ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம்
சகோதரர்களே! போலீஸார் அத்துமீரி நடந்த காரியத்தை கண்டிப் பதற்கு நாம் இக்கூட்டம் கூடியதாக சொல்லப்பட்டது என்றாலும் “போலீசார் ஏன் அடித்தார்கள்” என்று விசாரணை செய்ய நாம் இங்கு கூடவில்லை. ஆனால் ஒரு கண்ணியமுள்ள கனவானை கடைவீதியில் வைத்து அவ மானம் செய்ததான அக்கிரம காரியத்தை கண்டிக்கவே கூடியிருக்கின்றோம்.
ஒருவன் குற்றம் செய்தால் குற்றத்திற்கு உரிய எந்த நியாயமான தண்டனையையும் அடைவதில் நாம் சிபார்சுக்குப் போகப்போவதில்லை. மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை தண்டிப்ப திலும் நாம் போலீசாருக்கு உதவிபுரிய வேண்டியது அவசியந்தான். குற்றவாளி களை பிடிப்பதில் நாம் உதவி செய்யாது, போலீசுக்கு விரோதமாக நடந்தால் ஊரில் சமாதானம் என்பது ஏற்படாது என்பது நாம் உணர்ந்ததேயாகும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் நடந்து கொண்ட முறையானது அக்கிரமமானதாகும். ஏனெனில், போலீசார் ஒரு பெரிய மனிதரை அடித்து விட்டார்கள். இதைக் கண்டிக்காமல் .இருக்க முடியாது. இல்லா விட்டால் நாளைக்கும் இப்படித்தான் செய்வார்கள். மேலும் அவர்களால் அடிக்கப் பட்டவரோ மிக்க மரியாதையுள்ளவர். சுத்த சாது. உண்மையாக நடக்கக் கூடியவர். ஒருவார்த்தையும் துடுக்காக பேசாதவர் என்பது உலகமே அறிந்த தாகும். அப்படிக்கில்லாமல் யோக்கிய தையற்றவராயிருந்தால், இன்று நாம் இங்கு கூடியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. இதனால் திரு. மாரிமுத்து ஆசாரியாரிடத்தில் நமக்கு மரியாதை குறையவில்லை. மேலும் இவர் யாரிடத்தில் அடிக்கடி லேவா தேவி செய்து கொண்டு இருக்கின்றாரோ அவர் களே…… அந்த சேட்டுமார்களே வேண்டியது துகையை ஜாமீனாக கொடுக்க வந்ததும் திரு. ஆசாரியார் அவர்களின் யோக்கியதையை வெளிப்படுத்து கின்றது. அவரை போலீசார் இம்சை செய்ததினாலேயே அவருக்கு ஒரு கெட்ட பெயராவது அல்லது அவருடைய யோக்கியதை குறைந்து விட்ட தாகவாவது ஏற்பட்டு விடாது. அவருடைய யோக்கியதை இன்னும் அதிக மாகக் காணப்படுமேயல்லாமல், குறைந்துவிடாது. ஆனால் போலீசாரின் யோக்கியதை தான் கேவலமாய்க் கருதப்பட்டுவிட்டது.
