மதுவிலக்கு நாடகம்
தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ருக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள்.
ஆதலால் தேசீய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது. அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின் றார்கள். ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது.
ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது. ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது. இந்த முறையிலேயே மதுவிலக்கு நாடகம் நடைபெறுகின்றது.
விளம்பரக்காரர்களும், ஸ்தல ஸ்தாபனம், சட்டசபை, முதலியவை களில் ஸ்தானம் பெறக் காத்துக்கொண்டிருக்கின்றவர்களும் இந்த நாடகத் திற்கு சில சமயங்களில் பாத்திரங்களாய் இருக்கவேண்டியவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதன்பயன்களை நாடகக் கம்பெனி சொந்தக்காரர் களாகிய தலைவர்கள் என்பவர்களே அடைகின்றார்கள்.
உதாரணமாக திருப்பூரில் நடந்த மறியலில் அடித்தவர்களும், அடிப் பட்டவர்களும், அதாவது அடித்ததாகக் கெட்டபேர் வாங்கினவர்களும், அடிபட்டு அவஸ்தைபட்டதாகச் சொல்லப்பட்டவர்களும் ஒரே ஊர்க்காரர், ஒரே கூட்டத்தார்கள், ஒரே ஜாதி சொந்தக்காரர்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதன் பலன் பெருமை அசோசியேட் பிரஸ், பிரீபிரஸ் சேதிப் பெருமை சமாதானம் செய்துவந்த பெருமை முதலாகிய கௌரவங்க ளெல்லாம் உயர்திரு. சி. ராஜகோபாலச்சாரியார் அவர்களது “பாத சன்னி தானத்திற்கு”ப் போய்ச் சேரவேண்டியதாகி விட்டது.
நம்மவர்கள் மூடத்தனமாக நடந்து, பட்டதுதான் பயன். ஒரு சமயம் யாராவது கொஞ்சம் இவ்வித இயக்கத்தால் பிழைக்க வேண்டியவர்களல்லா தவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்து அடிபட்டதாகப் பேர்வாங்கியிருந்தா லும் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு ஸ்தானம் ஒதுக்கி வைக் கப்படுவது மல்லாமல் மற்றபடி இதனால் என்ன பயன் என்பது விளங்க வில்லை.
இந்த மறியலில் சம்மந்தப்பட்ட வாலிபர்களைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. மற்றபடி பெரியவர்கள், தேசபக்தர்கள், பொதுநல சேவைக் காரர்கள் என்பவர்களை ஒன்று கேட்கின்றோம்.
அதாவது இந்தக் கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது இதனால் அதாவது இவர்களது மறியலில் கள்ளுக்குடி நின்றுவிடும் என்று கருது கின்றார்களா? அல்லது வெள்ளைக்காரனை இந்த நாட்டைவிட்டு ஓட்டு வதற்கு அல்லது “சுயராஜியம்” பெறுவதற்குப் பயன் படக்கூடியது என்று கருதுகிறார்களா என்று கேட்கின்றோம். கள்ளுக்கடை ஏலத்தில் எடுத் திருப்பது திருப்பூர் பிரபுக்கள். மறியல் செய்வது திருப்பூர் பிரபுக்கள். கள்ளுக்கு மரம் வளர்த்து குத்தகைக்கு விடுவது அக்கம் பக்கத்தில் பிரபுக்கள்: இந்தக் கள்ளைக் குடிப்பது திருப்பூர் தொழிலாளிமக்கள். அரசாங்கத்தில் மாதம் ரூ. 5000 வாங்கிக்கொண்டு கள்ளு நிர்வாகம் பார்ப்பது இந்த மாகாணப் பிரபுக்கள் (ஜனப்பிரதிநிதிகள்). மேலும் ஜனப்பிரதிநிதியாக இந்த வேலைக்குப் போட்டி போடுவதும் இதே ஜில்லா பிரபுக்கள். மற்றும் இந்த இலாகாவில் மாதம் ரூ. 2500 சம்பளம் முதல் ரூ. 12 சம்பளம் வரையில் வாங்கி ஜீவனம் செய்து கொண்டு வேலை பார்க்கும் சுமார் 10000பேர்களும் இந்த மாகாண இந்திய (படித்த) மக்களேயாவார்கள். மற்றும் இந்தக் கள்ளு, சாராய வியாபாரத்தால் தொழிலால் பிழைக்கும் சுமார் 20000 மக்களும் இந்த மாகாண இந்திய மக்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் இந்தத் தொழிலும் சட்டத்தில் குற்றமானதல்ல. மதத்தில் குற்றமானதல்ல, ‘ஒழுக்கத்திலும்’ குற்றமானதல்ல (அளவுக்கு மீறினால் குற்றம் சொல்லலாம்) இந்த நிலையில் யாரோ இரண்டு பேர் ஏதோ காரணத்திற்காக கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு யாரோ இரண்டொருவனை ‘அப்பா, சாமி கள்ளுக் குடிக்காதே’ ‘காந்தி கட்டளை இட்டு இருக்கிறார்’ ‘ராஜகோபாலாச்சாரி கட்டளையிட்டி ருக்கிறார்’. ‘சத்தியமூர்த்தி கட்டளையிட்டு இருக்கிறார்’ என்று சொல்லி விடுவதாலேயோ அல்லது அந்தக் குடிகாரனிடமோ, கள்ளு வியாபாரக் காரனிடமோ இரண்டு அடி வாங்கிக்கொண்டு அதை ஒன்று பத்து நூறாகப் பெருக்கிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விடுவதாலேயோ கள்ளுக் குடி நின்று போகுமோ? என்பதை யோசித்துப் பாருங்கள்.
