தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி
பீரார் நாட்டில் லேவாதேவிக்கார பணக்காரர்கள் வீட்டிலும் ஏராள மாக பூமிகள் வைத்திருக்கும் மிராசுதாரர்கள் வீட்டிலும் கைத்தொழி லாளிகளும் விவசாயத் தொழிலாளிகளும் கூட்டம் கூட்டமாகப் புகுந்து பணங்களையும், தானியங்களையும் கொள்ளையடித்ததோடு கடன் பத்திரங்கள், பாண்டுகள், கணக்குப் புஸ்தகங்கள் முதலிய கடன் கொடுத்த ஆதாரங்களையும், பூமிகள் குத்தகைக்குக் கொடுத்த ஆதாரங்களையும் தேடி எடுத்து அவைகளை நெருப்பிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கி விட்டதாகச் செய்திகள் தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அவைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
இதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு மற்றொரு நோக்கமும் அதில் காணப்படுகின்றது. அதாவது,
இந்த மாதிரி ரொக்க சொத்துக்களும், பூமி சொத்துகளும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்கள் இடமும், லேவாதேவிக்காரர் கள் இடமுமே போய் சேரக்கூடியதாய் இருப்பதால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது.
ஆகவே இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த ஜாதி தத்துவத் தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக நன்றாய்த் தெரிய வருகின்றது. உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால் இந்த முறையைத் தான் கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
அன்றியும் இன்று இந்தியாவிற்கு வெளியில் உள்ள வேறுபல தேசங்களில் இம்முறைகள் தாராளமாய்க் கையாளப்பட்டும் வருகின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். மற்றும் பல நாடுகளில் விடுத லைக்கு இம்முறைகளையே கையாள முயற்சிகள் செய்யப்பட்டும் வருகின்றன.
இங்கிலாந்து முதலிய நமக்கு முக்கியமான நாடுகளில்கூட இம்முறைகளை புகுத்த ஒரு பக்கம் பிரசாரமும், மற்றொரு பக்கம் அதைத் தடுக்க முயற்சிகளும் நடந்துவருகின்றன. இவற்றின் உண்மைகள் எப்படி இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு முன் இம்முறைகளை பாவம் என்றும், நரகம் கிடைக்குமென்றும் மிரட்டி ஏய்த்துக் கொண்டிருந்த தெல்லாம் போய் இப்போது இது “நாட்டுக்கு நல்லதா?” “தீமை விளைவிக்காதா?” “நமது நாட்டுக்குப் பொருந்துமா?” “நல்வாழ்க்கை நடப்புக்கு விரோதமாய் இருக்காதா?” என்கின்றவை போன்ற “தர்ம ஞானம்” பேசுவதின் மூலம்தான் இம்முயற்சிகளை அடக்கப் பார்க்கிறார்களே ஒழிய இது சட்ட விரோதம், பாவம், கடவுள் செயலுக்கு மாறுபட்டது என்கின்ற புரட்டுகள் எல்லாம் ஒரு பக்கம் அடங்கிவிட்டன.
ஆனாலும் இந்த தர்ம சாஸ்திர ஞானமும் யாரால் பேசப்படுகின்றது என்று பார்ப்போமானால் பார்ப்பனராலும், பணக்காரராலும், அதிக நிலம் வைத்துக்கொண்டிருக்கும் பெரிய நிலச்சுவான்தாரர்களாலும் இவர்கள் தயவால் அரசு ஆட்சி நடத்தும் அரசாங்கத்தாலும் தானே தவிர உண்மை யில் ஜாதி ஆணவக் கொடுமையால் தாழ்த்தப்பட்டும், முதலாளிகள், லேவா தேவிக்காரர்கள் கொள்ளையால் கஷ்டப்படுத்தப்பட்டும், நிலச்சுவான் தாரர் கள் கொடுமையால் துன்பப்படுத்தப்பட்டும் பட்டினி கிடக்கும் ஏழை மக்க ளுக்கு இம்முரையைத் தவிர வேறு முறையில் தங்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற உணர்ச்சி பெருகிக்கொண்டே தான் இருக்கின்றதே தவிர சிறிதும் குறைந்ததாகவில்லை.
தவிர பொதுவாகயிருக்கப்பட்ட ஒருபொது மனிதனிடம் இன்றைய நிலைமையை இரு தரப்பாரும் எடுத்துச் சொல்லி எது நல்லது? உலகம் எப்படி இருக்க வேண்டும்? என்று தீர்ப்புக் கேட்டால் இன்று பீரார் ஏழை மக்கள் செய்த காரியம் மிகச் சரியென்றும் இதை வெகு நாளைக்கு முன்னமே செய்து இருக்க வேண்டும் என்றும்தான் சொல்லுவானே தவிர இன்றைய பார்ப்பனத் தன்மையையும் பணக்காரத் தன்மையையும் ஒருநாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.
