லார்ட் வில்லிங்டனின் வீர முழக்கம்
ஜோசியம் பலித்ததாம்
லார்டு வில்லிங்டன் பிரபு இந்திய சட்டசபையில் பேசும்போது சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் தங்களுடைய பயனற்ற தடை வேலைகளை சீக்கிரத்தில் கைவிட்டு விடுவார்கள் என்று முன்னமே ஜோசியம் சொன்னதாகவும் கொஞ்ச நாளைக்கு முன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் செத்துப்போய் விட்டதென்றும் இதை பல காங்கிரஸ் தலைவர்கள் கூட அப்போதே சொன்னார்கள் என்றும், இனி அது எந்தக் காலத்திலும் தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இப்போது காங்கிரஸ் ஸ்தாபனங்களின் மீதுள்ள தடையை நீக்கிவிட்டோம் என்றும் சட்டமறுப்பு இயக்கம் அடியோடு செத்துப் போய்விட்டதென்று தான் நம்புவதாகவும், இது விஷயமாய் தான் கையாண்ட முறைகள் எல்லாம் வெற்றி அளித்து விட்டதென்றும், அவை வெற்றியளித்ததற்கு காரணம் பொது ஜனங்களுக்கு நல்ல புத்தி வந்து சட்ட மறுப்பைக் கைவிட்டதே காரணமென்றும் சொல்லி கடைசியாக இந்த அளவுக்கு வில்லிங்டன் பிரபு ஜோசியம் பலித்துவிட்டது என்பதோடு இந்த ஜோசியம் வில்லிங்டன் பிரபு மாத்திரம் கூறவில்லை என்பதோடு, சுய அறிவுள்ள மக்கள் 100க்கு 99 பேர் வில்லிங்டன் பிரபுவின் பெயர் இந்திய வைசிராய் பதவிக்கு அடிபடுவதற்கு முன்பே சொன்ன ஜோசியமே தவிர வேறில்லை என்றும் சொல்லுகிறோம்.
ஆனால் ஒரு காலத்தில் அவர் ஜோசியம் பலித்து விட்டதாக சொல்ல முடியாது. என்னவென்றால் மறுபடியும் சட்ட மறுப்பு தலையெடுக்காது என்பது. தேர்தல்கள் முடிந்து காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் அதிகாரத்துக்கும் பதவிக்கும் வராமல் போக நேருமானால் அடுத்த தேர்தலுக்குள்ளாக மறுபடியும் செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துத்தான் தீருவார்கள். அப்போது அவர்கள் கைவசம் வசூலித்த பணமும் வேலையில்லாத திண்டாட்டத்தினால் கஷ்டப்படும் வாலிபர்களும் மிகுந்திருப்பார்களானால் மறுபடியும் ஒரு மூச்சு கிளம்பி ஊசிப்பட்டாசு கட்டுடன் வெடிப்பது போல் சடபுடவென்று வெடித்து அடங்கி அதன் பயனாய் சிலருக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அப்புறம் தான் அடங்குவார்கள். இது பொது ஜனங்களிடத்தில் உண்மையான செல்வாக்குப் பெற யோக்கியதை இல்லாத கூட்டத்தார்களுக்கு ஏற்பட்ட தர்மமேயாகும். ஆதலால் அதை வில்லிங்டன் பிரபு அடக்கிவிட்டதாக நினைப்பது போலி கௌரவமேயாகும். வில்லிங்டன் பிரபுவின் வைசிராய் ஆயுள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். ஆதலால் அவர் எப்போதும் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட்டேன் என்று சொல்வது ஆயுளை கழித்துப் பார்க்காமல் பேசிய பேச்சென்றே கருதுகின்றோம். ஏனெனில் இதற்குமுன் இருந்த வைசிராய் பிரபுக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் பேசிப் போய் இருக்கிறார்கள். சட்டமறுப்பு இந்த 14 வருஷமாய் இருந்து கொண்டுதான் வருகிறது.
ஆதலால் வைசிராய் பிரபுக்கு சட்டமறுப்பு அடியோடு இந்தியாவை விட்டு மறைந்து போகவேண்டும் என்கின்ற எண்ணம் உண்மையில் இருக்குமானால், மக்களின் வேலை இல்லாக் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் நீக்க வழி கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக் கிழமை வருவது போலும், வருஷத்துக்கொரு முறை ஜனவரி மாதம் வருவது போலும், எலக்ஷன்கள் தோரும் சீர்திருத்தங்கள் தோரும் சட்ட மறுப்பு வந்து கொண்டுதான் இருக்கும். சட்ட மறுப்பு மறைந்து போனதாகச் சொல்லுவதும் திங்கட்கிழமை விடிந்த உடன் ஞாயிற்றுக் கிழமை மறைந்தது போலவும் பிப்ரவரி பிறந்தவுடன் ஜனவரி மறைந்ததாகவும் நினைப்பது போல்தான் முடியும்.
பகுத்தறிவு துணைத் தலையங்கம் 02.09.1934