ஈரோடு முனிபாசிலிட்டியும், சென்னை அரசாங்கமும்
ஈரோடு மகாஜனங்கள் கண்டனம்
ஈரோடு முனிசிபல் டவுனுக்கு எலக்ட்ரிக் விளக்குகள் போடும் விஷயமானது 1922-ம்´ முதல் ஈரோடு முனிசிபல் கவுன்சில் ஆலோசனையிலிருந்து வந்ததாகும். 1928 ம் வருஷம் முதல் இவ் விஷய மாய் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு கவர்ன்மெண்டாருடன் கடிதப் போக்குவரவுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது மைசூர் கவர்ன் மெண்டார் மேட்டூருக்கு மின்சாரசக்தி சப்ளை செய்துவந்தபடியினால் மேட்டூர் ஹெட்வர்க்ஸ்களிலிருந்தே ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மின்சார சக்தி கொண்டுவர வேண்டுமென்ற ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் பிரேரே பனையானது உடனே மதறாஸ் கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பிறகு ஈ.மு.கவுன்சில் மைசூர் கவர்ன்மெண்டாருடன் இது விஷயமாய் கடிதபோக்குவரவுகள் செய்து மைசூர் கவர்ன்மெண்டு எலக்டிரிக்கல் இன்ஜினீயரவர்களை சந்தித்துப் பேசி முடிவு செய்யும் பொருட்டு ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஒரு கமிட்டியை நியமுகம் செய்தார்கள். அந்தக் கமிட்டியார் மைசூர் கவர்ன்மெண்டுடன் கலந்து பேசிய பிறகு அவ்விஷயம் அனுகூலமாய் முடிவுபெறும் நிலைமையில் இருக்கையில் மதறாஸ் கவர்ன்மெண்டார் இவ்விஷயத்தில் பிரவேசித்ததின் பேரில் திடீரென்று மைசூர் கவர்ன்மெண்டார் மின்சாரசக்தி சப்ளை செய்ய மறுதளித்து விட்டார்கள். பின்பு ஈரோடு கவுன்சில் தாங்களே இயந்திரம் வைத்து மின்சார சக்தியை உற்பத்தி செய்து வினியோகிப்பது நலமெனக் கருதி மெட்றாஸ் மெஸர்ஸ்சாரிஅண்டு சாரிலிமிடெட் கம்பெனியாரிடம் கேட்கத் தீர்மானித்து அவர்களை யோசனை கூறும் இன்ஜினீயர்களாக வைத்துக் கொண்டு இதற்கு வேண்டிய பிளான்களும் எஸ்டிமேட்டுகளும் தயார் செய்யும்படி முனிசிபல் சங்கத்தார் அவர்களுடன் ஏற்பாடு செய் தார்கள். இது கவர்ன்மெண்டாருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் இந்த வேலை களை செய்து முடிப்பதற்காக ரூ. 2 1/2 லக்ஷம் கடன் கொடுக்கும்படி சர்க்கா ருக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். அதன்மீது கவர்ன்மெண்டு இடை வருஷத்தில் கடன் கொடுக்கக்கூடிய நிலைமையில் இல்லை என்பதாக தெரிய வந்ததால், கோயம்புத்தூர் டிஸ்திரிக்ட் போர்டாரிடம் கடன் வாங்குவதற்கு கவர்ன்மெண்டார் தங்களது 12.4.29 தேதிய 13546-1 டு & ஆ மிமோராண்டத்தின் மூலம் கடன் வாங்கிக்கொள்ள உத்திரவும் அளித் தார்கள். அதன் பேரில் கோயமுத்தூர் டிஸ்திரிக்ட்போர்டாரவர்களை ஈரோடு முனிசிபாலிட்டியார் கடன் கேட்டதில் அவர்கள் வருஷம், 100க்கு 5ரூ. வீதம் வட்டி கொடுத்து 20 வருஷத்தில் கடன் தொகையை திரும்பக் கொடுத்து விடவேண்டுமென்ற நிபந்தனையின்பேரில் கடன் கொடுக்க சம்மதித் தார்கள். உடனே 7.5.29ல் இது விஷயம் கவர்ன்மெண்டுக்கு தெரிவிக் கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் கோரப்பட்டது. இதற்குள் அதோடு கூடவே இதற்கு வேண்டி