அன்றியும் இம்முறையை நாமும், அதாவது நம் நாட்டு மக்களும் அநேகமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இன்றும் கையாடிக் கொண்டுதான் வருகின்றோம். உதாரணமாக இன்றைய சமூக சீர்திருத்தக் கொள்கையோ, ஜாதி ஒழிப்புக் கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ, சுயராஜ்யம் கேட்கும் கொள்கையோ பூரண சுயேச்சைக் கொள்கையோ ஆகியவைகள் எல்லாம் இந்த சமதர்ம பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது இவையெல்லாம் பலத்தை யும், கிளர்ச்சியையும், சண்டித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கொடுக்க இஷ்டமில்லாதவனிடத்தில், இணங்க இஷ்டமில்லா தவனிடத்தில் தட்டிப்பிடுங்குவதோ வலுக்கட்டாயமாய் பறிப்பதோ ஆகிய குறியைக் கொண்டதேயாகும். அதிலும் சுயராஜ்ஜியமோ பூரண விடுதலையோ கேட்பதை விட -அடையக் கைக்கொண்டிருக்கும் இன்றைய முயற்சியைவிட ஜாதி ஒழிப்பது என்பது மிகுதியும் சமதர்மமும் பொது உடைமைத் தன்மையும் கொண்டதாகும்.
ஏனெனில் சுயராஜியமும், விடுதலையும் மனித சட்டத்தை மீறி மனித ஆக்ஷியை மீறி பலாத்காரத்தில் சண்டித்தனத்திலே அடையக் கருதுவதாகும். ஜாதி ஒழிப்பது என்பதோ கடவுள் கட்டளையையும், ஆக்ஷியையும், கடவுள் சட்டத்தையும் மீறி பலாத்காரம் சண்டித்தனம் ஆகியவைகளையும் அதற்கும் மேம்பட்டது ஏதாவது இருந்தால் அதையும் உபயோகப்படுத்தி அடியோடு ஒழிக்க முயற்சிப்பதாகும்.
ஆகவே மனிதன் ஒவ்வொருவனும் இன்று எந்த விதத்திலும் சம தர்மத்தையும், பொது உடமைத் தத்துவத்தையும் அடைய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பது நன்றாய் விளங்கும்.
எனவே, இன்று மனிதன் எப்படியும் சட்டம் மீறிவிட்டான். பலாத்காரத் துக்கும் துணிந்துவிட்டான். ஆனால் அம்மாறுதல்களாலும் துணிவுகளாலும் தோன்றப்படும் எண்ணங்களை மாத்திரம் செய்கையில் செய்ய தன்னால் ஆகுமா ஆகாதா என்று யோசித்துப்பார்த்து தன்னால் ஆகும் என்று நினைக் கின்ற முறைகளை எல்லாம் கையாடிக்கொண்டும் ஆகாது என்பவைகளை மாத்திரம் பிரயோகிக்க முடியாமல் தவித்துக் கொண்டும் இருக்கின்றானே ஒழிய சட்டத்திற்கு பயந்தோ நீதிக்கு பயந்தோ அவை தர்மமல்ல என்று கருதியோ ஒன்றையும் எவனும் செய்யாமல் விட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஆதிக்கத்தில் இருக்கின்றவன் தன் ஆதிக்கம் என்றைக்கும் நிலைத் திருக்க ஒரு சட்டம் செய்து கொண்டிருப்பானேயானால் அடிமைப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, பட்டினியால் கஷ்டப்படுத்தப்பட்டு இருக்கின்றவன் எத்தனை நாளைக்கு அவ்வாதிக்கக் காரன் செய்துகொண்ட அந்த சட்டங்களுக்கு பயந்து அடங்கியிருக்க முடியும்? என்பதை யோசித்துப்பார்த்தால் சட்டத்திற்கு அடங்கி நடந்து வந்த நாள்கள் எல்லாம் முட்டாள்த்தனமாய் வீணில் கழித்த நாள்கள் என்பது எவனுக்கும் விளங்காமல் போகாது. இன்றைய தினம் உலகில் எல்லா ஆதிக் கக்காரனுக்கும் நரகமும் சட்டமும் தன் ஆயுதமாயிருக்கின்றதே தவிர நியாய மும் நீதியும் யாருக்கும் ஆயுதமாயில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
