மண் குதிரையை நம்பின பலன்
கருப்புக் கொடியும், தடி அடியும் வெடிகுண்டும்
தோழர் காந்தியாருக்கும், காங்கிரசுக்கும் அரசியல் வாய்ப்பூட்டு ஏற்பட்டு விட்டதின் பிறகு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கா விட்டால் தங்களை உலகம் மறந்து விடுமோ என்று பயந்து சமுதாயத் துறையில் வேலை செய்ய எண்ணங்கொண்டு ஹரிஜன சேவை, ஆலயப் பிரவேசம் என்னும் பெயர்களால் சுற்றுப்பிரயாணம் செய்ததும், பணம் தண்டினதும் யாவரும் அறிந்ததாகும். இதை மெய்யென்று நம்பின சில அரசியல் பிழைப்புக்காரர்கள் ஆலயப் பிரவசே மசோதா, தீண்டாமை விலக்கு மசோதா முதலியவைகள் கொண்டு வந்து விளம்பரம் செய்து கொண்டதும் இந்தியர்கள் அறிவார்கள்.
பிறகு என்ன ஏற்பட்டது? மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின பலன்தான் ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது என்றால் தோழர் காந்தியார் தமது பரிவாரங்களுடனும் சுற்றுப் பிரயாணம் செல்லுகையில் அவருக்கு ஏற்பட்ட கருப்புக் கொடி, தடியடி, வெடிகுண்டு ஆகியவைகள் பிரயோகமும், காந்தி கூட்டத்தார் மற்றவர்கள் மீது பிரயோகித்த தடியடி பிரசாரமும் சேர்ந்து காந்தியாரைப் பயப்படுத்தி விட்டது. இதன் பயனாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் மூலம் ஓர் அறிக்கை வெளியிட வேண்டியதாய் விட்டது. அந்த அறிக்கையானது காங்கிரசும் காந்தியாரும் சமூகத் துறையில் கொண்டுள்ள உள் எண்ணத்தை நிர்வாணப் படுத்திக் காட்டிவிட்டது என்றுதான் சொல்லுவோம். “”சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி” என்கின்ற பழமொழி போல் ஆலயப் பிரவேசம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றும், அரசியல் உரிமைகளும், பொருளாதார முன்னேற்றமும் கிடைத்தால் போதும் என்றும் கருதி, அதற்காக அரசாங்கத்தினிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்த தீண்டப்படாதார் என்னும் மக்களைச் சாதிப்பதாக வேஷம் போட்டு “”அங்கேண்டி மகளே ஆலாப் பரக்கின்றாய், இங்கு வா காற்றாய்ப் பறக்கலாம்” என்ற மாதிரியில் அழைத்து அவர்களை (தீண்டாதவர்கள்) ஏமாற்றியாகிவிட்டது. “”ஹரிஜன வேலை செய்யாமல் ஹரிஜனங்களுக்காக பாடுபடாமல் உயிர் வைத்து இருக்க முடியாது. அதற்காகப் பட்டினி கிடந்து சாகப்போகிறேன்” என்று சொல்லி விடுதலை பெற்று வந்ததின் பயன் இன்று விளங்கி விட்டது.
இந்திய தேசீய சபையின் சர்வாதிகாரியும் ஏகப் பிரதிநிதியும் என்று சொல்லப்பட்ட தோழர் காந்தியாரின் முயற்சியும் ஹரிஜன சேவையும் தீண்டப்படாதவர்களுக்கு இந்தப் பயனைக் கெடுத்திருக்குமானால், இனி அவர்களுக்கு தேசாபிமானத்தால், இந்திய மக்களை நம்புவதால் என்ன பயன் கிடைக்கக் கூடும் என்பதைப் பற்றி நாம் ஜோசியம் கூற வேண்டியதில்லை.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தீண்டப்படாதாருக்கு சம சுதந்திரம் கொடுக்க இஷ்டப்படவில்லை என்று முடிவு ஏற்பட்டு விட்டால் அதுவும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மனித உரிமை, சுதந்திரம் கூட கொடுக்க இஷ்டமில்லை என்று ஏற்பட்டு விட்டால் அவர்களை இனியும் இந்த தேச மக்களையும், சுதந்திரம் கொடுக்க சம்மதியாத மதத்தையும், சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு அவர்களுடன் கூட இருக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஆலயப் பிரவேச பேச்சும், வார்த்தையும் எல்லாம் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட அரசியலில் தனித் தொகுதி தேர்தல் உரிமையையும், உத்தியோகத்தில் தனி பிரதிநிதித்துவத்தையும் பாழாக்குவதற்காக ஏற்பட்ட சூக்ஷி தவிர வேறில்லை என்பது இப்போதாவது தீண்டப்படாத மக்களுக்கும், கீழ் ஜாதியராய் கருதப்படும் மக்களுக்கும் நன்றாய் விளங்கிற்றா இல்லையா என்று கேட்கின்றோம்.
இன்று தேர்தலுக்காக என்று வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கொள்கை திட்டங்களிலும் நன்றாய் வெளிச்சமாய் மதக் கொள்கைகளில் நடு நிலைமை வகிப்பதாகவும், மத சம்பந்தமான பழக்க வழக்கங்களில் பிரவேசிப்பதில்லை என்றும், அவற்றை காப்பாற்றுவதாக வாக்குறுதி கொடுப்பதாகவும் கண்டிருப்பதை யாரும் காணலாம். இந்த நிலையில் மதத்தால், சாஸ்திரங்களால், பழக்க வழக்கங்களால், கீழ்ப்பட்டு இழிவு படுத்தப்பட்டு தீண்டாதாராய், கிட்ட வரக்கூடாதவராய், பாவிகளாய் கருதப்பட்டு அந்தப்படி நடத்தப்பட்டு வரும் மக்கள் இனியும் காங்கிரசையும், காந்தியாரையும் நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகாதா என்று கேள்ப்பதோடு, எப்பாடு பட்டாவது, என்ன தியாகம் செய்தாவது தனித் தொகுதி முறையையே அரசாங்கத்தினிடம் வற்புறுத்தி அடைவதற்கு முயற்சிக்க வேண்டியது தாழ்த்தப்பட்ட மக்களின் கடமை என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பகுத்தறிவு கட்டுரை 02.09.1934