“வெடிகுண்டு”

சுயமரியாதை இயக்கக் கொள்கையை ஆதரித்து மதுரையில் ‘வெடி குண்டு’ என்னும் பத்திரிகை தோன்றி தொண்டாற்றி வருவது யாவரும் அறிந்ததேயாகும். வியாபார முறையை விட்டும், சமயத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும், தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும் இல்லாமல் “பரிசுத்தமாய்” இருக்கும் நிலையை விட்டும் நடைபெறும் பத்திரிக்கைகள் நமது நாட்டில் அதாவது பகுத்தறிவற்று பாமரத்தன்மை பூண்டு இருக்கும் ஜனங்கள் மலிந்தநாட்டில், கவலையற்று நடைபெறுவது என்பது மிக மிக கஷ்டமான காரியமாகும். இந்தக் காரணத்தால் இதுசமயம் “வெடிகுண்டு” பத்திரிகை மிக்க நெருக்கடியில் நடைபெறுகிறது என்று நாம் கேள்விப்படுவதில் அதிசயமொன்றுமில்லை. இருந்தபோதிலும் மதுரை சுயமரியாதை சங்கத்துக்கு மிகுதியும் ஆதரவளித்து வருபவரும், முனிசிபல் கௌன்சிலரும் செல்வாக்கும், செல்வமும் பொருந்தியவருமான தோழர் ஆ. அ. ஆறுமுகம் அவர்களது உதவியாலும் ஆதரவாலும் ஒருவாரு நடத்தப் பட்டு வருகிறது என்றாலும் சதா சர்வகாலமும் ஒரு பத்திரிகை ஒருவரின் ஆதரவையும், உதவியையும் கோறி நிற்காமல் தன் காலிலே தைரியமாய் நிற்கவேண்டுமாதலால் சுயமரியாதை இயக்க அன்பர்களும், அபிமானி களும், அதை ஆதரிப்பது மாத்திரமல்லாமல் அது கிராமங்கள் மூலை முடுக்குகள் தோறும் செல்லும்படியான அளவுக்கு உதவிசெய்ய வேண்டு மாய் வேண்டுகிறோம்.

குடி அரசு – மதிப்புரை – 27.08.1933

You may also like...