விருதுநகர் மகாநாடு  ஐ

“சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந் தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டு வருவது யாவருமறிந்ததேயாகும்.

மற்றும் அது சம்பந்தமான பிரசாரங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கு தினந்தோறும் நடைபெற்று வருவதும் யாவருமறிந்ததாகும்.

இவற்றின் பயனாய் இந்துக்களென்று சொல்லிக்கொள்ளப்படும் பெரும்பான்மை மக்களுக்குள் ஒரு தலைகீழான பெரிய மனமாறுதலும் மற்றும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான காரியங்களில் செய்கையிலே யுங்கூட ஒரு பெரிய மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.

இந்த இயக்கமும் இதற்கு ஏற்பட்டுள்ள பல அதிதீவிரக் கொள்கை களும் மதவுணர்ச்சிக்கும் பழக்க வழக்கத்திற்கும் நேர் மாறுதலானதாயிருந் தும் இவ்வளவு சொற்ப நாளில் இவ்வளவு தூரம் பரவியதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வியக்கம் கண்டும் இவ்வியக்கத்திற்கு சேவை புரிந்தும் வரும் மக்கள் யாவரும் ஏறக்குறைய எல்லோரும் வெகுகால மாகவே பொது வாழ்வில் அதாவது, “தேசீயத்”துறை என்பதிலும் “சமூகத் துறை” என்பதிலும் “சமயத்துறை” என்பதிலும் ஈடுபட்டு மனப்பூர்த்தியாய் உழைத்து வந்து சிறிதும் பயன்பெறாமல் ஏமாற்றமடைந்தவர்களானதால் இந்தப் புதிய முயற்சியால் அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையும் அனுபவ மும் மன உறுதியும்  தீவிரப் பிரசாரத்திற்கு தூண்டுகோலாகி பொதுமக்க ளின் பகுத்தறிவைப் பிடித்து ஆட்டி அசைத்துப் பலரை சொன்னபடி கேட்க வேண்டியதாய் செய்து வந்ததுடன் ஒவ்வொருவரையும் இணங்கி இதில் இரங்கி வேலை செய்யும்படியும் செய்து விட்டது.

 

 

இதன் பயனேதான் ஆங்காங்கு தனக்குத்தானே பிரசாரங்கள் நடக்கவும் மகாநாடுகள் கூடவும் அதிதீவிர தீர்மானங்கள் செய்யவும் ஏற்பட்டு வருகின்றது என்பது மிகையாகாது.

இந்த முறையிலேயே இம்மாதம் 8,9 தேதிகளில் விருதுநகரில் மாகாண மூன்றாவது சுயமரியாதை மகாநாடு என்பதாக ஒரு பெரிய மகா நாடு கூடி ஏராளமான தமிழ் நாட்டு வாலிப மக்களை அழைத்து வைத்து பல தீர்மானங்களைச் செய்திருக்கின்றது. அதனுடன் கூடவே சுயமரியாதை பெண்கள் இரண்டாவது மகாநாடும், சுயமரியாதை வாலிபர்கள் 3-வது மகாநாடும் நடத்தப்பட்டு பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இம் மகாநாடுகளில் வரவேற்புக்கமிட்டித் தலைவர்கள், தலைவர்கள் ஆகியவர்களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் பெரிதும் இரண்டு முக்கிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பது கவனித்த வர்களுக்கு விளங்கி யிருக்கும்.

அதாவது ஒன்று மத சம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், சமூக சம்பந்தமாகவும், நமது தேசத்தில் இருந்துவரும் பல பழைய கொள்கை களையும் பழக்க வழக்கங்களையும் மனவுணர்ச்சிகளையும்அடியோடு அழிக்கவும், சிலவற்றைப் புதுப்பிக்கவும் வேண்டுமென்பது.

