உண்மைப் பிரதிநிதிகள்
ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியார் ¦³ “தேவஸ்தானத் திற்கு கட்டுப்பட்ட குளம், கிணறு, ரோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில் யாரும் எவ்விதத் தடையுமில்லாமல் செல்லலாம்” என்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமானதாக நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
அது மாத்திரமல்லாமல் மேற்படி “தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட எல்லா கோவில்களிலும் தேவதாசிகளின் ஊழியத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டும்” என்றும் தீர்மானித்திருக்கிறார்கள்.
இவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான விஷயம் அக் கமிட்டியார் செய்திருப்பதென்னவென்றால் அக்கமிட்டியாரை ஸ்ரீவில்லி புத்தூர் செங்குந்த வாலிப சங்கத்தாரும், ஜில்லா சுயமரியாதை சங்கத்தாரும் ஒரு விண்ணப்பத்தின் மூலம் அந்த “ஜில்லாக் கமிட்டியின் ஆதிக்கத் திற்குட்பட்ட எல்லாக் கோவில்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரவேச உரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட விண்ணப்பங்களை கமிட்டி கூட்டத்தில் யோசனைக் கொடுத்து ஆலோசித்து அடியில் கண்ட விஷயங்களுக்கு பதில் தெரிவிக்கும்படி அக்கமிட்டிக்கு உட்பட்ட எல்லாக் கோவில்களின் டிரஸ்டிகளுக்கும் சுற்றுக் கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள். அவைகளாவன:-
- இந்துக்கள் எல்லோரும் கோவிலுக்குள் செல்லுவதுண்டா?
- செல்லுமிடத்திற்கு வரையரையுண்டா?
- எல்லோரும் செல்லாவிட்டால் அதன் காரணமென்ன?
- ஜாதி காரணமாக யாராவது தடுக்கப்படுகிறார்களா?
- தடுக்கப்பட்டால் அதற்குக் காரணம் உண்டா?
- அக்காரணங்களுக்கு எழுத்து மூலமான ஆதாரம் இருந்தால்
அதன் விபரம் என்ன?
- ஜாதி வித்தியாசம் இல்லாமல் கோவிலுக்குள் யாரையும் விடுவது
உங்களுக்குச் சம்மதமா?
என்னும் விபரங்கள் கண்டு சுற்றுக் கடிதம் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள். இவற்றிலிருந்து அத்தேவஸ்தானக் கமிட்டியின் மனோபாவம் மக்களுக்கு பிறவியினால் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்கின்ற கவலையுடைய தாயிருக்கின்றது என்பது நன்றாய் விளங்குகின்றது.
இதுபோல் தமிழ்நாட்டில் மற்றும் பல கமிட்டிகளிலும் இவ்விஷயங் கள் கவனத்திற்கு வந்து தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த கும்பகோணம் சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து அதை அக்கமிட்டித் தலைவர் நிராகரித்து விட்டார்.
ஈரோடு சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து நிறைவேறிற்றே ஒழிய அது அமுலுக்கு வர அக்கமிட்டியார்களில் சிலர் எதிரிகளாய் இருந்து விட்டார்கள். அத்தீர்மானப்படி கோவிலுக்குப் போன ஆதிதிராவிடர்கள் மீது ஏற்பட்ட கேசுங்கூட இன்னமும் ஹைகோர்ட்டில் பைசலாகாமல் இருக்கின்றது.
