காந்தியின்  கடைசி  காலம்

 

பிரசித்திபெற்ற  ஏப்ரல்  மாதத்தில்தான்  தோழர்  காந்தி  அன்று  தோன்றினார்.  இன்று  பதினைந்து  வருடங்களுக்கு  முன்பு  அகில  இந்தியக்  காங்கிரஸ்  தலைவர்களுள்  கடையராக  இருந்த  காந்தி,  அகில  இந்தியத்  தலைவராகத்  தோன்ற  ஆரம்பித்தது  ஏப்ரல்  மாதச்  சத்தியாக்கிரக  வாரம்  என்பதில்தான்.  அதே  ஏப்ரல்  மாதத்தில்  மீண்டும்  காந்தி  இந்நாட்டின்  விடுதலைக்குக்  காது  ஒடிந்த  ஊசிக்கும்  பயனில்லை  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு வந்துவிட்டார்.  ஆனால்  வழக்கம்போல்  காந்தியின்  கடவுள்  அவருக்குத்  தோன்றித்  தனி  மனிதரின்  சட்டமறுப்பை  நிறுத்து  என்று  சொன்னதாக  சொல்லுகிறார்.  அத்துடன்  மட்டுமல்ல,  இதுவரையில்  இந்திய  நாட்டில்  அவரின்  “”சத்தியாக்கிரகத்தின்”  முறையை,  தத்துவத்தை,  உணர்ந்தவர்,  அனுஷ்டிக்கக்கூடியவர்  ஒருவர்  கூட  இல்லையென்றும் ஒப்புக்கொண்டுவிட்டார்.  பதினைந்து  வருடங்களுள்  மூன்று  முறை  ஆடாத  ஆட்டமெல்லாம்  ஆடி,  ஓய்ந்த  காந்தியடிகளையும்,  மகா  அவரது  சத்தியத்தையும்,  அவரது  சொந்தக்  கடவுளையும்  போற்றாவிட்டாலும்  தூற்றாமலாவது  இருப்போமாக!  காந்தியடிகளின்  கடைசி  தோல்விக்குப்பின்பு  அவர்  நீண்டகாலமாக  விரும்பும்  ஹிமய  உச்சிக்குச்  செல்ல  நாம்  ஆசைப்படுகிறோம்.  அவரது  ராட்டையும்  அங்கு  செல்வதாக.

இன்று  பதினைந்து  வருடங்களுக்கு  முன்பு  காந்திக்குக்  கடவுள்  தோன்றி  கூறியது  எதற்கெனில்:  ரௌலட்  சட்டம்  ஒழிய  வேண்டும்.  கிலாபத்  அநீதிக்குப்  பரிகாரம்  தேடவேண்டுமென்பதாகும்.  எந்தக்  கடவுள்  காந்திக்கு  இச்  செய்தியைக்  கூறியதோ  அப்பொழுதே  காந்தி  அக்  கடவுளை  நோக்கி  33  கோடி  மக்களும்  இவ்விரண்டு  தீங்குகளும்  மறையப்  பிரார்த்தனை  செய்ய  வேண்டுமென்றார்.  இப்  பிரார்த்தனைக்கு  ஜாலியன்வாலா  பாக்கில்  கடவுள்  தக்க  கூலியைப்  பக்தர்களுக்குக்  கொடுத்தார்.

நாம்  புத்திசாலிகளாக  இருந்திருந்தால்  அன்றே  காந்தியை  இவ்வுலகில்  கடவுள்  பிரார்த்தனையால்  மாறுதல்  அடைந்த  நாடுகளோ,  பிரார்த்தனையால்  பாதுகாக்கப்பட்ட  தேசங்களோ,  பிரார்த்தனையால்  சுகமடைந்த  சமூகமோ  உண்டா  என்று  கேட்டிருக்கவேண்டும்.  ஆனால்  பிரார்த்தனையினால்  கஷ்டமடைந்த  தேசத்தையும்,  பிரார்த்தனையென்ற  மூட  நம்பிக்கையில் சிக்கி  முழு  முட்டாள்களான  நாடுகளையும்  நாம்  பார்த்திருக்கிறோம்.  அதற்கு  அத்தாட்சி  வேண்டுமானால்  நாமும்  நமது  நாடும்  முதன்மையானதாகவே  எடுத்துக்கொள்ளலாம்.

