“குடி  அரசு’  வெளிவராத  ஆண்டு

 

“”இன்றைய  ஆட்சி  ஏன்  ஒழிய  வேண்டும்?”  என்ற  தலையங்கத்துக்காக  “அரசு  வெறுப்புக்  குற்றத்தின்  கீழ்  பெரியார்  கைது  செய்யப்பட்டதைத்  தொடர்ந்து,  1933  ஆம்  ஆண்டு  நவம்பர்  19  ஆம்  தேதியோடு  “குடி அரசு’  நிறுத்தப்படுகிறது.  1934  ஆம்  ஆண்டில்  ஆகஸ்டு  மாதம்  26  ஆம்  தேதியிலிருந்து  “பகுத்தறிவு’  வார  ஏடு  வெளி  வரத்  தொடங்குகிறது.  எனவே  இத்தொகுதியில்  பகுத்தறிவு  வார  ஏட்டில்  இடம் பெற்றிருந்த  கட்டுரைகளே தொகுக்கப்  பெற்றுள்ளதை வாசகர்களுக்கு  சுட்டிக்  காட்டுகிறோம்.  பகுத்தறிவின்  முதல்  தலையங்கமே

“”முடிவாய்  கூறுமிடத்து,  பகுத்தறிவு  மனித  ஜீவாபிமானத்துக்கு  மக்களை  வழி  நடத்திச்  செல்லுமே  தவிர  எக்காரணம்  கொண்டும்  மக்கள்  பின்  நடந்து  செல்லும்படியான  அடிமை  வாழ்வில் உயிர்  வாழாது”  என்று  அறிவிக்கிறது.

ஆகஸ்ட்  மாத  இறுதியிலிருந்து  டிசம்பர்  முடிய  “”பகுத்தறிவு”  தாங்கி  வந்த  ஆழமான  சிந்தனையைத்  தூண்டும்  கட்டுரைகள்  தலையங்கங்கள்  இத்தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளன.  தீண்டப்படாத  மக்களுக்கு  தனித்  தொகுதியை  எதிர்த்த  காந்தியார்  அவர்களை  கோயிலுக்குள்  அனுமதிக்கும்  மசோதாவைக்  கொண்டும்  வந்து,  தீண்டப்படாத  மக்களை  மகிழ்விக்க  முயற்சிக்கிறார்.  அதற்கும்,  காங்கிரசிலுள்ள  பார்ப்பனர்கள்  எதிர்ப்பு  தெரிவித்தனர்.  “மேல்  ஜாதி  இந்துக்கள்  சம்மதமில்லாமல்  மத  சம்பந்தமான  பழக்க  வழக்கங்களையோ,  சடங்குகளையோ  தொடக்  கூடாது”  என்ற  ராஜகோபலாச்சாரி  அறிக்கை  வெளியிடுகிறார்.  மதன்  மோகன்  மாளவியா  என்ற  பார்ப்பன  காங்கிரஸ்  தலைவரோ  இந்த  முயற்சிக்கே  எதிர்ப்பு  தெரிவித்து,  காங்கிரசை  விட்டு  விலகியதோடு  மட்டுமல்ல;  காங்கிரசை  தீவிரமாக  எதிர்க்கவும்  தொடங்கினார்.

இதே  ஆண்டு  நவம்பரில்  இந்திய  சட்டசபைக்கான  தேர்தலில்  போட்டியிட்ட  நீதிக்கட்சி  தோல்வியைத்  தழுவியது.  தேர்தல்  தொடர்பாக  காங்கிரசுக்கு  எதிராக  பெரியார்  முன்  வைத்த  கருத்துகள்  இத்தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளன.  நீதிக்கட்சியை  விமர்சனத்துக்கு  உள்ளாக்கும்  பெரியார்,  அதே  நேரத்தில்  தோல்வியால்  விரக்கியடைந்த  கட்சியை  உற்சாகப்படுத்தி  பல  தலையங்கங்கள்  கட்டுரைகளை  எழுதியுள்ளார்.

பெரியார்  காங்கிரசில்  சேரப்  போகிறார்  என்று  பரப்பப்பட்ட  கருத்துக்கு  பதிலளித்த  பெரியார்  செத்துக்  கொண்டிருக்கும்  காங்கிரசிடம்  தன்னால்  எப்படி  நேசம்  கொள்ள முடியும்  என்று  கேட்டார்.

தனது  கையெழுத்தோடு  வெளியிட்ட  அறிக்கையில்  பெரியார்,  தனது  அரசியல்  நிலைப்பாட்டை  இவ்வாறு  விளக்குகிறார்:

“”மனித  சமூக  நன்மையை  அதிலும்  தாழ்த்தப்பட்ட  ஏழ்மைப்பட்ட  பாமர  மக்களின்  நன்மைக்காக  காங்கரசு  மாத்திரமல்ல,  இன்னும் எக்கட்சியின்  நேசம்  கொண்டாலும்  கொள்வேனே  தவிர  மற்றபடி  எனது  ஜீவனோபாயத்துக்கோ  வாழ்க்கை  உபாயத்துக்கோ  எக்கட்சியிலும்  சேர  மாட்டேன்   என்றும்,  சேர  வேண்டிய  அவசியமில்லை  என்றும்  தெரிவித்துக்  கொள்கிறேன்.”

