மாகாண சுயாட்சி தான்
சட்டமறுப்பால் பயனில்லை
நமது நாட்டில் உள்ள ஆவேசங் கொண்ட தேசாபிமானிகள் கூட்டத்தில் பல மாதங்களாய், பூரண சுயேச்சைப் பேச்சும், குடியேற்ற நாட்டு ஆட்சிப் பேச்சும், ஐக்கிய ஆட்சிப் பேச்சும் நடைபெற்று வந்தன. இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் வழங்கலாம் என்பதை விசாரித்து முடிவு செய்வதற்காக ஆங்கிலப் பாராளுமன்றத்தாரால் நியமிக்கப்பட்ட ‘சைமன் கமிஷ’னை காங்கிஸ்காரர்கள் பகிஷ்காரம் பண்ணினார்கள், “பூரண சுயேச்சையே இந்தியாவுக்கு வேண்டும்” என்று சொல்லி திரு. காந்தி அவர்களின் தலைமையில் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ ‘சட்ட மறுப்பு’ முதலிய வற்றை நடத்தி தேசத்தில் பெருங்குழப்பத்தையும், கிளர்ச்சியையும் உண்டாக் கினார்கள். இவ்வாறு சட்டமறுப்பு இயக்கம் பலமாக நடைபெற்ற காரணத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்தியர்களிடம் தாராள மனது காட்டுவது போல், வட்ட மேஜை மகாநாடு ஒன்றை ஏற்படுத்தி இந்தியப் பிரதிநிதிகளை இங்கிலாந்திற்கு வரவழைத்து அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக விவாதிக்கச் செய்தார்கள். முதலில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டிற்கு காங்கிரஸ் பிரதிநிதி கள் செல்லவில்லை. ஆனாலும் முதல் மகாநாட்டிலேயே இந்தியாவுக்கு ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தார்கள். பிறகு இரண்டாம் முறை நடந்த வட்டமேஜை மகா நாட்டிற்குக் காங்கிரசின் ஏகப்பிரதிநிதியாக திரு. காந்தி அவர்களும் சென்றார். இந்த மகாநாடும் ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவது என்ற முதல் மகாநாட்டு முடிவோடு நின்றதே ஒழிய அவ் வாட்சிக்கான திட்டங்கள் ஏற்படுத்துவது பற்றி ஒரு முடிவுக்கும் வராமல் கலைந்தது. கடைசியாக பிரிட்டிஷ் முதல் மந்திரியால் வாக்குரிமைக் கமிட்டி, சமஸ்தானக்கமிட்டி, ஆலோசனைக் கமிட்டி என மூன்று கமிட்டிகள் நியமிக்கப்பட்டன. இக்கமிட்டிகளில் வாக்குரிமைக் கமிட்டியின் வேலையும், சமஸ்தானக் கமிட்டியின் வேலையும் முடிந்து விட்டன. இவைகளின் அறிக் கைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருக்கின்றது, இன்னும் ஆலோசனைக் கமிட்டியின் வேலைகள் முழுவதும் முடியவில்லை.
வட்ட மேஜை மகாநாடு கூடியது முதல் சில தினங்களுக்குமுன், சென்ற 27-6-32ல் இந்தியா மந்திரியின் அறிக்கை வெளியாகும் வரையிலும் எங்கும் ஐக்கிய ஆட்சியைப் பற்றியே பேச்சாக இருந்தது. ஆனால் இந்தியாவில் ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவதில் உள்ள இடையூறுகளையும், சிக்கல் களையும் உணர்ந்த பல நிருபர்களும், அரசியல்வாதிகளும், மாகாண ஆட்சி தான் முதலில் ஏற்படக் கூடும் என்று கூறிவந்தார்கள். ‘காந்தி – இர்வின்’ ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களும் திரு. காந்தி யும் ஐக்கிய ஆட்சித் திட்டத்தை ஒப்புக் கொண்டனர்.
ஆனால் நாம் மாத்திரம். ஆதிமுதல், “ஐக்கிய ஆட்சி ஏற்பட இடமில்லை” என்றே வட்ட மேஜை மகாநாடு ஏற்படுவதற்கு முன் உண்டான “சைமன் கமிட்டி” அறிக்கையின் படியும் அவ்வறிக்கையின் மேல் இந்திய அரசாங்கத்தார் செய்துள்ள சிபாரிசின் படியும், அமைந்த “மாகாண சுயாட்சி” தான் ஏற்படும் என்றும் ஆகவே “காங்கிரஸ்”காரர்கள் செய்யும் சட்ட மறுப்பி னாலும், மற்றவர்கள் போடும் கூச்சலினாலும் ஒரு பயனும் இல்லை என்றும் கூறி வந்தோம்.
