திரு. காந்தியின் உண்மைத் தோற்றம்

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

உயர்திரு. காந்தியவர்கள் மக்கள் கள்ளு, சாராயம் குடிக்கப்பட வேண்டியதின் உண்மையான அவசியத்தைப் பற்றியும், அதை எப்படி, எப்போது நிறுத்த முடியுமென்பதைப் பற்றியும், மற்றும் தான் கேட்கும் சுயராஜியத்தின் தத்துவத்தைப் பற்றியும் தமது அபிப்பிராயத்தை விளக்க மாக வெளியிட்டிருக்கிறார்.

இந்த அபிப்பிராயங்களை அவர் பரோடா சமஸ்தானத்திற்கு இம் மாதம் 12 – ந் தேதி திருவாளர்கள் வல்லபாய் பட்டேல், அப்துல் கபூர்கான் ஆகியவர்களுடன் சென்ற பொழுது அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்புக் குப் பதில் சொன்ன முறையில் வெளியிடப்பட்டதாகும்.  அதாவது,

  1. “கதரில்லாமல் வெறும் மது விலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது.
  2. கள்ளு,சாராயக்கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலை யல்ல.
  3. குடிகாரர்கள் தாங்கள் குடிக்கும் பழக்கத்தை அவர்களாகவே விட்டுவிட்டாலொழிய, திருட்டுத்தனமாய் கள், சாராயம் உற்பத்தி செய்து, எப்படியாவது குடித்துத்தான் தீருவார்கள்.
  4. கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழு திருப்பது போலவே திருட்டுத்தனமாய் கள்ளு, சாராயம் விற்பனை யாகிக் கொண்டு தானிருக்கும்.
  5. குடி வழக்கம் நிற்க வேண்டுமென்றால் குடிகாரர்களுக்குக் கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான் நிறுத்த முடியும். இல்லை யாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விடமாட்டார்கள்.
  6. பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழி லாளர்களுக்குத் தங்களது களைப்பையும், ஆயாசத்தையும், தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாயிருக்கிறது.
  7. நான் தென்னாப்பிரிக்காவிலிருந்த பொழுதும், வேலைசெய்து களைத்துப் போனவர்களுக்கு வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறேன்.
  8. அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலி களுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக் குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாகக் கொடுத் திருக்கிறேன்.
  9. மிருகங்களைப் போல் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மதுபானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது.
  10. தங்கள், தங்கள் வீடுகளிலேயே ஏதாவது ஒரு தொழில் செய் கின்ற தொழிலாளிகள் தான் எளிதிற் குடியை விட்டுவிட முடியும்”

என்று பேசிவிட்டுத் தனது சுயராஜியத்திட்டத்தைப் பற்றிப் பேசியிருப்ப தாவது.

குடிசைத் தொழில்

  1. “கிராமவாசிகளுக்கு அவர்கள் தங்கள் வீட்டிலேயே கை இராட்டினத்தால் நூல் நூற்றல், தறி போட்டு நெசவு நெய்தல், செருப்புத் தைத்தல், பால், தயிர், வெண்ணை ஆகியவைகளைச் செய்தல், மற்றுமிது போன்ற வேலைகளை மீண்டும் புதுப்பிப்பதின் மூலமே கிராம ஜனங்களைச் செல்வவான்களாக்க வேண்டும்.
  2. இந்தத் தொழிலால் வரும் வரும்படியே அவர்களுக்குப் போது மானது.
  3. மற்றபடி இவர்கள் பம்பாய் வர்த்தகர்களைப் போல பெரும், பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டியதில்லை.
  4. அவர்களதுபணப்பெட்டிகளில் வெள்ளி நாணயங்கள் கொஞ்ச மாகவே இருக்க வேண்டும்.
  5. இது தான் சுயராஜ்ய வேலைத்திட்டமாகும்.
  6. சென்ற வருடம் நாம் செய்த வேலை இந்த சுயராஜ்யத்திற்கு அஸ்திவாரமானது” என்று பேசியிருக்கிறார்.

