புதுக்கோட்டை
இச்சென்னை மாகணத்திலிருக்கும் 2 1/2 கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஒன்றுதான் தமிழ்மன்னர் ஆட்சியில் இருந்து வருகிறது என்று சொல்லக்கூடியதாகும்.
ஆனாலும் அதுவும் வெகுகாலமாகவே பார்ப்பன ஆதிக்க ஆட் சிக்கே அடிமையாயிருந்து வந்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முன் வரமாட்டார்கள். ஆட்சி முறை மாத்திரம் தான் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்த தென்று சொல்லிவிட முடியாது. அச்சமஸ்தான பட்டத்திற்கு வரும் அரசர்கள் வாரிசிலும் அரசு செலுத்தும் முறையிலும் பார்ப்பன ஆதிக்கம் புகுந்து அச்சமஸ்தானம் பார்ப்பனர்கள் இஷ்டப்படி ஆட்டு விக்கப்பட்டதாய் இருந்து வந்திருக்கின்றது.
புதுக்கோட்டை ராஜியபார பட்டத்திற்கு வரவேண்டியவர் அரசரின் குமாரர் என்பது அச்சமஸ்தானத்தின் சட்டமாயிருந்தாலும் பார்ப்ப னீயத்தின் காரணமாகவே வருணாச்சிரமக் கொள்கை தாண்டவமாடி அரச குமாரருக்கு பட்டமில்லாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் ஏற்பட்டது. அந்தப்படி வேறு ஒருவருக்கு ஏற்பட்ட பட்டமும் ஒரு சிறு குழந்தைக்கு ஏற்பட்டதால் அக் குழந்தை பெரியதாகி பட்டம் ஏற்க இனியும் 10 வருஷ காலத்திற்கு மேலாகவே செல்லக்கூடிய நிலைமை உண்டாகி அதற்கு பார்ப்பனர் ஒருவர் ரீஜண்டாக நியமிக்கப்பட்டு அவ்வரசாட்சியானது பார்ப்பனீய ஆட்சி என்று சொல்லும்படியாகவே இதுவரை அரசாட்சி நடந்து வந்திருக்கின்றது.
அச்சமஸ்தானத்திற்கு வெளியில் அதாவது பிரிட்டிஷில் எப்படி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி ஏற்பட்டதோ அது போலவும், இம்மாகாணத்திலுள்ள மற்ற சுதேச சமஸ்தானங்களில் எல்லாம் எப்படி அவ்வுணர்ச்சி ஏற்பட்டதோ அதுபோலவும் புதுக்கோட்டையிலும் சற்று ஏற்பட்டு அச்சமஸ்தான உத்தியோகங்களில் சிலவற்றையாவது இரண்டொரு பார்ப்பனரல்லாதாருக்கும் கொடுக்க வேண்டியதாயிற்று.
இந்தக்காரணமே அதாவது பார்ப்பனரல்லாதாருக்கு அரசாங்கத்தில் சில உத்தியோகங்கள் கொடுக்கும் காரணமே எப்படி அச்சமஸ்தானத்திற்கு வெளியிலுள்ள மற்ற இடங்களிலும் தேசீயம் என்றும் காங்கிரஸ் என்றும் கூப்பாடு போட்டு பாமர ஜனங்களையும் முட்டாள் ஜனங்களையும் அரசாங் கத்திற்கு விரோதமாக கிளப்பி விட்டும், கஞ்சிக்கு வகையற்ற ஆட்களைப் பிடித்து கூலி கொடுத்தும் பார்ப்பனரல்லாத அதிகாரிகளையும் பிரதிநிதி களையும் அரசாங்கத்தையும் வையும்படி தூண்டிவிடப்படுகின்றதோ அது போலவே புதுக்கோட்டையிலும் அவ்வரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டா கும் படியாகவும் அங்குள்ள பார்ப்பனரல்லாத அதிகாரிகள் மீதும் ஜனப் பிரதிநிதிகள் மீதும் துவேஷம் உண்டாகும்படியும் தாராளமாய் பார்ப்பனர் களால் “தேசீய” பிரசாரமும், “காங்கிரஸ” பிரசாரமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றதையும், யாரும் மறுக்க முடியாது. உதாரணம் வேண்டு மானாலும் பல எடுத்துக்காட்டலாம்.