இரண்டாவது:- தேசீயம், சுயராஜியம், சுதந்திரம் என்னும் பேர்களால் மேல் கண்ட அதாவது மத சம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், பழக்க வழக்க சம்பந்தமாகவும் இருந்து வரும் பழங்கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபட்டுவரும்படியான ஸ்தாபனங்களையும், முயற்சிகளையும், சூக்ஷி            களையும் வெளியாக்கி எதிர்த்து அவைகளால் நமது முயற்சிகளுக்கு இடை யூறு ஏற்படாமல் இருக்கும்படி செய்வது, என்கிறதான இந்த இரண்டு லக்ஷியங்களையே பெரிதும் முக்கியமாகக் கொண்டதாக இருப்பது விளங்கி இருக்கும்.

ஏனெனில் இந்தியதேசத்து மக்கள் இன்று உலகத்தின் முன் மானத் தோடும், சுதந்திரத்தோடும், அறிவோடும், nக்ஷமத்தோடும் வாழுவதற் கில்லாமல் பெரும்பான்மையானவர்கள் இழிமக்களாய், மூடர்களாய், தரித்தி ரர்களாய், அடிமைகளாய் விளங்குவதற்கு மேல்கண்ட இரண்டு தத்துவங் களுமே காரணமாய் இருந்து வந்திருக்கின்றது-இருந்தும் வருகின்றது என்ற காரணத்தினாலே யாகும்.

இந்தப் பெரியதும் தலைகீழ் புரக்ஷியானதுமான மேல்கண்ட இரண்டு தத்துவ பரிகாரங்களுக்கும் எதிர்ப்புகள் பலமானதும் தொல்லைகளை விளைவிக்கும் படியானதுமான எதிரிகளும், எதிர்ப்புகளும் இருந்து தீரும் என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இவ்வித எதிர்ப்புகள் இவ்வித காரியங்களுக்கு உலகம் ஏற்பட்ட நாள் முதல் அதுவும் சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் இருந்து வந்ததேயாகும்.

ஏனெனில், எவ்வித மாறுதல் ஏற்படுவதானாலும் பழைமையினால் பயன் அடைந்து வந்தவர்களும், பழைமை நிலைமையையே தமது வாழ்க் கைக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறவர்களும், சுய அறிவற்று பிடிவாதக் காரர்களாய் இருக்கின்றவர்களும், சார்புக்காரர்களும் சாதாரணத்திலேயே மாறுதலுக்கு விறோதிகளாய் இருக்க வேண்டியவர்களாவார்கள்.

உதாரணமாக,

இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் பல நூற்றுக் கணக்கான வருடங்களுக்கும் முன்னால் மேல்கண்ட துறைகளில் மாறுதல் செய்ய முன் வந்த சித்தார்த்தர் (புத்தர்) இயேசு (இயேசுகிறிஸ்து) முகமது (முகமதுநபி) சாக்ரட்டீஸ்-மார்டின் லூதர் என்னப்பட்ட பெரியார்கள் அடைந்ததாக சொல்லப்படும் எதிர்ப்புகளும் கஷ்டங்களுமே போதுமான அத்தாக்ஷியாகும்.

ஆகவே தான் இத்துறைகளில் இரங்கிய ஒவ்வொருவரும் தங்க ளுக்கு ஏற்பட்ட, ஏற்படக்கூடிய எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும், தொல்லைகளையும் சிறிதுகூட லக்ஷியம் செய்யாமல் இரங்க வேண்டியவர் களானதுடன் அவைகளுக்காக ஒரு சிறிதும் கலங்காமலும் தங்களது கொள்கைகளை சிறிதும் தளர்த்துவதற்கு இணங்காமலும் இருக்க வேண்டிய வர்களானார்கள்.

ஆகையினாலேதான், வரவேற்புக்கமிட்டி தலைவர் திரு. று.ஞ.ஹ. சௌந்திரபாண்டியன் அவர்கள் தமது வரவேற்பு உபந்யாசத்தில்,