இந்த விபரங்கள் இம்மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்ட தினசரிப் பத்திரிகைகளாகிய “சுதேசமித்திரன்” 5-வது பக்கம் 2- வது கலத்திலும், “திராவிடன்” 4-வது பக்கம் 3-வது கலத்திலும் 12-ம் தேதி தமிழ்நாடு 8-வது பக்கம் 4-வது கலத்திலும் 12-ந் தேதி “ஹிந்து” 8- வது பக்கம் 2-வது கலத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே திரு. காந்தி அவர்கள் கள்ளு,சாராயம் குடிப்பவர்களின் அனுபவத்தைச் சொல்லி அதை யொழிக்கக் கண்டுபிடித்திருக்கும் திட்டங்களென்ன வென்றால் “பெரிய தொழிற் சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள், தங்கள் களைப்பையும், ஆயாசத்தையும், போக்கிக் கொள்ளுவதற்கு அவர்கள் கள், சாராயம் குடித்துத் தானாக வேண்டும் – குடித்துத்தான் தீருவார்களென்பதோடு, அவர்களுக்கது வேண்டியதாகவு மிருக்கின்றது” என்பதாகவும் முடிவுகட்டி, தொழில் செய்து களைப்படைந்த மக்களுக்குத் தானே சாராயமும் வாங்கி நேரிலேயே கொடுத்திருப்பதாகத் தனது சுய அனுபோகத்தையும் சொல்லியிருக்கிறார்.

இந்தப்படி இவர் சொல்லுவதில் நமக்கு இப்பொழுது ஆnக்ஷ பனையில்லை. ஆனால் கள்ளை நிறுத்துவதின் தத்துவமிப்படி யிருக்கையில் இப்பொழுது தொண்டர்களென்பவர்களை ஏவிவிட்டு, கள்ளு, சாராய கடை களண்டைப் போய் நின்று கொண்டு, மறியல் செய்யும்படி சொல்லுவது எதை யுத்தேசித்து என்றுதான் கேட்கின்றோம்.

“குழந்தைகளிடம் பிரியமிருப்பவர்களுக்கு அக்குழந்தைகளது மலத்தினிடமும் அசிங்கம் தோன்றுவது இல்லை” என்பது போல் மகாத்மா விடமிருக்கும் – இருந்து தீர வேண்டிய “பக்தி”யினால், சில தொண்டர்கள வரது வார்த்தைகளின் யோக்கியதையையே உணர முடியாமல் போக வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.

மதுவிலக்கு செய்வதானது மக்கள் ஒழுக்கத்தையும், சன்மார்க்கத் தையுமுத்தேசித்தேயொழிய, அரசியல் காரணங்களுக்காக வல்ல வென்று திரு. காந்தியாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றது.  அப்படி யிருக்க இப்போது செய்யப்படும் கள்ளுக்கடை மறியலானது சன்மார்க்கத்திற்கு அதாவது மக்களை கள், சாராயக் குடியிலிருந்து விலக்குவதற்கு அடியோடு பயன்படாதென்று மனதாரத் தெரிந்த பிறகும் கள்ளுக்கடை மறியல் களெதற்காக நடைபெறச் செய்து வருகின்றன? என்பது ஒவ்வொரு வரும், முக்கியமாய் யோசித்துப் பார்க்க வேண்டிய வேலையாகும்.

இது ஒரு புறமிருக்க, குடியொழிப்பதென்கின்ற காரணத்தின் பேரில் திரு. காந்தியவர்கள் சொல்லும் மற்றொரு யோசனை எவ்வளவு மோசமான   தாகயிருக்கின்றது என்பதையும், பொது மக்களுணர வேண்டுமென்று விரும்புகின்றோம்.

அஃதென்னவெனில், ஒரு தொழிலாளி இயந்திரத் தொழிற் சாலையில் வேலை செய்தால் அவனுக்கு அதிக களைப்பும், ஆயாசமு மேற்படு மென்றும், அப்போது அவ்வாயாசத்தை தீர்த்துக் கொள்ள அவனுக்குக் கள்ளு, சாராயம், அவசியமாகத்தானிருக்குமென்றும், இதற்கு மறியல் செய்வதால் பலன் ஏற்படாதென்றும், ஒவ்வொருவனும். அவனவன் வீட்டிலேயே ஏதாவதொரு தொழிலைச் செய்தால்தான் அவனுக்குக் களைப்பு இருக்க முடியாதென்றும், அப்பொழுது தான் அத்தொழிலாளி குடிக்கா மலிருக்க முடியுமென்றும் சொல்லுகிறார்.

