தேர்தல் ஜாக்கிரதை!

 

நமது நாட்டில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஒரு சிறு கூட்டம், தேசத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்துக் கொண்டேயிருக்கிறது. அச்சிறு கூட்டமே நாட்டின் அரசியல் துறையில் செல்வாக்கு வைத்துக் கொண்டும், சமூகத் துறையில் தலைமை வகித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு வராமல் காப்பாற்றிக் கொண்டும் வருகிறது. தாழ்ந்த நிலையிலிருந்து துயரப் படும் மக்களில் எவரேனும் உயர்நிலையடைந்து வாழ்ந்திருக்கும் அச்சிறு கூட்டத்தாரின் சூழ்ச்சிகளை அறிந்து வெளிப்படுத்த ஆரம்பித்தார்களாயின் அப்போதே அவர்களை, அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உபயோகித்துத் தலைதூக்க வொட்டாமல் செய்து கொண்டு வந்தார்கள். இது பண்டைக் கால முதல் நடைபெற்று வரும் மறைக்க முடியாத உண்மையாகும்.

பண்டைக் காலத்தில் இக் கூட்டத்தார் பாமர மக்களைப் பயமுறுத்தி அடிமைப் படுத்துவதற்கு உபயோகித்த ஆயுதங்கள், “கடவுள்” “வேதம்” “மதம்” “சடங்குகள்” “புராணங்கள்” “வருணாச்சிரமதருமங்கள்” “மோட்சம்” “நரகம்” “சுவர்க்கம்” “பாவம்” “புண்ணியம்” முதலிய வார்த்தை களேயாகும். இவ் வார்த்தைகளுக்குப் பயந்தே ஏழைமக்கள் தங்கள் சுயமரியாதையை யிழந்து வாடி வதங்கிக் கிடந்தனர். ஆயினும் நாளேற நாளேற மக்களுடைய அறிவும் சிறிது வளர்ச்சியடைந்த காரணத்தாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து “நாமும் ஏன் அவ்வாறு இருத்தல் கூடாது” என்று சிந்திக்கத் தொடங்கிய காரணத்தாலும், தமது உரிமையை அடையமுடியும் என்ற தைரியம் உண்டான காரணத்தாலும், மேற்கூறிய அர்த்தமற்ற வார்தைகளுக்கு அடியோடு அஞ்சிக் கட்டுப்படுவதிலிருந்து நீங்கினர். ஆகவே மேற்கூறிய வார்த்தைகளுக்குள்ள கௌரவமும், அவை களால் உயர்ந்த கூட்டத்திற்கு இருந்த மதிப்பும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தன. ஏழை மக்களும் அரசியல் துறையிலும், சமூகத்துறையிலும் பண்டுமுதல் இருந்து வந்த கட்டுப்பாடுகளை ஒழித்துக் கொஞ்சம் சம நிலையும் சௌக்கியமும் அடையத் தொடங்கினர்

இது கண்ட, உயர்ந்த அச்சிறு கூட்டத்தினர், இனிமத சம்பந்தமான காரியங்களைக் கொண்டும், வார்த்தைகளைக் கொண்டும் பாமர மக்களை ஏமாற்றுவது முடியாதெனக் கண்ட அக்கூட்டத்தார், தங்கள் பழய பழக்க வழக்கங்களையும் நாகரீகங்களையும் அடியோடு விட்டு விட்டுப் புதிய கல்விகளையும் தொழில்களையும் கற்றுக் கொண்டு அரசியல் பதவிகளை மட்டிலும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். அக்கூட்டத்தார்கள் தான் நமது நாட்டில் உள்ள வைதீகப் பார்ப்பனர்கள் என்பதை நாம் விரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இக் கூட்டத்தார், இந்தியாவின் நன்மைக்கு என்றோ, இந்திய மக்களின் முன்னேற்றத்திற் கென்றோ ஏழைமக்களின் உதவிக் கென்றோ ஏற்படும் எந்த ஸ்தாபனங் களிலும் நுழைந்து கொண்டு, அவைகளின் மூலம் கிடைக்கும் செல்வாக் கையும், நன்மைகளையும் தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டும் பாமர மக்களை வழக்கம் போல் கீழே அமிழ்த்துக் கொண்டுமே வந்திருக்கின்றார்களென்பது நமது நாட்டின் உண்மை நிலையை அறிந்தவர்களுக் கெல்லாம் தெரியாத விஷயமல்ல.

