காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி

 

பழைய  காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி,  இவ்  வருடத்தில்  “புனர்  ஜன்மம்’  எடுத்ததைப்  பற்றி,  சட்டசபை  மோகம்  பிடித்தவர்களுக்கு  திருப்திகரமாயிருக்குமென்பதைப்  பற்றி,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  காந்தியாரும்,  இந்த  சுயராஜ்யக்  கட்சியின்,  “புனர்  ஜன்மத்தை’  வாழ்த்தி  வரம்  கொடுத்த  விஷயத்தைக்  குறித்தும்,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  இவ்வித  உபாயங்கள்,  முதலாளித்  தத்துவத்தைச்  சேர்ந்தவர்களுக்கெல்லாம்  உண்டு.  இந்த  அனுபவத்தை  ஒட்டியே,  சுயராஜ்யக்  கட்சியினர்,  திரும்பவும் தங்கள் கட்சியைப் புதுப்பிக்க ஆரம்பித்தனர்; காந்தியாரும் முதலாளித்  தத்துவத்தில்  சன்னது  பெற்றவராதலால்,  சுயராஜ்யக்  கட்சிக்கு  மங்கள  வாழ்த்தும்  கூறினார்.  சுயராஜ்யக்  கட்சி  இன்று  எடுத்த  புனர்  ஜன்மத்திலாகிலும்  அல்லது  காந்தியார்  அதன்மேல்  பன்னீர்  தெளித்ததனாலாகிலும், தேசத்தில்  பெரும்பான்மையோருக்கு  எவ்வித  சுதந்திரமாகிலும்  நன்மையாகிலும்  யாரும்  கோர  வேண்டியதில்லை.  தேசமும்,  தேசத்து  மக்களும்,  பிறப்பு,  பிணி,  மூட்பு,  சாக்காட்டால்  பண்டை  கால  முதல்,  கஷ்டப்பட்டு  வந்ததைப் போல,  இந்தப்  “புனர்  ஜன்மத்தைப்’  போன்ற  ஆயிர மாயிரம்  “புனர் ஜன்மங்கள்’  சுயராஜ்யக்  கட்சியார்  எடுத்த  போதிலும்,  அவ்வித  “புனர்  ஜன்மங்களையெல்லாம்’ காந்தியார்  வாழ்த்தி  வந்த  போதிலும்,  தேசம்  இந்நிலையில்  இருந்து  தாழ்வடையாமற்  போன  போதிலும்,  இருக்கும்  நிலையிலேயே  இருக்குமென்பதற்குச்  சந்தேகமேயில்லை.  எவ்வித  துக்கமும்  நிவர்த்தியாவதற்கு  இடமில்லை.  இதற்கு  அத்தாட்சி  வேண்டுமானால்,  தேச  விடுதலையை  சதாகாலமும்  எதிர்த்து  வரும்  “”டெய்லி  மெயிலைப்”  போன்ற  ஆங்கிலப்  பத்திரிகைகள்  சுயராஜ்யக்  கட்சியின்  “புனர்  ஜன்மத்தை’  ஆவலுடன்  வரவேற்று  வருவதே  போதும்.

“”சரித்திரம்  திரும்பத்  திரும்பத்  தானே  ஒப்பிக்கும்” என்று  ஓர்  ஆங்கிலப்  பழமொழியுண்டு.  அப்பழமொழியின்படி  சில  வேளைகளில்  தேச  சரித்திரம்  தான்  பாடிய  பல்லவியையே  பாடிக்கொண்டு  வரும்.  ஜர்மனியில்  ஏகாதிபத்திய  சக்கிரவர்த்திக்குப்  பின்னால்  ஏகாதிபத்திய  ஹிட்லர்  வந்தான்.  ரஷ்யாவிலும்  ஜார்  ஆட்சிக்குப்  பதிலாக  கெரன்ஸ்கி  ஆட்சி  வந்தது.  இட்டாலியில்  அம்போல்ட்  இருந்த  இடத்தில்  முசோலினி  வந்தான்.  ஆங்கில  நாட்டிலும்  கன்சர்வேட்டிவ்  கட்சிக்குப்  பதிலாக,  நாஷனலிஸ்ட்  கட்சி  வந்தது. இம்மாறுதல்களில்,  சொல்மாறுதல்களே  ஒழிய,  நாடு  அடையும்  பலன்  ஒன்றுமில்லை.  “”அவன்  தம்பி  அங்குதன்”  என்றவாறு,  வெவ்வேறு  பெயர்களைப்  போத்திக்  கொண்டு  வந்த  அரசாட்சிகளே  யொழிய,  முதலாளித்  திட்டத்தின்  மனப்பான்மையும்,  நோக்கமும்,  கோரிக்கையும்  எந்த  விதத்திலும்  மாற்றின  பாடில்லை.  எல்லாம்  முதலாளி  என்ற  சாயத்தில்  தோய்ந்தவைகளே.  சுயராஜ்யக்  கட்சி  இதற்கு  மாறுபட்டதல்ல.  நேற்று  பயனற்ற  சுயராஜ்யக்  கட்சியே  இன்று  “புனர்  ஜன்மம்’ எடுத்திருக்கிறது.  அந்த  சுயராஜ்யக்  கட்சியின்  தலைவர்களே,  இன்று  “புனர்  ஜன்மம்’  எடுத்த  சுயராஜ்யக்  கட்சியிலும்  இருக்கின்றனர்.  அவர்களும்  முதலாளி  தத்துவத்திலிருந்து  எதையும்  விட்டுக்  கொடுக்காதவர்கள்.  தற்கால  சுயராஜ்யக்  கட்சியினர்களாகிய  இவர்களும்,  ஒன்றும்  விட்டுக்  கொடுக்கப்  போவதில்லை.  அந்த  சுயராஜ்யக்  கட்சியினர்களும்  முதலாளிகள்தான்  இந்த  சுயராஜ்யக்  கட்சியினர்களும்  முதலாளிகள்தான்.  தேசம்  எவ்விதம்  உருப்படப்  போகின்றது?