இது, தொழிலாளர் ஒரு பக்கம் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தால் அவர்களொன்று கூடி முதலாளிகளுக்காபத்தை யுண்டாக்கி விடுவார் களென்றும், தொழிலாளிகள் தங்களுடைய நிலைமையை யுயர்த்திக் கொள்ள யோசனை செய்து, தொழிலாளித் தன்மையை ஒழித்து விடுவார்களென்றும் பயந்து கொண்டு, முதலாளிகளுக்கனுகூலமாகவும், தொழிலாளிகளின் முன்னேற்றத்திற்கு விரோதமாகவும், அதாவது வர்ணாச்சிரமத்தைப் பிரசாரம் செய்யும் சூட்சித்திட்டமே தவிர, மற்றெவ்வித நியாயமோ, நாணையமோ இதிலிருப்பதாக நினைக்க முடிகின்றதா? என்று கேட்கின்றோம்.

ஏனெனில், இன்றைய தினம் கைத்தொழிலாளிகளென்பவர்கள் அதுவுமவரவர்கள் வீடுகளிலிருந்து கொண்டு சொந்தத்திலேயே ஒரு தொழில் செய்பவர்களென்பவர்கள் 100-க்கு 90 பெயர்கள் குடிகாரராகவேயிருக் கிறார்கள். உதாரணமாக நெசவுத் தொழிலீடுபட்ட, தங்களைப் பிராமணர் களென்று சொல்லிக் கொள்ளுபவர்கள் முதற்கொண்டு சகல வகுப்பாரும் 100க்கு 75 பெயர்கள் குடிகாரர்களாகவே  தானிருக்கிறார்கள்.  உதாரணமாக, மதுரை, சேலம், கோயமுத்தூர் முதலாகிய ஜில்லாக்களைப் பார்த்தாலே இவ்வுண்மையை யாவருமெளிதிலறியலாம். மற்றும்

கொல்லுவேலை, தச்சு வேலை, தட்டார வேலை,  சித்திர வேலை, கொத்து வேலை, கொல்லத்து வேலை, கருங்கல் கட்டட வேலை,தோல் பதனிடும் வேலை, செருப்புத்தைக்கும் வேலை முதலியாகிய வீட்டுத் தொழிலாளிகளும் பெரும்பாலும் குடிகாரர்களாகவேயிருக்கிறார்கள்.  அப்படிப்பட்டத் தொழிலாளிகளையும், “நீங்கள் ஏன் குடிக்கின்றீர்கள்?” என்று காரணம் கேட்டால் திரு. காந்தியவர்கள் சொல்லும் சமாதானத்தையே தான் அவர்களும் சொல்லுகிறார்கள். அதாவது “பாடுபட்டு உழைப்ப வனுக்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா?” வென்றுதான் சொல்லுகின் றார்கள்.

தவிரவும், தொழிற்சாலை தொழிலாளிகளைவிட இந்த மாதிரியான தொழிலாளிகளுக்குத் தான் குடிப்பதற்கு சௌகரியமுமதிகமேற்படுகின்றது.  எப்படியெனில், அன்றாடமிவர்கள் கைகளுக்குக் காசு கிடைக்கின்றது. இவர்களிஷ்டம் போல் குடித்துவிட்டுத் திரிய நேரமும் கிடைக்கின்றது. ஆகவே “குடிசைத் தொழிலாளிகள் குடிக்கமாட்டார்கள்” என்றும், “குடியை சீக்கிரம் விட்டுவிட முடியு”மென்றும் திரு. காந்தி அவர்கள் சொல்லுவது அவ்வளவு நியாயமும். பொறுத்தமுமான வார்த்தைகளாகுமாயென்பதை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.

அன்றியும் திரு. காந்தி அவர்கள் மதுவிலக்குக்கும், கதர் பிரசாரம் அவசியம் என்று ஒரு புதிய சம்பந்தத்தை ஏற்படுத்துகின்றார். அதாவது “கதரைப் பரப்பாமல் குடியை நிறுத்த முடியா”தென்கிறார்.  இது “ஆடி அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்” போலவே இருக்கின்றது.

