கேள்வி மூன்று கன்றுக்குட்டிகள்

 

மூன்று பசுவின் கன்றுக்குட்டிகள் ஒன்றாய் ஒரு காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் குடியானவர் வீட்டுக்கன்றுக்குட்டி:-

“நண்பர்களே வீட்டுக்கு போகலாம், பால் கரக்கும் நேரமாய் விட்டதால் நாம் போய் பால் குடிக்கலாம்” என்றது.

செட்டியார் வீட்டு கன்றுக்குட்டியானது “பால் கரக்கின்ற நேர மானால்தான் என்ன முழுகிப் போய்விட்டது? வயிரார பால் கிடைக்கவா போகின்றது?” என்றது.

மூன்றாவதான அய்யர் வீட்டுக்கன்றுக்குட்டியானது “நீங்கள் என் னமோ பேசிக்கொள்ளுகின்றீர்களே? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே” என்றது.

ஒவ்வொன்றும் இந்தப்படி பேசியதின் கருத்து என்ன?

பதில்

குடியானவன், கன்றுக்குட்டிக்கு வயிராரப் பால் கொடுப்பது வழக்கம்.

செட்டியார், கன்றை அவிழ்த்து விட்டு முலைக்காம்பில் வாய்வைத்து முட்டி கொஞ்சம் பால் குடித்தவுடனேயே கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டி விடுவது வழக்கம்.

அய்யரோ, கன்றுக்குட்டியை மாட்டுக்கு எதிரில் காட்டுவதைத்தவிர பக்கத்தில் கட்டி இருக்கக்கூட சம்மதிக்காமல் பால் கரந்து கொள்ளுவார். ஆதலால் அவை தன் தன் அனுபவங்களையே பேசின.

குடி அரசு – விளக்கக்குறிப்பு – 20.09.1931

 

 

தற்கால ரஷியாவின் கல்விமுறை

அறிவில்சிறந்த தலைவர் அவர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!!

இங்கு இன்று இந்தக் கூட்டமானது இந்தப் பள்ளிக்கூடத்துப் பிள்ளை களின் அறிவுப் பெருக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டூடன்ஸ் லிட்டரரிஅசோசியேஷனின் இவ்வருஷ  ஆரம்பக் கொண்டாட்டத் திற்காக கூட்டப்பட்டதாகும். இதில் தலைமை வகிக்கும் கனவான் திரு.எஸ்.ராம நாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் கல்வி அறிவில் தேர்ச்சிபெற்ற ஒரு பெரிய பண்டிதராவர். இப்போது இங்கு எனக்கு முன் முதலாவதாக உபன்யாசம் செய்த உபன்யாசகர் திருமதி சி.பி.காமாக்ஷியம்மாள் எம்.ஏ.எல்.டி. அவர் களும் கல்வியறிவில் தேர்ச்சிபெற்ற ஒரு பண்டிதை யாவார்கள். இங்கு கூடி யிருக்கும் கனவான்களும் அனேகமாக கல்வியில் தேர்ச்சி பெற்ற பெரிய பெரிய பி.ஏக்களும், எம்.ஏக்களும் எல்.டி. களுமா யிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் இங்கு செய்யப்படவேண்டிய உபந்யாசமும் கண்டிப்பாகக் கல்வி யைப் பற்றியதாகவே இருக்க வேண்டியது பெரிதும் பொருத்தமானதாகும்.

ஆகவே இப்படிப்பட்ட சமயத்தில் இங்கு உபன்யாசம் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நானோ, இப்படிப்பட்ட கல்வி இல்லாதவனும், ஆங்கிலத்தில் ஏதுமே கற்காதவனுமாய் இருக்கின்றேன். ஆதலால் நீங்கள் என்னிடமிருந்து முந்திய உபன்யாசகர்கள் உபன்யாசித்தது போன்ற அருமையான விஷயங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் கல்வி என்பதைப்பற்றி ஏதாவது பேசுவதென்றால் பள்ளிக்கூடத்தின் மூலமோ, புஸ்தகத்தின் மூலமோ கற்ற கல்வி என்பதைப் பற்றி ஏதுமே பேசமுடியாது. ஆனால் ஏதோ எனது பிரத்தியட்ச அனுபவத்தின் மூலம் கேள்வி மூலம் கல்வி என்னும் விஷயமாய் நான் கொண்ட ஏதாவது சில அபிப்பிராயங்களைப் பற்றித்தான் சிறிது பேசமுடியும்.ஆனால் அவை அனேகமாகப் பள்ளிக் கூடக்கல்விக்கும் புஸ்தகக் கல்விக்கும் மாறுபட்ட அபிப்பிராயமாக இருந்தாலும் இருக்கலாம். ஆதலால் நீங்கள் நான் சொல்வதை ஆதார மாய்க்கொள்ளாமல் ஒரு தனி மனிதனின் கேள்வி அனுபவ அபிப்பிராயம் என்கின்ற  முறையில் கவனித்து அதை அலசிப் பார்த்து ஒப்புக்கொள்ளத் தக்க விஷயம் ஏதாவது இருக்கின்றதா என்று கவனித்து அவற்றுள் உங்களுக்கு பிடித்தது ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு மற்றதை குப்பையில் தள்ளிவிடுங்கள். அந்த உணர்ச்சியோடு தான் மற்றும் எந்த விஷயத்தையும் கவனிக்க வேண்டு மென்பது முறையானாலும் சிறப்பாக நான் சொல்லும் விஷயத்தை நடு நிலையில் இருந்து நன்றாய் யோசித்துப் பார்த்த பிறகே அதை மதியுங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கல்வி முற்கால கல்வி

