சைமன் ரிப்போர்ட்டு
சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வெளியாகி விட்டது. இதன்பேரில் ஏதாவது ஒரு அபிப்பிராயம் தெரிவிக்காதவர்களை பொது ஜனங்கள் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ கருதுவதில்லை.
அன்றியும் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ ஆக வேண்டும் என்கின்ற ஆசை இருப்பவர்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அபிப்பிராயங்கள் சொல்லுவதன் மூலமே தங்கள் ஆசை நிறைவேறும் என்று கருதுவதும் சகஜம். இவை ஒரு புறம் நிற்கப் பொது காரியங்களில் உழன்று கொண்டு இருப்பவர்கள் யாராவது இம்மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லாவிட்டால் அவர்களை பயங்காளி என்று சொல்லுவதும் வழக்கம். சுவற்று மேல் பூனை போலிருந்து வாழ வேண்டுமென்கின்றவர்களான, தங்களுக்கென்று யாதொரு கொள்கையுமில்லாத சிலர் சற்று சங்கடமான நிலைமையில் யாதொரு அபிப்பிராயமும் சொல்லாமல் நழுவவிடுவதும் சகஜம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை நாம் எந்த காரணத்தைக் கொண்டா வது ஏதாவது சொல்லித்தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
அந்தப்படி இப்போது ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லுவதில் சைமன் கமிஷனை உபயோகமற்றது என்று ஒரே வார்த்தை சொல்லி விட்டால் அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் தேசீயவாதிகள் லிஸ்டில் தாக்கல் ஆகிவிடுவான். அதை எவனாவது ஆதரித்து விட்டாலோ அவன் எப்படிப் பட்டவனாய் இருந்தாலும் அவன் சர்க்கார் மனுசனாகவோ அல்லது பிற் போக்காளனாகவோ ஆகி விடுவான். ஏனென்றால் நமது ஜனங்கள் “கங்கா தரா மாண்டாயோ” என்று ஒரு கிழவி அழுதக் கதையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதாவது விஷயம் இன்னது என்று தெரிந்தாலும் தெரியா விட்டாலும் அவர்கள் (‘தேசீயவாதிகள்’) என்ன சொன்னார்கள் என்பதைப் பார்த்து பின்பாட்டுப் பாடுகின்றவர்களே ஆவார்கள். ஏனெனில் பெரும் பாலோர் சொந்த அறிவை உபயோகிக்க முடியாமலும் பிறர் அறிவை கேட்கச் சௌகரியமில்லாமலும் இருப்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு கமிஷனை அடியோடு நிராகரிக்காதவர்கள் எல்லாம் தேசத்துரோகிகளே யாவார்கள்.
இந்த நிலைமையில் நாம் நமது அபிப்பிராயம் சொல்லுவதற்கு முன்பே பொது ஜனங்களை, நம்மை “தேசத்துரோகி” லிஸ்டிலேயே தாக்கல் செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டே நமது அபிப்பிராயத்தை சொல்லுகின்றோம்.
ஏனெனில் நாம் அந்த ரிப்போர்ட்டில் அரசியல் சம்மந்தமாக என்ன சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, எவ்வித சவுகரியம் அளிக்கப் பட்டிருக்கின்றது என்பன போன்றவைகளைப் பற்றி சிறிதும் கவலை எடுத்துக் கொண்டு கவனிக்கவில்லை. கவனிக்கவும் இஷ்டப்படவில்லை. ஏனெனில் அது சட்டசபைக்கு போகின்றவர்களுக்கும் மந்திரியாவதற்கும், பெரிய உத்தியோகம் பெறுவதற்கும் ஆசை உள்ளவர்களுக்கும் அவர்களது கூட்டுறவாளர்களுக்கும் விட்டு விடுகின்றோம். அதில் 8 மந்திரி இருந்தாலும் 10 மந்திரி இருந்தாலும் அவர்களை கவர்னர் நியமித்தாலும் சட்டசபை மெம்பர்கள் நியமித்தாலும் அவர்கள் தீர்மானங்களை எல்லாம் கவர்னர் ஏற்றுக் கொண்டாலும் தள்ளிவிட அதிகாரம் வைத்துக் கொண்டாலும் மற்றும் இதுபோன்ற விஷயங்களில் எப்படி ஆனாலும் நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஏனெனில் “ஜனப்பிரதிநிதிகள்” என்பவர்களை விட சர்க்கார் யோக்கியமானவர்கள் என்றாவது சர்க்காரைவிட “ஜனப்பிரதிநிதிகள்” யோக்கியமானவர்கள் என்பதாகவாவது எல்லா அதிகாரங்களையும் சர்க்கார் “ஜனப்பிரதிநிதிகள்” வசம் கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நல்லது என்றாவது எல்லா அதிகாரங்களையும் சர்க்காரே வைத்துக் கொண்டு நடத்தி னால் நல்லதென்றாவது நாம் இந்த நிலையில் கருதுவதில்லை. தவிர ஜனப் பிரதிநிதிகள் நடத்தும் நிர்வாகங்களும் அவர்களது அபிப்பிராயங்களும் சர்க்கார் நடத்தும் அதிகாரங்களும் அவர்களது அபிப்பிராயங்களும் பொது நலத்தை உத்தேசித்ததா? சுயநலத்தை உத்தேசித்ததா? என்பது நமக்கும் சற்று தெரியும்.