இவ்வுண்மையைத் தற்சமயம் இந்தியா மந்திரி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கொண்டு உணரலாம். இந்தியா மந்திரியின் அறிக்கையை சென்ற 27-6-32ல் மேன்மை தங்கிய வைசிராய் அவர்கள் வெளியிட் டுள்ளார்கள். அவ்வறிக்கையிலிருந்து நமக்குத் தெரியும் செய்தியாவது :-
“தற்பொழுது அவசரமாக மாகாண சுயாட்சி கொடுப்பதே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவாகும். ஆனால் இப்பொழுது மாகாண சுயாட்சிக்காக தயாரிக்கப் போகும் அறிக்கையிலேயே, ஐக்கிய ஆட்சிக்கான திட்டமும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்திய ஆட்சித் திட்டங்களை ஆராய்ந்து முடிவு செய்வதற்கு அதிக காலம் பிடிக்குமாதலால் முதலில் மாகாண சுயாட்சியே வழங்கப்படும்.
வகுப்புப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்கத்தார் தமது முடிவை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தெரிவித்து விடு வார்கள். அதன்பின் ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் நடை பெற்று அதன் அறிக்கை தயாரிக்கப்படும். இதன் பின்பே பாராளு மன்றத்தாரால் நியமிக்கப்படும் கூட்டுக் கமிட்டியினால், இந்தியப் பிரதிநிதிகளையும் விசாரித்து உடனே மாகாண சுயாட்சியைக் கொடுக்கின்ற மசோதா தயாரிக்கப்படும். இம்மசோதாவைத் தயாரிக் கும் போது, வாக்குரிமைக் கமிட்டி சமஸ்தானக் கமிட்டி ஆலோ சனைக் கமிட்டி ஆகியவைகளின் அறிக்கைகளையும் துணையாக வைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மசோதா பாராளுமன்றத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்டபின் சட்டமாக அமுலுக்கு வரும்.”
என்பதுதான் இந்தியா மந்திரியின் அறிக்கையில் உள்ள சாரமாகும். இனி தயாரிக்கப் போகும் அறிக்கை பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியினால் இந்தியப் பிரதிநிதிகளின் உதவியையுங் கொண்டு தயாரிக்கப்படும் என்று விளம்பரப் படுத்தியிருந்தாலும் உண்மையில் அவ்வறிக்கை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாக அறியாதவர்களால் கருதப்படும் “சைமன் அறிக்கை”யை ஒட்டியதாகவும், அதன்மேல் இந்திய அரசாங்கத்தார், செய்தி ருக்கும் சிபாரிசை ஒட்டியதாகவும் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே சொல்லலாம்.
ஆகவே, இதுவரையிலும் “சைமன் கமிஷனை” எதிர்த்தும் வட்ட மேஜை மகாநாட்டை எதிர்த்தும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்தும் சட்ட மறுப்பும். கிளர்ச்சிகளும் செய்ததினால் என்ன பலன் கிடைத்தது? என்று கேட்கிறோம்.
“சட்டமறுப்பு இயக்கத்தை ஒடுக்கி தேசத்தில் அமைதியை ஏற்படுத்துகின்றோம்” என்று சொல்லிக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களாலும், அவைகளை எதிர்த்துச் சட்ட மறுப்புக்காரர்கள் செய்யும் கலகங்களாலும் நிரபராதியான ஏழை மக்கள் கஷ்டப்படுகிறது தான் கண்டபலன்.
“பிரிட்டிஷ் அரசாங்கத்தார் முதலில் இந்தியாவுக்கு மாகாண சுயாட்சி தான் கொடுப்பது” என்று தீர்மானித்திருப்பதால் அரசாங்கத்திற்கு இப் பொழுது இருந்து வரும் இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவும் பொது ஜனங்களின் ஆதரவும் குறைந்து விடும். ஆகையால் மாகாண சுயாட்சித் திட்டத்தை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று சிலர் கூறி வரு கிறார்கள். இக்கூற்று சிறிதும் உண்மையற்றது என்று நாம் கூறுவோம். இங்கி லாந்தில் இரண்டாவது வட்டமேஜை மகாநாடு நடந்த காலத்திலேயே பிரபல மான இந்திய அரசியல் வாதிகளில் பலர் ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன் மாகாண சுயாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று கூறினார்கள். வட்ட மேஜை மகாநாடு கலைந்தபின்னும், முஸ்லீம் தலைவர்களில் பலரும் இந்துத் தலைவர்களில் பலரும் மற்ற சிறுபான்மை வகுப்புத் தலைவர்களில் பெரும் பாலானவர்களும் முதலில் ‘மாகாண சுயாட்சி’ ஏற்படுத்தும் விஷயத்தை ஆதரிப்பதாக அபிப்பிராயங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகையால் அரசாங்கத்தார் ஏக காலத்தில் ஐக்கிய ஆட்சியையும் மாகாண சுயாட்சி யையும் விரும்புகின்றவர்களும், பூரண சுயேட்சைக்காரர்களும் காட்டும் பூச்சாண்டிகளுக்குப் பயப்படமாட்டார்கள்.