பிளான்களும் எஸ்டிமேட்டுகளும் சங்கத்தாரின் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களால் தயாரிக்கப்பட்டு பிளான் எஸ்டிமேட்டு டன் லைஸென்சுக்காக ஒரு அப்ளிகேஷனும் கவர்ன்மெண்டாருக்கு அனுப்பப்பட்டது. இதன்பேரில் இரண்டுமாதம் பொறுத்து “முனிசிபாலிட்டி யாருக்காவது அல்லது வேறு யாதாமொரு கம்பெனிக்காவது லைஸென்ஸ் கொடுத்து மின்சார சக்தியை ஈரோட்டிற்கு கொண்டு வந்து சில்லரையில் செலவு செய்யும் விஷயம் ஆலோசனையிலிருந்து கொண்டிருப்பதாய் ஹைட்ரோ எலக்ட்ரிக் சீப் இன்ஜினீயரிடமிருந்து தமக்குத் தகவல் வந்திருப்பதாயும் அதனால் ஈரோடு கவுன்சில் அனுப்பி வைத்த பிளானும் எஸ்டிமேட்டும் பரிசீலனை செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது” என்று கவர்ன்மெண்டு எலக்டரிக் இன்ஸ்பெக்டரிடமிருந்து 9.9.29 ல் ஒரு கடிதம் வந்தது.
விஷயம் இப்படியாக இருக்கையில் கல்கத்தா ஆக்ட்டேவியஸ் ஸ்டீல் கம்பெனியார் என்கிற ஒரு வெள்ளைக்காரரிடமிருந்து தாங்கள் ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் மின்சாரசக்தி சப்ளை செய்ய கவர்ன்மெண் டுக்கு அப்ளி கேஷன் செய்திருப்பதாயும் தங்கள் அப்ளிகேஷனை ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஆதரிக்கவேணுமாயும் கோரிஒரு லெட்டர் வந்தது. உடனே முனிசிபல் கவுன்சில் தங்கள் கவுன்சிலுக்கு இல்லாமல் மற்ற அன்னியர்களுக்கு கவர்ன்மெண்ட் லைஸென்ஸ் கொடுக்கக்கூடாதென்று கவுன்சில் தீர்மானித்து தங்களுடைய ஆnக்ஷபனையை மதராஸ் கவர்ன் மெண்டாருக்கும் ஆக்ட்டேவியஸ் கம்பெனியாருக்கும் அனுப்பி விட்டார் கள். இது இப்படி இருக்க முன் அனுப்பிய விண்ணப்பமானது அதாவது கடன் வாங்குவதற்கு அங்கீகாரம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்ட விஷய மானது கவர்ன்மெண்டாரிடம் அதிகக் காலமாக பைசல் செய்யப்படாம லிருந்து வந்தது கவனிக்கப்பட்டு கவர்ன்மெண்ட்டின் 4.10.29ந் தேதி போட்ட 30983-1- ஊ.டு & ஆ நெம்பர் மிமோராண்டத்தில் “கடன் அப்ளிக்கேஷன் கெஜட்டில் பிரசுரம் செய்யப்படும். சேர்மேன் லைசென்சுக்கு அப்ளிகேஷன் செய்ய வேண்டும்” என்று கவர்ன்மெண்டாரால் தெரிவிக்கப்பட்டது.
கவுன்சிலால் லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வேண்டிய முயற்சிகள் எடுத்து மசோதா லைசென்ஸ் வகையறா அச்சடிக்கப்பட்டது.
அதோடுகூடவே தீவிரமாய் வேலை துவக்குவதற்கு வேண்டிய கடிதப் போக்குவரவுகளும் செய்து கொண்டிருக்கையில் மறுபடியும் திடீரென்று கவர்ன்மெண்டார் தாங்களே ஈரோட்டுக்கு மின்சார சக்தி சப்ளை செய்யத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதன் பேரில் சங்கத்தார் சர்க்காராரே அவ்விதம் மின்சார சக்தி சப்ளை செய்வதாயிருந்தால் தாங்கள் எடுத்துக் கொள்ளுவதாகத் தெரிவித்து விட்டார்கள். என்றாலும், இதற்குள் ளாக கவுன்சிலால் மசோதா லைசென்ஸ் அச்சடிக்கும் விஷயமாயும், பேப்பர்களில் பிரசுரம் செய்யும் விஷயமாயும், இன்னும் லைசென்ஸ் பெறுவதற்கு வேண்டிய முன்நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும் விஷயமாயும் ஏராளமான பணச் செலவு செய்யப்பட்டுவிட்டது.
