புதிய முறை சீர்திருத்த மணம் பொன்னம்பலனார் – சுலோசனா

 

திருவாளர் அ. பொன்னம்பலனார் அவர்களது திருமணமானது 24ந் தேதி மாலை 5 மணிக்கு பிறையார் நாடார் ஹைஸ்கூல் ஆலில் உயர்திரு.  புரபசர் லக்ஷிமி நரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  திருமண ஒப்பந்தம் நடைபெறுவதற்கு முன் திரு. ஈ. வெ. இராமசாமி எழுந்திருந்து சில வார்த்தைகள் சொன்னார்.

அதாவது சீர்திருத்த திருமணம் என்றும் சுயமரியாதைத் திருமணம் மென்றும் சொல்லப்படுபவைகளெல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்மந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமை இல்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத இயற்கை தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும்.  சுயமரியாதை இயக்கத் திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அனேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத – அர்த்தமற்ற, அவசிய மற்ற சடங்குகள் இல்லாத, புரோகிதமே இல்லாத ஓரேநாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண்செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங் களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணை வர்களாய் ஏற்றுக்கொண்ட மணங்களும், மனைவியை புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும்  மற்றும் கிறிஸ்துவ மதத்தில்  ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலி லீடுபட்டப் பெண்கள் பொட்டுக்களை அறுத்து விட்டு செய்துகொண்ட மணமும் இப்படி யாக பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால் இந்த திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்த திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார்.  அப்படி இருக்க இந்தம்மைக்கு  இப்போது முதல்புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவதாக செய்துகொள்ளும் சீர்திருத்த திருமணமாகும்.  இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும்.  பெண் ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய  பந்துக்களுடையவும் முழுச் சம்மதத் துடனேயே இது நடைபெறுகின்றது.  பெண்ணின் தகப்பனார் இப்பொழுதுµ 500, 600 ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறி கிறேன்.  பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டி ருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது.  பெண்ணின் சிறிய தகப் பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார்.  அதனால் தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்த திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன்.  மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப்பற்றி உங்களுக்கு  ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  அவர் “சைவவேளாளர்” வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தவர். அவற்றை யெல்லாம்  அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமதபேதம் இல்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர்.  பெண் ஸ்ரீவைணவர் என்று சொல்லப்படுவதும் சாத்தாதார்  என்று சொல்லப் படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர்.  அவற்றையெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன் இத்திருமண விஷயத் தில் அப்பெண்ணுக்கு வேறுயார் யாரோ எவ்வளவோ குக்ஷிகள் செய்து பெரும் பெரும்பழிகள் கூறி அதன் புத்தியை கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர்.

ஆகவே இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாகப் பிரசாரம் செய்கின் றோமோ அவைகளில் முக்கியமான தொன்றென்றும் ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை- ஏன் உலகத் தையே சமதர்மமக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

குடி அரசு – சொற்பொழிவு – 31.05.1931

You may also like...

Leave a Reply