காந்தி  ஜெயந்தி,  கிருஷ்ண  ஜெயந்தி,  மே தினம்  கொண்டாடுவதைப்  போல்  “பார்ப்பன  ஆதிக்கம்  ஒழிப்பு  நாள்’  என்பதாக  ஆண்டுக்கு  ஒரு  நாள்  கொண்டாடப்பட  வேண்டும்  என்ற  கருத்தை  பெரியார்  முன்  வைக்கிறார்.  குஞ்சிதம்  குருசாமி  அம்மையார்  பகுத்தறிவுப்  பிரச்சாரம்  செய்தார்  என்ற  ஒரே  குற்றத்துக்காக  அவர்  ஆசிரியராக  பணியாற்றிய  பார்ப்பன  பள்ளி  நிர்வாகம்  அவரை  பதவி  நீக்கம்  செய்ததை  பெரியார்  எடுத்துக்  காட்டி,  கண்டித்துள்ளார்.

புரட்சிக்  கவிஞர்  பாரதிதாசன்  எழுதி,  சென்னை  சீர்திருத்த  நாடக  சங்கத்தாரால்  நடத்தப்பட்ட  “இரணியன்’  நாடகத்துக்கு  தலைமை  ஏற்று,  பெரியார்  நிகழ்த்திய  உரை  நாடகம்  பற்றிய  அவரது  ஆழமான  பார்வையை  முன்  வைக்கிறது.

மனிதனின்  பரிணாம  வளர்ச்சியை  விளக்கிடும்  “மனித  உற்பவம்’  என்ற  நூல்  இந்திய  மொழிகளிலே  முதன்முதலாக  தமிழில்  வெளிவரும்  நூல்  மதிப்பீடு  ஒன்றும்   இதில்  இடம்  பெற்றுள்ளது.

சென்னையில்  நடந்த  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  மாநாட்டுக்கு  பெரியார்  அனுப்பிய  வேலைத்  திட்டம்  இத்  தொகுதியில்  இடம்  பெற்றுள்ளது.

சுயமரியாதை  இயக்கத்தின்  மீது  கருத்து  மாறுபாடுகளை  முன்  வைத்து  தோழர்  ஒருவர்  எழுதிய  கடிதத்துக்கு  பெரியார்  தந்த  பதில்  ஆழமான  சிந்தனைக்குரியதாகும். பெரியாரியத்தின்  மய்யமான  கருதியலை  துல்லியமாக  தொட்டுக்  காட்டுகிறது,  இக்கட்டுரை.

நீதிக்கட்சியில்  பார்ப்பனர்களை  சில  நிபந்தனைகளோடு  சேர்க்கலாம்  என்று  பனகல்  அரசர்  உள்ளிட்ட  சில  தலைவர்கள்  வலியுறுத்தியபோது,  பெரியார்  அதை  எதிர்த்தார்.  பிறகு  பார்ப்பனர்களை  சேர்ப்பதன்  விளைவுகளை  அவர்களே  உணர்ந்து  கொள்ளட்டும்  என்று  கருதி,  பெரியார்  தனது  எதிர்ப்பை கைவிட்டார்.  பார்ப்பனர்களை  விலக்கி  வைப்பதும்  வகுப்புவாரி  பிரதிநிதித்துவம்  கோருவதும்  ஒற்றுமை  சமத்துவம்  உருவாகும்  காலம்  வரையில்  தானே  ஒழிய  உலகம்  உள்ளவரை  தொடர  வேண்டும்  என்பதல்ல  என்று  விளக்கமளிக்கிறார்.

பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  பிரச்சினையை  திசை  திருப்புவதற்கு  ஆந்திரர்  தமிழர்  “மோதலை’  முன்னிறுத்தும்  முயற்சிகளை  பார்ப்பனர்கள்  தொடங்கிய  போது,  அதற்கு  பெரியார்  பதிலளித்திருக்கிறார்.

விருதுநகரில்  நடந்த  காங்கிரஸ்  கூட்டம்  ஒன்றில்  காங்கிரஸ்  எதிர்ப்பாளர்கள்  கல்  வீசியதாக  “ஜஸ்டிஸ்’  பத்திரிகையில்  வந்த  செய்தியைப்  பார்த்து  கொதிப்படைந்த  பெரியார்,  சுயமரியாதைக்காரர்கள்,  இதில்  ஈடுபட்டிருந்தால்,  மிகவும்  இழிவானது  என்று  வன்மையாகக்  கண்டித்து  எழுதியதோடு,  பொது  நிகழ்ச்சிகளில்  (யார்  நடத்தினாலும்) காலித்தனமோ,  கூச்சலோ,  குழப்பமோ  செய்வதை  வன்மையாக  கண்டிக்கிறார்.

மதம்,  ஜனநாயகம்,  தேர்தல்  மோசடிகள்  போன்ற  பல்வேறு  தலைப்புகளில்  பெரியாரின்  அரிய  கருத்துகளை  வெளிப்படுத்தும்  சிந்தனைக்  களஞ்சியமாக  மிளிருகிறது  இத்தொகுப்பு!

பதிப்பாளர்

You may also like...