சகோதரர்களே! கல்வி விஷயத்தில் இந்த சகாப்தத்தில் இருக்கும் மக்கள் மிகவும் மேன்மை பெற்றவர்களே ஆவார்கள். ஏனெனில் முந்திய சகாப்தத்திற்கும் பிந்திய சகாப்தத்திற்கும் கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. முதலாவது நம் சகாப்தத்திற்கு முந்திய காலத்தில் இன்ன இன்னார் தான் கல்வி கற்பிக்க உரிமையுடைவர்கள் என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன இன்ன விஷயந்தான் கற்பிக்கப்படலாம் என்கின்ற நிபந்தனையும் இருந்தது. இதோடு மாத்திரமல்லாமல் இன்ன இன்னார்தான் கல்வி கற்பிக்கப்பட உரிமையுடையவர்கள் என்கின்ற நிபந்தனையும், இன்ன இன்னவர்களுக்கு எழுத்துவாசனையே கற்பிக்கப் படக்கூடாது என்கின்றதான நிர்ப்பந்தமும் இருந்து வந்தது. இந்த மாதிரி யான நியமங்களினாலும், நிர்ப்பந்தங்களினாலும் கல்வி என்பது “மூடுமந்தி ரம்” போன்று ஒரு ரகசியப் பொருளாகவே இருந்து வந்தது. இந்தக் காரணங்களால் முற்காலங்களில் ஆயிரத்தில் ஒருவர் இருவரே கல்வி கற்றவர்கள் என்று சொல்லும்படியான மாதிரியில் இருந்து வந்ததோடு கல்வி கற்றவர்கள் என்பவர்களே எல்லா மக்கள்மீதும் எல்லாக் காரியத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாய் இருந்து வந்தார்கள். அன்றியும் மேல் சொல்லப்பட்ட இந்த நிபந்தனைகளும், ஆதிக்கங்களும், எல்லாம் மக்கள் பிரிவில் ஒரு தனிபிரிவார் மாத்திரம் அதுவும் பிறவிகாரணமாய் உரிமை கொண்டாடத் தக்கதாய் இருந்து வந்ததே அல்லாமல் மற்றபடி பொதுத் தகுதியைக் கொண்டதாகவோ, எல்லோருக்குமே சம உரிமையைக் கொண்டதாகவோ சிறிதும் இருந்து வரவில்லை.

சாதாரணமாய் நமது இந்தியாவை முழுவதும் எடுத்துக்கொண்டு பழைய கல்வி போதனாமுறை என்பதை ஒரு முறையாக வைத்துப் பார்ப்போமானால் இந்தியாவில் உள்ள 35 கோடி மக்களில் 17 1/2 கோடி மக்களான பெண்களுக்கு எந்தக்காரணத்தைக் கொண்டும் கல்வி கற்பிக்க முடியாததாகும். மற்றொரு பிரிவில் 7 கோடி ஜனசமூகம் ஆகிய தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்கள் விஷயத்திலும் படிப்பு என்பது நினைப்பதற்கே முடியாத காரியமாய் இருக்கும். மற்றும் பார்ப்பனர்கள், அரசர்கள், வியா பாரிகள் என்கின்ற வெகு சிறிய கூட்டத்தார்கள் மாத்திரம் கல்வி கற்க உரியவர்களாவார்கள். அவர்களிலும் கல்வி கற்பிப்பதில் பிரிவுக்கு பிரிவு வித்தியாசமிருக்கும்.