“காங்கிரசும் சுயமரியாதை இயக்கக் கொள்கையும் ஒன்று என்று சொல்லுகின்றவர்கள் இரண்டையும் சரியாய் உணராதவர்கள் என்றே சொல்லுவேன்” என்றும், “கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமைத்திட்டத்தில் மத நடுநிலைமையும்…… மதஸ்தாபன பாதுகாப்பும் பிரமாதப்படுத்தப்பட்டிருக் கின்றன. இந்த ஒரு பகுதியே காங்கிரசானது சுயமரியாதை இயக்கத்தை அரைகூவி போருக்கழைக்கின்றதாய் இருக்கின்றதே” என்றும் “திரு.காந்தி யாரின் பிரசாரமும், உபதேசமும் அவர் அனுஷ்டிக்கும் முறையும் மக்களின் அறிவைக்கெடுத்து மதப் பைத்தியத்தை அதிகரித்து வருகிறது” என்றும்,

“கராச்சி காங்கிரஸ் தேர்ந்தெடுத்த காரியக்கமிட்டியில் இருந்து விலக்கப்பட்டிருந்த திருவாளர்கள் மாளவியாவையும், ராஜகோபாலாச்சாரி யையும் காரியக்கமிட்டி தங்களுடன் சேர்த்துக் கொண்டதின் இரகசியம் என்ன? ”

“இவர்கள் இருவரும் இந்துக்களையும் இந்து மத ஸ்தாபனங் களையும் விர்த்தி செய்யும் டிரஸ்டிகளல்லவா? ஆகையால் காங்கிரசால் வரும் சுயராஜியம் இந்து ராஜியம்-ராமராஜியமாகத்தான் இருக்கும் என்று உணர்ந்த முஸ்லீம்கள் தனிக்கிளர்ச்சி செய்வது போல் காங்கிரசின் சமுதாய லக்ஷியம் வருணாச்சிரமதர்மத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதால் அதன் முயற்சிகளை எதிர்த்துப் போராடவேண்டும்”.

“காந்தியின் வாக்கால் வைதீகப் பிரசாரம் செய்துகொண்டு ஜவகர் லாலின் பொதுவுடமைப் பிரசங்கத்தில் நம்மை மயக்கப்பார்க்கும் காங்கிரஸ் வலையில் சிக்க வேண்டாம் என்று எனது வாலிப நண்பர்களை எச்சரிக்கை செய்கின்றேன்”.

“காங்கிரஸ் நமது இயக்கத்தை கொல்லும் வழியில் பிரயோகப் படுத்தப்படுகிறது.”

“மேலும் மகான்களால் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மதக் கொடூரங்களையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறியுங்கள். அவைகளை வேரறுப்பது நமது கடமை”.

என்பதாக சிறிதும் தளர்ச்சியும் சந்தேகமும் இல்லாத வலிமையான வார்த்தைகளால் வீர கர்ச்சனை புரிந்திருக்கின்றார்.

மகாநாட்டுக்குத் தலைமை வகித்த திரு. சு.மு.ஷண்முகம், க்ஷ.ஹ.க்ஷ.டு. ஆ.டு.ஹ. அவர்களோ அதைவிட வீரமாய் பேசி இருக்கின்றார். அதாவது:-

“நமது இயக்கத்தில் தேசீயமில்லை என்று சொல்லுவது நமது எதிரி களின்-போலி தேசீயவாதிகளின் சூக்ஷியேயாகும்”.

“நமதியக்கத்தில் உள்ள எல்லோரும் உண்மை தேசீயவாதிகள்”.

“தேசீய இயக்கமென்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் வெள்ளைக் காரனை மாத்திரம் வைதுவிட்டு அதிகாரம் பதவிகளைப் பற்றி மாத்திரம் பேசிவிட்டு தங்கள் சகோதரர்களை யெல்லாம் தாழ்த்தி இழிவுபடுத்தி அடக்கி வைத்திருக்கும் கொடுமைக்கு பரிகாரம் செய்யாமல் இருக்கின்றார்கள்”.

“ஒரு ஜாதியாரோ, ஒரு வகுப்பாரோ மற்றொரு ஜாதியாரைவிட, வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்பதான தத்துவம் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாடு எவ்வளவு கொடுமையானதான ஒரு அன்னிய அரசாங்க கொடுமையைவிட மிகப்பெரிய அக்கிரமும் கொடுமையுமான தென்றே சொல்லுவேன்”.