உதாரணமாக நமது நாட்டிற்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஏற்பட்ட அரசியல் ஸ்தாபனமாகிய “காங்கிரஸ்” ஏற்பட்டது முதல் இது வரையிலும் எந்தச் சமூகத்தார் நன்மையடைந்து வந்தார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வுண்மை விளங்காமல் போகாது. திரு. காந்தி அவர்கள் காங்கிரசைக் கைப்பற்றுவதற்கு முன், அதில் ஈடுபட்டிருந்தவர்கள் யாவரும், அரசாங்கத்தாரை மிரட்டுவதும் பிறகு அரசாங்கத்தார் கொடுக்கம் உத்தி யோகத்தை ஏற்றுக் கொண்டு, தாசானுதாசராகி ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதுமாகவே இருந்து வந்தார்கள் என்ற விஷயம் காங்கிரசின் பழய நிலையை அறிந்தவர்களுக்கெல்லாம் தெரியும். காங்கிரசைத் திரு. காந்தி யவர்கள் கைப்பற்றிய காலத்திலும் கூட, ஒத்துழையாமையியக்கத்தைக் காங்கிரஸ் நடத்தாத காலத்தில் எல்லாம் வைதீகக் கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அனைவரும் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பட்டம் பதவிகளை  வேட்டையாடி வந்ததும், ஒத்துழையாமைக் காலங்களில் ஏமாந்த பார்ப்பனரல்லாதார் அடிபடுதலும், அபராதம் செலுத்துதலும், சிறைப்படுத் தலுமாயிருக்கப் பார்ப்பனர்கள் மாத்திரம் காங்கிரஸ் பேச்சை விட்டுவிட்டு வேறு பல பெயர்களால் ஜன சமூகத்தை ஏமாற்றிப் பட்டம் பதவிகளைப் பெற முயற்சிப்பதும் நமது நாட்டினற்குத் தெரியாத விஷயமல்ல.

காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கமாகிய ஒத்துழையாமையோடு கலந்து கஷ்டப்படுவதின் மூலம் பாமர மக்களின் செல்வாக்கைப் பெறாதவர்கள், வேறு தேசீயத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றிச் செல்வாக்குப் பெறும் பொருட்டு “சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்” சங்கம் ஏற்படுத்திப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் என்பதும் இச்சமயத்தில் நினைவுக்குக் கொண்டு வர வேண்டிய ஒரு விஷயமாகும். சுதேசிப் பொருள் விருத்தியாக வேண்டுமென்பதைப் பற்றியும், அப்பொருள்களை ஆதரிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் நமக்கு யாதொரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நஷ்டப்படக் கூடியதும், பிழைப்புக்கு வழியில்லாததும், படித்த கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் கொள்ளையடிக்கக் கூடியதுமாகிய கதர் போன்ற போலிச் சுதேசிகளை விட்டு விட்டு, அன்னிய நாடுகளுடன் நாமும் போட்டி போட்டு வியாபாரம் செய்யக் கூடிய முறைகளில் யந்திர சாதனங் களைக் கொண்டு, துணி நெய்தல் போன்ற பல வகையான கைத்தொழில் களையும் வளர்க்க வேண்டுமென்பதே நமது நோக்கமாகும். இவ்வாறு செய்வோமானால் நமது நாட்டுப் பொருள்கள் சிறந்ததாகவும், குறைந்த விலையுள்ளதாகவும் இருக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறந்ததும், குறைந்த  விலையுள்ளதுமாகிய பொருள்களை மக்கள் தாமே பிரியப்பட்டு வாங்குவார்கள். இவைகளை “வாங்குங்கள்” என்று பிரசாரம் பண்ண வேண்டிய அவசியம் கூட அதிகமாக உண்டாகாது. இதற்கான முயற்சி ஒன்றும் செய்யாமல், சும்மாவாவது “ சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்” என்றும் “அப்பொழுதுதான் சுயராஜ்யம் வரும்” என்றும் வீண் பிரசாரம் செய்வதும், இப்பிரசாரத்தில் பார்ப்பனரல்லாதார்க்கு இடந்தராமல் முழுதும் பார்ப்பனர்களையே சேர்த்துக் கொண்டிருப்பதும் தேர்தல்களில் பார்ப்பனர் கள் வெற்றி பெறுவதற்காகச் செய்யப்படும் தேர்தல் பிரசாரம் என்றுதான் நாம் கூறுகின்றோம்.

