சாரதா சட்டம்
சாரதா சட்டம் பிறந்து அமுலுக்கு வந்து 3µ ஆகி 4வது µ முடிவதற்குள்ளாகவே அதற்குப் பாலாரிஷ்டம் வந்து விட்டது.
என்னவெனில் ராஜாங்க சபையில் அச்சட்டத்தின் ஜீவ நாடியை அருத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனச்சாக்ஷியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்கு சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுக ளுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.
இந்த பிரேரேபனை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசய மொன்றுமில்லை.
ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற் கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர் கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக்காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும், அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேற் றும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக்காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியை சமாளித் துக் கொள்ளவே இந்த தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். நிற்க. மனச்சாக்ஷியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தை திருத்துவதானால் இந்தியன் பினல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாக்ஷி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனச்சாக்ஷி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும். மூடனுடைய மனச் சாக்ஷி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்ட மும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேள்க்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களா னால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.07.1930