ஐரோப்பிய  நோயாளி  என்ற  துருக்கி,  பிரார்த்தனையையும்,  பிரார்த்தனையின்  தலைவனான  கலிபாவையும்  அடியோடு  விரட்டியடித்த  பின்பு  தான்  உலகிலேயே  முதன்மையான  நாடுகளுடன்  ஒன்றாக  இன்று  விளங்க  ஆரம்பித்தது.  புராதன  நாகரீகம்  பெற்ற  ரோம்  தலைநகருடைய  இத்தாலி  உலகக்  கிறிஸ்தவர்களின்  குருவான  போப்  அரசரை  அடக்கி  உட்கார  வைத்தபின்புதான்  ஐரோப்பிய  வல்லரசுகளில்  பலம்  பொருந்தியவைகளுள்  ஒன்றாக  மாற  ஆரம்பித்தது.

வைசூரி,  காலரா,  மலேரியா  இத்தகைய  பிணிகளுக்குத்  தனித்தனியாக  வணங்கும்  தெய்வக்  கோவில்களை  இடித்தெரிந்து  அந்தந்த  இடங்களில்  அந்தந்தத்  தெய்வங்கள்  பாதுகாத்து  வந்ததாகக்  கருதப்பட்ட  பிணிகளுக்குத்  தக்க  மருந்துகளைக்  கொண்ட  வைத்தியசாலையை  ஏற்படுத்திய  பின்புதான்  அமெரிக்காவும்  கண்டு  அஞ்சும்  நிலைமைக்கு,  ஜப்பான்  வர  ஏதுவாயிற்று.  இதைப்  போன்ற  நாடுகள்  பல  உண்டு.  ஆனால்  எந்த  நாடும்  தெய்வ  வழிபாட்டினால்  ஓர்  சிறிது  பலனையாவது  அடைந்ததை  நாம்  அனுபவத்தில்  கண்டதுமில்லை,  கேட்டதுமில்லை.

பதினைந்து  வருடங்களுக்கு  முன்பு  காந்தியாரோ,  கிலாபத்  அநீதிக்கும்,  ரௌலட்  சட்டத்துக்கும்  பிரார்த்தனை செய்யச்  சொன்னார்.  ஸ்மர்னா  நிதிக்கு  உதவச்  சொன்னார்.  அங்கோரா  கஷ்டத்துக்குப்  பரிகாரம்  தேடச்  சொன்னார்.  நாம்  தோழர்  காந்தி  சொன்னதுக்கெல்லாம்  பிரார்த்தனைகளைச்  செய்தோம்.  நம்மில்  ஒருவருக்காவது  முதலில்  நாம்  பிரார்த்தித்துக்கொண்ட  “”கலிபா”  பின்பு  நம்மால்  கொண்டாடப்பட்டதும்,  பிரார்த்தனை  செய்யப்பட்டதுமான  அங்கோராவினால்  தூக்கி  எறியப்பட்டதைக்  கண்டிக்க  மனம்  வரவில்லை.  40  கோடி  முஸ்லீம்களின்  “”மதகுரு”  என்று  பெயர்படைத்த  கலிபாவை  வெள்ளைக்காரர்கள்  அலக்ஷியப்படுத்தினார்கள்  என்று  வெள்ளைக்காரரைக்  கண்டித்தோம்.  ஆனால்  பின்னால்  நம்மால்  கொண்டாடப்பட்ட  அங்கோராவால்  “”கலிபா”  தூக்கி  எரியப்பட்ட  காலத்தில்  “”கலிபா”  கடலில் விழாமல்  இங்கிலாந்தில்  காப்பாற்றப்பட்டதிற்காக  இங்கிலாந்தை  போற்றவுமில்லை.  இதை  செய்த  அங்கோறாவின்  அதிபரும்,  நமது  முஸ்தபா  கமால்  பாக்ஷõவை  கண்டிக்கவும்  இல்லை.  இவை  எல்லாம்  எதை  காட்டுகிறது.  நமது  இந்திய  மக்களின்  முட்டாள்தனத்தையும்,  மூடநம்பிக்கையுமே  காட்டுகிறது.

