சர்வ ஜன வாக்கா?
தொட்டதற்கெல்லாம் சர்க்கார் பொது ஜன அபிப்பிராயம் அறிந்து, அது சாதகமாக இருந்தால்தான் தாங்கள் செய்வதாக சொல்லுகிறார்கள். அத்துடன் மட்டுமல்ல, ஒன்றைப் பற்றி யோசிக்கக் கூட சர்வஜன வாக்கு கேட்கிறார்கள். நாம் உணர்ந்த வரையில் என்றும் சர்க்கார் சர்வஜன வாக்குப்படி நடந்ததாக கூறமுடியாது. சென்ற பத்து ஆண்டுக்கு முன்பு பத்து வயது பெண்களை இடுப்பொடிக்கக் கூடாது, பொட்டுக் கட்டக் கூடாது என்று பிரச்சினை உண்டான காலத்தில் கூட சர்வஜன வாக்கு எடுக்க வேண்டு மென்றார்கள்; எடுத்தார்கள். சிறு பெண்களுக்குப் பொட்டு கட்டுவதை ஆதரிப்பதாக கூறினார்கள். பொது ஜனங்களுக்கு விரோதமாகவே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பல சீர்திருத்த தீர்மானங்களிலும் பொதுஜன வாக்கு விரோதமாக இருந்தும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் சர்க்கார் அவைகளை நிறைவேற்ற உட்பட்டதற்கு காரணம் ஜனசமூக நன்மை என்பதற்கும் பொது ஜன வாக்கு என்று இவர்கள் எடுப்பதற்கும் சம்மந்தமில்லை என்பது நன்கு உணர்ந்ததேயாகும்.
இந்நிலையில் இரண்டு மாதம் காந்தி பாபு ஆலயப் பிரவேசத்துக்கு ஆதி திராவிடர்கட்கு இடமளிக்க வேண்டுமென்று இம்மாகாண முழுதும் பிரசாரம் செய்த பின் பொது ஜன அபிப்பிராயம் அறிந்தும் அது விரோதமாக இருப்பதாக கூறுகிறார்கள். காந்தியடிகளின் நேரான பிரசாரத்திற்கு பின்பும், லக்ஷக்கணக்கான மக்கள் வரவேற்ற பின்பும், இரண்டு லக்ஷ ரூபாய் பாத காணிக்கைக்குப் பின்பும் காந்தி சொன்ன ஆலயப் பிரவேச ஆதரவுக்கும் கை தட்டுதலுக்குப் பின்பும் ஓட்டு எடுப்பதில் விரோதம் என்றால் இதற்கு சரியான சமாதானம் சொல்ல நமக்குத் தெரியவில்லை. போகட்டும். இத்தீர்மானத்துக்கு வந்த கெதியானது, நாளைய ஜுன் மாதம் வரவிருக்கும் தீண்டாமை விலக்கு மசோதாவுக்கும் வந்துவிடாதிருக்க சர்க்காரும் ஆதிதிராவிட சகோதரர்களும் முயலுவார்களாக. ஆலயங் கட்ட ஹரிஜன நிதியை உபயோகிக்க கூடாதென்ற நமது மாகாண ஹரிஜன கமிட்டியும் தனது சக்தியை தீண்டாமை விலக்கு மசோதாவுக்கு சாதகமாக வேலை செய்வார்கள் என்று நம்புகிறோம்.
புரட்சி துணைத் தலையங்கம் 11.03.1934