சி.இராஜகோபாலாச்சாரியாரின்                       ஜாதிப் பிரசாரம்

உயர்திரு சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செம்டம்பர் 10- தேதி “இந்து” பத்திரிகையில் ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதை சட்டமாக்க வேண்டும் என்பதற்கு சமாதானம் எழுதும் முறை யில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப் பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக் கிறார். உண்பது, பருகுவது மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப் படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப் பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும், வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாயமென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். “காங் கிரஸ் வருணாச்சிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபன”மென்று நாம் கூறிவருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசீயமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழுதாவது பொது ஜனங்கள் கண்டு கொள்வார்களென்று நம்பு கிறோம். வகுப்புவாதம் கூடாதென்றும், வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கூடா தென்றும் பறையடிப்பவர்கள், ஜாதிப் பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோக்கிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணையமுண்டா? ஜாதிக்கட்டுப்பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத்திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டு மென்று கருதுகின்றோமோ அதைக்காப்பாற்ற வேண்டும் என்பதும், அதன் மூலம் செய்யப்படும் கொடுமையாலும்,பலாத்காரத்தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத் தக்கதாகும்.

குடி அரசு – கட்டுரை – 13.09.1931

You may also like...

Leave a Reply