அச்சமஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுக்க ஏற்பட்டது முதல் இதுவரை சமஸ்தானத்திற்கு விறோதமாய் பிரசாரம் செய்யப்பட்டதாகவும், ஜனங்களை கிளப்பி விட்டதாகவும், திருவாளர்கள் சுந்திரேசய்யர், சாமிநாதய்யர், விஸ்வநாதய்யர், சுப்ரமணிய அய்யர், ராம கிருஷ்ணய்யர், நாகரத்தினமய்யர், சென்னை எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய அனேக பார்ப்பனர்கள் மீதே புதுக்கோட்டை அரசாங்கம் நட வடிக்கை எடுத்து இருப்பதும், இன்னமும் சில பார்ப்பனர்களை சமஸ் தானத்துக்குள் இருக்கக் கூடாதென்றும், பிரவேசிக்ககூடாதென்றும், போடப் பட்ட தடை உத்திரவுகள் அமுலில் இருப்பதும் போதுமான அத்தாக்ஷி யாகும்.
இந்தப்படி பார்ப்பனரல்லாதாருக்குள் இதுவரை ஒருவராவது அவ்வரசாங்கத்தின் மீது துவேஷம் உண்டாகும்படியாக பிரசாரம் செய்த தாகவோ மக்களை தூண்டி விட்டதாகவோ நமக்கு தெரிந்த அளவில் எவரும் இருந்ததாக சொல்லமுடியவில்லை. நாம் பார்த்தவரை எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவுமில்லை. இந்த நிலையில், இதுவரை அங்கு நடந்து வந்த தேசீய காங்கிரஸ் பிரசாரத்தின் பயனாய் அங்குள்ள பொது ஜனங்களுக்கு அரசாங்கத்தினிடம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருந்த சமயத்தில் சமஸ்தானத்தில் புதிதாக வரியும் உயர்த்தப்பட்டுவிட்டது.
இந்தவரி உயர்த்தப்பட்ட சமயமானது சற்று பொருளாதார நெருக்க டியுள்ள சமயமாய் இருந்தபடியால் ஜனங்களுக்கு ஏற்கனவே அரசாங்கத் தின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த வெறுப்புக்கு இவ்வரி உயர்வானது புகைந்து கொண்டு இருக்கும் நெருப்பின் மீது நெய் வார்த்து ஊதிவிட்டது போல் ஆகிவிட்டதால் ஜனங்கள் சற்று ஆத்திரமடைந்து வரிஉயர்வுக்கு எப்படியாவது பரிகாரம் தேடவேண்டியவர்களானார்கள். ஜனங்களின் ஆத்திரத்தோடு கூடிய இந்த முயர்ச்சியை சமாளிக்கத் தகுந்த ராஜதந்திரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இல்லாத காரணத்தாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்ப்பனர்களாய் இருந்து கொண்டு அச்சமஸ்தானத்தில் பெருவாரியாய் இருக்கும்பார்ப்பனரல்லாத மக்களிடம் அனுதாபமில்லா மலும் ஏழைகளின் கஷ்டத்தை கவனிக்காமலும், தகுந்தபடி சமாதானம் சொல்லி திருப்தி செய்யாமலும் இருந்ததாலும், மேல் குறிப்பிட்டபடி அரசாங்கத்தின் மீது ஏற்கனவே வெறுப்பு ஏற்பட்டு இருந்ததோடு அரசாங்க ஆட்சிக்கு பார்ப்பன அதிகாரிகளும் ஆதிக்கமுமே காரணம் என்பதாக பொது ஜனங்கள் கருதி குழப்பத்தில் பிரவேசித்து இருக்கலாம் அல்லது இந்த குழப்பமானது அரசாங்க அதிகாரிகள் மீதும் காரியாலயங்களின் மீதும் பிரயோகமாகும் போது அதிகாரிகள் பெரிதும் பார்ப்பனர்களாயிருந்த படியால் அவர்கள் மீதும் தங்கள் கண்ணோக்கங்கள் செலுத்தப்பட்டி ருக்கலாம்.