முதலில்  ஒத்துழையாமையை  எதிர்த்து  சட்டசபைகளைக்  கைப்பற்றி,  சட்டசபைகளை நடக்காவண்ணம்,  முட்டுக்  கட்டைகளைப்  போட்டு  100ல்  98  தேசமக்களுக்கு  விடுதலை  கொண்டுவரப்  போகின்றோமென்று  தொடை  தட்டிய  சுயராஜ்யக்  கட்சியினர்,  கடைசியில்  அரசாங்கத்து  மேஜையினின்று  விழும்  எலும்புகளைத்  தாவிப்பிடித்த  அகோர  நடவடிக்கையை,  தேசம்  மறந்துவிடவில்லை.  இக்கட்சிக்குத்  தலைவரான  காலஞ்சென்ற  தேசபந்துதாஸ்,  காந்தியாருக்கு விரோதமாகச்  சட்டசபைப்  பிரவேசத்தை  “ஞானஸ்னானம்’  செய்வித்த  போது  அதனால்  100க்கு  98  இந்திய  மக்கள்  சுபேக்ஷத்துக்காகவே  சட்டசபைப்  பிரவேசத்தை  ஆரம்பித்தோமென்று  தேச  முழுமையும்  திக்  விஜயம்  செய்து  வந்தார்.  அவர்  இறந்த  இரண்டொரு  வருடத்துக்குள்ளாகவே  காலஞ்சென்ற  மோதிலால்  நேருவின்  தலைமையில்,  சுயராஜ்யக்  கட்சியினர்  டாடா  கம்பெனியில் வேலை  செய்து  வந்த  பல்லாயிரம்  தொழிலாளிகளில்  ஒருவருக்கேனும்  ஒரு  பைசாகூட  அவர்கள்  கூலியில்  உயர்த்த  சம்மதிக்காமல்,  யாதொரு  நிபந்தனையுமின்றி  பொது  மக்கள்  உழைப்பின்  பயனாக  வந்த  ஐம்பது  லட்ச  ரூபாயை  தாராளமாக  டாடா  கம்பெனியாருக்குத்  தானமிட்டனர்.  தேச  பந்துவின்  தலைமையிலேயே  நடந்த  கயா காங்கிரஸில்,  தொழிலாளர்  கட்சி  என்பதை  1922ல்  ஸ்தாபித்து,  அதற்குப்  பிரபல  அங்கத்தினர்களை  ஏற்படுத்திய  பிறகு  அவர்களில்  சிலர்  வேலை  செய்ய  ஆரம்பித்ததும்,  அவர்கள்  தலையில்  தண்ணீரை  ஊற்றித்  தணிக்கச்  செய்ததும்  அந்தச்  சுயராஜ்யக்  கட்சியினர்களே.  அக்கட்சியினரே  இப்  “புனர்  ஜன்ம’  மெடுத்த  சுயராஜ்யக்  கட்சியிலிருந்து வருகிறபடியால்,  தேசமக்களுக்கு  எவ்வித  நன்மையும்  இப்  “புனர்  ஜன்மத்தில்’  கிடைக்கப்  போவதில்லை.