“அன்றியும், சட்டப்படிக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசாங்க ஆதிக்கத்தை அழிக்கக் கருதி சட்டம் மீறுகின்றோம்”. என்பது உலகத்தாரால் குற்றமல்ல, அநீதியல்ல என்று குடிகளாலும், பணக்கார முதலாளிகளாலும் கருதப்படுமானால்
“சுதந்திரத்தை உத்தேசித்து” “விடுதலையை உத்தேசித்து” என்று தங்களுக்கு இஷ்டமில்லாத சட்டத்தை மீறி நடப்பவர்களை தடியால் அடிப்பதும், மண்டையை உடைப்பதும் குற்றமல்ல அநீதியல்ல என்று ஒரு அரசாங்கத்தால் கருதப்படுமானால்
இரு கூட்டத்தின் பயனாலும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட நேர்ந்தும் அதைப்பற்றி கவலையில்லாமல் பழய காரியங்களையே தொடர்ந்து நடத்துவது குற்றமில்லை அநீதி அல்ல என்று கருதப்படு மானால்,
“உயர்ந்த ஜாதிக்காரன் என்பவனை ஒழிப்பதும், பணக்காரன் என்பவனை கொள்ளை அடிப்பதும் கடன் கொடுத்தவன் என்பவனின் ஆதாரத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துவதும் ஏராளமான தானியம் வைத் திருப்பவனை கட்டிப்போட்டு தானியங்களை அள்ளிக்கொண்டு போய் வயிற்றுப்பசியை தீர்த்துக் கொள்வது” என்பதும் அந்நாட்டு ஏழை மக்களுக் குப் பட்டினியால் வாடுகின்றவர்களுக்கு, இழிவுபடுத்தப் பட்டவர்களுக்கு எப்படி குற்றமாகுமென்பது நமக்குத் தோன்றவில்லை.
அன்றியும் முன்னே குறிப்பிட்ட காரியங்கள் எல்லாம் அதாவது சுயராஜியம் பூரண சுயேச்சை என்பவைகள் கேட்கப்படுவதும், கொடுக்க முடியாது என்று சொல்லப்படுவதும் தின்றுகொளுத்து பேராசையால் பலத் திமிரால் நடைபெறப்படுபவைகளாகும். ஆனால் பின் குறிப்பிட்ட செய்கை கள் அதாவது பீரார் ஏழைமக்கள் செய்த காரியம் இழிவைப் போக்கவும், பட்டினியால் மடிபவர்களின் ஜீவனத்திற்கு ஆகவும் மனிதன் செய்து தீரவேண்டிய இயற்கை உணர்ச்சியைப்பற்றிய தாகுமென்றே நமக்குப் படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் கையில் வலுத்தவன் என்கின்ற முறையிலும் உயிருக்குத் துணிந்தவன் என்கின்ற முறையிலும், எவனுக்கும் எதுவும் செய்ய இன்றைய உலகத்தில் பாத்தியமிருக்கின்றதை நம்மால் மறுக்கமுடியவில்லை. ஆகவேதான் அது இன்று உலகதர்மமா யிருந்தும் வருகின்றது. ஆகவே அது தப்பு, இது தப்பு என்று பேசுவதெல்லாம் கையா லாகாத தன்மையாகதான், வீண் பேச்சாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய அவற்றில் சத்தியம் இருப்பதாய் காணப்படவில்லை.
உதாரணமாக பரமார்த்திகம் என்று சொல்லப்படுவதும் 50 கோடி மக்கள் பின்பற்றுவதும் பூஜிப்பதுமாயிருக்கும் பைபிள் என்னும் கிறிஸ்தவ வேதத்தைப் பறிமுதல் செய்வதும், அதைப் படிப்பவர்களைத் தண்டிப்பதும், இவற்றிற்கு எதிராய் இருப்பவர்களை தூக்கில் போடுவதுமாய் இருக்கும் தன்மை இன்று உலகில் நடக்கப் பலர் பார்க்க கேட்க்க சர்வ சாதாரண மாகிவிடவில்லையா?
அதுபோலவே சுமார் 30 கோடி மக்கள் பின்பற்றுவதும், பூஜிப்பதும், கடவுள் வாக்கு என்று சொல்லப்படுவதுமான குர்ஆன் என்னும் இஸ்லாமிய வேதவாக்கியங்கள் பறிமுதல் செய்யப்படுவதும், தடுப்பவர்களை தண்டிப்பதுமான தத்துவம் தாண்டவமாடுவதையும் பார்க்கவும், கேட்கவும் சாதாரணமாகி விடவில்லையா?