தமிழ் நாட்டில் இப்போது அநேகமாக எங்குமே இம்மாதிரியான ஒரு வித சமத்துவக் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியினால் சமூக சமத்துவக்கிளர்ச்சி சற்று தளர்வுற்றிருக்கின்றதென்பதை நாம் மறைக்க முயலவில்லை. ஆயினும் பொதுவாகவே நமது நாட்டில் இவ்வித முற்போக்குகளுக்குப் பார்ப்பனர்கள் மாத்திரமே தடையாயிருக்கின்றார்கள் என்று நாம் சொல்லுவதற்கில்லை. மற்றபடி அவர்கள் சூக்ஷியில் பட்டவர்களும், அவர்களைப் பின்பற்றி தாங்க ளும் அவர்களைப் போலவே பொதுஜனங்கள் முன்னால் உயர்ந்த ஜாதியார் என்கிற பெருமையை அடையலாம் என்று கருதி இருப்பவர்களும், பார்ப்ப னரைப் போலவே பாமர மக்கள் உழைப்பினால் வாழ்ந்து கொண்டே இருக் கலாம், அதாவது மற்றவன் உழைப்பில் வாழலாம் என்பவர்களும் மக்கள் சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரிடையாகவே இருக்கின்றார்கள். இக் கூட்டத்தார்க்கு இப்போதைய அரசியல் கிளர்ச்சி சற்று உதவியாயிருப்பதால் அவர்கள் துணிவாக தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்ற முன் வந்து விட்டார் கள். பாமர மக்களுக்கும் போதிய அறிவும் ஆராய்ச்சியும், இன்னமும் ஏற்பட வில்லையாதலால் தங்களது சுதந்தரங்களுக்கும், சமத்துவத்திற்கும் சர்க்கார் காரணமென்று முட்டாள் தனமாய் நம்பிக்கொண்டு தங்களது முயற்சியையும் ஊக்கத்தையும் அத்துறையில் பாழாக்கிவருவதாலேயே இவர்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு சிறிது கூட பயமில்லாமல் போய் விட்டது. இன்றைய தினம் நமது நாட்டில் நடைபெறும் ஜனப்பிரதிநிதி தேர்தல்களிலும் நூற்றுக்கு ஒரு பத்துப் பேர்கள் கூட மக்களை சமத்துவமாய் பாவிப்பவர்களும் மனிதனுக்கு மனித சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கமுடையவர்களும் தெரிந்தெடுக்கப்பட முடிவதில்லை என்பதோடு ஜாதி ஆணவக்காரர்களும் ஆதிக்க வெறியர்களும் சுதந்திர எதிரிகளுமே பெருவாரியாய் தெரிந்தெடுக்கப்படுகின்றார்கள். இதிலிருந்தே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர ஆவல் இல்லை என்றும் ஜனனாயக ஆக்ஷிக்குத் தகுதி அற்றதென்றும் தானாகவே விளங்கவில்லையா என்று கேழ்க்கின் றோம்.
நமது நாட்டு மக்களின் கவனம் எல்லாம் இப்போது இந்தியா முழுமைக்கும் “ஜயக்கர், சாப்ரூ ராஜித்தூது எவ்விதமாய் முடியும்?” என்பதி லும் “லண்டன் வட்டமேஜை மகாநாட்டில் என்ன முடிவு ஏற்படும்” என்ப திலும், தென் இந்தியாவைப் பொருத்தவரை “தேசியக் கக்ஷி ஜெயிக்குமா ஜஸ்டிஸ் கக்ஷி ஜெயிக்குமா?” என்பதிலும் இழுக்கப்பட்டிருக்கின்றதே தவிர மனிதனுக்கு மனிதத்தன்மை கிடைக்கின்ற விஷயத்தில் ஜனப் பிரதிநிதி என்பவர்களில் ஒருவருக்காவது கவலை இல்லை என்றே சொல்லு வோம். இக் கூட்டத்தினர்கள் எல்லோருக்கும் கூலிகளும் இக்கிளர்ச்சிகளால் வயிறு வளர்ப்பவர்களுமிருப்பதால் ஒவ்வொன்றையும் பிரமாதப் படுத்தி கூலிப் பிரசாரம் செய்பவர்களும் இல்லாமலில்லை என்றாலும் இரண்டு கக்ஷியாரும் தங்கள் தங்கள் அறிக்கையில் மக்களுக்கு சமூக சமத்துவ விஷயத்தில் பூர்ண சுதந்திரம் கிடைக்கப் பாடுபடுவதாக வெளிப்படுத்தி னார்களே ஒழிய அவர்களது உட்கருத்தெல்லாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றி ஏழைமக்களை வஞ்சிப்பது என்பதே என்பதாக யாரும் அறிவார்கள். சமீப தேர்தல்களில் நடக்கும் பிரசாரங்களில் ஒருவாறு இவ்வுண்மையைப் பலர் அறிந்திருக்கலாம். அதாவது ஒரு கக்ஷியார் திரு. ற.