திரு.காந்தி தனித்தொகுதியை மறுப்பதின் ரகசியம் ஐ சீர்திருத்தம் கூடாது என்பதேயாகும் – தேசீயத்துரோகி
திரு.காந்தியும், காங்கிரசும், பார்ப்பனர்களும் தனித்தொகுதி கூடாது கூடாது என்று கூச்சலிட்டுக் கொண்டு வருகின்றனர். தனித்தொகுதி இருந்தால், அரசியலில் எல்லா வகுப்பினர்களும் சம உரிமை பெற முடியும். ஆகையால் தனித்தொகுதியோடு கூடிய அரசியல் சீர்திருத்தமே வேண்டுமென்றும், நாட்டில் உள்ள சிறுபான்மை வகுப்பினர்களும், அவர்களின் தலைவர்களும் கூறுகின்றனர். இதை நாட்டின் உண்மை நிலையைத் தெரிந்த நடுநிலையாளர்கள் சரியென்று ஒப்புக் கொள்ளுகின் றனர். ஆனால், தனித்தொகுதிக்கு எதிராக இருக்கின்றவர்கள், தனித்தொகுதி வேண்டுமென்று கூறுபவர்களையும், அதை ஆதரிப்பவர்களையும், வகுப்பு வாதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் தாராளமாக பிரசாரஞ் செய்கின் றனர். தேசீயப் பத்திரிகைகளும், இவர்கள் பாடும் பல்லவியையே பாடி வருகின்றன.
இந்த முறையிலேயே பார்ப்பனரின் மகாத்துமாவாகிய திரு.காந்தி யும், அவரைப் பின்பற்றுபவர்களும், ஒரேயடியாகத் தனித்தேர்தல் முறை கூடாது என்று கூறுவார்களானால் அதில் ஏதாவது தேசிய நோக்கம் இருக்க லாம் என்றாவது சொல்ல இடமுண்டு. ஆனால் இங்கிலாந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப் போன பின் திரு. காந்தியும், மாளவியா போன்ற வைதீகர் களும், முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும், தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கச் சம்மதிப்பதாகவும், தீண்டத்தகாதார்களுக்கும், மற்ற சிறுபான்மை சமூகத்தாருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாதென்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
திரு.காந்தியவர்கள், “எனது உயிரை விட்டாவது தீண்டாதாருக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை மறுப்பேன்” என்று வெகு உறுதியாகப் பலவிடங்களில் சொல்லி வருகிறார். வட்டமேஜை மகாநாட்டிலிருக்கும் மற்ற வைதீகர்களும், திரு.காந்திக்குத் துணையாக நிற்கின்றனர். ஆனால் திருவாளர்கள் சாப்ரூ, பாத்ரோ போன்ற அரசியல் வாதிகளும், முஸ்லீம் களும், தீண்டாதாருக்கும் சிறுபான்மையோருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை உறுதியாக ஆதரித்து நிற்கின்றனர்.
முஸ்லீம்களும், தீண்டாதார்களும், மற்ற சிறுபான்மை வகுப்பினர் களும் சேர்ந்து ஒவ்வொரு மாகாணச் சட்டசபையிலும், தலைமைச் சட்ட சபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும், இத்தனை இத்தனை பிரதிநிதி கள் இருக்க வேண்டுமென்று ஒரு திட்டம் தயார் செய்து, அதை முதல் மந்திரி, திரு.மெக்டனால்டு அவர்களிடம் கொடுத்து விட்டார்கள். அத்திட்டத்தினாலும், தீண்டாதார்களுக்கு அரசியல் சமூகப்பங்கு கிடைக் கிறதே அல்லாமல் சமத்துவம் பெறுவதற்குத் தடை இருக்கிறதாயினும், திரு.மெக்டனால்டு அதை ஒரு முக்கியமான திட்டமாகக் கருதி, சிறுபான் மையோர் பிரச்சினைக் கமிட்டியின் கடைசிக் கூட்டத்தில், “சிறுபான்மை யோர் உரிமைகளை முடிவு செய்யும் போது அத்திட்டத்தையும், முக்கிய மான ஒரு கருவியாக வைத்துக் கொண்டு முடிவு செய்யப்படும்” என்று கூறிவிட்டார். ஆகவே, பிரிட்டிஷாரும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், ஐரோப்பியரும், வட்டமேஜை மகாநாட்டு இந்தியப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டியாரும், தீண்டாதாருக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை ஆதரிக்கின்ற காரணத்தால் வட்டமேஜை மகாநாடு வெற்றிகரமாக முடிந்தால் தனிப்பிரதி நிதித்துவம் விரும்பும் சமூகத்தாருக்கு அது கிடைப்பது நிச்சயம். இவ்வாறு தனிப்பிரதிநிதித்துவம் கேட்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மை யினருக்கும் வெற்றியேற்படாமலிருக்கத் திரு.காந்தியும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தார். முஸ்லீம்களுக்கு அவர்கள் இஷ்டப்படி பாது காப்பு கொடுக்கச் சம்மதிப்பதாகவும், ஆனால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுக்கும் விஷயத்தில் தன்னோடு ஒத்துழைக்கச் சம்மதிக்க வேண்டு மென்றும் கேட்டார். ஆனால் முஸ்லீம் பிரதிநிதிகளோ இந்த மோசமும், சூழ்ச்சியுமான உடன்படிக்கைக் குச் சிறிதும் சம்மதிக்கவில்லை.
