மௌலானா ஷெளகத் அலி
மௌலானா ஷெளகத் அலி அவர்கள் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி யல்லவென்பதாகக் காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்து விட்டது என்ப தாக உயர்திரு. காந்தியவர்கள் தமது 16-7-31 தேதி “யங் இந்தியா” பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதிவிட்டார். இதற்கு பதிலாக மௌலானா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மௌலானா ஷெளகத்அலி அவர் களை “முஸ்லீம்கள் பிரதிநிதியல்ல” வென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் காங்கிரசானது யாரை யும் இலட்சியம் செய்யாமல் தனது போக்கில் மிகவும் தைரியத்தையும், உறுதியையும் கொண்டு விட்டதாகத் தான் சொல்ல வேண்டும். திரு. காந்தி யவர்களும் காங்கிரஸ் காரியகமிட்டியின் இந்த முடிவைப்பற்றி சிறிதும் யோசனை செய்யாமலும், காரியக்கமிட்டியைக் கண்டிக்காமலும் தமது பத்திரிகையில் விளம்பரம்படுத்தி விட்டதிலிருந்து அவரும் துணிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது “காந்தி-இர்வின்” ஒப்பந்தம் முடிந்தவுடன் “இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்படாவிடில் மேலால் என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்” என்று அவர் சொன்ன காலத்திலேயே இந்த உத்தேசத்தை வைத்துத்தான் சொல்லியிருக்க வேண்டும் என்றும், யார் யார் தனக்கு ஒத்து வரவில்லையோ அவர்களையெல்லாம் இம்மாதிரியாகச் சொல்லி ஒழித்து விடுவதுதான் தனக்குத் தெரிந்த வழியென்று அப்போதே கருதிவிட்டார் என்றும், அந்த எண்ணத்தின் பிரதிபிம்பமே தான் அவரை இவ்வளவு தைரியமாய் எழுதச் செய்தது என்றும் தான் நாம் கருதுகின்றோம். ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் அலி சகோதரர்கள் இருவரையும் தன்னுடன் கூடவே கூட்டிக்கொண்டு இவ்விருவரையும் தனது இரு பக்கமும் நிறுத்திக்கொண்டு அவர்களைப் புகழ்ந்து பேசி “அலி சகோதரர் களுடைய சட்டைப்பையில் நான் இருக்கிறேன். அவர்கள் தான் என்னை நடத்துகிறார்கள்” என்றெல்லாம் பேசி அவர்களுக்கு உற்சாகத்தை யூட்டி அவர்கள் மூலமாகவே காந்தி, மகாத்மா காந்தி, மகாத்மா என்றெல்லாம் சொல்லச்செய்து, இந்தியத் தலைவர் ஆன பின்பு இப்போது ஒரு வரியில் “மௌலானா சாயபை முஸ்லீம்களின் பிரதிநிதி என்பதாக காரியக்கமிட்டி ஒப்புக் கொள்ளவில்லை” என்று துணிந்து எழுதிவிட்டார். இவரது பத்திரிக்கையான “யங் இந்தியா” உலகில் பல பாகங்களிலும் செல்லுவது டன் இந்த வாக்கியத்தை உலகத்திலுள்ள பத்திரிக்கைகள் எல்லாம் எடுத்துப் போட்டிருக்கின்றன.
எனவே திரு. காந்தி இப்படியெழுதியதின் மூலம் மௌலானாவை ஒழித்துவிடலாம் என்கின்ற அபிப்பிராய மாத்திரமல்லாமல் இந்திய முஸ்லீம்கள் தலையிலும் கையை வைத்துவிடலாமென்கின்ற தீர்மானத் துடன் இருந்துதான் எழுதியிருக்கிறார் என்றே முடிவு செய்ய வேண்டி யிருக்கின்றது. அன்றியும், தானாக இப்படிச் சொல்லுவதற்கு பயந்து தான் ‘காரியக் கமிட்டி முடிவு செய்திருக்கின்றது’என்பதாக எழுதுகின்றார் என்று தான் கருத வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமலிருந்தால் உடனே திரு. காந்தியவர்கள் காரியக்கமிட்டியின் இம்மாதிரியான முடிவை கண்டித்திருப் பார். அதுமாத்திரமல்லாமல் தனது பத்திரிகை தலையங்கத்திலும் இவ்வளவு வெளிப்படையாய் பிரசுரித்திருக்கவுமாட்டார்.
