தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும் பார்ப்பன பிரசாரமேயாகும்

சென்ற ஒரு வருஷ­காலமாய் இந்திய நாட்டில் நடைபெற்ற ஒருவித “அரசியல் கிளர்ச்சி” நாடகத்தின் பயனாய் தமிழ்நாட்டில் பழையபடி பார்ப்பன பிரசாரம் தைரியமாயும் வெளிப்படையாயும் துவக்கப்பட்டு விட்டது.  இதை நன்றாய் உணரவேண்டும் என்பவர்கள் இம்மாதம் 6, 7 தேதிகளில் மதுரையில் தமிழ் நாட்டு மக்கள் பேரால் நடைபெற்ற “ஏமாற்றுந் திருவிழா”(தமிழ் மாகாண மகாநாட்டு) நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் உணரக்கூடும்.

முதலாவது இந்த ஏமாற்றுத் திருவிழாவானது தமிழ்நாட்டு 13 ஜில்லாக்களின் சுமார் 2 1/2 கோடி ஜனங்களின் பிரதிநிதித்துவமாக நடத்தப் படுவதாக எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் அதற்குத் தெரிந்தெடுக்கப் பட்டு கிடைத்தத் தலைவர் யார் என்பது ஒரு முக்கிய விஷயமாகும்.

திரு. ளு. சத்தியமூர்த்தி அய்யர் தமிழ் நாட்டு 21/2 கோடி மக்களின் முன்னேற்றத்திற்கு தலைவரென்ற காரணத்தாலேயே அந்தத் திருவிழாவுக்கு ஆள்பட்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலைமைக்கு வேறு அத்தாக்ஷி வேண்டியதில்லை.  அவரைத் தவிர வேறுயாரும் தெரிந்தெடுக்க கிடைக்க வுமில்லை, முடியவுமில்லை.  எனவே இந்த ஸ்தானம் தமிழ்நாட்டு பொது ஸ்தாபனமாம்!

நிற்க, திரு.  சத்தியமூர்த்தி அய்யருக்கு என்ன கொள்கை? ஜீவனத் திற்கு என்ன வழி? இவர் இந்த நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு எப்படிப் பிரதிநிதியாக உரியவர்? இவரது சொந்தத் தன்மைதான் என்ன? முன்பின் நாணையம் என்ன? இந்நாட்டு மக்களின் நன்மைக்கு இவர் எப்படி பொறுப்பாளி? என்பவை போன்ற காரியங்களால் அந்த ஸ்தாபனத்தின் யோக்கியதையை ஒருவாறு உணரலாம்.

இதுதவிர இம்மகாநாட்டுக்குச் சென்றிருந்த பெரும்பான்மையான மக்கள் யாருடைய பிரதிநிதிகள்? அவர்களின் தன்மையென்ன? கொள்கை என்ன? அவர்கள் இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த வகையில் பிரதிநிதிகளாக வந்தவர்கள்? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் பிரதிநிதிகளின் யோக்கியதை ஒருவாறு விளங்கும்.

மற்றும் இந்த நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? முஸ்லீம் பிரதிநிதிகள் எத்தனை பேர்? தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? என்ற கணக்கைப் பார்த்தாலும் மற்றொரு விதத்தில் அதாவது இந்த நாட்டில் “தெய்வீகமாகவும்” , மத சம்பந்த மாகவும், ஜாதி வகுப்பு சம்பந்தமாகவும் ஏற்பட்ட பிரிவுகளுக் கெல்லாம் இந்த ஸ்தாபனம் எப்படி பிரதிநிதித்துவம் பொருந்தியது என்பதும் ஒருவாறு விளங்கும்.

இவைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும் அந்த விழாவுக்குச் சென்ற பார்ப்பனரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எப்படி மதிக்கப் பட்டார்கள்? அவர்களுடைய அபிப்பிராயங்கள் எப்படி கவனிக்கப்பட்டது? என்பவைகளைக் கவனித்தால் அதன் நாணையமும், யோக்கியப் பொறுப்பும், எண்ணத்தின் தன்மையும், போனவர்களின் சுயமரியாதையும் ஒருவாறு விளங்கும்.