எந்தக் கருத்திவ்விரண்டையுமொன்றாக்கிப் பேசுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் கதர் பரவினால் தொழிலாளிகளுக்கு வரும்படி கிடைக்காது, ஆதலால் குடிப்பதற்கு அவர்களுக்குக் காசில்லாமல் போவதன் மூலம் குடி நின்றுவிடுமென்று கருதி, இப்படிச் சொல்லியிருந்தாலிருக்க லாமேயொழிய மற்றபடி வேறு நியாயம் இருப்பதாகக் காணமுடியாது.  ஆனாலும் கதர் பரவியிருக்கும் திருப்பூரில்தான் குடிகாரர் கள் மறியல் செய்பவர்களை யுதைத்து, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்ததுடன்; அதற்குக் கள்ளு அபிஷேகமும் செய்தார்கள் என்று தெரியவருகிறது. இது எப்படியோ இருக்கட்டும்.

திரு. காந்தி அவர்களிஷ்டப்படியே பார்த்தாலும், கதர் பரவா மலிருக்கும் போது ஏன் குடி நிறுத்தும் வேலையை (மறியலை)ச் செய்கிறா ரென்பது நமக்கு விளங்கவில்லை.

“கடை மூடப்படுவதனால் குடி நின்று விடா”தென்று தெரிந்தும் காங்கிரசுக்காரர்களால் ஏன் கள்ளுக்கடைகளில் முன் மறியல்செய்து, கலக முண்டாக்கப் படுகின்றதென்பதும் நமக்கு விளங்கவில்லை.

சர்க்கார் சட்டம் செய்து, கள்ளு, சாராய முற்பத்தியும், விற்பனையும் நிறுத்தப்பட்டு விட்டாலும், மற்ற மக்களால், “திருட்டுத்தனமா யுற்பத்தி செய்து, இப்போதைய அளவே திருட்டுத்தனமாய் விற்கப்பட்டு தான்வரு”மென்று தெரிந்தும், சர்க்காரைக் குற்றம் சொல்லுவதையே மது விலக்குப் பிரசாரமாய் ஏன் செய்யப்படுகின்றது என்பது நமக்கு விளங்க வில்லை. “வேலை செய்து களைத்துப்போன தொழிலாளிக்கு களைப்புத் தீரக் கள்ளு, சாராயம் வேண்டியதுதா”னென்று தெரிந்து மிதை யுண்மையாகவே நம்பியும்தானே அதாவது திரு. காந்தியவர்களே தொழிலாளிகளுக்குக் கள்ளு, சாராயம் முதலியவைகளை வாங்கிக் கொடுத்து அதன் மூலமாயவர்களுடைய களைப்பையு மாயாசத்தையும் தீர்த்திருந்தும் எதற்காகத் தொழிலாளிகள் குடிக்கப்போகும் இடங்களில் தொண்டர்களை நிறுத்தி மறியல் செய்யச் செய்கிறாரென்பதும், தொண்டர்களை அடிபடச் செய்கிறா ரென்பதும் நமக்குப் புரியவில்லை.

இந்த அபிப்பிராயங்களையேதான் சென்ற வாரம் “தமிழ்நாடு” பத்திரிகையில் திரு. வரதராஜுலு நாயுடுவும் எழுதியிருந்தார். மந்திரி களானவர்களு மிதையேத்தான் சொல்லுகின்றார்கள்.  பிரத்தியக்ஷ யனு பவத்திலு மிப்படித்தான் காணப்படுகின்றது.  மற்றபடி இதிலுள்ள வித்தியாச மெல்லாம் மேற்கண்டவர்கள் முன்னாலேயே சொல்லிவிட்டார்கள். ஆனால், திரு. காந்தியவர்கள் இம்மாதம் 12-ம் தேதி தானிதைச் சொன்னா ரென்பதைத் தவிர்த்து, வேறு வித்தியாசமில்லை.

அன்றியும், மற்றவர்கள் இவ்விஷயத்தில் வாயில் சொல்லுவதுபோல் செய்கையிலும் செய்கின்றார்கள்.  திரு. காந்தியோ தான் சொல்லுவதற்கும், தான் செய்யச்செய்வதற்கும் பொருத்தமில்லாமல் நடந்து கொள்ளுகிறா ரென்பதுதான் வித்தியாசமாகும்.