மெசர்ஸ் சாரி அண்டு சாரி லிமிடெட்டுக்கு பிளான்களும், எஸ்டி மேட்டுகளும் தயார் செய்வதற்கும், மசோதா லைசென்ஸ் அச்சடிப்பதற்கும், மற்றும் இதர செலவுகளும் நீங்கலாக லைசென்ஸ் பீசும் பிரசுரச் செலவும் மாத்திரம் ரூ.1000 ஆகி விட்டது. அப்புறம் கடன் வாங்குவதற்கு அங்கீகாரம் கொடுக்கும் விஷயம் கவர்ன்மெண்டாரால் பைசல் செய்யப்படாமல் ரொம்பகாலம் பாக்கியிலிருந்து கொண்டிருந்தது. கடைசியாக “மேட்டூரி லிருந்து மொத்தமாய் மின்சார சக்தி சப்ளை செய்யும் விஷயம் முடிவாகத் தீர்மானம் செய்யும் வரை கடன் வாங்கும் விஷயம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு” மென்று 7.2.30ல் 4446ம் நெம்பர் மிமோராண்டத்தின் மூலமாய் கவர்ன்மெண்டாரவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இது ஒரு புறமிருக்க முன் ஹைடிரோ எலக்டிரிக்கல் டிபார்டுமெண்டு சீப் எஞ்சினீயரால் அனுப்பப்பட்ட ஸ்கீமானது 1930 மே மாதத்தில் சாங்கிஷன் செய்யப்பட்டுவிட்டது. ஈரோடு கவுன்சிலர்கள் தங்களுக்கே லைசென்ஸ் கொடுக்கவேண்டுமென்று கவர்ன்மெண்டாரை கேட்டுக் கொண்டிருக்கும்போதே தாங்கள் இவ்வித வேலை செய்வதில் மிக்க அனுபவமுள்ளவர்கள் என்றும், கவுன்சில் தீர்மானத்தை புனர்ஆலோசனை செய்யவேண்டு மென்றும், மறுபடியும் வெள்ளைக்கார கம்பெனியாகிய கல்கத்தா மெஸர்ஸ் ஆக்ட்டேவியஸ் ஸ்டீல் கம்பெனியாரிடமிருந்து கவுன்சிலுக்கு ஒரு லெட்டர் வந்தது. கவுன்சிலால் தாங்கள் அவ்விதம் செய்ய முடியாதென்று மறுபடியும் தீர்மானித்து கம்பெனியாருக்குத் தெரிவித்து விட்டார்கள். மறுபடியும் 1930 சூன் மாதம் 24-ந்தேதி கூடிய முனிசிபல் சங்கத்தில் ஒரு அயல் கம்பெனிக்கு லைசென்ஸ் கொடுப்பதை ஆட்சேபித்தும், தக்க லாபம் கிடைக்கக்கூடிய ஒரு காரியத்தைச் செய்வதற்குக் கவர்ன்மெண்டார் ஒத்தாசை செய்யவேண்டு மென்றும் தீர்மானங்கள் பாஸ் செய்யப்பட்டன. மின்சார சக்தியை மொத்தத்தில் வாங்கிப் பிரித்துக் கொடுப்பதற்காவது லைசென்ஸ் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்பட்டது. தாங்கள் உடனே மொத்தத்தில் மின்சார சக்தி பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பொருட்டு வேண்டிய வேலைகளை உடனே துவக்க லைசென்ஸ் கொடுக்க வேணுமாய் கவர்ன்மெண்டாரைப் பன்முறையும் கேட்டுக் கொள்ளப் பட்டது. இத்தருவாயில் கடன் கேட்கப்பட்ட தொகையை 1930 செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் 100க்கு 51/2 வீதம் வட்டி கொடுக்கவேண்டுமென்று கோயமுத்தூர் ஜில்லா போர்டார் தெரிவித்தார்கள். இதை உடனே கவர்ன்மெண்டாருக்குத் தெரிவித்துக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்கும் வீதம் உடனே கடன் வாங்கிக் கொள்ளும்படி சாங்கிஷன் கொடுக்கவேணுமாய்க் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது விஷயம் ஆலோசனையிலிருப்பதாக 15-2-30ல் கவர்ன்மெண் டார் தெரிவித்தார்கள். திரும்பவும் உடனே கவுன்சிலுக்கே லைசென்ஸ் கொடுக்க வேண்டுமென்றும் அவ்விதம் கொடுக்காவிட்டால் கவுன்சிலுக்குப் பலவிதமான வகையில் பொருள் நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுமென்றும் கவர்ன்மெண்டாருக்கு விபரமாக எழுதப்பட்டது.
