சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி
சாரதா சட்டத்தை ஒழிப்பதற்காக இப்போது தென்னாட்டுப் பார்ப் பனர்கள் முஸ்லீம்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு சூட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூடும் சட்டசபைக்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியான திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னும் பார்ப்பனர் திருத்தம் என்னும் பெயரால் ஒரு தீர்மானம் அனுப்பி இருக் கிறாராம். அதில் சாரதா சட்டத்தில் இருந்து முஸ்லீம்களையும், பார்ப்பனர் களையும் பிரித்து விட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றதாம். ஆகவே “சீர்திருத்தங்களுக்கு சர்க்காரார் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் தேசீயவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை.
இது ஒரு புறமிருக்கட்டும். இத்திருத்தத்திற்கு சர்க்காரார் இணங்கி னால்தான் அது நிறைவேறக்கூடுமென்று தெரிய வருவதால் சர்க்காரார் இதற்கு இணங்கமாட்டார்களென்பதோடு நடுநிலைமையும் வகிக்காமல் எதிர்த்துத் தோற்கடிப்பார்களென்றே நம்புகின்றோம்.
ஏனெனில், இந்திய தேசீயவாதிகளால் மகாத்மா என்றும், சத்திய கீர்த்தி என்றும் சொல்லப்படும் லார்ட் இர்வினிடம் முஸ்லீம்களும், பார்ப்பனர்களும் இது விஷயமாய் தூது சென்ற காலத்தில் லார்ட் இர்வின் அவர்கள், “சாரதா சட்டம் என்பது மதப் பிரச்சினையிலோ வகுப்புப் பிரச்சினையிலோ பட்டதல்ல. அது பொதுவாகவே மக்கள் வைத்திய சம்பந்தமானதும், சுகாதார சம்பந்தமானதுமாகும். ஆதலால் சர்க்காரார் இதில் மதத்தையும், வகுப்பையும் கருதி ஒரு கூட்டத்திற்கு ஒரு மாதிரி மற்றொரு கூட்டத்திற்கு ஒரு மாதிரி என்பதாகச் செய்ய முடியாது”என்று அப்போதே சொல்லி இருக்கின்றார்.
ஆகவே, இப்போது சர்க்காரார் எந்த விதத்திலும் இதை மதவகுப்புப் பிரச்சினையாகக் கருதி பின் வாங்கமுடியாதென்றே கருதுகின்றோம். தவிரவும் அந்தப்படி கருதி ஒரு மதத்தையோ ஒரு வகுப்பையோ அந்தச் சட்டத்தில் இருந்து விலக்குவதானால் பார்ப்பனர்களைப் போலவே சிறு குழந்தைகளை கல்யாணம் செய்யும் வேறு பல சமூகங்களின் கதி என்ன ஆவதென்று கேட்கின்றோம். சாதாரணமாக பார்ப்பனர்களைப் பார்த்து காப்பி அடிக்கும் கோமுட்டிகளென்றும்,ஆரிய வைசியர்களென்றும், செட்டிகளென்றும், விஸ்வப் பிராமணர்களென்றும் மற்றும் பல விதமாய்ச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்களான சிறு பெண்களைக் கல்யாணம் செய் யும் வகுப்பார்கள் கதி என்னாவதென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் சர்க்காரார் ஏதாவது கோழைத்தனமாகவாவது நாணையத் தவறுதலாக வாவது நடந்தால் சர்க்காருக்குப் புத்தி கற்பிக்க வேண்டியது சீர்திருத்தவாதி களது முக்கியக் கடமையாகுமென்பதை நாம் அழுத்தமாகச் சொல்லு கின்றோம். தவிரவும், முஸ்லீம்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்ப தென்பது சிறிதும் அறிவுடைமையாகாது என்பதுடன் அதுவும் மதத்தின் பேரால் எதிர்ப்பதென்பது தங்கள் மதம் பகுத்தறிவுக்கேற்றதென்று சொல்லக் கூடியவர்கள் வெட்கப்பட வேண்டியதுமாகுமென்றே சொல்லுவோம்.
வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்காக மதத் தைக் கொண்டு பொறுப்பாக்குவதும் அதன் மறைவில் நிற்கப் பார்ப்பதும் மதத்தை இழிவுபடுத்துவதேயாகும். ஆகையால் சென்னை மாகாண முஸ்லீம் நண்பர்கள், வைசிராய் அவர்களுக்கு முஸ்லீம்கள் பேரால் சாரதா சட்டத் திருத்தப் பிரேரேபனையை எதிர்த்துத் தந்திகொடுப்பதுடன் ஆங்காங்குள்ள சீர்திருத்தவாதிகளும், தனிப்பட்ட முறையிலும், சமுதாய முறையிலும் திருத்தப் பிரேரேபனையைக் கண்டித்துத் தந்திகள் அனுப்ப வேண்டுமாய் விரும்புகின்றோம். திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்கள் இத்திருத்தம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியக் கடமையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
திருச்சி, தஞ்சை ஓட்டர்கள் திரு. கிருஷ்ணமாச்சாரியாரை இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுத்ததிற்கு வெட்கப்பட்டு இனியாவது மானத்துடன் நடந்து கொள்வார்களென்று எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு – கட்டுரை – 30.08.1931