இவைகள் மனித சுதந்திரத்திற்காகவும், மனிதன் முற்போக்கிற்காகவும் என்று உண்மையாய் கருதியே செய்யப்பட்டு வருவதாக அநேகர் உணர்ந்து திருப்தி அடைந்தும் ஆய்விட்டதே.
உலகத்தில் இவைகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட பின்பு ஒருவன் பொருளை – ஒருவன் கஷ்டத்தை – ஒருவன் சட்ட சாக்காலும் தந்திர சக்தியாலும் அனுபவிப்பதென்றால் இனி அந்தத் தன்மைகள் எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்?
இனிமேல் அதாவது இன்றையதினம் எவ்வளவு பலவீனமான ஒரு அரசாங்கமாய் இருந்தாலும் அவ்வரசாங்கத்தை அழித்து வேறு அரசாங் கத்தை ஸ்தாபிப்பது என்கின்ற கொள்கையில் யார் என்ன திட்டம் ஏற் படுத்திக் கொண்டு வேலை செய்தாலும் இனி ஒருக்காலமும் அதில் எவரும் வெற்றி பெற முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் அது ஒரு கூட்டத்தாரிடம் உள்ளஆதிக்கத்தை மற்றொரு கூட்டத்தார் கைப்பற்றி ஆட்சி செலுத்தப்பார்ப்பதாகுமே ஒழிய அது பொதுஜனங்களுக்கு பயன்படுவதாகாது.
ஆதலால் அம்மாதிரி முயற்சியில் ஆக்ஷியில் பங்குபெற ஆசைப் படுபவர்களும், அவர்களது சிப்பந்தி சிஷ்யகோடிகளும் அவர்களால் ஏமாற்றப்பட்டவர்களும்தான் அதில் இனி ஈடுபட முடியுமே தவிர உண்மை யான பொது ஜனங்கள் ஒரு காலமும் ஈடுபடமாட்டார்கள்.
அப்படிக்கில்லாமல் அதிகமாய் அளவுக்கும், தகுதிக்கும் மீறி அனுப விப்பவனிடம்-வைத்துக் கொண்டிருக்கின்றவனிடம் உள்ளது எதையும் கைப்பற்றுவது, அதை எல்லோருக்கும் சமமாய்க் கொடுப்பது என்கின்ற கொள்கை மீது எந்தத் திட்டம் வைத்து வேலை செய்தாலும் எல்லாப் பொது மக்களும் அதில் சேரக்கூடும். சேருவதனால் பயனும் பெறக்கூடும். ஆனால் அது சாத்தியமா என்று பலர் கருதக்கூடும். இந்த இடத்தில் சாத்தியமா என்று கருதுவதற்கு முன் இது நியாயமா அல்லவா என்று யோசித்துப் பார்த்து நியாயம் தான் என்ற முடிவுக்கு வந்தார்களேயானால் அவர்களுக்கு உண்மை யான உணர்ச்சி இருக்குமானால் பிறகு அங்கு இது சாத்தியமா? என்கின்ற கேள்விக்கோ, யோசனைக்கோ இடமே இருக்க நியாயமில்லை. இருந்தாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நம்மை அறியாமலே நமக்கு அந்த நியாய உணர்ச்சி வெற்றியடையச் செய்துவிடும். அன்னிலையில் – அத் தருமத்தில் இன்று வெற்றி பெற்றதேசங்கள் எல்லாம் இது சாத்தியமா என்று கருதிப்பார்த்து வெற்றி பெற்றவை அல்ல. மற்றெப்படி என்றால் நியாயமா என்று பார்த்து நியாயம்தான் என்று மனப்பூர்த்தியாய் திருப்திப்பட்ட பின்பேயாகும். ஆதலால் இங்கு சாத்தியமா என்ற யோசனைக்கு சிறிதும் வேலையில்லை.
ஆகவே இன்று வெள்ளைக்கார அரசாங்கம் விட்டால், அடுத்த அரசாங்கம் நமது சமதர்ம அரசாங்கமும் பொது உடமை அரசாங்கமு மாகவே தான் இருக்கவேண்டுமே ஒழிய வெறும் ராமராஜ்ஜிய – சுயராஜ்ஜிய – மோக்ஷ நரகப் பூச்சாண்டி ராஜ்ய அரசாங்கமாக இருக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே அந்த சேதியை ஆதாரமாய் வைத்து இதை எழுதினோம்.
குடி அரசு – தலையங்கம் – 04.01.1931