போலீஸ் இலாகாவிற்கு தற்கால அரசியல் காரணங்களால் அதிகாரங் கள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களும் தங்களுடைய அதிகாரத்தை இம்மாதிரி மூர்க்கத்தனமாகவே சில இடங்களில் காண்பித்துக் கொண்டு வருகின்றார்கள். போலீஸ் சிப்பந்திகளின் அக்கிரமத்துக்காக வேறு சில அதிகாரிகள் சில சந்தர்ப்பங்களில் பொது ஜனங்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் சில விஷயங்களில் போலீசார் கள் அத்துமீறியே நடந்துகொண்டு வந்திருக்கின்றார்கள். குறிப்பாக, இப்பொழுது நமது ஊரில் நடந்த சம்பவத்தைப்பற்றி நாம் வருந்தாதிருப்ப தற்கில்லை. ஆனால், நடந்தது நடந்துவிட்டது. அதைப்பற்றி நாம் பிரமாத மான கிளர்ச்சிகள் செய்து, போலீசுக்கும், ஜனங்களுக்கும், விரோதத்தை வளர்த்துக்கொண்டிருப்பதை விட, ஏதாவது ஒரு முயற்சி செய்து இம்மாதிரி சம்பவங்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் நமது கடமையாகும். ஏனெனில், இன்று நாம் பேசாதிருந்தால், நாளைக்கு நமக்கும் இந்த மாதிரியேதான் நடந்துதீரும். ஆகையால் இம்மாதிரியாக அதிகாரிகள் இனி நடவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால், நமக்குப் போலீசே வேண்டாமென்பது அர்த்தமாகாது. நமக்கு சில சந்தர்ப்பங்களில் போலீசாரின் உதவி அவசியம் வேண்டியிருக்கின்றது. அவர்களுடைய பந்தோபஸ்தும் தேவைதான். ஆதலால் இந்த சம்பவத்தையே ஓர் ஆதாரமாக வைத்து, ஒருவிதகிளர்ச்சியையும் நாம் செய்துவிடக் கூடாதென்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அறிவித்துக் கொள்ளுகின்றேன். ஏனெனில், இதை ஓர் ஆதாரமாக வைத்து பெரியதொரு கிளர்ச்சி செய்து விட்டால் இதிலிருந்து அநேக கேசுகள் உண்டாகலாம். பிறகு அதனால் நிரபராதிகள் கஷ்டப்பட வேண்டிவரும். நமது சுயமரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள பாடுபட வேண்டியதுதான். ஏதோ சில போலீசார் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டால், எல்லாப் போலீசையே நாம் குற்றம் சொல்லுவதும் கூடாது. ஈரோட்டில் இதுவரை ஒருவித கலகமுமில்லாதிருந்தது. இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்கள் மாதிரி ஒற்றுமையாகத்தான் நாளது வரையிலும் இருந்து கொண்டு வருகின்றோம். அப்படியிருக்கும் பொழுது போலீசார் இதற்காக ஜனங்களிடத்தில் அன்பாயிருந்து, யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டு யோக்கியதையற்ற முறையில் போலீசார் நடந்து கொண்டதானது வருந்தக்கூடிய காரியமேயாகும். மேலதி காரிகள் இதை நன்கு விசாரணை செய்து, நீதி செலுத்தி ஜனங்களுக்கு போலீ சிடத்தில் மதிப்பு இருக்கும்படி செய்ய வேண்டும். ஜனங்களின் சிநேகத் தையும் ஒத்துழைப்பையும் அதிகாரிகள் நாடவேண்டுமென்பதற்காகத்தான் நாம் இன்று தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. விஷயம் நியாயஸ்தலத்திற்கு போய் விட்டதாக தெரிகின்றது. ஆதலால் இங்கு விவகாரத்தின் உள்விஷயங்களைப் பற்றி விஸ்தரித்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. போலீசார் எவ்வளவுதான் அக்கிரமமாகவும் யோக்கிய பொறுப்பற்றும் நடந்து கொண்டபோதிலும் கூட நாமும் அதேமாதிரி நடக்கக்கூடாது.
திரு. மாரிமுத்து ஆசாரியார் வகையறாக்களை போலீஸ் ஸ்டேசனில் அடிக்க முயற்சித்ததாக கேள்விப்பட்டேன். எனக்கும் அப்போழுது ஆள் வந்தது. எங்கு அவர்களை அடித்து, இம்சைகள் செய்து விடுவார்களோயென ஜனங்களும் பயந்து கொண்டு சந்தேகமாகவே தானிருந்திருக்கிறார்கள். நானும் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்ததோடு அடிக்கடி ஆட்களை அனுப்பி, ஸ்டேசனில் என்ன நடக்கின்றதென்பதை யறிந்து கொண்டேதா னிருந்திருக்கிறேன். நமது டிப்டி கலெக்டர் அவர்கள் வந்து அவர்களை ஜாமீனில் விடும்படி கூறியதாக அறிந்தபிறகே தான் நான் படுக்கைக்குச் சென்றேன். இப்பொழுது வந்திருக்கும் டிப்டி கலெக்டர் மிகவும் நல்லவர். அவர் இவ்விஷயத்தை நன்றாக விசாரணை செய்து, முடுவு கூறுவாரென்பதே என்னுடைய அபிப்பிராயமாகும். ஆகையால் நாம் அடிக்கடி கூட்டம் போடு வதோ வாலிபர்களைத் தூண்டிவிடுவதோ ஆகிய காரியங்கள் செய்யக் கூடாது. அதிகாரிகளைப் பரிகாசம் செய்யவும் கூடாது.