இவை ஒரு புறமிருக்க அந்தத் திருவிழாவில் செய்யப்பட்ட தீர்மானங்களின் யோக்கியதையைப் பார்த்தாலோ மற்றவிஷயங்கள் எல்லாம் தானாகவே புலப்பட்டுவிடும். இவற்றைப்பற்றி பின்னால் யோசிப் போம். தலைவர் திரு. சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் உபன்யாசத்தில் காணப்படும் முக்கியமானதும் அவரது உள்ளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது மான முக்கிய விஷயம் ஒன்றே ஒன்றாகும்.  அது என்னவென்றால்,

“ஸ்தல ஸ்தாபனங்கள் இப்போது மிகவும் சீர்கேடடைந்து விட்ட தாதலால் அதைக் காங்கிரசுக்காரர்கள் கைப்பற்றவேண்டும்” என்பதேயாகும்.  “கோடி வித்தலுனு கூட்டிக்கு” என்று தெலுங்கில் ஒரு பழமொழி யுண்டு.  அதாவது கோடி வித்தைகளும் (சகல சாமர்த்தியங்களும்) சோற்றுக் குத்தான் என்ற பொருள் கொண்டது.  அதுபோலவே பார்ப்பனர்களுடைய இன்றைய தேசீயப் புரட்டுகள் பூராவும் ஜகஜாலப்புரட்டுகள் முழுவதும் இந்த ஸ்தல ஸ்தாபனம், சட்டசபை, மந்திரி சபை, மற்ற உத்தியோகங்கள் முதலியவை களைப் கைப்பற்றத்தானே யொழிய வேறில்லை. இந்தப் புரட்டை அவர்களால் மறைக்க முடியவில்லை.  எப்படியாவது வெளிப்படுத்தி விடுகின்றார்கள்.

இதையனுசரித்து சில தீர்மானங்களும், மகாநாட்டில் வந்தது. ஆனா லும் அவற்றின் உள்எண்ணத்தை சுயமரியாதைக்காரர்கள் கண்டு பிடித்து வெளியாக்கி விடுவார்கள் என்று கருதி, மறைமுகமாய் அதாவது இப்போ தைய தேர்தல் முறைகளை கண்டித்து அதை திருத்த கவலை கொண்ட சீர்திருத்தக்காரர்களைப் போல் ஒரு தீர்மானம் செய்து கொண்டார்கள்.

கதர் விஷயத்திலும், கதர் புரட்டை வெளியாக்கி, கதர் இலாகா வையும் கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது விஷயாலோசனை கமிட்டியில் எப்படியோ நிறைவேற்றப்பட்டாய் விட்டது.  அதாவது:-

“கதர் இலாகா பிரதிநிதித்துவம் பொருந்தியதாயில்லாமலும் காங்கிர சின் அமுலுக்கு உட்பட்டு இல்லாமலும் இருப்பதோடு அதன் உத்தியோக ஸ்தானங்களில் ஒரே கூட்டத்தினர் நிரம்பி இருப்பது பொது ஜனசபை தத்து வத்திற்கு விரோதமாயிருப்பதால் அதை பொது பிரதிநிதி சபையாக்குவதற்கு வீதாசாரப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டு எல்லா சமூகத்தாராலும் நடத்தப்பட வேண்டும்” என்பதாகும்.

இது விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டும் பொதுக் கூட்டத்தில் 5, 6 பேர்களின் ஓட்டுகளால் தோற்றுவிட்டதாக தலைவரால் சொல்லப்பட்டுவிட்டது.  இந்த முடிவையும் சபையார் ஒப்புக் கொள்ளாமல் கூச்சல் போட்டும் பயனளிக்கவில்லையாம். இந்த ஓட்டில் பார்ப்பனர் எல் லோரும் ஒரு புறமாகவும், பார்ப்பனரல்லாதவர் எல்லோரும் ஒரு புறமாகவும் ஓட்டு கொடுத்தார்களாம். மற்றொரு பெரும் புரட்டான விஷயம் என்ன வென்றால், மகமதியர் தீண்டாதார் ஆகிய “சிருபான்மையோர் கோரும் உரிமைகளை தாராள மனதுடன் கவனிக்க வேண்டும்” என்பது.

