காந்தியின் திண்டாட்டம்
உயர்திரு காந்தியவர்கள் லண்டன் மகாநாட்டிற்கு வருவதாக சர்க்காரிடம் உறுதிகொடுத்து ராஜிசெய்து கொண்டதிலிருந்து அவர்பாடு மிகத் திண்டாட்டமாகவேபோய்விட்டது. ஏனெனில் தான் வட்டமேஜை மகாநாட்டிற்கு போனால் என்ன செய்வது என்பது அவருக்கே புரியாததாய் இருக்கின்றதுடன் இவரது அபிப்பிராயத்தை ஆதரிக்க அங்கு போதிய ஆட்கள் கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகமாகி விட்டது. அரசியல் சுதந்திரத்தை விட சீர்திருத்த அதாவது சமத்துவ சுதந்திர உரிமை ஆகியவை கேட்கும் வேலையே அங்கு தலை சிறந்து விளங்கப் போகின் றது. ஆதலால் திரு காந்திக்கு அங்கு செல்வாக்கு இருக்கமுடியாது. திரு காந்தியை லங்காஷயர் உள்பட அநேக ஊர்காரர்கள் கூப்பிடுவதாயிருந் தாலும் அவர்கள் இவரைப் பார்க்க ஆசைப்படுவார்களே ஒழிய இவர் பேச்சைக் கேட்பவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இது அவருக்கே தெரியும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைப் போட்டு போகாமல் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றார் என்பதாகவே நாம் கருதுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை அவர் போவதும் போகாததும் ஒன்றேதான். ஆனால் அவரைப்பொறுத்தவரை அவர்போகாமல் இருப்பதே அவருக்கு நன்று. இது அவருக்கும் தெரியும். ஆதலால் அநேகமாய் அவரும் போகமாட்டார் என்றுதான் கொள்ள வேண்டும்.
குடி அரசு – கட்டுரை – 19.07.1931