ஆகவே மதுவிலக்கு மறியல் விஷயத்தில் திரு. காந்தி அவர்களிடந் தானிந்தப்படி வித்தியாசமிருந்தாலும், மறியல் செய்யும் தொண்டர்களுக் காவது பகுத்தறிவில்லையா? அல்லது சுதந்திரயுணர்ச்சியில்லையா? அல்லது தங்களபிப்பிராயத்திற்கு மதிப்பில்லையா? அல்லது வேறு வழியில்லையா? என்று கேட்கின்றோம்.

காந்தி  சுயராஜியம்

மறியல் விஷயமிப்படியிருக்க, இனி திரு. காந்தியவர்களின் சுயராஜியத்தில் தொழிலாளர்களின் – கிராமங்களின் நிலைமை யென்ன வென்று பார்ப்போமானால், பரோடா ராஜியத்தில் பேசின மேற்கண்ட வாசகங்களின் பிற்பகுதியில் குடிசைத்தொழிலாகக் கிராமவாசிகள் “கை இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது,”

“கைத்தறியில் நெசவு நெய்ய வேண்டியது,”

“ஆடு, மாடு வாங்கி மேய்த்துப் பால், தயிர், வெண்ணை ஆகியவை களை யுண்டாக்க வேண்டியது,”

“செருப்புத் தைக்க வேண்டியது” “மற்றுமிது போன்ற தொழில் களையே செய்ய வேண்டிய”தென்றுரைத்திருக்கிறார். இப்படிச் சொல்லு வதற்கும் காரணமென்னவென்றால் அவர்களுக்கு அதாவது கிராம வாசிகளுக்கு – தொழிலாளர்கள், பம்பாயிலிருப்பவர்களைப் போல் அதிகப் பணக்காரர்களாக வேண்டியதில்லையாம்.  ஏனென்றால் அவர்களுடைய பெட்டிகளில்  கொஞ்சமாகத்தான் பணமிருக்க வேண்டுமாம்.  இவ்வளவும் சொல்லிவிட்டு “இதுதான் வரப்போகும் சுயராஜியத்திட்ட” மென்றும் சொல்லி விட்டார். அன்றியும், “இதற்காகவேதான் சென்ற வருஷம் கிளர்ச்சிகள் செய்யப்பட்டு, அதற்கேற்ற விதையும் போடப்பட்டிருக்கிற” தென்பதாகவும் கூறிவிட்டார்.

“குடி அர”சை வெகு கஷ்டத்தோடு வாசிக்கும் வாசகர்களே! மற்றும் “குடி அரசை” வெறுக்கும் காங்கிரஸ் அபிமானிகளே!! காந்தி பக்தர்களே!!! தேசீய சுயமரியாதைக்காரர்களென்று சொல்லிக் கொள்ளுபவர்களே! இந்தக் கொள்கையை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? என்று தான் உங்களை நாம் வெள்ளையாய்க் கேட்கின்றோம்.  தத்துவார்த்தம் சொல்லவராதீர்கள். உண்மையைப் பேசுங்கள்.

கிராமவாசிகள் செருப்புத் தைக்க வேண்டுமாம்! ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டுமாம்! இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டுமாம்! கைத் தறியில் நெசவு நெய்யவேண்டுமாம்! ஆனால் பம்பாய்வாசிகள்  கோடீஸ் வரர்களாகி, அதற்கு தகுந்த போக போக்கியங்களை யனுபவிக்க வேண்டு மாம்! இதுதான் சுயராஜ்ஜியத்திட்டமாம்! ஆகவே இந்தப்படியான மனோ பாவங்கொண்ட திரு. காந்தியைப் “பாரத நவஜவான்” உண்மை வீரர்கள் “காந்தி ஒழிக!” “காந்தீயம் ஒழிக!!” “காங்கிரஸ் ஒழிக!!!” என்று சொன்னதி லென்ன தப்பிதமிருக்கின்றது? காந்திக்கு வேண்டுமானால், காந்தீயம் யொழியாதென்பதில் நம்பிக்கையிருக்கலாம்.  ஆனால், நமக்கு இப்படிப் பட்ட காந்தீயம், ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ஒழியாமல் சமதர்மம் ஏற்படுமா? என்று கேட்கின்றோம்.  “திரு. காந்தி, இந்தியாவை வெள்ளைக்கார ஆட்சிக்கு முன்னிருந்த பழைய அதாவது ஆதிகாலத்து இந்தியாவுக் குக் கொண்டு போகப்பார்க்கின்றார்”என்று திருவாளர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சொன்னதிலென்ன தப்பித மிருக்கின்றது? என்று கேட்கின்றோம்.