இதன் பயனாய் பார்ப்பன அதிகாரிகளும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளும் கஷ்டப்பட்டார்கள் என்று சொல்வதனாலும் இக்கலகத்தை “தூண்டி விட்டவர்” என்று பார்ப்பனர்களால் கட்டுப்பாடாய் பிரசாரம் செய்யப்பட்டும் பார்ப்பனரல்லாத அதிகாரியான போலீசு கமிஷனருக்கே தான் அதிகமான கஷ்டமும், உயிருக்கே ஆபத்தும் ஏற்படும்படியான பலாத்கார செய்கைகளின் பலன்களும் ஏற்பட்டிருக்கின்றன. அரசாங்க காரியாலயங்களும் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் இனி இச்சம்பவங்களின் உண்மையை நடுநிலைமை யில் இருந்து அறிய முற்படவேண்டியது நியாயம் என்பதையும் இச் சம்பவத்திற்கு தகுந்த பரிகாரம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதையும் யாவருமே மறுக்கமாட்டார்கள்.
மேல் கண்ட சம்பவ சம்பந்தமாக, சம்பவத்திற்கு பின் நடந்த நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்பதை முதலில் சற்று யோசிப்போம். அதென்ன வெனில் அங்கு ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த பார்ப்பனர் எல்லாம் ஒன்று கூடி அச்சம்பவங்களுக்கு உண்மையாய் இருந்த காரண காரியங்களை நன்றாய் மரைத்து சம்பவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தப் பட்டிறாததான “பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி” என்றும் “அதற்கு சுயமரியாதை இயக்க பிரசாரமே காரண”மென்றும் ஒரு கதை கட்டிவிட்டு இக்கலக விசாரணை என்பதை ஆதாரமாய் வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற உணர்ச்சியை அடியோடு ஒழிக்கவும், சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர் பிரசாரம் செய்யவும் ஆன காரியங் களுக்கு உபயோகித்துக் கொண்டார்கள்.
மேலும், அந்த சமஸ்தானத்தில் இனி எந்த எந்த பார்ப்பனரல்லாதார் முன்னுக்கு வரக்கூடுமோ, அரசாங்கத்தில் உத்தியோகம், பதவி, பெருமை முதலியவைகள் அடையக்கூடுமோ, அப்பேர்பட்ட கனவான்களை யெல் லாம் இந்த சாக்கைக்கொண்டே ஒழித்துவிடலாம் என்று கருதி அவர்கள் பேரிலேயே “கலகத்துக்கு இவர்களே ஆஸ்பதமானவர்கள்” என்பதான பழிகளை சுமத்தி அவர்களையெல்லாம் கஷ்டத்தில் கொண்டு வந்து விடத் தக்க ஏற்பாடுகளும் செய்தார்கள்.
இதன் பயனாய் திருவாளர்கள் முத்துசாமி வல்லத்தரசு பி.ஏ., பி.எல், எம்.எல்.சி உள்பட அனேக பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் பிடித்து சிறையில் அடைக்கச் செய்து விட்டார்கள். “காளை மாடு கன்றுபோட்டது என்றால் கன்றைப்பிடித்து தொழுவத்தில் கட்டு” என்று சொல்லும் தன்மை போல் திடீரென்று திரு.வல்லத்தரசை பிடித்து ஜெயிலில் அடைத்தார்கள்.
திரு. முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் குற்றவாளியாய் இருந்தால் தண்டிப்பதில் பாரபக்ஷம் காட்டும்படி நாம் யாருக்கும் யோசனை சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு பொருப்புள்ள கனவானை பெரும் பதவிக்கு வர அருகதை உள்ளவராய் இருக்கும் கனவானை ஏதோ ஒரு கலவரம் நடந்ததற்காக என்று அவரேதான் காரணஸ்தராய் இருந்தாரென்று ஒரு கதை கட்டிவிட்டதின் பயனாய் சிறையில் போட்டு அடைத்துக் கொண்டு “கலகத்தைப்பற்றி விசாரணை செய்து நியாயம் வழங்கு கின்றோம் என்று சொன்னால்” இச்செய்கைகளால் எப்படி சரியான நீதி கிடைக்க மார்க்கம் உண்டாகும் என்று நம்பக்கூடும்.