காந்தி  தனது  மகத்தான  தவரை  உணர்ந்து  அதற்கு  தக்கபடி  அறிக்கை  வெளியிடவில்லை.  தனது  தோல்வியையும்,  ஏமாற்றத்தையும்,  கண்ணியமாக  எடுத்துச்சொல்லி,  தன்னை  நம்பிய  நாட்டையும்,  நாட்டு  மக்களையும்  மகத்தான  கஷ்ட  நஷ்டங்களுக்கு  ஆளாக்கிய  பெரும்  குற்றத்தை  அவர்  ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால்  எதிர்காலத்திலும்  இந்நாட்டு  மக்களை  நிரந்தரமாக  மூடராக்கும்  எண்ணத்திலேயே  எதேதோ,  வியாக்யானங்கள்  கூறி,  சட்டமறுப்பை  நிறுத்திவிட்டதாக  கூறுகிறார்.  நிறுத்திவிட்டேன்  என்றால்,  இதுவரையில்  நடந்து  வந்ததுதான்  என்ன  என்பதை  பகுத்தறிவுள்ள  மக்கள்  யோசிக்காமல்  போகார்.

ஐரோப்பிய  யுத்தத்துக்கு  பின்  உலகில்  சகல  தேசங்களும்  மகத்தான  மாறுதல்களை  அடைந்து  விட்டது.  புதுமாறுதலை  அடைந்த  தேசங்கள்  அதன்பின்  தோன்றிய  கஷ்ட  நஷ்டங்களையும்  நிவர்த்திசெய்து  நல்ல  நிலைமையை  அடைந்து  வருகிறது.  ஆனால்  தெய்வீகத்தை  நம்பிய  நமது  நாட்டிலோ  ஐரோப்பிய  யுத்தத்துக்கு  முன்பு  ஏற்பட்ட  துயரக்குரல்  ஓயாது  இன்னும்  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

காந்தி  சட்டமறுப்பை  நிறுத்திவிட்டார்.  இதற்கு  முன்பே  டெல்லியில்  நமது  திருவல்லிக்கேணி  சாஸ்திரியும்,  அவர்  அண்ணன்  டாக்டர்  அன்சாரியும்,  களிமண்  மாளவியாவும்  சட்டமறுப்பை  நிறுத்தி  சட்டசபை  போக  முடிவுசெய்து  விட்டார்கள்.  புதிதாக  உயிர்  கொடுக்கப்பட்ட  சுயராஜ்ய  கக்ஷிக்கு  காந்தியும்  ஆசீர்வாதம்  செய்து  விட்டார்.

இனி  நாம்,  சுயராஜ்யக்  கக்ஷியின்  பேரால்  இந்நாட்டில்  தோன்ற  விருக்கும்  ஏமாற்றங்களை  களைந்தெரிய  வேண்டிய  வேலையை  மேல்போட்டுக்கொள்ள  வேண்டியவர்களாக  இருக்கிறோம்.  இன்று  கடவுள்  சொன்னதின்  பேரால்  சட்ட  மறுப்பை  விட்டு  விட்டேன்  என்பதற்குப்  பதிலாக,  கவர்ன்மெண்டார்  தலை  எடுக்க  விடாமல்  செய்துவிட்டதால்  சட்டமறுப்பை  விட்டு  விட்டேன்  என்று  காந்தி  சொல்லி  இருந்தால்  அது  நாணயமாக  இருந்திருக்கும்.