ஆதலால் அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் சைமன் கமிஷனைப் பற்றி பார்ப்போமானால் சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு நிராக ரிக்க வேண்டியது அல்லவென்றும் எந்த “தேசியவாதி” யாலும் நிராகரிக்கப் போவதில்லை என்றும் நிராகரிக்கப்பட முடியாததென்றுமே நாம் சொல்லு வோம். எப்படி என்றால் இந்து தேவஸ்தான பரிபாலன மசோதாவை எதிர்த்த வருணாசிரம தர்மசபை காரியதரிசியான திரு. என். சீனிவாசாச்சாரியார் அம் மசோதாவை எதிர்க்கவும் அதை அழிக்கவும் சங்கம் ஏற்படுத்தி அதற்காகப் பணமும் வசூல் செய்து எதிர் பிரசாரமும் செய்து விட்டு இப்போது அச் சட்டத்தை நடத்திக் கொடுக்கத் தனக்கு வேலை கொடுக்கும்படி கெஞ்சினதும் எவ்வளவோ உள்தரமான வேலைகள் எல்லாம் செய்து அந்த வேலையை அடைந்து சட்டத்தின் திட்டத்தை இன்றைய தினம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.
ஆகவே நமது தேசீயவாதிகள் இன்று சைமன் ரிப்போர்ட்டை பலமான வார்த்தைகளால் மறுப்பார்கள் – நிராகரிப்பார்கள் – வைவார்கள். ஆனாலும் நாளை அதனால் ஏற்படும். “உபயோகமற்ற” “பிற்போக்கான,” “சுயமரியாதையற்ற” பதவிகளுக்கும் உத்தியோகங்களுக்கும் நாக்கில் தண்ணீர் சொட்ட விடுவார்கள் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். நமது அசல் பார்ப்பன “தேசீயவாதிகளோ சிங்கத்தின் குகைக்குள் போய் அதன் பிடரியைப் பிடித்து ஆட்டுவதற்காக” என்றாவது சீர்திருத்த உத்தியோகத் தையும் பதவியையும் லாபத்தையும் கண்டிப்பாய் அடையப் போகிறார்கள் என்பதும் நமக்கு நன்றாய்த் தெரியும்.
அன்றியும் இப்போது சைமன் கமிஷனை ஆட்சேபித்து குற்றம் சொல்லுகின்ற “தேசீயவாதிகளில்” நூற்றுக்கு ஒருவர் கூட நாளைக்கு அத னால் லாபமடைய மறுக்க மாட்டார்கள் என்று உறுதியாய் சொல்லுவோம். ஆகவே இன்றையதினம் கமிஷனை வைவதெல்லாம் நாளைக்கு பாமர மக்களிடம் ஓட்டு வாங்கவே ஒழிய அதை நிராகரிப்பதற்கோ அல்லது அதனால் பயனில்லை என்று கருதியோ அல்ல என்பதே நமது அபிப்பிரா யம். நம்மை பொறுத்த வரையில் என்றாலோ நமக்கு ஓட்டுக்குப் போக ஆசையும் இல்லை, யோக்கியதையும் இல்லை. ஆதலால் அவ்வேஷக் காரர்களுடன் சேர வேண்டிய அவசியமில்லாத நிலைமையிலிருக்கின்றோம்.
ஆகவே சைமன் கமிஷனில் நாம் கவனிக்கத் தக்கதாய் உள்ள சில விஷயங்களைப் பற்றிய குறிப்புகளை வெளியிடுகின்றோம்.