இவ்வாறு தீண்டாதார்களுக்கும், மற்ற சிறுபான்மை வகுப்பினரான கிருஸ்தவர், ஐரோப்பியர் முதலானவர்களுக்கும் ஒரே பிடிவாதமாகத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க திரு.காந்தியவர்கள் மறுப்பதன் இரகசியம் என்ன என்பதைக் கவனிப்போம். திரு,காந்தியும், மாளவியா, ரங்கசாமி அய்யங்கார் முதலானவர்களும் வருணாச்சிரம தருமத்திற்கு முள்வேலி போடுகிறவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்தும், நடவடிக்கைகளிலி ருந்தும் நன்றாய் அறியலாம். வரப்போகும் சுயராச்சியம், வைதீகர்களுக்கும், அவர்கள் மதங்களுக்கும், கலைகளுக்கும், நாகரீகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சுயராச்சியமாக இருக்க வேண்டும் என்பது திரு.காந்தியினு டைய கொள்கையும், காங்கிரஸ் கொள்கையும் ஆகும் என்பதைக் கராச்சி காங்கிரஸ் செய்திருக்கும் தீர்மானத்திலிருந்து அறியலாம்.
முஸ்லீம், கிருஸ்தவர், தீண்டாதார், ஐரோப்பியர் ஆகிய எல்லோருக் கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டால், சட்டசபைகளில் இவர்களின் சரியான பிரதிநிதிகள் கண்டிப்பாக வந்து சேர்ந்து விடுவார்கள். மேற்கண்ட வகுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இந்துக்களின் பிரதிநிதிகளுக்கு சற்றேறக்குறைய சமமாக ஆகிவிடுவார்கள். முஸ்லீம் களும், கிறிஸ்தவர்களும், ஐரோப்பியர்களும், தீண்டாதார்களும், வைதீக இந்துக்களைப் போல் வருணாச்சிரமதர்மவாதிகள் அல்லர்; சமதர்ம விரோதி கள் அல்லர். ஆகையால் சீர்திருத்த தீர்மானங்களும்சமூக சமத்துவத் தீர்மானங்களும், சமதர்மத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம். இவை களின் மூலம் வைதீகமும், வருணாச்சிரம தர்மமும் அழிக்கப்படலாம். ஆகவே வருணாச்சிரமதர்மமும், வைதீக இந்து மதமும் அழிய வேண்டிய நிலைக்கு வந்து விடும். இந்தக் கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வருணாச்சிரமத்தையும், வருணாச்சிரம இந்து மதத்தையும் காப்பாற்றவே பிறந்திருக்கும் திரு.காந்தி தீண்டாதார்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுக்கிறார் என்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. திரு.காந்தி யின் மனப்பாங்கை நன்றாய் அறிய வேண்டுமானால் மற்றொரு விஷயத் திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதாவது திரு.காந்தியவர்களை “முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கச் சம்மதிக்கும் போது தீண்டாதவர்களுக்கு அவ்வாறு கொடுக்க ஏன் ஆட்சே பிக்கிறீர்கள்” என்று கேட்ட போது திரு.காந்தி “லெட்சுமணபுரி காங்கிரஸ் ஒப்பந்தப்படி அவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுப்பதைக் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறது” என்றார். மறுபடியும் “லெட்சுமணபுரி ஒப்பந்தப்படி சீக்கியர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க ஏற்பாடு இல்லையே” என்று கேட்ட போது, இதற்குத் திரு.காந்தி “சரித்திர சம்பந்த மான காரணங்களால் முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப்பிரதி நிதித்துவம் கொடுக்க வேண்டியதிருக்கிறது” என்று கூறினார். இவ்வார்த்தை யில் தான் திரு.