இதற்கு மத்தியில் அரசாங்கத்தார் காங்கிரசுடன் சமாதானம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றும் அவசரச் சட்டங்களையெல்லாம் நீக்கிவிட வேண்டுமென்றும், மீண்டும் அவசரச் சட்டங்களை ஏற்படுத்தக் கூடா தென்றும் இனி வரப்போகும் தேர்தலில் ஜனங்களிடம் ஓட்டுப்பெற விரும்பும் “தேச பக்தர்கள்” எல்லாம் தனித்தனியாகவும் ஒன்று சேர்ந்தும் பல அறிக்கைகள் வெளியிட்டார்கள். திரு காந்தி அவர்களும் “தேசீய கௌரவத் திற்குப் பங்கம் வராத சமாதான” த்திற்குச் சம்மதிப்பதாக வெளியிட்டிருந்தார்.
ஆனால் சிறந்த ராஜதந்திரியான லார்டு வில்லிங்டன் அரசாங்கத்தார் “காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றவரையிலும் எத்தகைய சமாதானத்திற்கும் தயாராஇல்லை” என்ற முடிவோடு இருக்கிறார் கள் என்ற விஷயம் அடிக்கடி தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் அரசியல் தந்திரம் அறியாதவரும் மதபக்தரும்ஆன மாஜி வைசிராய் லார்டு இர்வின் பிரபு அவர்களுடன் திரு. காந்தியவர்கள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது போல லார்டு வில்லிங்டன் பிரபு அவர்களுடன் செய்து கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ்காரர்கள் இன்னும் உணராததாலேயே பிடிவாதமாகச் சட்ட மறுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒருக்கால் காங்கிரசுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் சமாதானம் ஏற்பட்டாலும் முன்பு ஏற்பட்ட “காந்தி – இர்வின்” ஒப்பந்தத்தைப் போல் போலிச்சமாதானம் ஏற்படாது என்பது நிச்சயம். காங்கிரஸ் படிந்து வந்தாலொழிய சமாதானம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற உறுதியினால் தான் இப்பொழுதுள்ள அவசரச் சட்டங்களின் காலம் முடிந்தபின் மீண்டும் ஜூலை 3ந்தேதிமுதல் புதிய அவசரச் சட்டங்களை ஏற்படுத்துவதாக அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கின்றார்கள். இது பற்றி சென்ற 27-6-32ல் பாராளுமன்றத்தில் இந்தியா மந்திரியவர்கள்
“ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் புதிய அவசர அதிகாரங் களைப் பெற வேண்டிய சங்கடமான நிலைமைக்கு வந்திருக்கி றோமாகையால் அதற்கு வேண்டிய அவசர அதிகாரங்களைப் பெறுவதென்று முடிவு செய்திருக்கிறோம்”
என்று பேசியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
ஆகவே இது வரையிலும் கூறியவற்றால் இப்பொழுது மாகாண சுயாட்சி கொடுப்பதாகவே அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் பூரண சுயேச்சைக்காகவும், ஐக்கிய ஆட்சிக்காகவும், செய்த சட்ட மறுப்புக்களும் போட்ட கூச்சல்களும் வீணே என்பதையும், காங்கிரஸ் காரர்கள் சட்ட மறுப்புச் செய்து கொண்டிருக்கும் வரையிலும் அரசாங்கத்தார் சமாதானத்திற்கு இணங்கப்போவதில்லையென்பதையும் அவசரச் சட்டங்களையும் கைவிடப் போவதில்லையென்பதையும் உணரலாம்.
இந்த நிலையில் தேச மக்கள் செய்ய வேண்டிய வேலை வரப்போகும் மாகாண சுயாட்சியில் ஒவ்வொரு வகுப்பினரும் சமபங்கு பெற்றுத் தங்கள் தங்கள் நிலையைச் சரிப்படுத்திக் கொள்ள முயலுவதேயாகும். பிற்போக் கடைந் திருக்கும் சமூகத்தினர் இப்பொழுது ஏமாந்து பேசாமலிருந்துவிட்டால் பிறகு கஷ்டப்படுமாறு நேரும். ஆகையால் முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வரப்போகும் மாகாண சுயாட்சியில் சட்டசபைகளிலும் மற்ற பொதுஸ்தாபனங்களிலும் தங்கள் ஜனத்தொகைக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் யாருடைய தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல் உழைக்கக் கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுப்பதற்கும் தகுந்த வகையை மாகாண சுயாட்சித்திட்டத்தில் அமைக்கும் படி கிளர்ச்சி செய்ய வேண்டும். வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான முடிவி லேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடைய நன்மை தீமைகளும் மற்ற பிற் போக்குள்ள சமூகத்தினருடைய நன்மை தீமைகளும் அடங்கியிருக்கின்றன. ஆகையால் எல்லாச் சமூகத்திற்கும் அரசியலில் நியாயமான பிரதிநிதித்துவம் ஏற்படும்படி முடிவு கூறுமாறு பிரிட்டிஷ் முதல் மந்திரிக்கு எடுத்துக் காட்டு வதே இச்சமயத்தில் உண்மையான தேசாபிமானிகளின் கடமையாகும் என்பதை நினைப்பூட்டுகிறோம். இதை விட்டு இன்னும் வீணாகச் சட்ட மறுப்பென்றும், சத்தியாக்கிரகமென்றும் சொல்லிக் கொண்டு தேசத்தின் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பதனால் ஒரு பயனும் இல்லை என்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 03.07.1932