முதலாவது முகமதியர்களுக்கு அதில் பெருத்த வெற்றி ஏற்பட் டிருக்கின்றது. எப்படி என்றால் முகமதிய சமூகம் இந்த பத்து இருபது வருஷ காலத்தில் எவ்வளவோ தூரம் முன்னேறி இருப்பதற்கு ஆதாரமான அவர்களது வகுப்பு வாரி பிரதிநிதித்துவ கொள்கையை அடியோடு அழிக்க “இந்திய தேசீய காங்கிரஸ் வாதிகள்” பட்ட பாடு வீணாகி பழையபடியே இருக்க ஏற்பட்டது குறித்து அவர்கள் சைமன் கமிஷனுக்கு முதலில் நன்றி செலுத்தி தீருவார்கள். ஆகவே இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்த 4-ல் ஒரு பங்கு ஜனங்களின் விஷயத்தில் சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வரவேற்கப்பட்டதாகும். இனி அடுத்தாற்போல் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் சைமன் கமிஷன் ரிப்போர்ட்டானது கூடுமானவரை திருப்தி கரமானதென்றே சொல்லலாம். அதாவது தேசீயவாதிகளின் எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அவர்களுக்கு அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் ஜனத்துகையை அனுசரித்தே கொடுக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் இந்துக்கள் என்பவர்களின் ஜனத்துகையில் 100000 ஜனங்களுக்கு ஒரு ஸ்தானம் வந்தால் தீண்டப்படாதார் என்பவர் களின் ஜனத்துகையில் 100000 பேருக்கு முக்கால் ஸ்தானம் வீதம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிபார்சு செய்திருக்கிறார்கள்.
அடுத்த சீர்திருத்தத்திற்குள் தங்கள் ஜனத்துகைக்கு சரியான விகிதாசாரமும் தனித் தொகுதித் தேர்தலும் அடையக் கூடிய நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்து விட இந்த சிபார்சு உதவிசெய்யும் என்றே நினைக்கின்றோம். ஆகவே ஒட்டு மொத்த ஜனத்துகையில் ஐந்தில் ஒரு பங்கு ஜனத்துகையினரான தீண்டப்படாதார்களும் சைமன் கமிஷன் ரிப்போர்ட் விஷயத்தில் அதை வரவேற்று நன்றி செலுத்தக் கூடியவர்களேயாவார்கள்.
பெண்கள் விஷயத்திலோ அவர்கள் எண்ணிக்கையை லக்ஷியம் செய்யாமல் மொத்த ஸ்தானங்களில் 100க்கு 5 அல்லது 10 வரையில் ஸ்தானங்கள் கொடுக்கலாம் என்று சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றது. இது போதுமானதா இல்லாமலிருந்தாலும் அவர்களது உரிமை ஒப்புக் கொள்ளப் பட்டதாய் விட்டதால் இதன் மூலம் இனி அடுத்த சீர்திருத்தத்திற்குள் முழு உரிமையை வாங்க சக்தி உடையவர்களாகி விடுவார்கள். ஆகவே மொத்த ஜனத்தொகையில் சரி பகுதிப் பேர் கொண்டதும் ஜாதி இந்துக்கள் என்பவர் களின் ஜனத்துகையாகிய 15 கோடியில் சரி பகுதி ஏழரைக் கோடி மக்களா கிய பெண்கள் விஷயத்திலும் சைமன் கமிஷன் வரவேற்கப்படவேண்டியதே யாகும். ஆகவே ஏழரைக் கோடி மகமதியர் 6 கோடி தீண்டப்படாதார் ஏழரைக் கோடி பெண்கள் ஆக 21 கோடி ஜனங்களுக்கு அவர்களது முக்கிய கோரிக் கைகள் கமிஷனால் கவனிக்கப்பட்டு ஒருவாறு திருப்தி செய்யப்பட்டிருக் கின்றன. இனி பாக்கி இருக்கும் ஏழரைக்கோடி மக்களிலும் 100க்கு 10 வீதம் உள்ள படித்தவர்களும், பணக்காரர்களும், பார்ப்பனர்களும் தான் “சைமன் கமிஷன் திருப்தியற்றது,போதாது, ஏமாற்றமானது” என்று சொல்லுவார்கள். இதன் கருத்து இன்னதென்றோ, சைமன் கமிஷன் இன்னதென்றோ 100க்கு 90பேருக்கு மேலாகவே தெரியாதவர்களும் தெரிய சௌகரியமில்லாதவர் களுமாக இருப்பவர்கள்.
எனவே இந்த நிலைமையில் சைமன் கமிஷனைப் பற்றி நாம் என்ன சொல்வது என்பதை யோசித்து முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 29.06.1930