காந்தியின் மனப்பான்மை நன்றாய் விளங்குகிறது. முஸ்லிம் களும், சீக்கியர்களும், பரம்பரையாகப் பெருமையோடு வாழ்ந்தவர்கள். அரசர்களாக இருந்து ஆட்சி புரிந்தவர்கள் ஆகையால் அவர்கள் அரசாங்க உரிமைகளுக்குப் பாத்தியமுடையவர்கள். ஆகவே அவர்களுடைய உரிமைக்குப் பங்கம் உண்டாகாதபடி அரசியல் பாதுகாப்புகள் வேண்டியது என்னும் கருத்தும், தீண்டாதார்களோ பரம்பரையாகச் சுதந்தரமின்றி அடிமையாகத் தாழ்த்தப்பட்டே வாழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சி புரிந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆகையால் அவர்களுக்கு அரசியலில் பங்கு பெறுவதற்குப் பாதுகாப்பு வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தும் அடங்கியிருக்க வில்லையா? இக்கருத்துக்கும் வருணாச் சிரம தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. வருணாச்சிரம தருமம் எவ்வாறு பரம்பரையாக உயர்வு பெற்று சுதந்தரம் அனுபவிப்பவர்கள் அவ்வாறே அனுபவிக்கவும், பரம்பரையாக அடிமையாக இருந்து தொழிலாளிகளாய் கூலிகளாய் அல்லற்படுபவர்கள் அவ்வாறே இருக்கவும் அரண் செய்கிறதோ அவ்வாறு தானே திரு.காந்தியின் மேற்கண்ட அபிப்பிராயம் இருக்கிறது என்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது.
இன்று தீண்டத்தகாத வகுப்பினர்கள் இந்தியாவில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது திரு.காந்திக்குத் தெரியாததல்ல. பொது ரோட்டில் நடக்க முடியாத தீண்டத்தகாதவர்கள்-பொதுக் குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாத தீண்டத்தகாதவர்கள்-பொது இடமான கோயில் சத்திரம் முதலியவைகளில் பிரவேசிக்க முடியாத தீண்டத் தகாதவர்கள்-ரயில்வே ஸ்டேஷன் ஹோட்டல்களிலும், மற்றும் தனிப்பட்டவர்கள் வைத்திருக்கும் ஹோட்டல்களிலும் போக முடியாதிருக்கும் தீண்டத்தகாதவர்கள் பொதுத் தொகுதியில் நின்று உயர்ந்த ஜாதிக்காரர்களால் சட்ட சபைக்குத் தெரிந் தெடுக்கப்படுவார்களா? என்பது திரு.காந்திக்குத் தெரியாததல்ல. வயது வந்தவர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுக்கும் காரணத்தாலும், திரு.காந்தியின் காங்கிரசின் முயற்சியாலும் ஒரு தீண்டத்தகாத வகுப்புப் பிரதிநிதி தெரிந்தெடுக்கப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் (ஏற்படுவதே சந்தேகம்) திருவாளர்கள் அம்பெட்கார், ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற உண்மையான-சுயமரியாதையுள்ள அவ்வகுப்புப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாமல் உயர்ந்த ஜாதிக்காரர்களின் தயவை நாடி அவர்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்து நடக்கும் ஒரு போலி வருணாச்சிரம வைதீகப்பிரதிநிதிதான் தெரிந்தெடுக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் என்பதும் திரு.காந்திக்குத் தெரியாததல்ல. தெரிந்திருந்தும் அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுத்தால் அதை ஒரு சூழ்ச்சியாகத்தானே கொள்ள வேண்டும்?
உள்ளபடியே தனிப்பிரதிநிதித்துவம் இல்லாமலே தீண்டாத வர்களுக்கு அரசியலில் சம உரிமையும் சமூகத்தில் சம உரிமையும் கொடுத்து விடலாம் என்று திரு.காந்தி நினைப்பாரானால் அதை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்?
