம்பலாம்.

ஒரு  சமயம்  அவர்  கண்டிப்பாய்  நிற்பதானாலும்  தோழர்கள்  எ.ராமசாமி  முதலியார்  அவர்களும்,  டாக்டர்  வரதராஜுலு  அவர்களும்  தாங்கள்  இந்திய  சட்ட  சபைக்குச்  சென்ற  பிறகு  பிரசிடெண்ட்  எலக்ஷனில்  தோழர்  ஷண்முகத்துக்கு  ஓட்டுப்  போடுவதில்லை  என்று  வாக்குக்  கொடுத்துவிட்டால்  தோழர்கள்  சத்தியமூர்த்தி,  அவனாசிலிங்கம்  செட்டியார்,  குமாரசாமி  ராஜா,  முத்துரங்க  முதலியார்  ஆகியவர்கள்  உடனே  “வித்ட்றா’  செய்து  கொள்ளுவதில்  ஆ÷க்ஷபனை  இல்லை.

ஆகவே  இன்று  நடக்கும்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  சொந்த  புத்தியுள்ள  பார்ப்பனரல்லாதாரும்  பார்ப்பனர்களுக்கு  அடிமையா யில்லாத  பார்ப்பனரல்லாதாரும்  இந்திய  சட்டசபைக்குப்  போகக்  கூடாது  என்பதைத்  தவிர  வேறு ஒரு  காரணமும்  இல்லை  என்று  தைரியமாய்ச்  சொல்லுவேன்.

தோழர்  ஷண்முகம்  அவர்கள்  இந்திய  சட்டசபையில்  தலைவரான  பிறகு,  அவரது  பெருமை  இந்தியாவில்  எங்கும்  பேசப்பட்டு  வருவதானது  நம்நாட்டு  பார்ப்பனர்களுக்குப்  பெருத்த  ஆத்திரத்தை  மூட்டிவிட்டது.  எப்படியாவது  அவரைத்  தடுத்துவிட  வேண்டும்  என்பதே  காங்கிரஸ்காரர்களுடைய  எலக்ஷன்  பிரச்சினையாகிவிட்டது.

செய்த  கெடுதி  என்ன?

மற்றபடி  காங்கிரசின்  பேரால்  பார்ப்பனர்கள்  சொல்லும்  காரணங்கள்  ஒரு  காசுக்கும்  பயன்படாது  என்று  சொல்வேன்.

அரசியல்  விஷயத்தில்  தோழர்  ஷண்முகம்  என்ன  கெடுதி செய்தார்  என்று  யாராவது  சொல்ல  முடியுமா  என்று  கேட்கின்றேன்.  அவர்  வெகுகாலம்  காங்கிரசிலிருந்தவர்,  அவருடைய  திறமையையும்,  அறிவையும்  கண்ட பார்ப்பனர்  காங்கிரசில்  அவரைத்  தலையெடுக்க  வொட்டாதபடி  சூட்சி  செய்ததால்  காங்கிரசை  விட்டார்.  தன்  காலிலேயே  நின்றார்.  தோழர்  எ.ரங்கசாமி  அய்யங்கார்  முதலியவர்களைப்  போலவே  அவரும்  பல  விஷயங்களுக்கு  அரசாங்கப்  பிரதிநிதியாய்  நியமிக்கப்பட்டார்;  வெளி  தேசத்துக்கும்  சென்றார்.  அவர்  திறமையால்  ஜனப்  பிரதிநிதிகள்  கொண்ட  சட்டசபைக்குத்  தலைவரானார்.  அவர்  அங்கு  நடந்து  கொண்ட  திறமையால்  மறுபடியும்  அவர்  தலைவராகப்  போகிறார்  என்பது  உறுதி.  அவர்  மீது  ஆத்திரப்படும்  பார்ப்பனர்கள்  அவர்  தலைவராய்  இருந்தபோது ஏதாவது தவருதலாய்  நடந்துகொண்டார்  என்பதைக்  காட்டி  ஆ÷க்ஷபித்தால்  அது  ஆண்மையாகும்.

தோழர்  ஷண்முகம்  இந்திய  சட்டசபைத்  தலைவர்  என்கின்ற  ஹோதாவில்  ஒரு  சமயத்தில்  சட்டசபைக்குள்  வைசிராய்க்கு  காவலாக  இருந்த  சுமார்  100  போலீஸ்காரர்களை  வெளியில்  போகும்படி  சொன்னார்.  யார்  சொல்லியும்  கேட்கவில்லை.  மற்றொரு  சமயம்  ராணுவ  சம்பந்தமான  விஷயத்தில்  அரசாங்கத்துக்கு  நேர்  விரோதமாக  தீர்ப்புக்  கொடுத்தார்.  இந்த  இரண்டையும்  இந்தியா  முழுவதுமே  பாராட்டிற்று.  ஆனால்  பார்ப்பனப்  பத்திரிக்கைகளும்,  அவர்களது  கூலிப்  பத்திரிக்கைகளும்  மாத்திரம்  சிறிது  கூட  மனிதத்  தன்மை,  நியாயம்  ஆகியவையில்லாமல்  அவற்றை  மறைத்தும்,  திரித்தும்  கூறின.

வரதராஜுலுக்கு  ஏன்  போட்டி?

தோழர்  வரதராஜுலுவுக்கு  விரோதமாய்  இந்தப்  பார்ப்பனர்களும்,  அவர்கள்  கூலிகளும்  ஏன்  இவ்வளவு  விஷமப்  பிரசாரம்  செய்ய  வேண்டும்?  அவர்  என்ன  செய்தார்?  அவர் கிராமம்  கிராமமாக  தன் கைப்  பணத்தைச்  செலவு  செய்து  கொண்டு  பிரசாரம்  செய்தவர்.  அவர்  காங்கிரசில்  மாகாணத்  தலைவராகவும்,  எல்லா  இந்திய  காரியக்  கமிட்டி  அங்கத்தினராகவும்  இருந்தவர்.

இந்தப்  பார்ப்பனர்கள்தான்,  தோழர்  வரதராஜுலுவை  தென்னாட்டுத்  திலகரெனவும்,  தோழர்  ராஜகோபாலாச்சாரியாரைத்  தென்னாட்டுக்  காந்தி  எனவும்  பெயரிட்டார்கள்.  அதற்குப்  பிறகு  தேசத்துக்கு  விரோதமாயாவது,  சர்க்காருக்கு  அனுகூலமாயாவது  என்ன  காரியம்  செய்து  விட்டார்  என்று  யாராவது  சொல்லட்டும்.

“”4  அணா  கொடுத்து  காங்கிரசில்  சேரவில்லை.  ஆதலால்  அவர்  தேசத்துரோகி”  என்று  சொல்லுவதானால்  இதை  மற்றவர்கள்  சகிக்க  முடியுமா?

தோழர்  ராமசாமி  முதலியார்  அவர்களுக்கு  விரோதமாய்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  நிறுத்தப்பட்டிருக்கிறார்.

(தொடர்ச்சி  14.10.1934  குடி  அரசு)

குறிப்பு:            28.09.1934  இல்  சென்னைக்  கடற்கரையில்  நடைபெற்ற  கூட்டத்தில்  “வரப்போகும்  தேர்தல்’  என்பது  பற்றி  ஆற்றிய  சொற்பொழிவு.

பகுத்தறிவு  சொற்பொழிவு  07.10.1934

You may also like...