முதலில் “மதம்” “கடவுள்” “வேதம்” “பாவபுண்ணியம்” முதலிய அர்த்தமற்ற சொற்களால் பாமர மக்களை ஏமாற்றி வந்த மக்கள் பிறகு அவைகளை விட்டு விட்டு காங்கிரசின் பெயரால் அரசியல் ஆதிக்கம் பெற்று பாமர மக்களை ஏமாற்றத் தொடங்கினார்கள். காங்கிரசிலிருந்தால் கஷ்டம் உண்டாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதன் பெயரையும் சொல்லிக் கொள்ளாமலும் ‘கதர்’, ‘சுதேசி’ என்பவைகளின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றத் தொடங்கி இருக்கின்றார்கள்.

இக்கூட்டத்தார், இப்பொழுது வேறொரு இயக்கத்தையும் ஆரம்பித்து அதன் பெயராலும் பாமர மக்களை ஏமாற்றத் தொடங்கி இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இப்பொழுது மக்கள் “சமத்துவம்”, “சகோதரத்துவம்” “சமூக முன்னேற்றம்” முதலிய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளைப் பெறவேண்டும் என்றும் இச்சிக்கின்றார்கள். ஆகையால் “சமூக ஊழியம்” “சமூக சீர்திருத்தம்” “சமூக முன்னேற்றம்” என்று சொல்லிக்கொள்ளு கின்றவர்களுக்கும் நாட்டில் ஒருவகையான செல்வாக்கு ஏற்படத் தொடங்கி யிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தையும் பார்ப்பனர்கள் வீண் போக்காமல் “சமூக முன்னேற்றச் சங்கம்” என ஒன்று ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் பிரசாரம் பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு ஒரு சங்கம், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் தோன்றி அதைச் சேர்ந்த சிலர் கிராமங்களில் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இச்சங்கத்திற்குத் தற்பொழுது, திரு. டி. எஸ். எஸ். ராஜன் அவர்களும் கே. ஜி. சிவசாமி அய்யர் அவர்களும் முறையே தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களை நன்றாய் அறிந்தவர்கள் இச்சங்கம் உண்மையில் ஏழை மக்களை முன்னேற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதா? அல்லது பார்ப்பன சமூகத்தை மறுபடியும் ஜில்லா போர்டுகளிலும் தாலூகா போர்டுகளிலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டதா? என்பதைக் கண்டுகொள்ளுவார்கள். முதலில் இச்சங்கத்தைத் தொடங்கு கின்ற காலத்தில் கோவை திரு. சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், திருச்சி. திரு. டி. எம். நாராயணசாமி பிள்ளை முதலியவர்களையெல்லாம் வரவழைத்துச் சங்கத்தை விளம்பரப்படுத்தினார்கள். இவ்விளம்பரம் பார்ப்பனரல்லாத மக்களை வசப்படுத்துவதற்காக வேண்டியென்பது பின்னால் விளங்கிவிட்டது.

இச் சங்கத்தின் நடவடிக்கைகளிலும், கிராமப் பிரசாரங்களிலும் கலந்து கொள்ள விரும்பிய சமூக, ஊழியப் பிரியர்களான பார்ப்பனரல்லாதார்களை இச்சங்கத்தார்களுடன் கலந்து கொள்ளுவதற்கு இடங்கொடுக்காத காரணம் ஒன்றே இச்சங்கம் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஏற்பட்டது என்பதற்குப் போதிய சான்றாகும்.

கட்டாய ஆரம்பக்கல்வி, தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, சுதேசியம், சிக்கனம் முதலியவைகள் இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைக்கப் பட்டிருப்பதும் பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றுவதற்கென் பதில் ஐயமில்லை.  இச்சங்கத்தார்களின் கொள்கைகளை ஆதரிப்பதாக ஒப்புக் கொள்கின்றவர்களையும், இதற்காக இவர்கள் வெளியிட்டிருக்கும் உறுதி மொழிப் பத்திரத்தில் கையொப்பமிடு பவர்களையும், ஸ்தல ஸ்தாபனங் களுக்கு அபேட்சகர்களாக நிறுத்தி ஓட்டுச் சேகரித்து கொடுப்பதாகவும் பிரசாரம் பண்ணிவருகின்றனர்.  அதோடு கூட தற்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபன உறுப்பினர்களையும், தலைவர்களையும் பற்றிப் பாமர மக்களிடம் அவர்களுடைய செல்வாக்கு குறையும் படியான வழியில் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகின்றார்கள். இதைக் கொண்டு இச்சங்கத்தாரின் சூழ்ச்சியை நன்றாய் உணரலாம். தற்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபன உறுப்பினர்களும், தலைவர்களும் பார்ப்பனரல்லாதார்களே என்பது எல்லோருக்கும் தெரியும். பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றிய பிறகும் ஸ்தல ஸ்தாபனங்கள் பெரும் பாலும் பார்ப்பனரல்லாதார் வசமாகிவிட்டன. ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் பெற்றபின் அவை சம்பந்தப்பட்ட உத்தி யோகங்களும் “கண்ராக்ட்டு”களும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக இருந்தது போக பார்ப்பனரல்லாதார்க்கும் கிடைக்க ஆரம்பித்து விட்டன.  பார்ப்பனர்கள் எவ்வளவு முயன்றும் அவைகளில் முன்போல ஆதிக்கம் பெற முடியாமல் போய்விட்டது.  ஆகையால் தான் இப்பொழுது மீண்டும் சில வருஷங்களுக்கு முன்பு இருந்தது போலவே ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு “ஆமாம் சாமி” போடும் பேர்வழிகளும் ஆதிக்கம் பெறும் பொருட்டுப் பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பறிப்பதற் காகவே “சமூக முன்னேற்றச் சங்கம்” என்றும், “சுதேசியம் பிரசாரச் சங்கம்” என்னும் வகையான சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் பிரசார வேலை செய்ய முன் வந்திருக்கின்றார்கள் என்று தெரிவித்துக் கொள்ளு               கிறோம்.