சென்ற ஒத்துழையாமையின் போது திரு.காந்தி, தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்பதைக் காங்கிரசில் முக்கியமாகச் சேர்த்த காரணத்தால் தானே ஒத்துழையாமையும் தோல்வி யடைந்து, காங்கிரசில் இருந்த பார்ப்ப னர்களும் பிரிந்து சுயராஜியக்கட்சியை ஆரம்பித்தார்கள். திரு.காந்தியையும் மூலையில் தூக்கிப்போட்டு விட்டார்கள். இப்பொழுதும் தீண்டாதவர்கள் சார்பாகத் திரு.காந்தி உண்மையாக ஏதாவது நன்மை செய்யவேண்டு மென்று நினைத்தால் பார்ப்பனர்களும், காங்கிரசும் தன்னைக் கை விட்டு விடுவதோடு முன்போலவே மூலையில் உட்காரவைத்து விடுவார்கள் என்பதை அவர் அறியாதவர் அல்லவே. இந்த எண்ணம் கொண்டு தான் திரு.காந்தியவர்கள் ஒத்துழையாமை செத்தபிறகு தென்னாட்டுக்கு வரும் போது வருணாச்சிரம மூட்டையைத் தலையில் தூக்கிக்கொண்டுவந்து வருணாச்சிரம பிரசாரம் செய்து பார்ப்பனர்களை சுவாதீனம் செய்துகொண்டு போனார். அந்த உறுதியினால் தான் அவரது உப்பு சத்தியாக்கிரக இயக்கத் துக்கும் எல்லா பார்ப்பனர்களும் அவரோடு ஒத்துழைத்து விளம்பரம் கொடுத்து மகாத்மா பட்டத்தை அரங்கேற்றினார்கள்.
ஆகவே இப்போது திரு.காந்தி தீண்டாதவருக்கும், மற்ற சிறு பான்மை வகுப்பினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை மறுப்ப தின் காரணமும், உயிர் போனாலும் ஒப்பமாட்டேன் என்று சொல்லும் காரணமும், வருணாச்சிரமத்தையும் வைதீக இந்துமதத்தையும் பாது காக்கவேதான் பாடுபடுவதாக பார்ப்பனர்கள் உணர வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை யென்று உறுதியாகக் கூறுகிறோம்.
திரு.காந்திக்கு இந்த அபிப்பிராயம் இருப்பதை அனுசரித்துத்தான் இங்குள்ள வருணாச்சிரம தர்மக்காரர்களும் திரு.காந்தியை வானம் அளாவ மகாத்மா என்றும், அவதார புருஷரென்றும் கொண்டாடுகிறார்கள். மற்றும் தான் ‘தீண்டாதாரின் தனிப்பிரதிநிதித்துவத்திற்கு விரோதி என்கின்ற பெயருடன் இந்தியாவுக்குத் திரும்பி வருவாரேயானால் கண்டிப்பாக திரு.காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்பதோடு மாத்திரமல்லாமல் ‘பகவான் மகாத்மாகாந்தி’ என்கின்ற பட்டம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். இந்த விஷயங்களையெல்லாம் நன்றாய் உணர்ந்ததினால் தான் தீண்டாதார் சமூகத்தாரும் தங்கள் சமூக சங்கங்கள் மூலமும், மகாநாடு மூலமும், பொதுக் கூட்டங்கள் மூலமும் திரு.அம்பெட்கார், திரு.சீனிவாசன் ஆகியவர்களே தங்கள் பிரதிநிதிகள் என்றும், திரு.காந்தியும், காங்கிரசும் தங்கள் பிரதிநிதிகள் அல்லவென்றும் தீர்மானங்களை நிறைவேற்றி யிருக் கிறார்கள். இதற்கு மாறாக இங்குள்ள வருணாச்சிரமதருமிகள் சில போலி களைப் பிடித்து திரு.அம்பெட்காரும், திரு.சீனிவாசனும் தாழ்த்தப்பட்டவர் களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்றும் திரு.காந்தியும், காங்கிரசுமே தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளென்றும், புரட்டுத்தந்திகள் கொடுத்திருக்கிறார்கள். இந்த வருணாச்சிரம தர்மவாதிகளை அனுசரித்தே தேசீயப் பத்திரிகைகளும் பெரும் பிரசாரம் செய்கின்றன. தேசீயவாதிகளும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆகவே இவர்கள் செய்யும் புரட்டுகளும், ஆரவாரங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் கை வைக்கச் செய்யப் படும் சூழ்ச்சிகள் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 22.11.1931.