துணுக்குகள்
லண்டன் மாணவர்கள்
குடியேற்ற நாடுகளில் உள்ள மக்கள், பரிபூரண சுயேச்சையோடு வாழவேண்டுமென்கிற கிளர்ச்சியால், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு அழிவை உண்டாக்க வேண்டுமென்கிற கோட்பாடு லண்டன் சர்வகலாசாலைகளில் ஏற்பட்டு வருவதானது அங்கு சர்வகலாசாலை அதிகாரிகளிடையே சிறிது பீதியை உண்டாக்கி வருகிறது. 12 இந்தியப் பொதுவுடமை வாதிகளைத் தவிர்த்து கணக்குப்பார்த்தாலும், அங்கு வசித்துவரும் சில ஆயிர இந்திய மாணவர்களும் கிரேட் பிரிட்டனில் ஸ்திரமாக நிலைபெற்றுள்ள சிலரும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு விரோதமான இயக்கத்திலேயே சார்ந்துள்ளனர் என்பது பகிரங்க இரகசியம். அங்கு சர்வகலாசாலை யூனியன்களில் நிகழும் தர்க்க வாதத்தின் போது இரு இந்தியர்கள், பொதுவுடமை தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதும், இருபது பேர் தொழிலாளர்களுக்காகவும், சமுதாய ஜனநாயகத்துவ கொள்கைகளுக்காகவும் பரிந்து பேசுவது வாடிக்கையாகும். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ருசிகரமான இரண்டு சர்வகலாசாலை மீட்டிங்குகள் நடைபெற்றன. அதில் ஒன்று கேம்பிரிட்ஜ் மாணவர்களின் சோஷியலிஸ்ட் கழகத்தாரால் கேம்பிரிட்ஜில் கூட்டப்பட்டதாகும். இதில் பென் பிராட்லேயும், சக்லத்வாலாவும் முக்கிய பேச்சுக்காரர்களாவார்கள்.
பிரிஸ்டல் சர்வகலாசாலையில் வருஷாந்திர விழா சனிக்கிழமை (3334) இரவு நடந்தது. சர்வகலாசாலையின் “இன்டர் நேஷனல் சோஷியலிஸ்டு குரூப்’ மீட்டிங்கை ஆரம்பித்தது. அன்று பேச எடுத்துக்கொண்ட விஷயம் “”ஜனநாயகத்துவமும் இந்திய விவசாயிகளும்” என்பதைப் பற்றியதாகும். இந்த விழாவில் பேச லார்டு லாயிட் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் வர முடியாததின் காரணமாக அவர் தனக்குப் பதிலாக சர் லூயிஸ்டு ஆர்ட்டை நியமித்து அனுப்பியிருந்தார். சர்வகலாசாலை மாணவர்களின் சார்பாக இந்திய விவசாயிகளின் ஜனநாயகத்துவ முறைகளுக்குப் பரிந்து பேச, வாலிப இந்திய மாணவரான மிஸ்டர் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் சோஷியலிஸ்ட் மாணவர்கள் தங்களுக்காகப் பேச ஏகாதிபத்தியத்தின் நேர் எதிர்ப்புவாதியான மிஸ்டர் பிராட்வாலை நிறுத்தியிருந்தார்கள். ஆனால் கடைசி நிமிஷத்தால் அவருடைய பெயரை மாற்றிவிட்டு ஷாபூர்ஜி சக்லத்வாலா பெயரை புகுத்திவிட்டார்கள்.
