இரண்டில் லொன்று வேண்டும் – சித்திரபுத்திரன்

 

ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும். அவையாவன.

  1. “கை” பலம் (பலாத்காரம்)
  2. “புத்தி” பலம் (சூக்ஷி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள். வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்த தில்லை. ஆதியில் ஆங்காங்குள்ள கொள்ளைக் கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய சூக்ஷியானது மக்களைப் பிரித்து வைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மை யாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை.

திரு.காந்திக்கு பலமும் இல்லை, புத்தியும் இல்லை. ஆனால் ஆரி யரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூக்ஷியை திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றி கிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்கக் கூடியதாகும். மற்றும் ஆரியருக்கு சிறிது செல்வ வான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.

ஆகவே, இந்தியப் பொது மக்களுக்கு வெற்றி அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும். ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும். ஜாதி வகுப்புபிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூக்ஷியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும். கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.

இரண்டும் இல்லாமல் காரிய சித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

குடி அரசு – கட்டுரை – 25.10.1931

 

You may also like...