இவ்வளவு செய்தும் சென்னை அரசாங்கமானது பொது ஜன அபிப்பிராயத்தை லட்சியம் செய்யாமலும் கவுன்சிலர் வேண்டுகோளைச் சிறிதும் கவனிக்காமலும் “கல்கத்தா கம்பெனியார் மிகுந்த அனுபோக சாலிகள். சரியாய் நடத்துவார்கள் என கவர்ன்மெண்டார் கருதுகிறார்கள்” எனக்குறிப்பிட்டு விட்டு கல்கத்தா மெஸர்ஸ் ஆக்ட்டேவியஸ் ஸ்டீல் கம்பெனியாருக்கு லைசென்சு கொடுத்துவிட்டதாக 11-12-30-ந் தேதி போட்ட 11034 / நு 30-7 உத்திரவு கிடைத்தது.
எனவே மேல்கண்ட இந்த விஷயங்கள் தான் ஈரோடு முனிசிபா லிட்டியின் மின்சாரத்திட்ட விஷயமான வெளிப்படையான சரித்திரமாகும். (இனி இரகசியமான சரித்திரங்கள் பல உண்டு. அவற்றை பகிஷ்கார காலத்தில் வெளியிடுவோம்.)
ஆகவே, இதை அதாவது இந்த வெளிப்படையான சரித்திரத்தையே கவனித்து பார்ப்போமானால் சென்னை அரசாங்கமானது இவ்விஷயத்தில் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது விளங்கும். நாம் சென்னை அரசாங்கம் என்று சொல்லுவதானாலும் சென்னை அரசாங்கத்தில் இந்த இலாகாவுக்கு தலைவர்களாயிருப்பவர்கள் இந்திய கனவான்களேயாகும். ஒருவர் ஆந்திர தேசத்து ஜனப் பிரதிநிதி மந்திரி யாவார். மற்றவர் கேரள தேசத்தவராயிருந்தாலும் சர்க்கார் உத்தியோ கஸ்தர் என்பதாகச் சொல்லக்கூடுமானாலும் சர்க்காருக்கேப் பொறுப்பா னவர் என்று சொல்வதானாலும் அந்த ஸ்தானமும் ஜனப்பிரதிநிதிகளுக்கு என்று ஒதுக்கி வைத்த ஸ்தானமேயாகும்.
ஆகவே ஸ்தலஸ்தாபன இலாகா மந்திரியும், சட்ட மெம்பரும் என்ற இரு இந்திய கனவான்கள் ஆதிக்கத்தில் உள்ள இந்த ஈரோடு மின்சாரதிட்ட காரியமானது இந்த நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுகூலமாயில் லாமல் அதற்கு விரோதமாக ஒரு வெள்ளைக்காரருடைய நன்மைக்கு பயன்படும்படி நடந்து கொண்ட விஷயத்தை கண்டிக்காமலிருக்க முடிய வில்லை.