கோர்ட்டில் விசாரணை நடக்கும் பொழுது, நாம் பொருமையாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அதிகமாகக் கூட்டம்போட்டு, விசாரணை நடைபெறாமலும் செய்துவிடக்கூடாது. அம்மாதிரி இன்று அதிகமாக ஜனங்கள் கூட்டம் கூடியதனால் தான் இந்தக் கேசை இம்மாதம் 25-ம் தேதி காங்கயத்தில் விசாரணைக்குப் போட்டிருப்பதாக இப்போது நான் கேள்விப்படுகிறேன். ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மையோ அது எனக்குத் தெரியாது. இம்மாதிரியான புகார்களுக்கு நாம் இடந்தராமல் நடந்துகொள்ள வேண்டும். காங்கயத்தில் விசாரணை போட்டிருப்பதானது நமக்குத்தான் அதிக கஷ்டம் . அவர்களோ சர்க்கார் செலவிலேயே போய் வருவதுமல்லாமல், சர்க்காரார் அவர்களுடைய செலவுக்குக் கொடுக்கிற பணத்திலும் சிறிது மீதி செய்துகொண்டு லாபமடைவார்கள் . ஆனால் நமக்கு எல்லாம் கைச்செலவேயாகும்.
மேலும் போலீசாருக்கு இதனால் அதிக செலவும் ஏற்படப் போவ தில்லை. அநியாயமெனத் தோன்றினாலும், அல்லது இந்தக் கேஸ் அப்பீலில் நிற்காது, உடைபட்டுப் போகும் என்று தோன்றிய பொழுதிலும்கூட, சில அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை நடத்தி அலைந்து திரியட்டும் என்று சமாதானம் செய்து கொள்ளுகிறார்கள். “எனக்கென்ன செலவு வந்தது? இரண்டு வரி எழுத வேண்டியதுதானே. அவன் போய் செலவு செய்து கொண்டு அலையட்டுமே” என போலீசு அதிகாரிகள் கூறுகின்றதாக சொல்லுகின்றார்கள்.
ஆதலால் இதற்காக இனி எவ்வித கிளர்ச்சியும் வேண்டாம். மேலும் சிலர் நம்மைத் தூண்டிவிட்டு மேன்மேலும் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறுவார்கள். நமக்கு இருக்கும் ஆத்தி ரத்தில் நாம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு இணங்கி நடந்தோமே யானால், அவர்கள் “சென்னைக்குச் செல்லலாம்” “டில்லிக்குச் செல்லலாம்” “ஒரு கை பார்த்து விடவேண்டும்” என பலவாறாக நம்மைத் தூண்டிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் கண்ணுக்குக் கூட கிடைக்க மாட் டார்கள். நமக்கும் இரண்டு நாள் வரையிலும் தான் இந்த ஆத்திரம் இருக்கும். பிறகு அது தானாகவே அமர்ந்து விடும்.
இதுவரையிலும் திரு.மாரிமுத்து ஆசாரியார் இருந்தவிடமே தெரியா மலிருந்தது. ஆனால் இந்த சம்பவத்தால் அவருடைய பெயர் எல்லோருக் கும் தெரியவந்தது. இவ்வாறு கூட்டம்போட்டு, சில தீர்மானங்களை நிறை வேற்றிவிடுவதால் மட்டும் நமது பொறுப்பு முடிந்து விட்டதாக நாம் நினைத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமானால், அல்லது அவசியம் நேர்ந்தால் எல்லாரும் ஆள் ஒன்றுக்கு 5 அல்லது 10 கொடுத்தாவது அவருக்கு நியாயம் கிடைக்கும்படி செய்யவேண்டும். இப்பொழுது இவ் விடத்தில் ஒரு தீர்மானம் பிரரேரேபிக்கப்போகின்றார்கள். அதைக்கவனித்து நிறைவேற்றுவீர்களென நம்புகின்றேன்.
குறிப்பு: 19.05.1931 ஆம் நாள் ஈரோடு காரைவாய்க்காலில் காவல்துறையைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 24.05.1931