உதிர்ந்த மலர்கள்
எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய் கருதப் படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன் தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே தீண்டப்படாதவனாக கருதப்பட மாட்டானோ அந்த மதத்தை சார வேண்டி யது அவனது முதற்கடமையாகும்.
* * *
ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான் “ கடவுள் அருளோ” “மோக்ஷமோ” கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும் பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயம்.
* * *
மனுதர்ம சாஸ்திரத்தையும் அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும்) ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அந்தக்கட வுளை ஒழித்து விட்டுத் தான் தாகசாந்தி செய்ய வேண்டும்.
* * *
மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்து விட்டுத் தான் மனிதன் வேறுவேலை பார்க்க வேண்டும்.
* * *
இந்து மதம் போய்விடுமே! இந்து மதம் போய்விடுமே!! என்று சொல்லிக் கொண்டும் இந்துமத தர்மங்களை ஒன்று விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டும் வந்தவர்களாலேயே இன்று இந்தியாவில் இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர்கள் வேறு மதத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். மதத்தைக் காப்பதற்கு என்றும், மதக் கொள்கைகள் சிறிதும் விட்டுக் கொடுக்க முடியாதென்றும் இதுவரை செய்து வந்த முயற்சிகளும் கிளர்ச்சி களும் எல்லாம் இரண்டொரு வகுப்புக்களுடையவும் சில தனிப்பட்ட நபர்க ளுடையவும் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளாகவே முடிந்ததல் லாமல், எவ்விதப் பொது நலனும் ஏற்படவேயில்லை.
* * *
“மேல் நாட்டாருக்கு ஒரு மாதிரியும் கீழ் நாட்டாருக்கு ஒரு மாதிரி யுமான சுதந்திரங்கள், வித்தியாசங்கள் இருக்கக்கூடாது” என்று சொல்லும் இந்திய தேசிய வாதிகள் தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு மாதிரியும் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு மாதிரியும் இடமும் தெருவும் குளமும் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித்திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டி ருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?
* * *
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதத்திற்கு பிரதிநிதி யாய் போகவில்லை. ஆனால் அவர் ஒரு “வக்கீலாய்” போனார்.
* * *
உன்னை க்ஷத்திரியன் என்றோ வைசியன் என்றோ நீ சொல்லிக் கொள்ளும் போது நீ பிராமணன் என்பவனுக்கு கீழ்ப் பட்டவனென்பதை நீயே ஒப்புக் கொண்டவனாகின்றாய்.
* * *
சென்ற வருஷத்திய ரயில்வே கெய்டை பார்த்துக் கொண்டு ரயிலுக் குப் போனால் வண்டி கிடைக்குமா?
* * *
சுயமரியாதையும் சமத்துவமும் விடுதலையும் வேண்டிய இந்தியா வுக்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலை அல்ல; மற்றென்னவென் றால் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையேயாகும்.
* * *
இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல் லாம் பாமர மக்களை படித்தவர்களும் பணக்காரரும் ஏய்ப்பதற்கு கண்டு பிடித்த ஒரு சூட்சியே ஒழிய உண்மை சீர்திருத்தமல்ல.
குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளிடத்தில் மூட பக்தி யால் ஏற்பட்ட மதத்தின் மூலம் சுயநலக்காரர்களால் வகுக்கப்பட்ட கொள்கை களை வைத்து நமது வாழ்க்கையை நடத்துகின்றோம்.
* * *
குருட்டு நம்பிக்கையையும் மூட பக்தியையும் சீர்திருத்த வேலை யினால் ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றை அழிவு வேலையினால் தான் ஒழிக்கமுடியும். அழிவு வேலை செய்பவர்களுக்கு மகத்தான மன உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், பழிப்புக்கும் சாவிற்கும் துணிவும் இருக்க வேண்டும்.
* * *
அழிவு வேலைக்காரர்களுக்கு நிதானமும் சாந்தமும் சகிப்புத் தன்மையும் அவசியம் வேண்டுமென்பதையும்; வெறுப்பும் பிடிவாதமும் கண்டிப்பாய்க் கூடாது என்பதையும் நான் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.
* * *
அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே பழிப்பார்களே எதிர்ப்பு பலமாய்விடுமே நமது செல்வாக்கு குறைந்து போகுமே என்கின்ற பயமும் பலக்குறைவும் உள்ளவர்கள் ஒரு காலமும் சீர்திருத்த வேலைக்கு உதவ மாட்டார்கள்.
* * *
சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாட்டை உடைத் தெறிவது தான், சீர்திருத்தத்தில் பிரவேசிப்பதற்கு உற்ற பாதையாகும்.
* * *
ராம ராஜியத்தையும், வருணாசிரமத்தையும் ஆதரிக்கும் திரு. காந்தி யினால் இந்தியாவுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க முடியாது.
– ஈ.வெ.ரா.
குடி அரசு – துணுக்குகள் – 02.03.1930