தோழர்  ஈ.வெ.ரா.  விடுதலை

 

தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள்.

ராஜமகேந்திரம்  ஜெயிலில்  வெயில்  கொடுமையால்  சிறிது  கருத்தும்  இளைத்தும்  போயிருக்கிறார்.  ஆனால்  உடல்  சௌக்கியமாய் இருப்பதாக  நினைத்துக்  கொண்டிருக்கிறார்.  சமீபத்தில்  வெயில்  கொடுமைக்காக  எங்காவது  குளிர்ச்சியான  இடத்துக்குப்  போகக்  கருதி  இருக்கிறார்.

ஜெயிலில்  தோழர்  ஈ.வெ.ரா.வுக்கு  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  முயற்சியில்  அகிலாஸ்  சௌகரியம்  கிடைக்கப்பட்டது  என்றாலும்,  அந்த  ஜெயிலில்  கிளாஸ்  பிரிவுகளுக்குப்  போதிய  சௌகரியம்  இல்லாததால்  ஆகிலாஸ்  கைதியாகவே  இருந்து  வருகிறேன்  என்று  ஜெயில்  அதிகாரிகளுக்குச்  சொல்லிவிட்டு  பி.கிளாஸ்   கைதியாகவே  இருந்து  வந்தார்.  அங்கு  சாப்பாடும்  ஒரு  பத்திரிகையும்  தவிர  மற்றபடி  இ  கிளாஸ்  கைதி  போலவே  நடத்தப்பட்டார்.  சாப்பாடுகூட  ரொட்டி,  பால்  என்பதைத்  தவிர  வேறொன்றும்  இல்லை.  இ  கிளாஸ்  கைதிகளுடனேதான்  வைக்கப்பட்டிருந்தார்.  ஒரு  பிளாக்கில்  உள்ள  32  அறைகளில்  28  கருப்புக்குல்லாய்  கைதிகளுடன்  29  வது  கைதியாகவே  இருந்து  வந்தார்.  வெராண்டா  இல்லாத  7#10  ரூமில்  காலை  முதல்  மாலை  வரையில்  வெயிலில்  இருக்கும்படியான  நிலையில்  இருக்க  நேர்ந்தது  என்பதோடு  அறையை  விட்டு  வெளியில்  வந்தாலும்  வெய்யலில்  இருக்க  வேண்டியதைத்  தவிர  வேறு  மார்க்கமில்லாத  ஜெயிலாய்  இருந்தது  என்பதோடு  பிளாக்கை  விட்டு  வெளியில்  போவதற்கில்லாமலும்  வேறு  யாருடனும்  பேசுவதற்கு  இல்லாமலும்  நிர்ப்பந்தத்தில்  வைக்கப்பட்டிருந்தார்.  இந்தப்படி  வைக்க  மேல்  அதிகாரிகளிடம்  இருந்து  உத்திரவு  வந்ததாகத்  தெரிகிறது.  மற்றபடி  வேறுவித  அசௌகரியமில்லை  என்பதாகத்  தெரிகிறது.  நிற்க  ஈரோடு  வந்த  பிறகு  கோவை,  திருச்சி,  தஞ்சை,  நாகை,  சேலம்,  திருச்செங்கோடு  முதலிய  இடங்களிலிருந்து  சுமார்  50  தோழர்கள் வரை  வந்து  இருக்கிறார்கள்.

“”புரட்சி”  ஆபீஸில்  “”பகுத்தறிவு”

நிற்க,  ஆபிஸ்  நிர்வாகம்  முன்  போலவே  நடைபெற்று  வருகிறது.  பகுத்தறிவு  தினப்பதிவு  நடைபெற்று  வருவது  அவருக்கு  இஷ்டமில்லை.  அதைப்பற்றி  நண்பர்களுக்குள்  அபிப்பிராய  பேதம்  இருந்து  வருகிறது.

புரட்சி  துணைத் தலையங்கம்  20.05.1934

You may also like...