“ருசியப் பொதுவுடைமைக்காரர்கள்” “இந்திய கிராம வாசிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், திரு. காந்தி அவர்கள் ஒரு பெரிய துரோகி” என்றும், “காங்கிரஸ், தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கு மேற்பட வேண்டிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை” என்றும் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றதென்று கேட்பதுடன் நாமிதுவரை சொல்லி வந்த விஷயங்களிலெந்த வெழுத்துக் குற்றமானதென்றும் கேட்கின்றோம்.

இதைப் படிக்கின்ற காந்தி பக்தர்கள்,  நம்மீது காய்ந்து விழலாம்.  நமது குடலைப் பிடுங்கி மாலையாகப் போட வெண்ணலாம்.  இந்தப்படி எழுதி யதாலேயே ஒரு பத்து சந்தாதாரர்கள் குறையலா மென்பவைகளெல்லாம் நமக்குத் தெரியும். தெரிந்தே தானெழுதுகின்றோம்.

ஆனால் நமது இலட்சியமெல்லாம், “இன்று நம்மை யாரும் “மகாத்மா” வென்றோ, “தேசபக்தன்”, “தேசீயத்தலைவன்”, “தேசீயத் தொண்டன்” என்றோ சொல்ல வேண்டுமென்பதல்ல. நமது “குடி அரசு” பத்திரிகைக்கு 15,000 சந்தாதாரர்கள் வேண்டுமென்ற ஆசையுமல்ல” வென்பதை வாசகர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

 

 

ஆனால் திரு. காந்தியைப் பற்றி, காந்தீயத்தைப் பற்றி நாம்  கொண்ட அபிப்பிராயம் சரியா? தப்பா? என்பதை மக்களின்னும் கொஞ்ச காலம் சென்றாவ துணர்ந்தாலும் போதும் அல்லது இந்த மக்களின் சந்ததிகளாவது உணர்ந்தாலும் போதுமென்பது ஒரு லக்ஷியமாயும், அதையுணராத மக்களால், இந்தியாவிலொரு நாளும் சமதர்மக் கொள்கை ஏற்படுத்த முடியா தென்பதும் நமது முடிவாகும்.  கடவுளையும், மதத்தையும், வேதத்தையும், தெய்வத் தன்மை பொருந்திய பெரியார்களென்பவர்களையும் பற்றிப் பேசுவதற்கு வேண்டிய அறிவையும், தைரியத்தையும் விட, திரு. காந்தியைப்பற்றியும். காங்கிரசைப் பற்றியும் பேசுவதற்கு சற்று அதிக அறிவும், அதிக தைரியமும், வேண்டியிருக்குமென்பதாக நாம் சிறிதும் கருதவில்லை. நிற்க,

மதத்தில் பார்ப்பனன் – பறையனென்கின்ற இருபாகுபாடுகளு மொழி வதற்கு இருவருடைய கூட்டமுமொழிந்தாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றோமோ, அப்படியேதான் சமூக வாழ்வு என்பதிலும், முதலாளி – தொழிலாளியென்பதாகிய பாகுபாடுமடியோடொழிவதற்கு இரு பெயரை யுடைய இரு கூட்டமுமொழிந்தாக வேண்டு மென்கிறோம்.  ஏனென்றால் முதலாளி – தொழிலாளி என்கின்ற பதமே, வைசிய – சூத்திர என்று சொல்லப் படும் வருணாச்சிரம தர்மக் கொள்கைக்கு ஏற்படுத்தப் பட்டதே யாகும்.  வைசியன்- சூத்திரனென்பது வடமொழிப் பதங்கள். அதாவது சமஸ்கிருத வார்த்தைகள்.  முதலாளி – தொழிலாளியென்பது தென் மொழி பதங்கள்.  அதாவது தமிழ் வார்த்தைகள்.  ஆகவே இவ்விரண்டிலும், பாஷை வித்தியாச மென்பது மாத்திரம் தவிர கருத்து வித்தியாசமென்பது சிறிது மில்லையென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

சூத்திரனென்றால், சரீரத்தில் வேலை செய்பவன் – முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்பவன் – அடிமை யென்பவைகளே, அதையுண் டாக் கியவர்களின் வியாக்கியானமாகும்.  அதுபோலவே தொழிலாளியென் றாலும்.  சரீரத்தில் வேலை செய்பவன் – மற்றவர்கள் அவசியத்திற்கும், வாழ்க் கையின் தேவைக்குமே வேலை செய்யும் வேலையாள் – தொண்டன் யென்பவைகளேயாகும்.

