மீண்டும் தொல்லை
இது வரையிலும் தேசம் அடைந்து வந்த கஷ்டம் நீங்குவதற்கு ஒரு மார்க்கமும் ஏற்படாமல் இருந்துவரும் இச்சமயத்தில் மறுபடியும் தேசத் திற்குப் பலவகையிலும், கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்து விட்டது பற்றி நாம் மிகவும் வருத்தமடைகின்றோம். சென்ற வருஷத்தில் திரு. காந்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உப்புச் சத்தியாக் கிரகத்தினால் உண்டான துன்பம் இன்னும் நீங்கினபாடில்லை. இந்த நிலையில் மறுபடியும் காங்கிரஸ், பகிஷ்கார இயக்கத்தையும் வரிகொடாமை, வாரங் கொடாமை முதலியவைகளையும் ஆரம்பித்ததைக் கண்டு, அரசாங்கத்தாரும் அதிமும்முரமாக அடக்குமுறைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இம்மாதிரி காங்கிரஸ் போர் தொடுக்க ஆரம்பித்ததற்கும், அரசாங்கத்தார் அடக்குமுறையைக் கையாளவும், அவசரச் சட்டங்களை ஏற்படுத்துவதற்கு முன் வந்ததற்கும் இருவர் கூறும் காரணங்களையும் நாம் விட்டு விடுகின்றோம். உண்மையில், காங்கிரஸ் எதற்காக மீண்டும் இத்தகைய போராட்டம் தொடங்க வேண்டும், அப்படிப்பட்ட நெருக்கடி என்ன வந்து விட்டது? என்பதைப் பற்றி மாத்திரம் இப்பொழுது நாம் கவனிப்போம்.
சென்ற வருஷம் நடைபெற்ற உப்புப் போரின் முடிவில் திரு.காந்தி அவர்களுக்கும், லார்டு இர்வின் அவர்களுக்கும் நடந்த ஒப்பந்தமும் அதன் பயனாக திரு. காந்தியவர்கள் காங்கிரசின் ஏகப் பிரதிநிதியாக இங்கிலாந் திற்குப் போனதும் எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகும். அவர் வட்ட மேஜை மகாநாட்டில் பேசும் போதெல்லாம் காங்கிரஸ் ஒன்றுதான் இந்தியா முழுவதுக்கும் பிரதிநிதித்துவம் பொருந்திய ஸ்தாபனம்; ஆகவே அந்த ஸ்தாபனத்தின் ஏகப்பிரதிநிதியாகிய தாம் ஒருவரே, இந்தியாவின் 35 கோடி மக்களின் பிரதிநிதி ஆகையால் தான் கேட்கும் சுயராஜ்யந்தான் கொடுக்க வேண்டும்; மற்ற பிரதிநிதிகள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லர் என்று எவ்வளவோ முறை கூறியும், இவ்வார்த்தைகளை வெள்ளைக்காரர்களும், மற்றைய பிரதிநிதிகளும் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ளாமல் மறுத்து விட்டார் கள். திரு. காந்தியின் ஆத்ம சக்தியின் வலிமையும், அவருடைய “கடவுள்” பிரார்த்தனையின் வலிமையும் மகாத்மா தன்மையும் வெள்ளைக்காரர்களிடம் பலிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் இந்தியாவின் பொதுவான ஒரே ஸ்தாபனம் அல்லவென்பதும் இந்தியாவிலுள்ள மற்ற கட்சிகளைப் போல் அதுவும் ஒரு பெரிய கட்சிதான் என்பதும் உலக முழுதும் தெரிந்து விட்டது.
அடுத்தபடியாக, திரு. காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கும் விஷயத்தில் தன்னோடு ஒத்துழைத்தால் உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கிறேன் என்று முஸ்லிம்களிடம் ஒப்பந்தம் பேசியதிலிருந்தும் “முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்கிறேன், ஆனால் தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுப்பதை என் உயிர் போகும் வரையிலும் தடுத்துப் போராடுவேன்” என்று கூறியதிலிருந்தும் சிறுபான்மை வகுப்பினரான கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் முதலியவர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததிலிருந்தும், திரு. காந்தியின் மேல் இந்தியாவிலுள்ள அனேகருக்கு நம்பிக்கை யில்லாமற் போய்விட்டது. தீண்டா வகுப்பினரும், மற்றச் சிறு பான்மைச் சமூகத்தினரும் இவர்களின் முன்னேற்றத்தில் அனுதாபங் கொண்ட மற்ற நடுவுநிலைமையான எண்ணமுடையவர்களும் காங்கிரஸ் ஸ்தாபனத்தை வருணாச்சிரம தர்மஸ்தாபனமாகவும் திரு. காந்தியை வருணாச் சிரம தர்ம ஸ்தாபனத்தின் பிரதிநிதியாகவும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
அன்றியும் காங்கிரஸ் பிரதிநிதி வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயும் கூட, காங்கிரஸ் பிரதிநிதி போகாத காலத்தில் நடைபெற்ற முதல் வட்டமேஜை மகாநாட்டில் பிரிட்டிஷ் முதல் மந்திரி இந்தியாவுக்கு என்ன சீர்திருத்தங்கள் கொடுப்பதாகக் கூறினாரோ அதே சீர்திருத்தத்தை தான் கொடுப்பதாக காங் கிரஸ் பிரதிநிதியாகிய திரு. காந்தியும் இருந்த இரண்டாவது கூட்டத்திலும் கூறினார். இதனாலும் காங்கிரசினாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனத்தை மாற்ற முடியவில்லை என்பது வெட்ட வெளியாகி விட்டது.