சர் லூயிஸ்டூ ஆர்ட் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, ஜாக்கிரதையாக தான் எழுதி வைத்திருந்த பேச்சைப் படித்தார். இந்தியர்கள் பன் நெடுங்காலமாக ஒரு மனிதனின் குடைக்கீழ் இருக்க நம்பிக்கைக் கொண்டவர்களென்றும், இந்திய விவசாயிகள் ஒரு மகாராஜாவையோ அல்லது ஒரு நவாபையோ தான் விரும்புகிறார்களென்றும், அவர்கள் எந்த பார்லிமென்ட் தலைவரையும் விரும்பவில்லையென்றும், எவ்வாறு இந்தியாவின் பல ஜாதி பாழை வகுப்பார்களை பெரிய மொகல்களும் பீஷ்வாக்களும் ஆண்டார்களென்றும், வழக்கமான அழகான சம்பிரதாயப் பேச்சில் சித்தரித்துக் காட்டினார். மிஸ்டர் சிங் பேசும் பொழுது இந்தியர்கள் 4000கி.மு. காலத்திலேயே “”குடி யாட்சியை” இந்தியாவில் நிறுவி அதனை ஆண்மையோடு நடத்தியிருக்கின்றார்களென்றும், இன்றையதினம் இந்திய கிராமவாசிகள் அறியாமையில் மூழ்கியிருந்த போதிலும் “”பஞ்சாயத்து” மூலமாகவே இந்தியாவில் சாந்தியை ஏற்படுத்தலாமென்றும் தக்க ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். சக்லத்வாலா பேசும் பொழுது, சர் லூயிஸ்டு ஆர்ட் பேசியது யோக்கியமானதானாலும், அவருடைய நோக்கம் முற்றிலும் தவறான எண்ணம் கொண்டதென்றும் அவருடைய பரிசீலனை முறைகளும் முடிவுகாணும் தன்மைகளும் முழுதும் தப்பானதென்றும் எடுத்துக்காட்டிப் பேசினார். பின்னால் சக்லத்வாலா பேசிக்கொண்டிருக்கும் பொழுது கன்சர்வேடிவ் கக்ஷியைச் சேர்ந்த பார்லிமெண்டு (பிரிஸ்டல் பிரிவு) அங்கத்தினரான லார்டு ஆப்ஸ்லே “”இந்தியாவுக்குத் தேவையான ஜனநாயகத்துவத்தைப் பற்றியதில்” குறுக்கு கேள்வி கேட்டார். இதற்கு சக்லத்வாலா பதில் சொல்லும்பொழுது 1918M “க.கி’ எலெக்ஷன் அனுபவத்தினாலாவது அல்லது 1924M ஜினோவிய்ப் போர்ஜரியாலாவது அல்லது 1931M பின்மணி எலக்ஷனைக் கொண்டாவது, இன்றைய பார்லிமெண்டரி முறையானது உண்மையான ஜனநாயகத்துவம் கொண்டது என்று எவர் துணிந்து பேசுவாரானாலும் அந்த இங்கிலீஷ்காரரின் அறியாமைக்கும் அகம்பாவத்திற்கும் தான் பெரிதும் ஆச்சரியப்படுவதாகக் கூறினார்.
மார்க்ஸ் விழா
7தேதி புதன்கிழமையன்று கார்ல் மார்க்ஸ் இறந்த 51வது வருஷ விழாவுக்காக லண்டனில் உள்ள புரட்சி தொழிலாளர்கள், மார்க்ஸ் ஞாபகார்த்த வாசகசாலையாரும், தொழிலாளர் பள்ளிக்கூடத்தாரும் குறிப்பிட்டிருந்தவாறு மார்க்ஸ் புதைக்கப்பட்ட ஹைய்கேட் சவக்காட்டில் கூடினார்கள். அன்று பேசியதில் முக்கியஸ்தர் ஆர். பேஜ் ஆர்னாட் என்பவராவர். அவர் பேசும் பொழுது காரல் மார்க்சைப் பற்றியும் அவருடைய உயிர் தோழரான பிரடிரிக் என்ஜல்சைப் பற்றியும் சிலாகித்துப் பேசி, அவருடைய உபதேசங்கள் தடுக்க முடியாத சம்பவங்களாக இன்று நிகழ்ந்துவருவதாகவும், தொழிலாள பாட்டாளி மக்கள் தங்களைத் தாங்களே நன்கு உணர்ந்து தங்களின் விடுதலைக்குப் போராட முனைந்து விட்டார்களென்றும், உலகத்தின் ஆறில் ஒரு பகுதியான ஐக்கிய சோவியத்தில் ஸ்டாலினின் தலைமையின் கீழ் “”மார்க்சிசம்” வெற்றிபெற்று விட்டதாகவும், இங்கு (இங்கிலாந்தில்) மார்க்சின் சவத்திற்குமேல் நிற்கும் நாம் உழைப்பாளிகளான பாமரர்களின் சர்வாதிகாரத்தால் அண்மையில் மார்க்ஸிசத்தின் வெற்றியையும், தொழிலாள வகுப்பாரின் விடுதலையையும், குடியேற்ற நாடுகளில் வாழும் மக்களின் சுயேச்சையையும், சோஷியலிசத்தின் ஸ்தாபிதத்தையும் காணுவோமென்று கூறி முடிவாக “”எல்லா தேசங்களிலுமுள்ள பாடுபடும் மக்களே ஒன்று சேருங்கள்” என்று பேசி முடித்தார்.
குஜராத்தில் சோஷியலிசம்
சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பம்பாய் சோஷியலிஸ்டு குரூப்பாரின் வேலைத்திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குஜராத்தி சோஷியலிஸ்ட் பிரிவு ஒன்று வாலிப காங்கிரஸ் ஊழியர்களைக் கொண்டு பரேடாவில் கடந்த மார்ச்சு மாதம் 17 தேதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சோஷியலிஸ்ட் நோக்கங்கொண்ட குஜராத்தி வாலிபர்கள் அதில் கலந்து கொள்ளும்படி ஓர் அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.
புரட்சி துணுக்குகள் 01.04.1934