யீ.ய. சௌந்திர பாண்டியன் அவர்களை பலி கொடுத்ததும் டாக்டர் சுப்பராயன் அவர்களுக் கும் முத்தையா முதலியார் அவர்களுக்கும் விறோதமாக பார்ப்பனர்களை நிருத்தி அவர்களை ஆதரிப்பதும் தேசியக் கக்ஷியார் என்று சொல்லிக் கொள்ளும் மற்றொரு கட்சியார் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்களுக்கும், செங்கல்பட்டு திருவாளர்கள் வேதாசலம், ஜயராம் நாயுடு இவர்களுக்கும் எதிரிடையாக பார்ப்பனருக்கு இரண்டாவதான வருணாச்சிரமக்காரர்களை நிறுத்தி சமூக சமத்துவ சுதந்திரக் கொள்கைகளுக்கு விரோதமாக வருணா சிரம பிரசாரங்கள் செய்வித்து தோற்கடிக்கப் பார்ப்பதும், இவ்விரு கட்சி யாரின் உண்மைக் கொள்கைகளை வெளியாக்கப் போதுமான ஆதாரம் என்றே நினைக்கின்றோம்.
முதலாவதாக தங்களை பிறவியில் எந்த மனிதனுக்கும் உயர்ந்த ஜாதியான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற – தங்களுக்கு இருக்கின்ற பொது உரிமைகளில் ஒரு சிறிதாவது தன்னைப் போன்ற மற்றொரு மனி தனுக்கு இருக்க நியாயமில்லை என்று கருதிக் கொண்டு கொடுக்க மறுத்துக் கொண்டுமிருக்கின்ற எந்த மனிதனும் அவன் எப்படிப்பட்டவனாக இருந் தாலும் பொது ஜனப் பிரதிநிதித்துவத்திற்கு சிறிதும் அருகனல்ல வென்றே கோபுரத்தின் மீதிருந்து கூறுவோம்.
இன்றைய தினம் நமது நாட்டில் இருக்கும் பிரதிநிதித்துவ உரிமை எல்லாம் “எலிக்குப் பூனை பிரதிநிதித்துவம்” என்பது போன்றதே ஒழிய மனிதனுக்கு மனிதன் பிரதிநிதி என்பது போன்றவை அல்ல என்றே சொல்லுவோம்.
மதக் கொடுமைகளும், ஜாதி ஆணவமும் ஒழிய வேண்டுமென்றால் ஜாதி, மதங்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஓலமிடுகிறவர்களையும் கூப்பாடு போடுகின்றவர்களையும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்குத் தகுந்த வர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட் கின்றோம்.
ஆகவே நமது பிரதிநிதிகள் என்று வருகின்றவர்கள் ராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியார் போன்ற உண்மையான சமத்துவ நோக்கமும் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தையோ பதவியையோ சமத்துவ உரி மைக்கு தாராளமாய் உபயோகிக்கக் கூடியவர்களாகவே இருக்கும்படி பார்த் துக் கொள்ள வேண்டியதுதான் பொதுமக்களுடைய கடமையாகும்.
எனவே மேற்கண்டபடி தீர்மானம் செய்த ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி கனவான்களை நாம் மனதாரப் போற்றுவதுடன் இவர் களும் இவர்கள் போன்றார்களுமே மக்களின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆவதற்குத் தகுதியுடையவர்களென்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். அதோடு மற்ற தேவஸ்தானக் கமிட்டியாரையும் பொதுப் பிரதிநிதிகளையும் இவர்களைப் பார்த்தாவது புத்தி வருவித்துக் கொள்ளக் கூடாதா என்று ஞாபகப் படுத்துகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 24.08.1930