இன்றைய கல்வி

ஆனால் இன்றைய கல்வி போதனை விஷயத்தில் இவ்வித வித்தியா சங்கள் ஏதும் இல்லாமல் யாருக்கும் யாவரும் கல்வி கற்பிக்கப் படலாம் என்கின்ற ஒரு நியமம் இருந்து வருகின்றது. ஆகையினால் நான் முந்திய சகாப்தங்களை விட பிந்திய சகாப்தம் கல்வி விஷயத்தில் பாராட்டக் கூடியது என்று சொன்னேன். ஆனபோதிலும் கல்வியின் இன்றைய லட்சிய மும் கற்பிக்கும் போதனாமுறையும் பாராட்டக்கூடியது என்பதாகச் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.

அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்ட வேண்டிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய ஞானத்தோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும் என்பதேயாகும். அன்றியும் கல்வி கற்பிக்கும் கடமையில் இருக்கும் ஒவ்வொருவரும் கல்வியின் அவசியத்திற்கு இந்தக் காரணங்களைத்தான் சொல்லுகின்றார் கள். கற்பிக்கப்படுபவர்களும் இந்த எண்ணத்தின் மீதுதான் தாங்கள் கற்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கல்வியின் பயன் இந்த லக்ஷியத்திற்கு அனுகூலமாயிருக்கின்றதா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

பொதுவாக, எந்த தேசீயத்திலுமே மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பொருப்பில் இருப்பவர்கள் எல்லோரும் கல்வி போதிக்கும் விஷயத்தில் ஒருவிதமான உள் கருத்தை வைத்துதான் அதை கல்வியின் மூலம் போதிக் கும் முயர்ச்சியில் இருந்து வருகின்றார்கள். அந்த மாதிரியான உள் கருத்தை போதிப்பதில் கல்வியானது மக்களுக்கு அறிவுக்கும் வாழ்க்கையில் சுதந்திர மாய் வாழ்வதற்கும் பயன்படுகின்றது என்கின்ற கொள்கையை விட தாங்கள் கொண்ட உள் எண்ணத்தையே மிகமுக்கியமாய் கருதுகின்றார்கள். உதாரணமாக ஒரு தேசத்தார் தேசபக்திக்கு ஏற்ற கல்வி இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். மற்றொரு தேசத்தார் மத பக்திக்கு ஏற்றதான கல்வி வேண்டுமென்று கருதுகிறார்கள். மற்றொருவர் வீரம் ஏற்படவேண்டுமென்று கருதுகிறார்கள். இன்னொருவர், அந்த நாட்டு பழமையான பழக்க வழக்கம் ஏதோ ஏற்படுவதற்குத் தகுந்ததாயிருக்கவேண்டுமென்று கருதுகின்றார்கள். மற்றும் சிலர் கடவுள் பக்தி புகட்டுவதற்கு அனுகூலமாய் பார்க்கின்றார்கள். இப்படியாகவே பல உட்கருத்துகளை பிரமாதமாய் கருதி கல்வி முறை ஏற்படுத்துவதில் கல்வியின் உண்மையான பிரயோஜனம் ஏற்படாமலே மறைந்து போய்விடுகின்றது.

கல்வியும் மதமும்

இந்தக் காரணங்களால் கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளாய் இருக்கமுடியாமல் எந்த உள் காரணத்தை வைத்து கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு மாத்திரமே பயன்படுகின்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். கல்வி கற்பிப்பதில் இக்குறைபாடுகள் தவிர மற்றொரு பலமான கெடுதி என்ன வென்றால், கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக் காக கல்வி என்பது மாறி முட்டாள் தனமும், விசாரணைஅற்ற தன்மையும் வருவதற்கே கல்வி பயன்படும்படியாக ஆகிவிடுகின்றது. இது இன்று உலகத்தில் இரண்டொரு தேசம் தவிர மற்ற தேசங்களிலெல்லாம் நடந்து வரும் சம்பவமாகும்.

இதற்கு காரணமென்ன வென்றால், கல்வியின் பொருப்பு எல்லாம் மதங்களினுடையவும், மத ஸ்தாபனங்களினுடையவும் ஆதிக்கத்தில் சிக்கி மதபோதகர்கள், மதகுருக்கள், மதத்தலைவர்கள் ஆகியவர்களால் நடத்தப் பட்டு வருகின்றவைகளாய் இருப்பதே காரணமாகும்.

மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்ப தில்லை. ஏனெனில் அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமரித்து கண்மூடித்தனமான செயர்க் கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண்டிருக்கின்றது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லா மலே போய் விடுகின்றது. எப்படி எனில் மதங்கள் என்பவைகள் எல்லாம், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்தே காணப்படுபவைகள் ஆகும்.

