ஈ.வெ. ராமசாமிக்கும்

ச.ரா. கண்ணம்மாளுக்கும் “”ஜே”
நமதியக்கங் கண்ட தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ந் தேதியில் “”குடி அரசி”ல் எழுதிய “”இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்” என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் துடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார்.
அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், þ அபராதத் துகை செலுத்தாத பக்ஷம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள். எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது, தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தற்போது நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்திருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.
ஆயினும் நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பது தான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையானது நமது காரியாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் நூத்திப்பத்து என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமையாக ஒரு சங்கம் அவைகளின் தாலூக்கா தலைநகரில் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படுகிற தாலூக்காக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலூக்காக்களின் ஜில்லாக்களின் தலைநகர்களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கங்களிலும் அங்கத்தினர்களை ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரசாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும் படியாகவும் சர்க்கார் மீது எவ்வித துவேஷ உணர்ச்சி உண்டாக்காமலும் நமதியக்க உணர்ச்சியையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரசாரம் செய்து வரவேண்டும். அதனால் மக்களுக்குள் ஒருவித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி, அறியாமையையும் அடிமைப் புத்தியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடு களையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரசாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்.
அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள். நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கைகளையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரசாரத்தின் மூலமும், எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அனேகமாயிரக்கணக்கான எதிர்ப்புகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல்களுக்கும் எதிர்பார்த்துத் தயாராகவுள்ள தியாகத்தோடுள்ளவர்களுக்கேதான் அவைகள் கைகூடிவரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் ஸ்தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம். ஆகையால் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கையை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்து கொண்டுதான், தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழி காயங்களால் இராப்பகலன்றி உழைத்து வந்தவர்கள், இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக்காகவும் சிறைப்பட்டார்களோ அந்தந்த கொள்கையும், எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ணமுடைய ஒவ்வொருவரும் இனிச் செய்ய வேண்டிய தென்னவென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங்களும், பிரசாரங்களுமே உற்ற துணையாகும். ஆகையால் அவைகளை முன் தெருவித்துக் கொண்டபடி நிறுவி பிரசார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமதியக்கத் தோழர்களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
மற்றும் நமது கொள்கை சமதர்மமும், சமத்துவமுமானதற் கேற்றபடி நமதியக்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் சமானமானவர் களேயாவர்கள். நமது ஈ.வெ.ரா. உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார்களாகையால் தற்பொழுது நமதியக்கப் பிரசாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவர்களும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்.
ஈ.வெ.கி.
புரட்சி தலையங்கம் 28.01.1934

You may also like...