ஆகவே காங்கிரஸ் உப்புப் போர் நடத்தியதற்கு ஒரு பயனும் இல்லா மல் போய்விட்டது. காங்கிரஸ் செய்து வந்த கிளர்ச்சிகளால் தேசத்திற்கு நஷ்ட மும் கஷ்டமும் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு எள்ளத்தனையும் பலன் கிடைக்கவில்லை என்பதும் திரு. காந்தி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் முன்பே சாதாரண ஜனங்களுக்கும் தெரிந்து விட்டது.
காங்கிரசாலும், திரு. காந்தியாலும் இவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் கூட்டத்தாராலும் நாட்டுக்கு ஒரு பலனும் உண்டாக வில்லை என்பது தெரிந்தால், பொது ஜனங்கள் இவர்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் முன் போல வரமாட்டார்கள். இவர்களை வெறுக்கவும் ஆரம்பித்து விடுவார்கள். பொதுஜனங்கள் இப்படித் திரும்பி விட்டால் காங்கிரசின் கொஞ்ச நஞ்ச பலமும், கிளர்ச்சியும் போய்விடும். காங்கிரசின் பலம் போய்விட்டால், வருணாச்சிரம தருமமும், மத தர்மங்களும் தளர்ந்து தேய்ந்து அழிந்து போகக் கூடிய நிலைமைக்கு வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கு உதாரணம் வேண்டுமானால், நாசிக்கில் தீண்டாதார் கோயில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததையும் அவர்களுக்குச் சில காங்கிரஸ்காரர்கள் உதவி செய்ய முன் வந்ததையும், மலையாள நாட்டில் குருவாயூரில் காங்கிரஸ் காரர்களே கோயில் பிரவேச சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், மற்றும் பல காங்கிரஸ் கமிட்டிகளில் கோயில் பிரவேசம் போன்ற சமதர்ம சத்தியாக் கிரகங்கள் ஆரம்பிக்க வேண்டுமென்ற யோசனைகள் நடந்து கொண்டிருந் ததும் போதுமானதாகும். இவ்வாறு காங்கிரசில் கோயில் பிரவேசம் போன்ற சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்குக் காரணம் நமது இயக்கமும், நமது இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொண்டால்தான் பாமர மக்களிடத்தில் செல்வாக்குப் பெறலாம் என்னும் நோக்கமுடைய சில பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் இருப்பதனாலுமேயாகும்.
இம்மாதிரியான காரணங்களால் காங்கிரசின் தன்மை வெளிப்பட்டு, அதன் மதிப்பு குறைந்து போய்விடும் என்ற நிலைமைக்கு வந்தவுடன் மறுபடியும் காங்கிரசின் கிளர்ச்சியையும் மதிப்பையும் பலப்படுத்தவே இப்பொழுது சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இதனால் தான் என்ன பலன் உண்டாகப் போகிறது என்று எதிர்பார்க்கிறீர்கள்? குருவாயூர் சத்தியாக்கிரகம் போன்ற சமதர்ம சத்தியாக்கிரகம் நிறுத்தப் படுதலும், வாயளவிலாவது திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் பேசிவந்த தீண்டாமை விலக்குப் பேச்சு அடியோடு ஒழிக்கப்படுதலும், மறுபடியும் பாரதமாதா பஜனை, ராம பஜனை போன்ற பஜனைகள் ஆரம்பிக் கப்படுதலும், இவைகளின் மூலம் மக்கள் மனத்தில் மூடநம்பிக்கைகளை உண்டாக்குதலும் ஆகிய பலன்தான் உண்டாகப் போகின்றது.