காந்தி  தனது  சிஷ்யர்களில்  யாரோ  ஒருவர்,  எவரோ  ஒருவர்,  செய்ததாகச்  சொன்ன  செய்கையை  ஆதாரமாகக்  கொண்டு,  சட்டமறுப்புகளை  எல்லாம்  விட்டு விட்டேன்,  எனது  குருட்டுத்தனத்தை  உணர்ந்தேன்  என்பதற்குப்  பதிலாக,  எனது  சிஷ்யர்களில்  முட்டாள்கள்  போக  எஞ்சியவர்கள்  சட்டசபைக்கு  போக  முடிவுசெய்து  விட்டதால்தான்  சட்ட  மறுப்புகளை  நிறுத்தி  விட்டேன்  என்று  சொல்லியிருக்கலாம்.  யாரோ  பெயர்  சொல்ல  முடியாத  ஒருவர்  எவரோ,  பெயர்  சொல்லக்கூடாத  ஒருவரின்  செய்கைக்காகத்தான்,  தனது  போர்வாளை  உரையில்  போட்டேன்  என்பது  நியாய  மனமுடையவனுக்குச்  சரியாகத்தான்  தோன்ற  முடியுமா?  வீச்சு  நின்றதற்குக்  காரணம்  வீச்சுக்கு  இடமில்லை என்றும்,  வாள்  உரையில்  போனதற்குக்  காரணம்  வீசச்  சொன்ன  (முதலாளி)  காங்கிரஸ்  பணக்காரர்களே! என்பதும் இன்று பொதுமக்கள் நன்குணர  ஆரம்பித்துவிட்டார்கள்.  ஆதலால்  காந்தியோ,  அவர்  சிஷ்யர்களோ,  இன்னும்  நாட்டை  ஏமாற்ற  எண்ணுவது  இவர்களுக்குத்  தீங்காகும்  என்று  அஞ்சுகிறோம்.

சட்டமறுப்புகளில்  தீவிரமாக  பலமுறை  சிறை  சென்றவர்களுள்,  சட்ட  மறுப்பை  முதல்படியாக  வைத்து  இந்நாட்டில்  மிக  பிரம்மாண்டமானதும்,  பயங்கரமானதுமான  பொருளாதார  புரட்சியை  உண்டாக்க  ஓர்  கூட்டம்  வேலைசெய்கிறது  என்பதை  சர்க்கார்  முன்பே  எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.  அவர்கள்  பயங்கரமான  கொள்ளையையும்,  கொலைகளையும்  தொடர்ந்து  செய்வதையும்  எடுத்துக்காட்டி  இருக்கிறார்கள்.  இதை  உணர்ந்த  காங்கிரஸ்  பிரபுக்களோ  முதலில்  அலக்ஷியமாக  இல்லாவிட்டாலும்,  எப்படியாவது  வெள்ளைக்காரன்  பயந்து,  இந்தியநாட்டு  மில்கார  முதலாளிகளுக்கும்,  காங்கிரஸ்  பிரபுக்களுக்கும்  சலுகை  காட்டட்டும்;  கிடைத்தவரையில்  லாபம்  வரட்டும்  என்று  முதலில் எண்ணினார்கள்.  ஆனால்  இவர்கள்  பணத்தைக்கொண்டு  இந்நாட்டில்  தோன்றிய  சட்ட  மறுப்பு  இயக்கம்,  இச்செல்வாக்கைக்  கொண்டே,  எதிர்காலத்தில்  பயங்கரப் புரட்சியை  உண்டாக்கி  தங்களுக்கே  தீங்கிழைக்கப்  போவதாகச்  சந்தேகித்ததும்  பிரபுக்கள்  தங்கள்  பாதுகாப்பாளரான  காந்தியடிகளிடம்  கூறினார்கள்.  உடனே  காந்தி  சட்டமறுப்பை  நிறுத்தி  அவ்வாளை  உறையில்  போட்டுவிட்டார்.  இப்பதினைந்து  வருடங்களில்  மூன்று  நான்குமுறை,  பதினாயிரக்கணக்கான  ஆண்,  பெண்கள்  செய்த  தியாகம்  (முட்டாள்  தனமானது)  பயனற்றது.  இத்தனை  லெக்ஷம்  சட்ட  மறுப்புக்காரர்களில்  ஒருவர்கூட  அதன்  தத்துவத்தை  உணரவில்லை  என்றும்  கர்வமாகக்  கூறுகிறார்.  முதலில் தானே  சட்டமறுப்பை  கண்டுபிடித்ததால்  தானே  அதற்கு  சர்வாதிகாரி,  என்னைவிட  நன்கு  தெரிந்தவர்  எவருமில்லை  என்கிறார்.

