துணுக்குகள்
பட்டினிக் குரல் கேட்க வில்லையா?
இவ்வாரத்தில் லண்டனில் லார்டு லெஸ்டியும், சர் எட்மெண்டு லெஸ்டியும் மாதாக் கோவிலுக்குக் கோபுரம் கட்டுவதற்கு இரண்டு லட்சத்து இருபதினாயிரம் பவுன் நன்கொடை அளித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கு பட்டினியின் மிகுதியால் அவதிப்படும் பாட்டாளியின் கூக்குரல் காதில் விழவில்லையா? லண்டன் ஹைடி பார்க்கில் 75000 பட்டினி வீரர்கள் எட்டு மேடைகளில் அலறியதை, அந்த மதப் பித்தம் பிடித்த கடவுள் வெறியர்கள் சிறிது சிந்தித்துப் பார்த்திருந்தால் “”இயேசு” கோபித்துக் கொண்டிருப்பாரோ?
பாசிசமா? சோஷியலிசமா?
மேனாடுகளில் “”பாசிசம்” “”சோஷியலிசம்” என்று அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமை ஸ்தானமான பிரிட்டனில் இன்று பாசிசம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் நிகழும் கவுண்டி கவுன்சில் எலக்ஷன்களே பார்லிமெண்டரி எலக்ஷன்களின் எதிர் காலத்தைக் குறிப்பிடுவதாகும். லண்டன் முனிசிபல் எலெக்ஷன்களான கவுண்டி கவுன்சில் தேர்தலேதான் இன்றைய தினம் பார்லிமெண்டுக்கு அடுத்த முக்கியமானதாகும். இப்பேர்க்கொத்த தேர்தலில் தொழிலாளர்களே முன்னையை விட நன்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். எலெக்ஷன்களுக்கு முந்தி 34 ஸ்தானங்களே பெற்றிருந்த தொழிலாளர்கள் இன்று 69 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள். லண்டன் கவுண்டி கவுன்சிலில் தொழிலாளர்கள் பெரும்பான்மையோர் ஸ்தானம் பெற்றது இதுவேதான் முதல் தடவையாகும். இதிலிருந்தே, பாசிசமா? சோஷியலிசமா ? மேனாடுகளில் தலை நிமிரும் என்பதைக் கவனிக்கவும்.
புரட்சி துணுக்குகள் 18.03.1934