திருச்சி நகரத்தின் பெருமை
திருச்சிக்காரர்கள் தாங்களே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதோடு ஜஸ்டிஸ் கட்சிக்கு தாங்களே கோட்டை காவலர்கள் என்றும் பெருமை பேசிக் கொண்டு அடிக்கடி அக்கட்சியின் மீது அதிகாரம் செய்யும் விஷயத்திலும் சிறிதும் பின்வாங்குவதில்லை என்பதோடு எல்லோருக்கும் முன்னணியில் வந்தும் நின்று கொள்ளுவார்கள்.
ஆனால் காரியத்திலோ என்றால் லொட்டையையே தான் காண முடிகின்றது. நாம் இப்படிச் சொல்வதற்குக் கூட கோபித்துக் கொண்டு நமக்கும் புத்தி சொல்ல வந்துவிடுவார்கள். அதனால் உள்ள நிலைமையை மறைத்துவிடமுடியாது.
புதிய சீர்திருத்தம் ஏற்பட்ட காலம் முதல் ஒரு ஆசாமியையாவது திருச்சி தொகுதியானது இந்திய சட்டசபைக்கு நிறுத்தியதும் கிடையாது, அனுப்பியதும் கிடையாது என்ற பெருமை திருச்சிக்கு உண்டு என்று சொல்வதற்கு யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல் இந்த 10 வருஷ காலமாய் சென்னை சட்டசபைக்கு கூட ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒருவரையாவது அனுப்ப அவர்களுக்கு முடியவில்லை என்று சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்றே நினைக்கிறோம். அது மாத்திரமல்லாமல் திருச்சி நகர் தொகுதிக்குக் கூட ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக இல்லாவிட்டாலும் இந்த 10 வருஷ காலமாக ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூட அனுப்ப முடியாமல் போய்விட்டதையும் கோபிக்காமல் ஒப்புக் கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்.
திருச்சி ஜஸ்டிஸ் கட்சி வீரர்கள் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் யாரையும் அனுப்ப முடியாமல் போய்விட்டதோடு மாத்திரமல்லாமல் இப்போது ஒரு படி பிரமோஷனாகி முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது.
அதாவது திருச்சி ஜஸ்டிஸ் கட்சியே தான், தான் என்று கருதிக் கொண்டிருந்தவரும், தமது தோளின் பேரிலேயே அக்கட்சியின் தலை எழுத்து இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தவருமான தோழர் பி.ஆர். தேவர் அவர்கள் இன்று காங்கிரஸ் வாக்குறுதியில் கையொப்பமிட்டு காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நிற்கத் துணிந்துவிட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிரிகளான பார்ப்பனர்களும் அவரை ஏற்றுக் கொண்டு ஞான ஸ்நானம் கொடுத்துவிட்டார்கள்.
ஆகவே இனி திருச்சிக்கும் திருச்சி ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும் ஜஸ்டிஸ் சரித்திரத்தில் முதல் அத்தியாயத்தை ஒதுக்க வேண்டியதுதான் பாக்கி என நினைக்கிறோம்.
ஏதாவது கொள்கை வித்தியாசத்தால் கட்சியை குலைக்கவோ, அல்லது விட்டுப் போகவோ ஆசைப்படுகின்றவர்களைப் பற்றி நாம் ஒன்றும் குறை கூற வரவில்லை.
ஆனால் தங்கள் சொந்த சவுகரியங்களிலோ, அல்லது இஷ்டங்களிலோ ஏதோ இரண்டொரு விஷயம் ஒத்து வரவில்லையானால், தனிப்பட்டவருக்கு தன் இஷ்டப்படி நடக்க முடியவில்லையானால், எதிர்கட்சிக்கு போய்விடுவது என்பதானது எப்படி பொது நன்மைக் காரியமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர்கள் சி.நடேச முதலியார், திவான் பகதூர் பி.டி. குமாரசாமி செட்டியார் ஆகியவர்களும் கூட மற்றும் அவர்களைப் போல ஜஸ்டிஸ் கட்சியாரால் அலட்சியமாய் கருதப்பட்டும் கட்சியின் தொல்லைக்குள்பட்டும் உள்ள இன்னும் சிலரும் கூட அக்கட்சியை விட்டுப் போகாமல் இருக்கிறார்கள் என்றால், திருச்சி வீரர்கள் கட்சியை ஒழிப்பதற்கும், எதிரிகளுக்குத் துணையாய் இருப்பதற்கும் துணிந்தது அதிசயமேயாகும். இதைப் பற்றி திருச்சி ஜில்லா பல பாகங்களில் இருந்தும், திருச்சி நகரத்தில் இருந்தும் சில தீர்மானங்களும், வியாசங்களும் வந்ததை நாம் வெளியிட வில்லை. ஏனெனில் அவை சிறிது கடினமான பதங்கள் என்று நாம் கருதியதால் பிரசுரிக்கவில்லை. நேயர்கள் வருத்தப்படாமல் இருப்பார்களாக.
பகுத்தறிவு செய்தி விளக்கம் 23.12.1934