வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம்.
மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங் களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவு களாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாச்சிரமத்தையும், ஜாதிப்பிரிவு களையும், பலவகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்துமதமானது எல்லா மதங்களையும் விட மக்கள் சமூகத்திற்கு பெரிய இடையூறாய் இருந்து கொண்டு மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலி இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும் பகுத்தறிவற்ற மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு பார்த்தாலே போதும். இந்துகள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதிகளாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டு இருக்கின்றார்கள். (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியரின் எண்ணிக்கையும் காலம் சென்ற திரு.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புஸ்தகத்தில் காணலாம்) நாளேற நாளேற நாகரீகத்தின் காரணமாகவும் செல்வநிலையின் காரணமாகவும் இன்னும் அதிகமான ஜாதி பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும் படியான நிலையிலேயே தேசம் போய் கொண்டிருக்கிறதே தவிர அவைகள் குறைந்து ஒன்றுபடத் தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற் கில்லை.
இந்தியாவின் 8 -ல் ஒரு பாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப்பிரிவுகள் இருக்கின்றதென்றால் இனி மற்ற 7-பாக ஜனத்தொகையில் எத்தனை ஜாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் தானாக விளங்கிவிடும்.
இந்த ஜாதிப்பிரிவுகள் மாத்திரமல்லாமல் ‘உயிரினும் தேசத்தினும் முக்கியமாய் கருத வேண்டிய’தானதாய் பாஷை பிரிவுகள் எவ்வளவு? இவ் வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங்களுக்குள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ண மும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?
இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக் காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக்காரரும் ‘தேசீயம் தேசீயம்’ என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத் தால் நாடு எப்படி nக்ஷமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம் தான் இந்த தேசீய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடந்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
‘வகுப்பு வாதம் கூடாது’ என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசீயவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
‘வகுப்புவாதம் மதவாதம் ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது’ என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக்கண்டு நாம் சிறிது லக்ஷியம் செய்யவில்லை.
அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100க்கு அரைப் பேராவது தங்கள் மதத்தையும், உள் மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதி யையும் ,வகுப்பையும் உள்வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.
ஆகவே தேசீயம் என்பதும், தேசீயப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடுகின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.
எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்று ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?
வகுப்புவாதம், மத வாதம், ஜாதி வாதம் கூடாது என்கின்ற யோக் கியர்கள் ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர் வரை மாயாவாதம் முதல் சைவர்வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின்றார்களேயொழிய ஒருவராவது ஜாதிமத வகுப்புகளை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் ஒரு புறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற்றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப்பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத் தனம், இழிதன்மை என்று சொன்னால் அப்படிச்சொல்லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட் கின்றோம்.
தேசம்,ஜீவராசிகளுக்கு பொதுவானதாகும், தேச ஆட்சியும் மக்க ளுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக்கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பதை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சகர்களது செல்வாக்குக்காலத்தில் அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈனமுள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும் கொடுங்கோன்மைகளாலும் ஜாதிமத வகுப்பு ஆணவங் கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதி மத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கு உதவியாகவே இருக்கவேண்டுமா என்றும் யாரோ சிலருக்கு பிழைப்பதற்கு வேறு வழி இல்லாததினாலேயே அந்த ஈனர்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.
ஏதாவது ஒரு மனிதன் ‘என்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதியென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதை தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு’ என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக்கேட்பது ‘குலாம் தன்மை’ என்றும் தேசத்துரோகத் தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச்சொல்லுவது ‘வயிற்றுப்பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழி தன்மை’ என்று ஏன் சொல்லக்கூடாது.
தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அனேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக்காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படி கேடுற்றாலும் சில பொருப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால் நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டு கோடி முஸ்லீம்களும் தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் ‘எங்களை நம்பித்தானாக வேண்டும்’என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தியிடமும், காங்கிரசினிட மும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பட்காரிடம் நம்பிக்கை இல்லை’ என்று சில பாவங்களுக்கு பணம் கொடுத்து சீமைக்கு தந்தி அடித்து பத்திரிகை களில் விளம்பரப்படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா?என்று கேட்கின்றோம்.
உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர்களில் நூற்றுக்கு கால் பேராவது காந்தியையும், காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.
சீமையில் திரு.காந்தியடிகள் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி’ என்று சொன்னபோது திரு.அம்பெட்கார் சொன்ன பதிலுக்கு திரு.காந்தி என்னபதில் சொன்னார்? அம்பெட்கார் அவர்கள் நல்ல வெளிப்படையான பாஷையில் ‘காங்கிரசுக்கும், தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது, அப்படியிருக்க திரும்பத் திரும்ப திரு.காந்தியவர்கள் காங்கி ரசும் தானும் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதிகள் என்று சொல்லு வது பொறுப்பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும்’ என்று எடுத்து சொன்னார். அப்படி இருக்கும்போது மறுபடியும் மறுபடியும் காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகிற வர்களுக்கு சிறிதாவது மானமோ , சுயமரியாதையோ இருக்குமானால் திரு.அம்பெட்காருக்கு பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பெட்காரையும் அவரது அபிப்பி ராயத்தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் ‘அம்பெட்கார் ஒரு குலாம்’ ‘எம்.சி.ராஜா ஒரு குலாம்’, ‘என். சிவராஜ் ஒரு குலாம்’ ‘மதுரைப்பிள்ளை ஒரு குலாம்’ ‘அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும் குலாம் இழி மக்கள்’ என்று பேசிவிட்டால் எழுதிவிட்டால் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர்க ளுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவர வர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தன் பங்கைக் கேட்பவனை குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர்கூலி என்றும், எச்சில் பொருக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாண யமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட் கின்றோம்.
அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லீம் பிரதிநிதிகளை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை என்றும் , முஸ்லீம்களின் முட்டுக்கட்டையென்றும் முஸ்லீம்களின் வஞ்சகம் என்றும் , முஸ்லீம்களின் சூட்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே ‘தேசீயப் பத்திரிகை’களுக்கு ஒரு யோக்கியதையாக விளங்குகின்றது. இது ‘தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லீம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமூகத்தாருக்கு தங்கள் உரிமைக்குப் பாடுபடு வதில் இன்னும் சரியான அக்கரை இருந்து, அப்பத்திரிகைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசீயத்தின் பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மௌலானா ஷெளகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய் எழுதத் தொடங்கிவிட்டன. மௌலானா ஷெளகத்தலியின் நாணயத்தை விட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர் கள் என்று கேட்கின்றோம். மௌலான ஷெளக்கத்தலி அவர்கள் மகமதிய சமூகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண்டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.
ஆனால், மேல் கண்ட திரு.காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்கு மாத்திரமல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லா விட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும் உண்மையான முஸ்லீம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள், சூட்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ்வளவு மோசடியான தந்திரமென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.
நிற்க, ஒரு சமூகத்தாரிடமோ ஒரு மதத்தாரிடமோ மற்றொரு சமூகத் தார் உண்மையில் பயப்பட்டு பந்தோபஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப்பங் களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும்போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந் துணிந்து வேண்டுமென்றே செய் கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்ய மாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர் கடமையாகும்.
குடி அரசு – தலையங்கம் – 08.11.1931