இனியாவது  புத்தி  வருமா?

 

தீண்டப்படாத  மக்கள்  என்பவர்களுக்கு  ஆலயப்  பிரவேசம்,  என்னும்  பேரில்  காங்கிரஸ்  செய்து  வந்த  கிளர்ச்சியை  அப்போதே  நாம்  கண்டித்து  எழுதி  வந்ததுடன்,  உலகில்  கோவில்களே  இருக்கக்  கூடாதென்றும்,  அதற்கு  எவருரையும்  சொல்லிவிடக்கூடாதென்றும்,  சொல்லியும்  எழுதியும்  வந்தது  யாவரும்  அறிந்ததாகும்.

மற்றும்  கோவில்களை  கள்ளர்  குகையென்று  கிறிஸ்துவும், கோவில்கள்  இடித்து  நொறுக்கித்  தள்ளப்பட  வேண்டியது  என்று  முகம்மதுவும்,  கோவில்கள்  விபசாரிகள்  விடுதி என்று  காந்தியும்  சொல்லியிருப்பதும்  யாவரும்  அறிந்ததாகும்.

தோழர்  காந்தியார்  கோவில்களை  விபசார  விடுதி  என்று  ஒரு  சமயத்தில்  சொல்லியிருந்தாலும்,  இப்போது  இரண்டொரு  வருஷ  காலமாய்  அவ்விபசார  விடுதிக்கு  ஆள்  பிடித்து  விடும்  வேலையை  விவரமாய்  செய்து  வந்ததுடன்  அதற்காகப்  பத்து  லக்ஷக்கணக்கான  ரூபாய்களையும்  திரட்டி  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும்.

தீண்டப்படாதாருக்கு  அரசாங்கத்தார்  அரசியலிலும்,  உத்தியோகத் திலும்  தனித்தொகுதி பிரதிநிதித்துவம்  கொடுத்த  பிறகு  அதை  ஒழிக்கக்  கருதிய  காந்தியார்,  தீண்டாதாருக்கு  நல்ல  பிள்ளையாகக்  கருதி  அவர்களுக்கு  கோவில்  பிரவேசம்  ஏற்பாடு  செய்து  கொடுப்பதாய் வாக்குக்  கொடுத்து  அதற்காக  ஒரு  சட்டம்  செய்ய  வேண்டும்  என்ற  சட்டசபை  அங்கத்தினர்களுக்கு  உபதேசம்  செய்து  ஒரு  மசோதாவும்  கொண்டு  வரக்  கருதிச்  செய்து  அதை  மற்ற  மெம்பர்கள்  ஆதரிக்க  வேண்டுமென்றும்  செய்வதாகவும்  சொல்லி,  அந்தப்படி  ஒரு  மசோதா  கொண்டு  வரப்பட்டதும்  யாவரும்  அறிந்ததாகும்!

அம்மசோதா  பொதுஜன  அபிப்பிராயத்துக்கு  சர்க்காரால்  அனுப்பப்பட்ட  சமயத்தில்  காங்கிரஸ்  தலைவர்கள்  பண்டித  மாளவியா  முதற்கொண்டு  ஈணூ.ராஜன்,  சத்தியமூர்த்தி  இருதியாக  உள்ளவர்கள்  “”அம்மசோதா இந்து  மதத்துக்கு  விரோதம்”  என்று  சிலரும், “”அதன் கருத்து ஒப்புக்கொள்ளப்படுவதாய் இருந்தாலும் சட்டம் செய்வது கூடாது”  என்று சிலரும்  அபிப்பிராயங்கள்  கொடுத்து  பிரசாரமும்  செய்து  வந்ததல்லாமல்  கடைசியாக  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  ஒரு  அறிக்கை  வெளியிட்டு  அதை  காந்தியாரையும்  ஒப்பச்  செய்து  அம்மசோதாவின்  தலையில்  ஒரு  அடி  அடித்து  அதை  கச  கசவென்று  நசுக்கி  தள்ளிவிட்டார்கள்.  அவ்வறிக்கை  சாரம்  என்னவென்றால்:

“”தீண்டாமை  விலக்கு  விஷயத்தில்  காங்கிரஸ்  எவ்வித  அபிப்பிராயங்  கொண்டிருந்த  போதிலும்  ஆலயப்பிரவேச  விஷயத்தில்  மூன்று  விஷயங்களை  கவனிக்க  வேண்டும்.