“காங்கிரசானது எல்லோருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்படும் என்றும், மத நடுநிலைமை வகிக்கப்படும் என்றும், மதக்கொள்கைகள் காப்பாற்றப்படும் என்றும் தீர்மானம் செய்துவிட்டது. இதை நாம் ஒப்புக் கொண்டால் நாம் சுயமரியாதையையோ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையோ அடைய முடியாது”.

“ மத நடுநிலைமையைக்கொண்ட இயக்கம் எதுவானாலும் அது தேசீய இயக்கமாகாது”.

“ மத பாதுகாப்பை தகர்த்தெறிய வேண்டும்”.

“காங்கிரஸ் தீர்மானங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு கோடரிக் காம்பு”.

“அத்தீர்மானங்கள் கொண்ட ஸ்தாபனங்களோடு எதிர்த்துப் போராட வேண்டும்”.

என கர்ஜித்திருக்கிறார்.

மற்றும் வாலிப மகாநாட்டு வரவேற்புக் கமிட்டித்தலைவர் திரு. எஸ். ஜயராம் பி.ஏ. அவர்கள் தமது உபன்யாசத்தில் “சமதர்மம் ஓங்கவே நாம் இங்கு கூடி இருக்கின்றோம். சமூக விடுதலையே இராஜிய விடுதலையை விட அவசியமானது”.

“அன்னிய அரசாங்கம் இருக்கும்பொழுதே தீண்டாதவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏதாவது கதிமோட்சம் ஏற்பட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு காலமும் விடுதலை யேற்படாது என்பது நிச்சயம்”.

“திரு. காந்தியவர்கள் மூலம் வருமென்று எதிர்பார்க்கும் இராம ராஜியத்தில் இவர்களுக்கு விடுதலை ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. அக்காலத்தில் இதைவிட ஜாதிச் சண்டைகள் அதிகரிக்கும்; ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தில் தீண்டாதார் கஷ் டத்தை ஒழித்து விடுதலையை எவ்விதம் அமுலுக்குக் கொண்டுவர முடியும்?சமூக விடுதலை இல்லாத தேசீய விடுதலை தேசீய விடுதலை யாகாதென்று சர். கே.வி. ரெட்டிநாயுடு சொல்லி இருக்கிறார். ஆகையால் சம உரிமை விரும்பும் நாம் அரசியல் இயக்கங்களுடன் சேர்வதை விட்டு சமதர்ம இயக்கத்தை தனியாக நிறுவி வேலை செய்யவேண்டும்”.

“பகுத்தறிவைக் கொண்ட நமது இயக்கத்தில் போலிக்கடவுள்களும், மதங்களும் சின்னா பின்னப்படுவது ஆச்சரியமல்ல. நாஸ்திகப் பட்டத்திற்குப் பயப்படக்கூடாது”.

“விதவைகள் கண்ணீர் விடுவதையும், பெண்களை மிருகங்களை விடக் கேவலமாய் நடத்துவதையும் இனிப் பொறுக்கமுடியாது”.

“கடவுளோ, சாஸ்திரமோ, வேதமோ எதுவானாலும் அவற்றின் எதிர்ப்புக் கஞ்சாமல் போராடவேண்டியது இளைஞர் கடமை”.

என்பதாக வீரமுழக்கம் செய்திருக்கின்றார்.

அதுபோலவே வாலிப மகாநாட்டுத் தலைவரான, உயர்திரு. டி.வி. சோமசுந்திரம், பி.ஏ.,பி.எல். அவர்களும் தமது தலைமை உரையில்,

“சுயராஜியம் வந்தவுடன் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அவர்கள் உரிமைகள் வழங்கப்படுமென்று காந்தியார் சொல் வதை உண்மையென்று எப்படி நம்பமுடியும்?”

“நம் நாட்டுத்தலைவர்கள் திரு. காந்தி உள்பட ஒருவரும் வருணாச் சிரமப் பிடியிலிருந்து வழுவவில்லை”.

“சமத்துவமும், சகோதரத்துவமும் பரவவேண்டுமானால் மதமெல் லாம் மறையவேண்டும்”.

“சமதர்மக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டும்”.