எவ்வித நல்லெண்ணத்தோடும்  எவ்வித  இனிப்பான  சொல்லோடும்,  பொது  மக்களுக்குத்  தாங்கள்  சுகப்பேற்றை  நாட்டுக்குக்  கொண்டுவருவதாகச்  சொல்லிய  போதிலும்,  காங்கிரஸ் திட்டம்  இவர்களை  எந்த  நன்மையும்,  சட்ட  சபைக்குள்ளாகிலும்,  அல்லது  அதன்  வெளியேயாகிலும்  செய்துவிடப்  போவதில்லை.  கராச்சியின்  காங்கிரஸ்  திட்டம்,  சுயராஜ்யக்  கட்சியினர்களின்  கைகளையும்,  கால்களையும்  விலங்கிட்டு  ஸ்தம்பிக்கச்  செய்திருக்கிறது.  தனிவுடைமையை  யாரும்  அசைக்க  முடியாது.  பொதுவுடைமையை  யாரும்  நினைக்கவும்  கூடாது.  மக்களின்  மூட நம்பிக்கை  இருந்தவாறே  இருக்க  வேண்டும்.  கோவில்களில்,  கல்லுக்கும்  கட்டைக்கும்  பஞ்ச  கவ்வியத்தால்  (தேன்,  பால்,  பழம்,  தயிர்,  கோமயம்)  அபிஷேகம்  செய்துகொண்டேயிருக்க  வேண்டும்.  முதலாளிகள்  வியர்த்தங்களைத்  தடுக்கப்படாது.  தொழிலாளர்கள்  தங்கள்  தொழிற்சாலைகளில்,  விவசாயிகள்  தங்கள்  நிலங்களில்,  யாதொரு  பொதுச்  சுதந்திரமுமின்றிக்  கொடுத்த  கூலியைப்  பெற்று  வாழவேண்டும். இவ்வித  வரையறைகளில்  கட்டுண்டு  கிடக்கும்  காங்கிரஸ்  கட்சியினர்,  எந்தப்  பேரை  வைத்துக்  கொண்டு  அரசியலை நடத்த  முன்  வந்த  போதிலும்,  நாட்டிற்கு  எவ்வித  நன்மையும்  விளையப்  போவதில்லை.  மக்களுக்குப்  பொதுவுடமையும்,  பொது  ஆதிக்கமும்,  பொது  உரிமையும்  எந்த  அரசியல்  திட்டத்தில்  அடையக்  கூடுமோ,  அந்தத்  திட்டம்  ஒன்றுதான்  தேசத்தைச்  சுகப்படுத்துமேயல்லாது,  சுயராஜ்யக்  கட்சியினர்,  காங்கிரஸ்  பெயரை  வகித்த  போதிலும்,  வேறு  எந்தக்  கட்சியினரின்  பெயரை  வகித்த  போதிலும்  சட்டசபைகளில்  உள்  நுழைந்து  முட்டுக்  கட்டை  போட்ட  போதிலும்,   அல்லது  வெளியிலிருந்து  சத்யாக்கிரகம்  செய்த  போதிலும்,  மக்களுக்கு  யாதொரு நன்மையும்  விளைவிக்கப்  போவதில்லை  என்பது  நிச்சயம்.