நிற்க, மௌலானா ஷெளகத் அலி அவர்களை இந்திய முஸ்லீம் பிரதிநிதியல்ல வென்று தீர்மானம் செய்து விட்டால் பிறகு வட்டமேஜை மகாநாட்டில் இந்தியா முழுமைக்கும் திரு. காந்தியே பிரதிநிதி என்றாய் விடுவதோடு அவரது அபிப்பிராயத்தை எதிர்த்துப் பேசவும் ஆட்கள் இருக்கமாட்டார்கள். பிறகு அவருக்கே ஏக நாயகப் பிரதிநிதித்துவம் சித்தித்து விடும் என்கிற உள்எண்ணமே திரு. காந்தியின் சிஷ்யர்களை இப்படி முடிவு செய்ய இணங்கும்படி தூண்டி இருக்கின்றது என்றுமேதான் கருத வேண்டியிருக்கின்றது.
என்றாலும், இந்த மாதிரியான சூக்ஷிக்கு மௌலானா ஷெளகத் அலி கொடுத்த பதிலும் சரியான பதிலேயாகும். என்னவென்றால், “திரு. காந்தி இந்திய மக்களுக்கு எவ்வளவு பிரதிநிதியோ அதைவிட அதிகமான அளவு நான் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி” என்று சொல்லி இருக்கின்றார். இதை நாமும் அப்படியே ஆதரிக்கின்றோம். இதற்கு ஆதாரம் என்னவெனில் இன்றையதினம் இந்தியாவில் மௌலானா ஷெளகத் அலியை தங்களுக்கு பிரதிநிதி அல்ல என்று சொல்லுபடியான முஸ்லீம்களை ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தில் 1000க்கு ஒருவரையாவது கண்டுபிடிக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
சென்னையில் சில முஸ்லீம் கனவான்கள் மைலாப்பூர் திரு. சீனிவா சய்யங்காரை தலைவர் என்று சொல்லிக் கொண்டிருந்தது போல் ஒரு சில முஸ்லீம்களால் அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால் திரு. காந்தி தலைவர் என்று சொல்லிக் கொள்ளப்படுவது தவிர வேறு யாரையாவது காட்டக்கூடுமா?
அன்றியும், இந்தியாவிலுள்ள இந்துக்கள் என்பவர்களிலும் திரு. காந்தியை தங்கள் தலைவர் என்றோ, பிரதிநிதியென்றோ சொல்லக்கூடிய வர்கள் 100க்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதாக தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டு பார்ப்போம். விளக்கமாகப் பேச வேண்டுமானால் திரு. காந்தியின்இராமராஜியத்தையும், அதன் வருணாச்சிரமதர்மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்களில் பார்ப்பனர்களை தவிர பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு ஒருவராவது இருக்கின்றார்களா? என்று பந்தயங்கட்டி கேட்கின் றோம். மேலும் பார்ப்பனரல்லாதார்களில் ஒரு குறிப்பிட்ட ஆசாமியின் பெயரை யாவது சொல்லக்கூடுமா? என்று மறுபடியும் கேட்கின்றோம்.