“சொத்து, குடும்பம், நிதி, சட்டம் ஆகியவற்றில் உள்ள பழைய எண்ணங்கள் தகர்க்கப்பட வேண்டும்”.

“சுருங்கக் கூறுமிடத்துக் காங்கிரஸ் முதலாளிகள் ஜமீன்தாரர்கள் பக்கமே சாய்ந்திருக்கிறது”என்று முழங்கி இருக்கிறார்.

சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டு வரவேற்புத் தலைவி திருமதி பத்மாவதி திருவண்ணாமலை அம்மாள் அவர்கள் வரவேற்பு உபன்யாசத்தில்,

“எப்படியோ, நமக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இனிமேல் நம்மை ஏமாற்ற முடியாது?” “கடவுள்கள் காலம் வேறு இப்போதைய நிலைமை வேறு.” “ஆண்கள் எவ்வித சுதந்திரத்துடன் வாழ்கின்றார்களோ அவ்வித சுதந்திரத்துடன் நாமும் வாழவேண்டும்”.

“கல்யாண விஷயங்களில் நமக்கு சுதந்திரம், சொத்து சுதந்திரம் வேண்டும் ”.

“நாம் கூசாமல் கிளர்ச்சி செய்யவேண்டும். உதவிக்கு சுயமரியாதை இயக்கம் இருக்கிறது.”

“சுயமரியாதை இயக்கத்தைப் பலப்படுத்துவதே நமது விடுதலையின் அஸ்திவாரமாகும்”  என்று முழங்கி இருக்கிறார்கள்.

பெண்கள் மகாநாட்டுத் தலைவி திருமதி இந்திராணி பாலசுப்பிர             மணியம் அம்மாள் அவர்கள் செய்த தலைமை உபன்யாசமோ மிக அருமையானது. சற்று நீண்டதாயிருந்தாலும், ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டியதொன்றாகும். அநேக விஷயங்களைப் புள்ளி விவரங்களுடன் எடுத்தாண்டிருக்கின்றார்கள் . அவையாவன:-

“இந்நாடு அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பெண்களை அடிமைகளாக்கினது. இரண்டு பிறப்பால் ஜாதி வகுத்தது, மூன்று மனிதனுக்கு மனிதன் தீண்டாதவனாக்கினது. நான்கு மூடபழக்க வழக்கங்கள் சடங்குகள்”.

“விதவைகளை மக்கள் செய்யும் கொடுமைகளாலேயே பெண்மணி களின் உயிர் நாடிகள் நசுக்கப்பட்டுவிட்டது. சாரதா சட்டத்திற்குப் பயந்து பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மணம் முடித்துவிட்ட பாதகர்கள் நம் நாட்டில் பி.ஏ, யம்.ஏ படித்த மனிதர்களாய் விளங்குகிறார்கள்.

“கற்பு நாயகிக்கு மாத்திரந்தானா? நாயகனுக்கு இல்லையா?:” “மறு மணம் வேண்டுமானால் இருபாலருக்கும் வேண்டும்”.

“ஒரு பிறவிக்கு ஒரு நீதிகொண்ட கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசைகொண்ட மூர்க்கத்தனமேயொழிய அதில் யோக்கியமும், நாணை யமும் இல்லை”.

“வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழும்பு வது போலவும், பறவை தனது அழகிய சிறகை விரித்துப்பறப்பது போல வும் பெண் மக்களுக்கு தங்களுடைய உள்ளத்திலெழும் விருப்பப்படி நடக்கும் உரிமை இருக்க வேண்டும்”.

“வலுத்தவன் இளைத்தவனை அடக்கி ஆள்வதற்கு அத்தாட்சி ஜாதி வித்தியாசமேயாகும்.”

“இதனால் நமது நாடு மிருகத்தன்மையில் இருந்து மனிதத் தன்மைக்கு இன்னமும் வரவில்லை என்பது புலனாகிறது ”.

“ஜாதி வேற்றுமை ஒழிவதில் தான் நமது நாட்டு விடுதலையிருக் கிறது”.

“சிலர் சுயநலத்திற்காகவே ஜாதிவேற்றுமை காப்பாற்றப்படுகிறது”.