காந்தியார்  சுயராஜ்யக்  கட்சியினரை  நேற்று  வாழ்த்தியதாகப்  பொது  வதந்தி  ஒன்று  நாட்டில்  உலாவுகின்றது.  இவர்  எந்த  ஸ்தாபனத்தைத்தான்  வாழ்த்தாமலிருந்தார்.  இவர்  ஒத்துழைத்த  ஸ்தாபனங்கள்  யாவும்  முடிவில்  குட்டிச்  சுவர்களாகத்தான்  முடிந்தது.  இவரை  நம்பி  ஆற்றில்  இறங்கியவர்கள்  யார்தான்  கரை  ஏறினார்கள்?  இவர்  ஆதரித்து  வந்த  எந்த  இயக்கமும்  சம்பூரணமாக  முடிவடைந்ததாகச்  சொல்வதற்கில்லை.  ஆரம்பித்த  ஒவ்வொரு  இயக்கத்தையும்  நடுவாற்றில்  தியங்கவிட்டு,  தான்  ஒருவரே  கரை  ஏறினார்.  போயர்  சண்டையைக்  குரூக்கரிடம்  கலந்திருந்து  கொண்டு  போயர்களின்  விரோதிகளுக்கே  உதவி  செய்ய  ஆரம்பித்தார்!  1906ம்  வருடத்தில்,  ஜுலூக்களை  கிளப்பி  விட்டு,  அவர்களை  நாசமாக்க  அவர்களின்  விரோதிகட்கே  உதவி  புரிந்தார்!!  1918ம்  வருடத்தில்  சிம்லாவில்  கூடிய  மகாநாட்டில்,  மகாயுத்தத்தில்  இந்தியர்களை  படையினராக  அனுப்ப,  “பகீரதப்  பிரயத்தனம்’  செய்தார்.  மகாயுத்தம்  முடிந்த  பிறகு  தான்  உதவி  செய்த  ஆங்கிலேயர்களையே  இந்தியர்களைக்  கொண்டு  எதிர்க்கச்  செய்தார்!!!  இந்தக்  கிளர்ச்சி  ஆரம்பித்ததும்,  எங்கே  பொது  மக்கள்  தமது  கட்டுக்கு  அடங்காமல்  போகின்றார்களொவெனப்  பயந்து  அவ்வியக்கத்தைப்  பர்டோலியில்  நிறுத்திவிட்டார்!!!!  உப்புச்  சத்தியாக்கிரகத்தை  ஆரம்பித்து,  “”ஒன்று  சுயராஜ்யம்  வர  வேண்டும்,  அல்லது  எனது  உடல்  நீரில்  மிதக்க  வேண்டும்”  எனச்  சபதமிட்டு,  ஆயிரக்கணக்கான  சத்தியாக்கிரகிகளை  ஜெயிலில்  அழுக்கச் செய்து,  தான்  மாத்திரம்  உண்ணாவிரதத்தைப்  பூண்டு  விடுபட்டார்!!!!!  நேற்று,  வட்டமேஜை  மகாநாட்டிலிருந்து  திரும்பி,  பயனற்ற  சத்தியாக்கிரகத்தைத்  திரும்பவும்  ஆரம்பித்து,  அதையும்  கைவிட்டு,  தீண்டாதாருக்கு  “வைகுண்டத்தை’த்  திறந்துவிடுவதாக  ஊர்  பிரதட்சணம்  வந்து,  அதையும்  கைவிட்டுவிட்டு  பூகம்ப  சேவையில்  தலையிட்டுக்  கொண்டார்!!!!!!  நாளை  அதையும்  நடுத்தெருவில்  விட்டுவிட்டு,  இமய  மலைக்குச்  சென்று  சந்யாசி  வேடம்  பூண்டு,  தபசு  புரிந்தாலும்  புரிவார்!!!!!!!  இவரை  நம்பிய  தேசம்,  அதோகதியடையுமென்பதற்கு  என்ன  சந்தேகம்?

காந்தியார்  சட்டசபைப்  பிரவேசத்தை  ஆதரித்ததாக  நாடெங்கும்  முழங்குகிறது.  சட்டசபையில்  நுழைந்து  என்ன  செய்ய  வேண்டுமென்பதைக்  குறிப்பிட்டாரில்லை.  இந்திய  நாட்டு  முப்பத்தைந்து கோடி  மக்களில்,  இவர்  ஒருவர்தான்  சட்டசபையில்  நுழையாத  உண்மையான  சத்தியாக்கிரகியாம்!  இந்த  வீர  மொழியைக்  கேட்டு  நகைக்காத  சிறுவர்கள்    யாருமில்லை!  இவருடைய  ஆதரவின்  பேரில்  காங்கிரஸ்  கட்சியினர்களும்,  சட்டசபையில்  நுழைய  உத்திரவு  அளிக்க வேண்டுமென,  அரசாங்கத்தாரை  கைகூப்பி  வணங்குகின்ற  கேவலக்  காட்சியைக்  காண,   இவ்வளவு  கேவலத்திற்கு  நமது  சுயராஜ்யக்  கட்சியினர்  இறங்கிய  நிலைமை  பரிதபிக்கத்  தக்கதாயிருக்கிறது.  இந்நிலைமைக்குக்  கொண்டு  வந்தவர் காந்தியார்  ஒருவரே.  இவர்  நாட்டில்  அரசியல்  துறையில்  தலைமை  வகித்திருக்கும்  வரை,  இவர்பால்,  மூடமக்கள்  மூடபக்தி  வைத்திருக்கும்  வரை, நாடு  இன்னும்  கேவல  நிலைமைக்கு  வருமென்பதற்கு  ஐயமில்லை.  இதனைத்  தடுத்து  மக்களுக்குப்  பகுத்தறிவையூட்டி  இந்திய  மக்களை  அடிமைத்தனத்தினின்றும்  மூட  மத  ஜாதி  வித்தியாசத்தினின்றும்  விடுவிப்பது  சமதர்மிகள்  கடமையாகும்.

புரட்சி  தலையங்கம்  15.04.1934

You may also like...