  1. இந்துக்களல்லாதார் கலந்து  ஓட்டு  பெற்று  மசோதா  நிறை வேறுவதை  காந்திஜீயும்  காங்கிரஸ்காரரும்  விரும்பவில்லை.
  2. மேல் ஜாதி  இந்துக்கள்  சம்மதமில்லாமல்  மத  சம்மந்தமான  பழக்க  வழக்கங்களையோ  சடங்குகளையோ  தொடக்  கூடாது.
  3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு  இப்போது  எவ்வித  அபிப்பிராயமும்  கொடுக்கக்  கூடாது.  இதைப்பற்றி  நன்றாய்  தீர்க்காலோசனை  செய்ய  வேண்டியிருக்கிறது.”

என்பது  ஆகும்.

இதைக்  கண்ட  பின்பும்  மாளவியா  எதிர் கக்ஷி  ஆரம்பித்ததைப்  பார்த்த  பிறகும்,  தோழர்கள்  சத்தியமூர்த்தி,  ஈணூ.ராஜன்  முதலியோர்கள்  சட்டம்  செய்யக்கூடாது  என்று  பிரசாரம்  செய்த  பின்பும்,  சர்க்கார்  இம்  மசோதா  விஷயத்தில்  அலக்ஷியம்  காட்ட  ஆரம்பித்ததும்,  பொது  ஜன  அபிப்பிராயம்  சாதகமாயில்லை  என்று  சொல்ல  வேண்டி இருந்ததும்,  கடைசியாக  இதை  இந்து  சமூகம்  ஆதரிக்காததால்,  சர்க்கார்  எதிர்க்க  வேண்டியவர்களாகி  விட்டார்கள்  என்று  சொன்னதும்,  ராஜபகதூர்  கிருஷ்ணமாச்சாரியார்  தீண்டப்படாதாருக்கு  மத  விஷயங்களில்  சமத்துவம்  கொடுக்கக்  கூடாது  என்று சொன்னதும்  ஆன  காரியங்கள்  அதிசயமான  விஷயமாகாது.  காங்கிரசுத்  தலைவர்கள்  கருப்பு  (திருட்டு)  பாஷையில்  பேசினார்கள்.  சர்க்காரும்  ராஜபகதூரும்  வெள்ளையான  பாஷையில்  பேசினார்கள்  என்பதை  விட  இதில்  பிரமாத  வித்தியாசமெதுவும்  இல்லை.

கடைசியாக  தோழர்  ராஜகோபாலாச்சாரியாரின்  சமாதானமானது  “”குதிரை  கீழே  தள்ளினதுமல்லாமல்  புதைக்கக்  குழியும்  பரித்தது”  என்பது  போல்  “”இந்த  அறிக்கை  காந்தியாரின்  சம்மதம்  பெற்றதாகும்”  என்றும்  சொல்லிவிட்டார்.  இதிலிருந்து  காந்தியார்  முதல்  சத்தியமூர்த்தி  வரை  தீண்டாதார்  விஷயத்தில்,  சமூக சீர்திருத்த விஷயத்தில்,  ஜாதி  வித்தியாச  உயர்வு தாழ்வு விஷயத்தில்   கொண்டுள்ள  அபிப்பிராயம்  என்னதென்பதை  ஜனங்கள்  அறிந்து  கொள்ள  நல்லதொரு  சமயம்  ஏற்பட்டது  என்றுதான்  கருத  வேண்டும்.

எனவே  இனியாவது  தீண்டப்படாதவர்களாகவும்,  தீண்டப் படாதவர்களாய்க்  கருதப்படுபவர்களாகவும்,  தீண்டப்படாதார்  என்று  ஆதாரங்களிலும்  சர்க்கார்  தீர்ப்புகளிலும்  தீர்மானிக்கப் பட்டிருக்கிறவர் களாகவும்,  இருந்து  வரும்  மக்களுக்கு  புத்தி  வருமா?  அல்லது  இன்னமும்  “”காங்கிரசு”  “”காங்கிரசு”  “”காந்தி”  “”காந்தி”  என்று  கட்டி  அழுது  ஈன  ஜாதிக்காரர்கள்  என்று  உலகோர்  கருதவும்  கல்  மேலெழுதவும்  அனுகூலமாய்  நடந்து  கொள்ளுவதையே  கருமமாய்  கருதுவார்களா?  என்பதே  நமது  கேள்வி.

பகுத்தறிவு  கட்டுரை  26.08.1934

You may also like...