ஆகவே, மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள், முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவை களாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக்கால அறிவு, ஆராய்ச்சி சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்த குறைபாடானது உலக தோற்றத்தின்-மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும் மதமும் கலந்தால் அறிவு சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.

 

 

பகுத்தறிவும்-மதமும்

உதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் சொல்லுவதாய் இருந்தால், அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்குபோட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன் றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் றாகு,கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.

இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழ லால் மறைக்கப்படுகின்றதென்றும் மத சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக் கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை றாகு,கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.

இதுமாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளை களுக்குப் பாடம் கற்புவித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் றாகு, கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். ஆகவே கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்து விட்டது என்பதை நினைத்துப் பாருங்கள்.

அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிகமிகப் பழமையானதினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங் களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத் தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வி யையே பாழ்படுத்தி விட்டோம்.

உபாத்தியாயர்கள்

இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக் கின்ற ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப்போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம் மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்டதாகும். மதம் என்னும் உலோகத்தி னால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி உபாத்தியாயர் களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அறிவு வேறு மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளரவிடாமல் செய்து விட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?

இரண்டும் இரண்டும் ஐந்து என்றால் எப்படி ஐந்து? என்று கேள்க் கக்கூட உரிமை இல்லாதமுறையில் கல்விகற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்து வந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?

பிள்ளைகளுக்கு சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காக சில தப்புகள் செய்ய வேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவுபெறத் தகுதியாக்கவேண்டும். உபாத்தியாயர் களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்கவேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உறுப்போடவும் கண்மூடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லக்ஷியத்திலும் போதனா முறையிலும் தான் இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்க வேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.

பிரார்த்தனை

இன்று இங்கு இந்த விழா துவக்கப்படுமுன் நிகழ்ச்சி குறிப்பில் குறிப்பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய் நடிப்பு நடிக்கப் பட்டதானது உங்களுக்குத் தெரியும். பிரார்த்தனை என்று தலைவர் சொன்ன வுடன் சில பிள்ளைகள் வந்தார்கள், கைகட்டினார்கள்,கண்களை மூடிக் கொண்டார்கள், “ஜனகணமன…..” என்று எதையோ சொன்னார்கள். அது போலவே சிலபெண்கள் வந்தார்கள். கைகட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்கு பெயர் பிரார்த்தனை யாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம், நண்பர்களே! இதில் ஏதாவது அறிவோ நாணையமோ இருக் கின்றதா? என்பதை நிதானமாய், பொருமையாய் யோசித்துப்பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.

கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கியமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லி வருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல் குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்று சிறுவர்கள் அவர்களுக்கும் அவர்களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை இந்த சபையில் உள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்கு சமமாக எதை சொல்லுவது?

அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல்லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துக்கள் கொண்ட பாடல்களாகவும் வாக்கியங்களாகவும் இருக்கின்றனவே தவிர பக்தி என்பதற்கு பொருத்த மானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்த பக்தி பாட்டும் சங்கீத பிரதானி யத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப் பிரதானியத் திலும், சடங்குப் பிரதானியத்திலும் இருக்கின்றதே தவிர உண்மை பிரதானி யத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரிவேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப்பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்த பக்திக்கு ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கியதையாவது இவர்களது பிற் கால வாழ்வில் உண்டாகிறதா? என்று யோசித்துப்பாருங்கள்.

மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத்தையும் நாணையக்குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா? இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள்.

பெண்கள்

அன்றியும் இந்தமாதிரியான மதம் கலந்த கல்வியானாலும் வேஷத் தன்மையானாலும் நமது பெண்கள் நிலையும் மிகவும் மோசமாகி விடு கின்றது. அவர்கள் மதத்தையும் பக்தியையும் வாழ்க்கையில் பிரமாதப் படுத்தி அதனால் பெண் சமூகம் முன்னேறவே மார்க்கம் இல்லாமல் செய்து கொள்ளுகின்றார்கள். பெண்களை இன்றையதினம் ஒரு உபாத்தியாயராக வாவது இருக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது மதமும் பக்தியும் அல்லவே அல்ல. ஆனால் மதமும் பக்தியும் தான் அவர்களை இதுவரை அடிமைகளாக்கி வைத்திருந்தது. அவையெல்லாம் மாறி அவர்களுக்கு சிறிதளவாவது சுதந்திரமேற்படக் காரணம் மதத்தை அலட்சியம் செய்து செய்யப்பட்ட சீர்திருத்த பகுத்தறிவு உணர்ச்சியல்லவா? அப்படிப்பட்ட பெண்மக்கள் இப்போது சிறிது விடுதலை பெற்று உபாத்தியாயரான பிறகு தங்கள் அடிமைத் தனத்திற்கு காரணமாய் இருந்த மதத்தை பிள்ளைகளுக்கு கல்வியுடன் புகுத்துவார்களானால் அவர்களை மத சம்பிரதாயத்தில் ஈடுபடுத்துவார்களே யானால் இவர்களிடம் நமது பிள்ளைகளை ஒப்புவிக்க லாமா? என்பது பயமாகவே இருக்கின்றது.