ஆகையால் இச்சமயத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். சென்ற உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது எத்தனை பார்ப்பனர்கள் ஜெயிலுக்குப் போனார்கள்; எத்தனைப் பார்ப்பனர்கள் தடியடி வாங்கினார்கள், எத்தனை பார்ப்பனரல்லாதார் ஜெயிலுக்குப் போனார்கள், எத்தனைப் பார்ப்பனரல்லாதார் தடியடி வாங்கினார்கள் என்ற கணக்கை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து விட்டுப் பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். இதோ, எத்தனை பார்ப்பனர்கள் பெரிய தலைவர்களாகத் தேசீயப் பத்திரிகைகள் மூலம் சட்ட சபையில் பிரஸ்தாபத்திற்கு வந்ததன் மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டார்கள்; எத்தனை பார்ப்பனரல்லாதார் இம் மாதிரி விளம்பரப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் மறக்காமல் கணக் கெடுத்து யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கணக்கைப் பார்ப்பீர்களானால் தடியடிபட்டவர்களும், சிறை சென்றவர்களும் பார்ப்பனரல்லாதார்கள் என்பதையும், தலைவர்களாகவும் தியாகிகளாகவும், வீரர்களாகவும் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள் பார்ப் பனர்கள் என்பதையும் அறிவீர்கள். ஆகையால் காங்கிரசின் வருணாச்சிரம தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகத் தொடங்கியிருக்கும் சட்டமறுப்பில் கலந்து நமது விடுதலையாகிய சமதர்மத்தை இன்னும் தள்ளி வைக்காமலிருக்கும்படி எச்சரிக்கின்றோம்.
அன்றியும் காங்கிரஸ் இப்பொழுது சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பித் திருப்பதில் மற்றொரு சூழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. அதாவது, “வருணாச் சிரம தரும இந்துக்களின் கையிலேயே அரசியல் சீர்திருத்த ஆதிக்கம் இருக்க வேண்டும்” என்ற காங்கிரசின் நோக்கத்திற்கு விரோதமாகவே வரப்போகும் சீர்திருத்தம் அமைந்திருக்கப் போகின்றது. முஸ்லீம்களுக்கும், சீக்கியர் களுக்கும், தீண்டாதவர்களுக்கும் மற்றச் சிறுபான்மை வகுப்பினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் உள்ள சீர்திருத்தந்தான் வரப்போகின்றது. இத்தகைய சீர்திருத்தம் வந்தால் கூடுமான வரையிலும், தாழ்த்தப்பட்டிருக்கும் சமூகத்த வர்கள், மற்ற சீர்திருத்தக்காரர்களின் ஆதரவையும் பெற்றுச் சட்டசபைகளின் மூலம் தாங்களும், மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்களைப் போல எல்லா உரிமை களையும் பெறக்கூடும் என்று நம்பலாம். இம்மாதிரி இவர்கள் சமநிலைக்கு வந்துவிட்டால் வருணாச்சிரம தருமங்களும், மதப்புரட்டுகளும் கட்டாயம் அழிந்து போகும். ஆகையால் வரப்போகும் சீர்திருத்தத்தைக் கெடுக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனும், இனி இந்தியாவில் நடக்கப் போகும் சீர்திருத்த ஆலோசனைக் கமிட்டிகளை நடக்காமற் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடனுமே சட்ட மறுப்பு ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றும் துணிந்து கூறலாம்.
ஆகையால் சமதர்மத்தையும் நியாயமான அரசியல் சீர்த்திருத் தத்தையும், நாட்டின் நன்மையும், வேண்டுகின்ற எவரும் தற்சமயத்தில் காங்கி ரசால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போராட்டத்தைக் கண்டு மயக்கமடைய மாட்டார்கள் என்பது நிச்சயம். காங்கிரசின் உண்மை நோக்கமும் கொள்கை யும் தெரியாமல் சுயராஜ்ய ஆவேசம் கொண்டு திடீரெனச் சட்ட மறுப்பு இயக்கத்திற்கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளு கின்ற பார்ப்பனரல்லாத இளைஞர்களை எச்சரிக்கவே இவ்விஷயங்களைக் கூறினோம்.
பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் உத்தியோகங்களுக்கும், யாதொரு ஆபத்தும் வராமல் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும், காங்கிரஸ் பிரசாரம் பண்ணுவார்கள். பார்ப்பனரல்லாத இளைஞர்களையும், பள்ளிக்கூட மாணவர்களையும் தூண்டி விடுவார்கள். இந்த ஏமாற்று வார்த்தை களில் ஈடுபட்டுப் பார்ப்பனரல்லாத இளைஞர்கள் தங்கள் பிழைப்பைக் கெடுத்துக் கொள்வார்கள்; பார்ப்பனரல்லாத மாணவர்கள் படிப்பையும் விட்டுத் திண்டாடுவார்கள். பார்ப்பன இளைஞர்களும், பார்ப்பன மாணவர் களும் வாய்ப்பேச்சளவிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பதும், பார்ப்பனரல்லாதாரைப் பலி கொடுத்து மகிழ்வதுமாகவே இருப்பார்கள் என்பதையும் இச்சமயத்தில் கூறாமல் இருக்க முடியவில்லை. ஆகையால் பார்ப்பனரல்லாதார்களே ஜாக்கிரதை!
குடி அரசு – தலையங்கம் – 10.01.1932