அவனுக்கும் உணவுமட்டுந்தானளிக்க வேண்டும். இவனுக்கும், ஜீவனத்திற்குப் போதுமான அளவுதான் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே, இந்தப் பாகுபாடுகளை சனாதன மகாநாட்டிலும், ஆரியதரும பரி பாலன மகாநாட்டிலும், பிராமண மகாநாட்டிலும், பேசும் போது “மனு தர்மம்” “வருணாச்சிரமபாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. இவைகளை விட்டு காங்கிரஸ் மகாநாட்டிலும், அரசியல் மகாநாட்டிலும் பேசும்போது “சுயராஜியம்”, “முதலாளி – தொழிலாளித்தன்மை பாதுகாப்பு” ஆகிவிடுகின்றது.  ஆகவே இரண்டு மகாநாடுகளிலும், ஒரே கருத்தின் மீதுதான், ஒரே மனப்பான்மை யுள்ள மக்களால் தான் பேசப்பட்டும், தீர்மானிக்கப்பட்டும் வருணாச் சிரமதர்மம் வெற்றி பெற்று வருகின்றது.

இந்தத் தருமம் வியாபார முறையில் மாத்திரமல்லாமல், விவசாய முறையிலுமிந்தக் கருத்துடனேயே தானிருந்து வருகின்றது.  அதாவது, ஜமீன்தாரன் மிராசுதாரன் யென்பவர்களாகின்ற பூமிக்குச் சொந்தக் காரர்களும், விவசாயத்தொழில் செய்யும் கூலியும், அதாவது பண்ணையும்- பண்ணையாளுமாகிய இரண்டு பிரிவுகளும் கூட வைசியன்- சூத்திரனென் கின்றப் பதங்களின் – தத்துவத்தின் கருத்தேயாகும். அதனால்தான், வருணாச் சிரம தரும முறையில் பூமியுடையவர்களையும், வைசிய வருணத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது.  அதனாலேயேதான். திரு. காந்தியும், பூமி யுடைவர் களையும் அதாவது ஜமீன்தாரர்கள் முறைமையையும் காப்பாற்றப் பாடுபடு கின்றேனென்று அடிக்கடி சொல்லிவருகிறார்.

உதாரணமாக, அதே 12ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிக்கையின் 5-வது பக்கம் 6-வது கலத்தில்  “மகாத்மாவும் இனாம்தாரர்களும்” என்கின்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை விளக்கமாய் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லை”யென்று சொல்லி யிருக்கிறார்.

இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம், பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி, அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம்.  ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்”  என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டு”மென்று சொல்லி வருகின்றார்.  இதற்கும் காரணம் சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.

ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும்.  வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை – சமதர்ம நிலையமாகும்.

ஆதலால், முதலாளி – தொழிலாளி யென்கின்றத் தன்மை எக் காரணத்தைக் கொண்டும், எம்மாதிரியிலுமிருக்க விடக்கூடா தென்றேதான். பொது மக்களுக்கு நாம் யெடுத்துக் சொல்லுகிறோம்.

காங்கிரசில், தொழிலாளர்களுடைய யோக்கியதையுயர்த்தப் படு மென்று சொல்லுவதெல்லாம், ஒரு மனிதனை “நல்ல தொழிலாளியாயிருக் கச் செய்யப்படு”மென்று சொல்லுவது போல்தானேயொழிய வேறில்லை.