ஹிந்துமதம்  சொல்லுகிறபடி  ஒருவன்  செய்து மோக்ஷத்துக்குப்  போகிறேன்  என்பதற்கும்,  ஒரு  வருடம்  சந்தியாவந்தனம்  செய்தால்  பார்ப்பான்  உயிருடன்  ஆகாயத்தில்  பறக்கலாம்  என்பதற்கும்,  சட்டமறுப்புக்கு  நானே  சிருஷ்டிகர்த்தா  அதை  என்ன  செய்வது  என்பது  எனக்கு  மட்டுந்தான்  தெரியும்  என்று  காந்தி  சொல்லுவதற்கும்  நமக்கு  வித்தியாசம்  தெரியவில்லை.  எதிர்காலத்தில் அந்தராத்மா,  காந்திக்கு  சொல்லப்போவது  இன்னும்  என்னென்ன  என்பது  எவருக்கு  தெரியும்?

ராயல்  கமிஷனாக  இருந்து  சைமன்  கமிஷனாக  பெயர்பெற்ற  கூட்டத்தில்  இந்தியநாட்டு  முதலாளி  காங்கிரஸ்காரர்களுக்கு  இடமில்லை  என்று  சட்ட  மறுப்பு  தோன்றியதும்,  சட்டமறுப்பு  செய்ததும்,  அப்பொழுது  தோல்வியை  ஒப்புக்கொள்ள  பயந்து  காந்தி  இர்வின்  ஒப்பந்தம்  என்ற  ஏமாற்று  நாடகம்  நடந்தது.  வட்டமேஜை  மகாநாட்டுக்கு  காந்தி  சென்றும்  ஹிந்துமத  காங்கிரஸ்  பிரபுக்கள்  சொல்வதை  சர்க்கார்  கேட்கவில்லை;  இந்நாட்டு  எட்டுக்கோடி  முஸ்லீம்களுக்கும்  8கோடி  ஆதிதிராவிடர்களுக்கும்  சர்க்கார் இரக்கம்  காட்டுவதை  கண்டித்தும்  பயனில்லாதுபோனதால்,  மீண்டும்  சட்ட  மறுப்புப்போர்  தொடங்கப்பட்டது.  இதை  சட்டைசெய்யாது  முதன்  மந்திரியின்  அறிக்கை  வெளிவந்ததும்  ஆப்பை  பிடுங்கிய  குரங்கின்  கதையை  காந்தி  அடைந்தார்.  ஹரிஜனம்  பட்டினி  என்ற  பெயரால்  பரிதாபத்துக்குறிய  ஆதிதிராவிடர்களெனப்  பட்டவர்கள்  ஏமாற்றப்பட்டார்கள்.  பழிக்கு  பயந்து  முதன்  மந்திரியும்  காந்தி  உயிரைக்  காப்பாற்றினார்.  மிகுதியுள்ள  8  கோடி  முஸ்லீம்களை மிரட்ட  வழி  இல்லை.  கிடைத்தவரை  கிட்டவிருக்கும்  சீர்திருத்தத்தில்  முஸ்லீம்கள்  வெற்றியடையாதிருக்க  வழி  என்னவென்று  பார்த்தார்கள்.  இன்றுள்ள  நிலைமைக்கு  சட்டசபையைக் கைப்பற்றி  அதன்  பேரால்  ஏதாவது  செய்து  பார்க்கலாமா?  என்பது  தேசீயப்  புலிகளின்  திட்டமாகும்.  இப்புரட்டுகளுக்கு  ராஜதந்திர  முறையில்  காந்தியடிகள்  தனி  சட்ட  மறுப்பையும்  நிறுத்தி  விட்டார்  என்பதேயாகும்.  அகில  இந்திய  வர்த்தக  சம்மேளனத்தில்  தலைவர்  தோழர்களின்  ரஞ்சன்  சர்க்கார்  தமது  தலைமைப்  பிரசங்கத்தில்  சட்ட  மறுப்பு  இயக்கத்தைச்  சேர்ந்த  ஒரு  சாறார்  அவசியமானால்  ஓர்  சமுதாய  பொருளாதார  புரட்சியை  ஏற்படுத்தவே,  சட்ட  மறுப்பை  முதல்படியாக  உபயோகிக்க  முயலுவதாகத்  தெரிகிறது.  பலாபலன்களை  கவனியாது  ஒரே  பிடிவாதமுள்ள  நோக்கம்  கொண்டவர்களின்  கைக்கு  இவ்வியக்கம்  மீறிவிட்டால்  நாம்  என்ன  செய்வது  என்பது  பற்றியே  சற்று  ஆலோசிக்க  வேண்டும்?  அவ்வித  நிலைமை  ஏற்படாது  என்று  யார்தான்  கூற  முடியும்  என்று  கேட்கிறார்  என்று  கூறியதற்கும்,  காந்தி  சட்ட  மறுப்பை  நிறுத்தியதற்கும்  நெருங்கிய  சம்பந்தமுண்டு.