இப்பெண்கள் கண்மூடித்தனமாய் மதத்தில் ஆழ்ந்து கல்வியோடு அதை கலக்கி குழப்புவதிலிருந்து அவர்கள் மருபடியும் அடுப்பூதவும், சட்டி சுரண்டவுமான உலகத்திற்கு போக ஆசைப்படுகின்றார்கள் என்றுதான் விளங்குகின்றது. இனி பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் வேலை முழுவ தும் பெண்களுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணிய என் போன்ற வர்கள், மனதெல்லாம் பெண் உபாத்தியாயர்கள் நிலைமையைப் பார்த்த பிறகு மனம் பயப்படுகின்றது.

ஆகவே, பெண் உபாத்தியாயர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமேயொழிய ஆண் உபாத்தியாயர்களை பின்பற்றக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறோம். இல்லாதவரை தங்கள் பழய தொழிலுக்காவது போய்விடவேண்டும். குழந்தைகளை கெடுத்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

தேசீயம்

தவிர இந்த லக்ஷணத்தில் உள்ள கல்வியோடு இப்போது வரவர தேசபக்தி என்பதாக ஒன்று புகட்டப்பட்டு விடுகின்றது. இது அறிவு வளர்ச்சிக்கு மற்றொரு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி, மத பக்தி ஆகியவைகளைப் போலவே இந்த தேச பக்தியும், மனிதனின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகின்றது. அதிலும் நமது நாட்டு தேசபக்தியோ நினைப்பதற்கே பயங்கரமானதாய் இருக்கின்றது. தேசபக்தியும், தேசீயமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப்பார்க்கின்றதே தவிர முன்புரம் திரும்பிப் பார்ப்பதில்லை. முற்போக்கில் கவலைகொள்வதில்லை. தேசீயத்திற்கும் புதியதுக்கும் ஜென்மப் பகையாய் இருந்து வருகின்றது. தேசீயம் என்றாலே பழமை என்றே கருதப்பட்டு விட்டது. புதுமை என்றாலே தேசத்துரோகம் என்றாய்விட்டது.

ஆகவே, கல்வி என்று பேர் வைத்து அதன் சாக்கில் மதத்தை போதித்து தேசியம் என்ற உணர்ச்சியையும் அதன் மூலமாகவே ஏற்றி விட்டால் குரங்குக்கு கள்வார்த்தது போல் தான் ஆகுமே தவிர அங்கு பகுத்தறிவுக்கும்,ஆராய்ச்சிக்கும், முற்போக்குக்கும், சுதந்திரத்துக்கும் இடமே இல்லாமல் போய்விடும். இந்தக் காரணம் தான் உலகத்தில் இந்தியாவுக்கு மாத்திரம் கீழ்படியில் முதல் ஸ்தானம் கிடைத்திருக்கின்றது.

முடிவுரை

ஆகவே, கல்வி கற்பிப்பதை விட கல்வியின் லக்ஷியத்தையும், போதனையின் தன்மையையும் மாற்ற வேண்டியது இந்தியாவுக்கு மிகவும் அவசியமானதாகும் என்பதே எனது அபிப்பிராயம். நண்பர்களே! ஏதோ கல்வி என்னும் தலைப்பின் கீழ் எனக்குப் பட்ட, நான் சரியென்று கருதிய சில விஷயங்களை தங்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டேன். இவற்றை நன்றாய் அலசி பார்க்க வேண்டுமாயும், அதாவது சரி என்று பட்டால் மாத்திரம் எடுத்துக்கொள்ளும் படியாகவும் தப்பாயிருந்தால் தயவு செய்து உடனே மறந்து விடுங்கள் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

குறிப்பு : 17.09.1931 அன்று ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் ஸ்டூடன்ஸ் லிட்டரரி அசோசியேஷன் என்னும் மாணவர் இலக்கிய சங்க வருட ஆரம்ப நாள் விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 27.09.1931

 

You may also like...