தோழர் சே. நரசிம்மன்
மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தின் தோழர் சே. நரசிம்மன் எம்.ஏ. அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று அறிய பெரிதும் துக்கிக்கிறோம். சமீபகாலமாக நமது “”குடி அரசு”, “”புரட்சி” வார இதழ்களில் அவர் எழுதிவந்த பாலும், தேனும் கலந்த கட்டுரைகளை வாசித்துப் புதிய உத்வேகத்தையும், இன்பத்தையும் பெற்றிருந்த நமது வாசகர்களுக்குப் பெரிதும் துக்கமேற்படுமென்பதிலும் ஐயமில்லை.
தோழர் நரசிம்மன் அவர்கள் பிறவியினால் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளக்கூடியவரானாலும் அவர் பாழான பழைய வர்ணாஸ்ரம தர்மத்தையும், இன்றைய முதலாளி, தொழிலாளி என்பதான வேறுபாட்டையும் எவ்வளவு தூரம் மனப்பூர்வமாக வெறுத்து அதை ஒழிப்பதற்காகவே இந்தியர் ஊழியர் சங்கத்தின் சார்பாகவும் நமது பத்திரிகைகளின் மூலமாகவும் தொண்டாற்றியுள்ளார் என்பதை நாம் விரிக்க வேண்டுவதில்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு நமது கொள்கைகளை வலியுறுத்தி எழுதுவதில் மிகத் திறமைபெற்றிருந்த நமது அருமை நண்பரை நாம் இழந்தது ஒரு விதத்தில் பெரிய நஷ்டமேயாகும். அதிலும் வாலிப உலகத்திற்கு அவரது ஆண்மையும், தீவிர உணர்ச்சியும் பெரிதும் வேண்டற்பாலதான இந் நல்ல சந்தர்ப்பத்தில் நாம் அவரை இழக்க ஏற்பட்டது சமீபத்தில் ஈடுசெய்ய முடியாத நஷ்டமுமாகும். என்றாலும் துயரத்தால் வருந்தும் நம் தோழர் சே. நரசிம்மன் அவர்கள் குடும்பத்தாருக்கும், மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தாருக்கும் நமது துக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகிறோம்.
புரட்சி துணைத் தலையங்கம் 11.02.1934