“நம் சகோதரர்களுக்கு நாம் சகோதரத்தனம் காட்ட வில்லையானால் பிற நாட்டார் இடம் நாம் எந்த முகத்துடன் சகோதரத்துவம் கேட்பது?”

“பிற நாட்டார் எண்ணை இல்லாமல் மோட்டார் விடலாமா? மார்ஸ் நக்ஷத்திர மண்டலத்தில் மக்கள் இருக்கின்றார்களா? என்பது போன்ற       ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்நாட்டார் கோவிலுக்குள் இன்னாரை விட லாமா? வேண்டாமா? குளத்தில் தண்ணீர் எடுக்க இன்னாரை விடலாமா? வேண்டாமா? பொது ரஸ்தாவில் இன்னார் நடக்கலாமா? வேண்டாமா? என் கின்ற ஆராய்ச்சிக்கு நம்நாட்டுப் பணம், நேரம் ஆராய்ச்சி ஆகியவை செலவழிக்கப்படுகின்றன”.

“இது ஒரு பைத்தியக்காரர்கள் வாழும் நாடாயிருக்கிறது”.

“கோவிலுக்காக பல ஜாதியாரால் செலுத்தப்படும் பணம் பல ஜாதி யாருக்கும் பயன்பட வேண்டாமா?”

“பிரார்த்தனை, காணிக்கை முதலிய விஷயங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்”.

கடைசியாக ‘சென்னை மாகாணத்தில் ஆண்களைவிட 6 லக்ஷம் பேர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள 23641936 பெண்களுக்கு சென்னை சட்டசபையில் ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பதானது எவ்வளவு வருந்தத்தக்க விஷயமாகும்’ என்று பேசி இரத்தக் கண்ணீர் வடித்துப் பேசியிருக்கின்றார்கள். ஆகவே இந்த அபிப்பிராயங்கள் எல்லாம் உலகஞானமும் கல்வியறிவும் உள்ள பெரியோர்களால் மிகவும் பிரத்தியக்ஷ அனுபோகத்தின் மீதும் ஆழ்ந்து யோசித்த நடுநிலைமை முடிவின் மீதுமே பேசப்பட்டவைகளே யொழிய வெறும் மூட நம்பிக்கைகளின் மீதும் இவ் வித அபிப்பிராயங்களுக்கு செல்வாக்கிருக்கின்றதென்கின்ற கண்மூடித்தன மான தைரியத்தின் மீதும் கிளிப்பிள்ளை தன்மைபோலும் வயிற்றுப் பாட்டை உத்தேசித்தும் பேசப்பட்டவைகள் அல்ல என்பது உலக அனுபவ மும் நடுநிலைமை ஞானமும் சிறிதாவது முள்ள எவருக்கும் விளங்கும்.

இன்றைய தினம் சுயமரியாதை இயக்கத்தின் மீது சிலரால் சொல்லப் படும் குற்றமெல்லாம் ‘இவ்வியக்கத்தில் தேசீயம் இல்லை’ என்பதும் ‘காங்கிரசைக் கண்டிக்கின்றது’ என்பதும் ‘திரு. காந்தியவர்கள் அபிப்பிரா யத்தை மறுக்கின்றதே’ என்பதும் ஆகியவைகளே முக்கியமான குற்றங் களாக சொல்லப்பட்டு வருகின்றன. 35-கோடி மக்கள் கொண்ட ஒரு பெரிய தும் சகலவித வளமும் கொண்டதுமான ஒரு புராதன தேசம் ஆயிரக்கணக் கான வருடங்களாக அடிமைப்பட்டு கல்வியறிவில்லாமல் சிறிதும் முற் போக்குமில்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்து கொண்டு எச்சிலைக்கு மானத்தையும், மனிதத்தன்மையையும் விற்றுக்கொண்டு மனிதனுக்கு மனிதன் இழிவு என்று கருதும்படியாகவும் நாட்டு செல்வங்கள் எல்லாம் நாட்டு மக்கள் யாவரும் சமமாயும் அனுபவிக்காமலும் பாட்டுக்குத் தகுந்த படியும் அனுபவிக்க முடியாமல் கடவுளென்றும் மதம் என்றும் பழக்க வழக்க மென்றும் சமூகக்கட்டுப்பாடு என்றும் சொல்லிக்கொண்டு வீணாக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலைமையைப் பற்றி யோசியாமலும் அதற்குக் காரணங்கள் கண்டுபிடிக்க முயலாமலும், உண்மையான விடுதலைக்கு முயற்சியாமலும் மற்றும் மக்கள் எண்ணத்தையும் முயற்சியையும், உபயோகமற்றக் காரியங்களில் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தால் அறிவுள்ள யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த நாட்டுக்கு விடுதலையையோ ஞானத்தையையோ உண்டாக்க முயற்சிகள் செய்யப்பட்ட காலங்களில் எல்லாம் மதத்தின் பேராலும் வேறு ஏதாவது ஒரு போலியான சூக்ஷி விஷயத்தின் பேராலுமே பார்ப்பனர்கள் அவ்வப்போது பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்து முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கின்றார்கள்.