சத்தியாக்கிரகம், மறியல் என்பவைகள் வீண் சண்டித்தனமே யில்லாமல் அதில் ஏதாவது கடுகளவு நாணையமோ, யோக்கியப் பொறுப்போ, இருக்க முடிகின்றதா? என்றுகேட்கின்றோம். உண்மையாய் யோக்கியமாய் கள்ளை நிறுத்த சத்தியாக்கிரகம் செய்பவர்கள் கள்ளு மந்திரி வீட்டில் கள்ளு இலாகா அதிகாரி வீட்டில் – மரம் கள்ளுக்குவிடும் குடியானவன் வீட்டில் – கள்ளு இறக்கும்போது மரத்தடியிலும் மற்றும் இது முதலாகிய ஆரம்ப நிலையிலிருந்து ஏதாவது ஒன்றில் செய்தால் சிறிது அர்த்தமாவது உண்டு. அவைகளை விட்டு விட்டு எல்லாக் காரியமும் நடந்தும், செலவாகும் பணமெல்லாம் செலவாகி, செய்யவேண்டிய சடங்கெல்லாம் செய்யப்பட்டு கள்ளுக்கடைக்குள் கள்ளு வந்து விற்பனைக்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ” “கள்ளுக்குடிக்காதே” என்று சொல்லுவதால் எப்படி நிற்கமுடியும் என்பதை அனுபவ ஞானமுள்ள மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
மேலும் இந்துக்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகார ரும், கிறிஸ்துவர்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகாரரும் போல அவ்வளவு விகிதாச்சார குடிகாரர்கள் மகமதியர்களில் இருக்கின்றார் களா என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒருக்காலமும் அவ்வளவு குடிகாரர்கள் இல்லை என்றே சொல்லு வோம். இதன் காரணம் என்னவென்றால் அவர்களது மதமானது கள்ளை அவ்வளவு கடினமாக வெறுக்கின்றது. மற்றபடி இந்துக்கள் என்பவர் களிலும் மற்றும் சற்று கல்வி அறிவு மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற எண்ணத்துடன் சரீரப்பாடுபடாமல் சோம்பேரியாய் இருக்கும் சைவ வேளாளர் தொண்டை மண்டல வேளாளர் பெருவாரியான வியாபாரிகள் வைசிய செட்டிமார்கள் என்பவர்கள் முதலியவர்களிலும் குடிக்கின்ற மக்கள் விகிதாச்சாரம் மிகவும் சுருக்கமானதேயாகும். அந்த சுருக்கமும் ஏதோ ஒருவித நாகரீகப்பைத்தியக் காரணமாக, செயர்க்கைவாசனை காரணமாக இருப்பதல்லால் மற்றபடி குடிகாரர்கள் என்கின்ற முறையில் ஏற்படுவது கிடையாது. ஆகவே இன்றைய குடிகார மக்களின் குடிக்கு காரணம் என்ன என்பதை அறிவாளிகள் இப் போதாவது யோசித்துப்பார்த்தால் உண்மை உணராமலிருக்க முடியாது.
சாதாரணமாக கள் இலாகா சனப்பிரதிநிதிகள் ஆதிக்கத்திற்கு வரா மலிருந்து சர்க்கார் இடமே இருந்திருந்தால் அது சம்மந்தமாக சட்டம் முதலியவைகள் செய்யவாவது சற்று இடமிருக்கும் இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் ஜனப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டி யார் யாரோ அவர்களே அந்த இலாகாவை நடத்தும் வேலையை ஒப்புக் கொள்ளும் மந்திரியாகிவிட்டதால் மந்திரிவேலை கிடைக்காதவர்களும் அடுத்த தடவை அதை அடையலாம் என்று காத்திருப்பவர்களும் அதைப் பற்றி ஏதாவது பேசிக்கொண்டும் இவ்வித பிரசாரம் செய்து கொண்டு மிருக்கலாமே யொழிய மற்றபடி இதனால் எல்லாம் கள்ளுக்குடியை ஒழிக்க காரியத்தில் ஒரு துரும்பை அசைத்துவிட முடியுமா? என்று கேட்கின்றோம். வீணாக இது பொதுஜனங்களில் பதவி வேட்டைக் காரருடைய சுயநல வஞ்சகத்தையும் பாமரமக்களின் முட்டாள் தனத்தையும் கைமுதலாக வைத்துக்கொண்டு நடத்தும் போலி நாடகமே யொழிய மற்றபடி கள்ளு மறியலில் சிறிதும் பயனும் நாணயமும், யோகியப் பொறுப்பும், புத்திசாலித் தனமும் இல்லையென்றே சொல்லுவோம்.
அன்றியும் அரசியல் கருத்துக் கொண்ட மறியல்களை நிறுத்தி விட்டு பொருளாதாரத்திற்கும் சன்மார்க்கத்திற்குமான தனிப்பட்ட சீர்திருத்தத் துறையில் மறியல் செய்வதாய் சொல்லி ராஜி பேசிக்கொண்டு ஜெயிலிலி ருந்து வெளியில் வந்த பிறகு மறுபடியும் அரசியல் கருத்தில் செய்யும் மறியலில் எவ்வளவு தூரம் பயனும் நாணயமும் உண்டாகும் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப் பார்ப்பதன்மூலம் இந்திய தேசீயத்தின் நாணயத்தையும் தலைவர்களின் நாணயத்தையும் அறிந்துகொள்ளட்டும் என்றே விட்டு விடுகின்றோம்.
குடி அரசு – கட்டுரை – 07.06.1931