மதன்  மோகன்  மாளவியாவோ,  வைசிராய்  பிரபுவை  மீண்டும்  கண்டு  சமூகத்  தீர்ப்பை  மாற்றவேண்டுமென்று  கேட்கப்போகிறார்.  பயனில்லையானால்  லண்டனுக்கும்  சென்று  கிளர்ச்சி  செய்யப்போகிறார்.  நமது  காந்தி  பாபுவோ  அந்தரார்த்மா  கட்டளைப்படி  சட்ட  மறுப்பை  நிறுத்தி  விட்டதாக  அறிக்கை  போட்டு  விட்டார்.  உலக  சரித்திரத்தில்  எந்த  விடுதலை  வீரனும்  கடவுளுடன்  பேச்சு  வார்த்தை  வைத்துக்கொண்டு  அடிக்கடி  சம்பாஷித்து  நாட்டை  காப்பாற்றியதாக  நமக்குத்  தெரியவில்லை.  காந்தி  இன்னமும்  இந்நாட்டு  மக்களை  மில்காரர்களின்  கொடுமைக்கும்,  பிர்லாக்களும்,  ஐயங்கார்களும்,  ஆச்சார்யார்களும்  ஏமாற்றி  மிதித்து  கொழுத்து  திரிய  வழிதேடவே  தனது  கடவுள்  பல்லவியைப்  பாடுகிறார்.  இந்நாட்டு  லெக்ஷக்கணக்கான  மக்களின்  கஷ்டத்தையும்,  தியாகத்தையும்  வியர்த்தமாக்கி,  கஷ்டப்பட்டவர்களின்,  கஷ்டப்படுபவர்களின்  பெரும்  கூட்டம்  அதன்  பலனை  அனுபவிக்காதபடி  செய்வதைக்கண்டு  நாம்  கவலையடையாவிட்டாலும்,  இன்னமும்  மதத்தின்  பேரால்  மக்களை  மூடராக்க  எண்ணுவதைப்பார்க்கும்போது  வாளாய்  இருப்பதற்கில்லை.  காந்தி  சிஷ்யர்கள்  பலவித  எண்ணங்களை  மனதில்  வைத்துக்கொண்டு  சட்ட  மறுப்பை  நிறுத்து  மறிக்கையை  வரவேற்றபோதிலும்,  அதற்கு  நியாயமற்ற  காரணங்கள்  காட்டுவதைக்  கண்டிக்க  தைரியமில்லாது  இருந்த  போதிலும்  தோழர்  நரிமன்  போன்ற  இரண்டொருவர்  செய்தி  நமக்கு  ஆறுதலைக்  கொடுக்கிறது.