அதுபோலவேதான் இந்த சமயமும் உலகமே விழித்தெழுந்து கொண்டிருக்கின்ற இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு மாத்திரம் விழிப்பு ஏற்படுவதற்கு வகையில்லாமல் பார்ப்பனரும் பார்ப்பனீயமும் தேசீயத்தின் பேரால் முட்டுக்கட்டையாகத் தோன்றி பின்னால் இழுத்துப்பிடித்துக் கொண் டிருக்க நேர்ந்தது மிகவும் வருந்தத்தக்க சம்பவமேயாகும். உலகிலுள்ள எல்லா நாட்டாருக்கும் எல்லா சமூகத்தாருக்கும் புதிய புதிய சீர்திருத்தக் காரர்கள் தோன்றி பழைமைகளை உடைத்தெரிந்து காட்டு மிராண்டித்தனத் திலிருந்து ஆச்சரியப்படத்தகுந்த மனிதத்தன்மைக்கு கொண்டுவந்து எவ்வளவோ முற்போக்குகளை உண்டாக்கி மக்களை மானமுடையவர்களா கவும், சுதந்திரமாகவும், அறிவாளிகளாகவும் வாழும்படி செய்துவிட்டார்கள்.

சைனா, ஜப்பான், துருக்கி, பிரஞ்சு, இங்கிலாந்து, ருஷியா , ஜர்மனி முதலிய ஒவ்வொரு தேசத்திலும் தோன்றிய சீர்திருத்தக்காரர்கள் எல்லாம் முதலில் பழைமையை அழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து வந்திருக்க நமது தேசத்தில் மாத்திரம் சீர்திருத்தக்காரராய் விடுதலைக்கு உழைப்பவராகத் தோன்றின திரு.திலகரும், திரு.காந்தியும் முதலிய யாவ ருமே பழைமையைக் காப்பாற்றுவதிலும் புதுமையை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதிலுமே கண்ணுங் கருத்துமாய் இருந்து விட்டார்கள். இன்னும் இருந்தும் வருகின்றார்கள்.

‘லோகமான்யர்’ என்னும் திலகருக்கு வர்ணாச்சிரம தர்மமும், கீதையின் தத்துவ உபதேசமும் எவ்வளவு தேசீயமாய் இருந்ததோ அதை விட ஒருபடி அதிகமாகத்தான் திரு.காந்தியும் அவற்றை தேசீயமாய் உபதேசிக்கின்றார்-நிலை நிறுத்தவும் பாடுபடுகின்றார் என்பதல்லாமல் மற்றபடி திலகரை விட காந்தியார் எந்த விதத்தில் மேலானவர் அல்லது சமத்துவத்திற்கு சமதர்மத்திற்கு அனுகூலமான காரியம் செய்தவர் அல்லது திட்டம் கையில் வைத்திருப்பவர் என்பதை யோசித்தால் உண்மை விளங்கும். திலகர்  காலத்திலாவது அவருக்கு புராண ராஜ்ய தர்மத்தைப் பற்றி பேச பயமிருந்தது. திரு.காந்தி காலத்திலோ புராண தர்மம் மிகவும் வலிவும் செல்வாக்கும் பெற்று விட்டன. போதாக்குறைக்கு திரு. மாளவியா வுக்கு விடுதலை ஸ்தாபனத்தில் கௌரவமான உச்சஸ்தானம் கிடைக்கப் பட்டுவிட்டது.