இந்தச் “சமூக முன்னேற்றச் சங்கம்” மாத்திரம் அல்ல; இன்னும் இது போன்ற பல சங்கங்கள் தேர்தலின் பொருட்டு பார்ப்பனர்களால் ஏற்படுத்தப் படலாம். ஆனால் எந்தப் பெயருடன் எத்தகைய சங்கங்கள் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டாலும் அவர்களால் செய்யப்படும் பிரசாரம் மதப் பிரசார மாயிருந்தாலும், காங்கிரஸ் பிரசாரமாயிருந்தாலும், சுதேசிப் பிரசாரமாயிருந் தாலும், சமூக ஊழியப் பிரசாரமாயிருந்தாலும், தீண்டாமை விலக்குப் பிரசாரமாயிருந்தாலும், மதுவிலக்குப் பிரசாரமாயிருந்தாலும் அவை யெல்லாம் தங்கள் சமூகத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசாரமாக இருக்குமே தவிர வேறொன்றாயிருக்க முடியாது என்பது இதுவரையிலும் நாம் கண்டுணர்ந்த அனுபவம் அன்றோ? ஆகையால் நமது மாகாணமெங்கும் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள், அதாவது ஜில்லா தாலூகா போர்டுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இச்சமயத்தில் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரத்திற்கு ஏமாறாமல் ஜாக்கிரதையாயிருப்பது அவசியம். பார்ப்பனர்களின் வலையிற் சிக்கியவர்களும் அவர்களிடம் கூலி பெறுபவர்களும் ஆகிய சில பார்ப்பனரல்லாத கூலிப் பிரசாரகர்களும் புறப்பட்டுப் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகப் பிரசாரம் பண்ணக் கூடும். ஆதலால் அவர்கள் சொற்களையெல்லாம் நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். உண்மையில் பொது ஜனங்களின் நன்மைக்கு உழைக்கக்கூடியவர்களும், சுயநலம் கருதாத வர்களும், குருட்டு நம்பிக்கை இல்லாதவர்களும், உயர்வு சாதிபேதம் பாராட்டாதவர்களும், மதப் பிடிவாதம் இல்லாதவர்களும் ஆகிய சிறந்தவர் களேயே தேர்தல்களில் ஆதரிப்பது பொது ஜனங்களின் கடமையாகும். இத்தகைய மனிதர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற்றால்தான் அவர்களால் அடையக் கூடிய நன்மைகளைப் பொது ஜனங்கள் அடைய முடியும். இப்படியில்லாமல் பார்ப்பனர்களுடைய தயவு தாட்சண்யங்களுக் குக் கட்டுப்பட்டோ, அவர்கள் கூறும் “சுதேசியம்” “சமூக ஊழியம்” “சுயராஜ்ஜியம்” முதலிய பூச்சாண்டி வார்த்தைகளுக்கு ஏமாந்தோ பார்ப்பனர் கையாள்களை ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுப்புவீர்களானால் பிறகு கஷ்டப்பட வேண்டியவர்கள் நீங்கள் தான் என்று இப்பொழுதே பலமாக எச்சரிக்கை செய்கின்றோம். பொதுஜனங்களே! வாக்காளர்களே! தேர்தல் பிரசாரம்! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

குடி அரசு – தலையங்கம் – 31.07.1932

You may also like...