சத்தியாக்கிரகமென்பது  பரமார்த்திக  முறையில்  கையாளப்படவேண்டிய  ஆயுதமென்றும்,  சுயராஜ்யத்திற்காக  இனி  யாரும்  கையாளக்கூடாதென்று  காந்தி  சொல்கிறார்.  காங்கிரசானது  சுயராஜ்யத்திற்காக  ஏற்பட்டது.  பரமார்த்திகத்  துறையில்  சில  பரீட்சைகள்  செய்து  பார்ப்பதற்குக்  காங்கிரஸ்  சபை  ஏற்படவில்லை…  காந்தியின்  பேச்சுகளும்  அறிக்கைகளும்  சில சமயங்களில்  சரியாக  அர்த்தம்  புரிந்துகொள்ள  முடியாத  நிலையில்  இருக்கிறது.  தமக்குள்ளாகவே  சிந்தனை  செய்து  பார்த்ததிலும்,  பகவானைப்  பிரார்த்தித்ததின்  மூலமும்  ஒரு  முடிவுக்கு  வந்ததாகச்  சொல்கிறார்.

தோழர்  புலாபாய்  தேசாய்:  மகாத்மாவின்  எல்லாச்  செயல்களுக்கும்  ஆத்மார்த்த  ஆதாரமிருக்கிறதென்று  ஒப்புக்கொள்ள  மனமில்லாதவர்களுக்கு  அறிக்கையின்  கருத்தை  உணர்ந்துகொள்வது  கஷ்டம்.

இத்தகையவர்  இரண்டொருவர்  இருந்தபோதிலும்,  எதிர்காலம்  சிறிது  நம்பிக்கையை  தமக்கு  ஊட்டுகிறது.  முஸ்லீம்கள்  தங்களை  பின்பற்றுவதாக  கூறுவதற்கே  வடநாட்டு  சத்திய  மூர்த்தியான  டாக்டர்  அன்சாரியை  சுயராஜ்யக்  கக்ஷிக்காரர்கள்  தலைவராகப்  பிடித்துப்போட்டு  இருக்கிறார்கள்.  மீண்டும்  முஸ்லீம்களுடன்  சமாதான  உடன்படிக்கை  செய்யப்போவதாக  தேசியவாதிகள்  கூறுகிறார்கள்.

இதில்  ஜனாப்  ஜின்னாவோ,  அவர்தம்  சகாக்களோ  ஏமாறுவார்கள்  என்று  நாம்  கருதவில்லை.  அடுத்த  மே  N  முதல்  தேதியில்  அ.இ.கா. கமிட்டி  கூடப்போகிறது  என்கிறார்கள்.  அதன்  முடிவு  என்னவென்பதையும்  அதற்குள்  அத்தராத்மாக்கள்  சொல்லுவதையும்  நாம்  அலுப்புறாது  பார்ப்போமாக!

தேசீயப்  புலிகளின்  பரிபூரண  சுயேச்சைப்  புரட்டும்,  பிரட்டானியம்  நீங்கிய  சுயாக்ஷிப்  புரட்டும்  வெளிப்பட்டுவிட்டது.  சட்டசபைப்  பிரவேசமே  இவர்கள்  லெக்ஷிய  மென்பதாகிவிட்டது.  இவர்கள்  சட்டசபையில்  புகுந்தால்  வெட்டி  முறிக்கப்போவது  என்னவோ.  ஆயினும்  காங்கிரஸ்  தடபுடலில்  சிக்காது  சர்க்கார்  சற்று  புத்திசாலித்தனமாக  இந்திய  சட்டசபைத்  தேர்தலை  இன்னும்  ஓர்  ஆண்டு  ஒத்திவைத்துவிட்டால்  லார்டுவில்லிங்டன்  மிகுந்த  ராஜதந்திரியென்பது  நிருபணமாகிவிடும்.  காந்தி  அந்தராத்மா,  தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டால்  பின்  சொல்லப்போவது  என்ன?  ஒத்துழைப்பா?  ஒத்துழையாமையா?  காந்தி  தன்  சிஷ்யர்கள்கூட  ஒத்துழையாமை  செய்வதைத்தான்  பார்க்கமுடியும்.

நமது அரசியல் நிபுணர்

புரட்சி  கட்டுரை  15.04.1934

You may also like...