 

ஆகவே, விடுதலைக்கு தேசீய திட்டம் வகுக்க வேண்டியது திருவாளர்கள் மாளவியா, இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி போன்றவர் களாகவும், அதை வெளிப்படுத்த வேண்டியது காங்கிரசாகவும், நிறைவேற்றி வைக்க வேண்டியது திரு.காந்தியாகவும் ஏற்பட்டுவிட்டது. வாலிபர்களை மயக்க திரு. ஜவஹர்லாலை விட்டு ஏதாவது சொல்லச் செய்து விட வேண்டியது என்கின்ற இந்த முறையில் வருணாசிரமமும், இந்து மதமும், புராண தர்மமும் அரசியலின் பேரால், விடுதலையின் பேரால் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் தாண்டவமாடுவதானது மக்களின் எவ்வளவு பாமரத் தன்மையைக் காட்டுகின்றது என்பதற்காகத்தான் இவைகளை எடுத்துக் காட்டுகின்றோம்.

இந்தக் காரணங்களால் தான் தேசீய இயக்கம் என்கின்ற போர்வை யைப் போற்றிக் கொண்டிருக்கும் வருணாசிரம-பார்ப்பனீய-முதலாளித் தத்துவக்கொள்கைகளைக் கொண்ட காந்தீயத்தை வெட்டிப் புதைக்கும் வேலையை இப்போது சுயமரியாதை இயக்கம் கைகொண்டு வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது. இதைச் செய்யாமல் சுயமரியாதை இயக்கம் மற்றத் துறைகளில் செய்யும் வேலைகள் எல்லாம் நதிக்கரையில் ஆற்றோரத்தில் கட்டுகின்ற கட்டிடங்களைப் போலத்தான் முடியும். ஏனெனில் சமய சமூகத் துறையில் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு வேலை செய்து வைத்திருந் தாலும் பார்ப்பனீய காந்தியரசியல் ஆதிக்கம் வரும்போது ஒரே அடியில் அவை கவிழ்க்கப்பட்டதாகி விடும். பெரும்வெள்ளம் வந்தால் நதிக்கரை யில் இருக்கும் வீடுகளுக்கு எப்படி ஆபத்தோ அது போலவே ஆகி விடும். இந்தக் காரணத்தால் தான்அரசியல் என்பதுடனும், காந்தீயம் என்பது டனும் போராட வேண்டியிருக்கின்றதேயொழிய வேறில்லை.

இதைப்பற்றித் தப்பர்த்தம் கொள்கின்றவர்களுக்கு மாத்திரம் திரு. காந்தியார் உரைத்த ஒரேயொரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக் காட்டி விட்டு இதை முடிக்கின்றோம்.

அதாவது ‘மனித சமூகத்தில் வீதி கூட்டுவது ஒருவனது தர்மம் என்றும் கணக்கு எழுதுவது மற்றொருவனது தர்மம் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றது. இதில் குப்பை அள்ளுவது இழிவு-கணக்கு எழுதுவது மேன்மை என்று கருதப்பட்டாலும் குப்பை அள்ளுகின்றவன் தனது தர்மத்தை விட்டுவிட்டு மற்றவன் தர்மத்தில் பிரவேசிக்க நினைத் தாலும் அவன் தர்மமிழந்தவனாகிறான். இவனால் சமூகத்திற்கும் கேடு விளையும்’ (காந்தி) என்பதே திரு. காந்தியவர்களின் சமூக சீர்திருத்தமும் அரசியலில் அவர் ஏற்றுக்கொண்ட ஜவாப்த்தாரித்தனமுமாகும். இதுவே சுயராஜ்யத்தில் ஜீவாதார உரிமைத் திட்டமுமாகும். மற்ற விஷயங்களைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 16.08.1931

 

You may also like...

Leave a Reply