அன்றியும், ஈரோடு பொதுஜனங்கள் பொதுக்கூட்டம் கூடி அரசாங் கத்தைக் கண்டித்தும் செய்த தீர்மானத்தை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். சென்னை அரசாங்க சட்டசபை அங்கத்தினர்கள் உண்மையான ஜனப்பிரதி நிதிகளாயிருப்பார்களேயானால் கண்டிப்பாய் இந்த அரசாங்கத்தின் மீதோ அல்லது இதற்கு ஆஸ்பதமா யிருந்த அதிகாரிகள் மீதோ கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியேயிருக்க வேண்டியவர்களாவார்கள். என்ன செய்வது! பாவம்!! ஒவ்வொரு ஜனப்பிரதி நிதி என்பவர்களும் வேறு எவ்வளவோ காரியத்தை உத்தேசித்து பெரும் பெரும் தொகைகள் செலவு செய்து ஜனப்பிரதிநிதிகளாயில்லாமல் பணப் பிரதிநிதிகளாகவும் தங்கள் தங்கள் சுயநலப்பிரதிநிதிகளாகவும் சென்று இருப்பவர்கள் இம்மாதிரி காரியத்திற்காக எப்படி தங்கள் பிரதிநிதித்துவ உரிமையை செலவழிக்க முடியும்?
ஆகையால்தான் ஈரோடு மகாஜனங்கள் அரசாங்கத்தையும், அரசாங்க இந்திய மெம்பரையும் ஜனப்பிரதிநிதி மந்திரியையும், ஜனப்பிரதி நிதி சட்டசபை அங்கத்தினர்களையும் நம்பாமல் ஈரோடு மகாஜனங்க ளாகிய தங்களையே நம்பி தீர்மானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி ஈரோடு மகாஜனங்களும் இந்திய மக்களேயாதலால் இந்திய பொதுமக்கள் என்பவர்கள் மற்ற காரியங்களில் நடந்து கொள்வது போலவேதான் அல்லது அவர்களது வழிகாட்டிகள் என்பவர்களும் பிரமுகர்கள் என்பவர் களும் நடந்து கொள்வது போலவேதான் நடந்து கொள்ளுவார்களோ அல்லது தங்கள் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் உத்தேசித்து தீர்மானம் செய்தபடி நடந்து கொள்ளுவார்களோ என்பது பலர் சந்தேகிக்கக் கூடியதானாலும் நமக்கு இவ்விஷயத்தில் இவ்வூர் பொதுமக்களிடமும் சிறப்பாக பிரமுகர்களிடமும் பூரண நம்பிக்கை இருக்கின்றதென்றே சொல்லுவோம்.
ஏனெனில், தங்களையே நம்பிய ஜனங்கள் தங்களாலேயே நம்பிக் கைத் துரோகம் அடைய அருகதை ஆகிவிட்டால் மற்றபடி அன்னியர் களை நம்பினவர்கள் நம்பிக்கை மோசமடைவது அதிசயமல்ல. ஆகை யால், எந்தக் காரணம் கொண்டும் இந்த அரசாங்கமும் ஜனப்பிரநிதிகளும் அனியாயத்திற்கும், கொடுமைக்கும், நம்பிக்கை துரோகத்திற்கும் பரிகாரம் ஏற்படாதவரை தங்களையே நம்பி இருக்கும் ஈரோடு மகாஜனங்கள் கண்டிப்பாய் மின்சார சக்தியை வாங்கி உபயோகித்துக் கொள்ளக்கூடாது என்றும், சர்க்காரார் ஒரு சமயம் முனிசிபாலிட்டியார் மீது ஆதிக்கம் செலுத்தி முனிசிபாலிட்டியாரை கட்டாயப்படுத்தினாலும் ஈரோடு முனிசிபாலிட்டியார் அதற்கு இணங்கி மின்சாரத்தை நமது முனிசிபாலிட் டிக்கு உபயோகித்துக் கொள்ளுவார்களேயானால் கண்டிப்பாய் முன்சிபாலிட்டியுடனும் ஒத்துழைக்கக்கூடாது என்றும் செய்துள்ள தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவேண்டியது பொதுமக்கள் கடமையாகும்.
மற்றும் ³ வெள்ளைக்காரக் கம்பெனியார் இதற்காக ஏற்படுத்தி இருக்கும் புதிய கம்பெனியிலும் யாரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் தீர்மானத்தின் ஒரு பாகமாதலால் அதையும் அமுலுக்கு கொண்டு வரவேண்டியது யோக்கியமாகும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 19.07.1931