உண்டியல் எடுத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்கள் செம்புக்கு நாமம் போட்டுக் கொண்டு மஞ்சல் துணிகட்டி “வெங்கிட்டரமண கோவிந்தா!கோவிந்தா!!” என்று கூப்பாடு போடுவது போல் தேசீயத்தின் பேரால் வாழ்க்கையை நிர்த்தாரணம் செய்து கொண்டவர்கள் காந்திக்கு ஜே! என்று சொல்லுவதும் அதைக்கேட்டுகொண்டு விளையாட்டுப் பிள்ளை களும், வேலையில்லாத பிள்ளைகளும் மற்றும் ஓட்டுகளை எதிர்பார்த்துத் திரியும் பெரிய ஆட்களும் கூப்பாடு போடுவதுமல்லாமல் மற்றப்படி யாருக்கு திரு. காந்தி பிரதிநிதி என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்களுடைய பிரசார சாமர்த்தியத்தாலும், இல்லாமல் தீராத இயற்கை அவசியத்தாலும் யாரோ ஒருவர் சங்கராச்சாரியாகி உலக குரு ஆவதுபோல் பார்ப்பனர்களுடைய பிரசார சாமர்த்தியத்தால் திரு.காந்தி அவர்கள் இந்தியப் பிரதிநிதியாக காணப்படுகின்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காரியக்கமிட்டி தீர்மானத்தை கையிலெடுத்துக் கொண்டு திரு.காந்தியவர்கள் கப்பலேறியவுடன் பார்ப்பனரல்லாத மக்கள், சுயமரியாதை உணர்ச்சியுடைய மக்கள், சமதர்மக் கவலையுள்ள மக்கள் “திரு. காந்தியவர்கள் எங்களுடைய பிரதிநிதியல்ல, அவர் வருணாச் சிரமக்காரருக்கும், மேல் ஜாதிக்காரருக்கும், முதலாளிகளுக்குந்தான் பிரதிநிதி” யென்று வட்ட மேஜை மகாநாட்டுக்கு தந்தி கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் காரியக்கமிட்டி தீர்மானத்தை நினைத்தால் சுயமரியாதைக்காரனுக்கும், சமதர்மக்காரனுக்கும் இரத்தம் கொதிக்குமென்றே சொல்லுவோம்.
ஆகவே, இந்நிலைமையில் உள்ள காங்கிரசைப்பற்றியும், திரு. காந்தியைப்பற்றியும் மௌலானா சாயபு அவர்கள் “முஸ்லீம்களுக்கு திரு.காந்தியைவிட நான் அதிகமான பிரதிநிதித்துவம் பொருந்தியவன்” என்று சொன்னதில் சிறிதும் தப்பிதமில்லை என்றே கருதுகின்றோம்.
நிற்கவும், மௌலானா சாயபு அவர்கள் மற்றும் இரண்டொரு விஷயங்களில் உண்மையை தைரியமாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றார் என்பதையும் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. அதாவது “முஸ்லீம்கள் கடைக்கு முன்னால் நின்று கொண்டு மறியல்கள் செய்யப்படுமானால் கண்டிப்பாகக் கலகங்கள் உண்டாகும்” என்றும், இந்தியாவில் ஏதாவது “இரத்தம் சிந்தும்படியான ரணகளம் ஏற்பட்டால் அதற்கு திரு.காந்தியே ஜவாப்தாரியாவார்” என்றும் எச்சரிக்கை செய்யும் முறையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இன்றைய நிலைமையைப் பார்க்கும்போது தேசீயக் கிளர்ச்சி என்பதின் பலன் நாட்டிற்கு இந்த நிலைமையைத்தான் கொண்டு வந்து விடக்கூடும் என்றே நாமும் கருதுகின்றோம். முஸ்லீம்களுக்கும்-இந்துக்களுக்கும் மாத்திரம் தான் கலவரம் நடக்கும் என்பது மாத்திர மல்லாமல் பார்ப்பனர்களுக்கும்- பார்ப்பனரல்லாதார்க்கும், ஜாதி இந்துக் களுக்கும் – தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் கூட கலவரமும், ரணகளமும் ஏற்பட்டுத் தான் தீரும் என்றே கருதுகின்றோம். யார் தோற்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்கின்ற சங்கதி ஒருபுறமிருந்தாலும், நிரபராதிகள் பலர் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும் அடையக்கூடும் என்பதில் சந்தேக மில்லை. ஏனெனில் மௌலானா சாயபு சொல்லியிருப்பது போல் அதாவது “காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதலே அது முஸ்லீம்களிடம் விஷமத்தன மாகவே நடந்து வந்திருக்கின்றது” என்று சொல்லியிருப்பது போலவே காங்கிரஸ் ஆரம்பமான காலம் தொடங்கியே பொது ஜனங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு துரோகமாகவே நடந்து வந்திருக் கின்றது என்பதோடு காரியக்கமிட்டி தீர்மானம் என்பதில் இதை காயம் செய்யப்பட்டு விட்டது.