பார்ப்பனரல்லாத பிரமுகரான திரு.முத்துசாமி வல்லத்தரசை ஜெயிலில் வைத்து விட்டு “கலகத்திற்குக் காரணம் பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் உணர்ச்சியும் சுயமரியாதைப் பிரசாரமும் தான்” என்ற கற்பனையைப் பரப்பி விட்டு விசாரணை ஆரம்பித்தால் விசாரணையில் கலகத்திற்கு உண்மையான காரணம் வெளியாகக்கூடுமா என்பதை வாசகர்கள் தான் யோசித்தறிய வேண்டியது. முத்துசாமி வல்லத்தரசை ஜெயிலில் வைத்த உடனே அங்குள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோருமே பயந்து இருப்பார்கள் என்பதிலும் அங்குள்ள பார்ப்பனர்கள் எல்லோருமே தைரியங் கொண்டு எதுவேண்டு மானாலும் சொல்லலாம் என்று துணிந்திருப்பார்கள் என்பதிலும் சிறிதாவது சந்தேகத்திற்கு இடமிருக்க முடியுமா என்று கேள்க்கின்றோம்.
கலக விசாரணை அதிகாரிமுன் சாட்சிகொடுத்த பார்ப்பனர்கள் அத்தனைபேரும் அனேகமாய் ஒரே பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து பாடஞ் சொல்லிக்கொடுத்த பிள்ளைகளைப் போலும் ஒரு கிராமபோன் தட்டை திரும்பத்திரும்ப கேட்டால் எப்படி இருக்குமோ அதுபோலும் பெரிதும் ஒரேமாதிரியாகவே சாட்சி சொல்லி இருக்கின்றார்கள்.
அரசாங்கமானது தனது விசாரணையில் பாரபட்சமில்லாமல் இருப்பதை நன்றாய் காட்டிக் கொள்ள முயற்சி செய்திருக்குமானால் ஒன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற காரணத்திற்காக கலகம் நடந்தது என்பதாக அரசாங்கத்தார் நினைத்து விட்டார்கள் என்று ஜனங்கள் நம்பும்படியான தன்மையில் திரு. முத்துச்சாமி வல்லத்தரசை சிறைப்படுத்தா திருந்திருக்க வேண்டும். அல்லது அந்த மாதிரிஜனங்கள் கருதக்கூடாது சர்க்காரார் இன்னமும் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று ஜனங்கள் நம்ப வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் பிராமணரிலும் சிலரை சிறைப்படுத்தித் தங்கள் நடுநிலைமையை காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
அந்தப்படி பார்ப்பனத் தலைவரான திரு.சாமிநாதய்யரையோ வேறு ஒரு தலைவரையோ பிடித்திருந்தால் கிராம்போன் பெட்டி போன்ற பார்ப்பன சாக்ஷியங்கள் ஒன்றுகூட தலைகாட்டி இருக்கமாட்டாது. அல்லது வேறு மாதிரியாகவாவது இருந்திருக்கும் என்பதோடு பார்ப்பனரல்லாதார் சாட்சிகளும் பயமில்லாமல் வந்து உண்மைகளைச் சொல்லியிருக்கும். அப்படிக்கில்லாமல் பார்ப்பனரல்லாதார் பிரமுகரை மாத்திரம் சிறைப் படுத்தியதால் உண்மை வெளியாவதற்கே மார்க்கமில்லாமல் போய்விட்ட தென்று பயப்பட வேண்டியதாய்த்தான் இருக்கின்றது.
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. ஏதோ ஒரு வழியில் பொதுவிசாரணை நடந்துவிட்டது. அதைப்பற்றிய அறிக்கையும் வெளியாகியிருக்கலாம்.
இனிமேல் கோர்ட் நியாயஸ்தல விசாரணை நடக்க வேண்டியிருக் கின்றது. இவ்விசாரணையில் உண்மை வெளியாக வேண்டியிருக்கின்றது. நடுக்கண்ட நியாயத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையில் “அரசாங்கம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருக் கின்றது, பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயிருக்கின்றது” என்று பாமர மக்களுக்குள் எண்ணம் ஏற்படாமலிருக்க வேண்டியது அவசியமாகுமா தலால் திரு.வல்லத்தரசை வெளியில் விட்டு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளவோ அல்லது அரசாங்கம் இரு கட்சிக்கும் பொதுவாய் இருக்கிறார்களென்று கருதுவதற்காக பார்ப்பனர்களிலும் முக்கியமான ஒருவரை அடைத்து வைக்கவோ செய்யவேண்டியது நடு நிலைமை நியாயம் வழங்கப்பட வேண்டியதை உத்தேசித்து அவசியமான காரியமாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.09.1931