சிறுபான்மையோர் உரிமைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தால் அது நாளைக்கு கொடுக்க வேண்டி வந்து விடுமே என்கின்ற யுக்தியின் மீதே தாறாளமாய்க் கவனிக்கப்படும் என்று தந்திரமாகப் போடப்பட்டிருக்கின்றது. இது ஏதோ பெரும்பான்மையோரை பிச்சை கேட்பது போலவும் பெருபான்மையோர் தயவுக்கும் தர்மத்திற்கும் கொடுக்க வேண்டியது போலவும் கருதி,பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லுவது போல் “ஆகட்டும், கவனிக்கலாம்” என்று ஆணவத்துடன் சொல்லும் பதிலேயாகும்.  இப்படிப்பட்ட ஸ்தாபனத்தில் சிறுபான்மையோர் கலந்து கொள்ளுவது அவர் களது சுயமரியாதைக்கு ஏற்றதல்லவென்றே சொல்லுவோம். அன்றியும் இத் தீர்மானம் ஏமாற்றுகின்ற மனப்பான்மை யுடன் செய்யப்பட்டது என்றும் சொல்லுவோம்.

இனித் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில்,

“காங்கிரசு தீண்டாமையை தொலைக்க வேண்டும் என்ற காங்கிரசு கட்டளையை பரப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறது”.

“தெரு, கிணறு, பள்ளி, தேவாலயம் ஆகியவைகளில் இடம் கொடுக் குமாறு வைதீகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறது” என்பதாகும்.  அதாவது காங்கிரசின் உத்தேசத்தை ஜனங்களுக்கு தெரிவித்துவிட்டு வைதீகர்களை கேட்டுக்கொள்ள வேண்டியது என்பதுதான் தீண்டாமை ஒழிப்பதின் முயற்சி போலும்! கள்ளுக்கடை ஜவுளிக்கடையை மாத்திரம் மறியல் செய்யவேண்டும் என்பது¦³ மகாநாட்டுத் தீர்மானம்.  ஆகவே பார்ப்பன இனத்தாரான வைதீகர்களைக் கேட்டுக் “கொள்ளவேண்டியதும்” பார்ப்பனரல்லாதார் இனத்தாராகிய வியாபாரிகளை மறியல் செய்ய வேண்டியதும் என்றால் இவர்களது உள் எண்ணம் என்ன என்பது ஒரு முழு முண்டத்திற்கும் விளங் காமல் போகாது.

அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) நஷ்டம் உள்ள காரியமோ அவர்கள் ஆதிக்கத்திற்கு குறைவு வரும் காரியமோ எதுவானாலும் அதன் அருகே யாரும் போகக்கூடாது.  அதாவது தூர நின்று பிச்சை கேட்டுக் கொள்ளவேண்டியதுதான். மற்றவர்கள் விஷயத்தில் மறியலே செய்து வெளி யாக்கி மானத்தைக் கெடுத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது என்பது பார்ப்பனர் கருத்து. அதுவே “மகாத்மா” உத்திரவு. அதுவே மகாநாட்டுத் தீர்மானம் என்றால் இவற்றையறிந்தும் மறியல், மறியல் என்றால் அதில் 100-க்கு 99 வயிற்றுக் கொடுமையும், முட்டாள் தனமும் இல்லாமல் வேறு என்னமாய் இருக்கமுடியும் என்பதை வாசகர் களே உணர்ந்து பார்க்கட்டும்.  தவிர கதரையே கட்ட வேண்டும் என்று ஒரு தீர் மானமும் உள்நாட்டு நூலால் நெய்த துணியையே கட்டவேண்டும் என்று மற்றொரு தீர்மானமும் செய்திருப்பதானது  கதரின் சாயம் கொஞ்சம் வெளுத்துப்போனதை அவர்களே ஒப்புக் கொண்டதாகும்.

மற்றொரு தீர்மானம் என்ன வென்றால் ‘சமூகத் துவேஷத்தை கிளப்பி விடுகின்றவர்கள் வார்த்தையை நம்பக் கூடாது என்று கேட்டுக் கொள்ளு கின்றது’என்பதாகும்.  இதிலிருந்தே இவர்கள் செய்த திருட்டுத் தனம் இவர்கள் மனதையே உறுத்தி முன் ஜாக்கிரதையாக பந்தோபஸ்து செய்து கொண்டார்கள் என்பது புலனாகிவிட்டது.  ஆகையால் பார்ப்பன ரல்லாத மக்கள் இனியாவது புத்திவந்து தங்கள் சமூக சுயமரியாதைக்குப் பாடுபடு வார்களாக! இதைப்பற்றி சென்னை திருவாளர் ம. சிங்காரவேலு செட்டியார் எழுதியதை மறுவாரம் பிரசுரிப்போம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 14.06.1931

You may also like...

Leave a Reply