ஆகவே இந்த நிலையில் இருக்கும் காங்கிரசும், திரு. காந்தியும் “மௌலானா ஷெளகத் அலி முஸ்லீம்களின் பிரதிநிதியல்ல”என்று சொல்லி முடிவுகட்டி இருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
மேலும் காங்கிரசும், அதன் தலைவர்களும் எப்போதுமே தங்கள் சொற்படி தாளம் போடாத இந்துக்களையும் கூட அவர்கள் யாராயிருந் தாலும் இந்தப்படியே அதாவது அவர்கள் “இந்தியப் பிரதிநிதிகளல்ல” என்று சொல்லிவிடுவதிலும் அதிசயமொன்றுமில்லை. காரியக்கமிட்டிக்கு மாத்திரமல்லாமல், திரு.காந்தியவர்களுக்கு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு யார் தலைவர்களாய் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் இந்த குணம் தான் இருந்து வந்திருக்கிறது.
உதாரணம் வேண்டுமானால் தமிழ்நாட்டிலும் ஒரு சமயம் பார்ப்பன ரல்லாதாரில் சிலர் பார்ப்பனரல்லாதார்களுடைய உரிமையைப்பற்றிக் கேட்டவுடனேயே இங்குள்ள பார்ப்பனர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ஸ்தானத்தில் இருந்த காலத்தில் அடியோடு தங்களை தலைவர்களாக்கி னவர்களை யெல்லோரையுமே அதாவது திருவாளர்கள் வரதராஜலு நாயுடு, ஆரியா, கல்யாணசுந்திர முதலியார், சக்கரை முதலிய அநேகரை பெயர்களைக் குறிப்பிட்டே “இவர்களை யெல்லாம் காங்கிரசை விட்டு ஒழித்தால் தான் காங்கிரஸ் பரிசுத்த மடையும்” என்று சொன்னதே போது மான உதாரணமாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயம் இருப்பது போல் இந்தியாவைப் பொருத்தவரை இந்துக்கள் – முஸ்லீம்கள் விஷயம் இருந்து வருகிறது.
ஆதலால் இரண்டும் ஒன்றுபோலவேதான் நடைபெறுகிறது. தமிழ் நாட்டிற்கு திருவாளர்கள் சீனிவாசய்யங்காரும், ராஜகோபாலாச்சாரியுமா னால் இந்தியாவுக்கு திருவாளர்கள் மாளவியாவும் காந்தியுமாவார்கள். இதில் ஒன்றும் புதிய நடவடிக்கைகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எனவே மௌலானா ஷெளகத் அலி அவர்கள் “முஸ்லீம் பிரதிநிதி யல்ல” என்று காரியக்கமிட்டி முடிவு செய்து அது காந்தியின் மூலம் வெளிப்பட்டிருப்பதின் யோக்கியதையைப் பற்றி சுருக்கத்தில் ஒரு வார்த் தையில் சொல்லி முடித்துவிட வேண்டுமென்றால் திரு.காந்தி தலைவர் பதவிக்கு ஏறிச் சென்ற ஏணியையே உதைத்துத் தள்ளி விட்டாரென்று தான் சொல்ல வேண்டும்.
குடி அரசு – தலையங்கம் – 26.07.1931