தொழிலாளிகள் என்று ஒரு தனி வகுப்பு இருக்கும்படி செய்து. அவர்களுக்கு எவ்வளவுதான் உயர்ந்த நிலைமை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அந்த நிலைமையிலும் சரீரப்பாடுபடுவதொரு கூட்டமாகவும், அதன் பயனை யடைவது மற்றொரு கூட்டமாகவுமிருக்கத் தக்கப் பாகுபாடுகளிருக்கின்றதா? இல்லையா? என்றுதான் கேட்கின்றோம்.  “நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை மட்டும் போகா”தென்பது போல, இந்தத் திட்டமடியோடு மாறவில்லையானால் எந்த ஆக்ஷி வந்துதானென்ன பயன்? யாரைத்தான் இந்த நாட்டைவிட்டு விறட்டி என்ன பயன்? என்று கேட்கின்றோம்.

“ஒவ்வொருவருடைய உரிமைகளும், பாதுகாக்கப்படு” மென்கின்ற சுயராஜ்யத்திட்டமே சூதும், வஞ்சகமும், நிறைந்ததும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் கழுத்துக்குச் சுருக்குப் போடும் திட்டமாகு மேயல்லாமல் எந்த விதத்திலும் சுருக்கைத் தளர்த்தும் திட்டமாகாது.  ஊரார் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போதுள்ள பாத்திய தைகள் சிறிதாவது மாறக் கூடியதுமாகாது.

ஆகையால்,ஆங்காங்குள்ளஅறிவுள்ள மக்கள், பொது ஜனங்களுக் கும், இந்த அபிப்பிராயங்களை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். மறியலைக் கண்டு மக்களேமாந்து போகாமல், அதிலுள்ள முரண்பாடுகளையும், புரட்டுகளையும், உள்ளெண்ணங்களையும் தைரியமாய் வெளியாக்க வேண்டியது மிக்க அவசியமாகும்.

அதாவது, ஒவ்வொரு ஊரிலும் தைரியமாய்க் கூட்டங்கள் போட்டோ, அல்லது துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்தோ இவ்விஷயங்களைப் பரப்ப வேண்டும். விவரங்களறியாப் பாமர மக்கள், “கள்ளுக்கடைகாரனுக்கனு கூலக்கார”னென்றோ “சர்க்காராருக் கனுகூலக்கார”னென்றோ தங்களைச் சொல்லுவார்களென்று யாரும் பயந்து கொள்ளக்கூடாது.  சொன்னால் சொல்லிக் கொண்டு போகட்டும். அதற்காக, நமது, கடமையை நாம் விட்டு விடக் கூடாது.  இந்த இருபதாவது நூற்றாண்டில், அதுவும் மேல்நாடுகளி லெல்லாம் தொழில் முறையிலும் வருணாச்சிரமதர்ம தத்துவமடியோ டொழிந்து வருமிக்காலத்தில் இந்த நாட்டில், வருணாச்சிரம தருமம் பரம்பரை முறையில் இருந்து வர முயற்சிகள் நடப்பதென்றால் இந்நாட்டு மக்களின் கேவலமான நிலைமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேறு அத்தாக்ஷியே வேண்டியதில்லை.

 

கடைசியாக ஒரு வார்த்தை, அதென்ன வென்றால், தொழிலாள சகோதரர்களும், தொழிலாளிகளிடம் அனுதாபமுள்ளவர்களென்பவர்களு மெந்த விதத்திலிந்தக் காங்கிரசையும், காந்தீயத்தையுமாதரிக்கின்றார் களென்பது தான் நமக்கு ஆச்சரியமாயிருக்கின்றது.

தொழிலாளர்கள் காங்கிரசையும், காந்தீயத்தையும் ஆதரிப்பதும், அவைகளுக்கு அனுசரனையாயிருப்பதுமென்பது “உதைக்கின்ற கால் களுக்கு முத்தம் கொடுப்பதை”யே யொக்கும்.

தொழிலாளிகள் ஏதாகிலும் தங்களுடைய நிலைமையை உயர்த்திக் கொள்ளவேண்டுமானால் இதுதான் அவர்களுக்குத் தக்க சமயமென்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.

இந்தத் தொழிலாளிகளொன்று கூடி தொழிலாளர்களென்பதாக ஒரு பிரிவோ அல்லது அவர்களுக்கென்று ஒரு தனிசட்டமோ இல்லாமலிருக் கவும் பார்த்துக் கொள்ளவேண்டியக் குறிப்பை மனதில் வைத்தே வேலை செய்ய வேண்டுமென்பதையும் குறிப்பிட்டுவிட்டு இதை முடித்துக் கொள்ளுகின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 21.06.1931

You may also like...

Leave a Reply